ஆதாரபூர்வமான பல ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகின்றது. அவற்றை மறுக்க வேண்டும் என்று புதிய கொள்கையைப் புகுத்தியவர்கள் தமது வாதத்திற்கு வலு சேர்க்க சில ஹதீஸ்களுக்கு வலிந்து தவறான விளக்கங்களைக் கொடுத்து வருகின்றனர். அந்த ஹதீஸ்களில் பின்வரும் நபிமொழியும் ஒன்றாகும்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ الحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ الأَلْهَانِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ البَاهِلِيِّ، قَالَ: وَرَأَى سِكَّةً وَشَيْئًا مِنْ آلَةِ الحَرْثِ، فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ يَدْخُلُ هَذَا بَيْتَ قَوْمٍ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ الذُّلَّ»
முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார். ‘அபூ உமாமா அல் பாஹிலீ(வ), ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள்,இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும் போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை என்று நபி(ச) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள்.
(புஹாரி: 2321)
‘ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?’ என்ற நூலில் விவசாயம் செய்தால் இழிவு வருமா? என்ற தலைப்பில் இந்த ஹதீஸ் விமர்சிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் செய்தால் அல்லாஹ் இழிவைத் தருவான் என இந்த ஹதீஸ் கூறுகின்றது. ஆனால், குர்ஆனும் ஹதீஸும் விவசாயத்தைப் புகழ்ந்து சொல்கின்றன என்று காரணம் கூறி இந்நூலில் இந்த ஹதீஸ் மறுக்கப்பட்டுள்ளது. (ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? : பக்கம் – 139)
இதே ஹதீஸ் ‘பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்’ என்ற நூலில் ‘ஏர் கலப்பை பழிப்பிற்கு உரியதா?’ என்ற தலைப்பில் நபிகள் நாயகம்(ச) அவர்கள் ஏர் கலப்பை இருக்கும் வீட்டிற்கு இழிவு ஏற்படும் என்று சொன்னதாக இந்தச் செய்தியில் கூறப்படுகின்றது. இவ்வாறு நபியவர்கள் சொல்லியிருப்பார்களா? என்று கேள்வி எழுப்பி இந்த ஹதீஸ் மறுக்கப்படுகின்றது. (பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்: பக்கம் – 36)
தவறான பார்வை:
குறைமதியும், குழப்ப குணமும் கொண்டவர்கள்தான் குர்ஆன், ஸுன்னாவை இத்தகைய குதர்க்க குணத்துடன் அனுகுவார்கள். இந்த வாதத்தை எடுத்து வைத்து இத்தகைய ஹதீஸ்களை மறுப்பவர்களின் வழிகேட்டிற்கு இவர்களின் இத்தகைய தவறான வழிமுறைகளே தக்க சான்றாக அமைகின்றது.
ஞானசாரரின் அனுகுமுறையில் ஞான சூனியங்கள்:
ஒரு குர்ஆன் வசனத்தையோ ஹதீஸையோ விளங்குவதென்றால் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களின் துணை கொண்டுதான் விளங்க வேண்டும். ஒன்றுடன் மற்றதையும் சேர்த்து விளங்காமல் ஒன்றை மற்றொன்றுடன் மோதவிட்டு ஒன்றை ஏற்று மற்றதை மறுப்பது தெளிவான வழிகேடாகும்.
இலங்கையில் இஸ்லாத்திற்கு எதிரான இன, மதவாதப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் BBS அமைப்பின் செயலாளர் அவர்களது அன்மைய மாநாட்டில் இஸ்லாமிய மார்க்கம் அதை ஏற்காத முஸ்லிம் அல்லாதவர்களைக் கொலை செய்யச் சொல்கின்றது என்று கூறிப் பின்வரும் ஹதீஸை அதற்கு ஆதாரமாக முன்வைத்துப் பேசினார்.
‘வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று மக்கள் கூறும் வரை அவர்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது. வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை எனக் கூறுகின்றவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர தன் உயிருக்கும் செல்வத்திற்கும் பாதுகாப்புப் பெறுவார். அவரின் (அந்தரங்க எண்ணங்கள் மற்றும் நடவடிக்கை களுக்குரிய) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது என்று நபி( ஸல்)கூறினார்கள்……;.’
(புஹாரி: 6924)
இந்த ஹதீஸை மட்டும் வைத்துப் பார்த்தால் கலிமா கூறும் வரை மக்களுடன் போரிடுமாறு நான் ஏவப்பட்டுள்ளேன் என்றுதான் இந்த ஹதீஸ் கூறுகின்றது. ஆனால், இந்த ஹதீஸ் எது குறித்துப் பேசுகின்றது என்பதை அறிய வேண்டுமென்றால் முஸ்லிம் அல்லாதவர்களுடன் இஸ்லாம் எப்படிப் பழகச் சொல்கின்றது என்ற ஏனைய குர்ஆன், ஹதீஸ்களின் ஒளியில் அனுகினால்தான் உண்மை புரியும்.
இஸ்லாம் விவசாயத்தைத் தடுக்கவில்லை இந்த ஹதீஸும் முற்றுமுழுதாக விவசாயம் தடை என்று கூறுவதற்காகக் கூறப்பட்டதல்ல. விவசாயத்தில் மூழ்கி, அடிப்படையான கடமைகளை மறந்து நடப்பது இழிவைத் தரும் என்ற கருத்தில்தான் இந்த ஹதீஸ் கூறப்பட்டுள்ளது. புஹாரி இமாம் அவர்கள் இந்த ஹதீஸை
بَابُ مَا يُحَذَّرُ مِنْ عَوَاقِبِ الِاشْتِغَالِ بِآلَةِ الزَّرْعِ، أَوْ مُجَاوَزَةِ الحَدِّ الَّذِي أُمِرَ بِهِ
‘வேளாண்மைக் கருவிகளைத் துஸ்பிரயோகம் செய்வதால் விளையும் தீமைகளுக்கு அஞ்சுவதும், (வணிகம், வேளாண்மை இவற்றில் ஈடுபடுவதில்) விதிக்கப்பட்டுள்ள வரம்மை மீறுவதால் விளையும் (கேடுகளான இறைவனை மறத்தல், மார்க்கக் கடமைகளைப் புறக்கணித்தல் ஆகிய) தீமைகளுக்கு அஞ்சுவதும் (அவசியம்).’
என்ற பாடத்தில்தான் இடம்பெறச் செய்துள்ளார்கள். வேண்டுமென்றே இந்த ஹதீஸ் விவசாயத்தைத் தடுக்கின்றது என்று தப்பாக விளக்கம் எடுத்துத்தான் இந்த ஹதீஸ் வழிகெட்ட பிரிவினரால் நிராகரிக்கப்படுகின்றது.
புஹாரியில் இந்த ஹதீஸுக்கு முன்னாலும் பின்னாலும் உள்ள சில ஹதீஸ்களைப் பாருங்கள்.
சாயிப் இப்னு யஷீத்(வ) அறிவித்தார். ‘அஸ்த் ஸனாஆ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர்(வ) என்னிடம், விவசாயப் பண்ணையையோ, கால்நடைகளையோ பாதுகாக்கும் எவ்விதத்தேவையுமின்றி நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (ஊதியம்)குறைந்து விடும் என்று நபி(ச) அவர்கள் கூற கேட்டேன்’ என்றார்கள். நூன், இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா? என்று வினவினேன். சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர்(வ),ஆம் இந்தப் பள்ளிவாசலின் அதிபதி (அல்லாஹ்வின்) மீது ஆணையாக! நபி(ச) அவர்களிடமிருந்து நானே நேரடியாகச் செவியுற்றேன்’ என்று பதிலளித்தார்கள்.’
(புஹாரி:2323)
விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக நாய் வளர்ப்பதற்கும் அனுமதியளிக்கின்றது. அப்படியென்றால் விவசாயத்ததை முற்றாக தடுப்பதற்காக அல்லது விவசாயக் கருவிகளை முழுமையாகப் பழிப்பதற்காக கூறப்பட்ட ஹதீஸாக குறித்த ஹதிஸ் இருக்க முடியுமா? இதுவும் அதே புகாரி கிரந்தத்தில் அதே பாடத்தில் அதற்கு அருகிலேயே பதிவு செய்யப்பட்டுள்ள ஹதிஸ் அல்லவா?
இந்த ஹதீஸ்களை வைத்துத்தான் குறித்த ஹதீஸை நோக்க வேண்டும்.
பொதுவாக மார்க்க விடயங்களில் கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. உதாரணமாக ஹதீஸ்களைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளால் இமாம் சப்தமிட்டு ஓதும் போது பின்னால் இருக்கும் மஃமூம்கள் சூறதுல் பாதிஹா ஓத வேண்டுமா? ஓதவேண்டியதில்லையா? என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது போல புஹாரியில் பதிவாகியுள்ள இந்த ஹதீஸை வைத்து விவசாயம் செய்யலாமா? இல்லையா? என்ற கேள்வி இஸ்லாமிய உலகில் எழுந்ததில்லை. ஏனெனில், இந்த குழப்ப குணம் கொண்டவர்கள் இந்த ஹதீஸைப் புரிந்தது போல் உலகில் எவரும் புரிந்து கொண்டதில்லை. இந்த ஹதீஸ் விவசாயம் செய்யக் கூடாது என்று கூறுகின்றது என்று இவர்கள் கூறுவதிலிருந்து மன முரண்டாக ஹதீஸ்களை மறுக்க வழி தேடும் வழிகேடர்களே இவர்கள் என்பது உறுதியாகின்றது.
குருட்டுத்தனமாக ஹதீஸைப் புரிந்து கொண்டதுமில்லாமல் உலக மக்களை அழித்து நாசமாக்கும் ஒரு வழிகாட்டலை இந்த ஹதீஸில் தருவாதாக வாதிக்கின்றனர்.
முஸ்லிம்கள் மட்டும் வாழ்கின்ற ஒரு நாட்டில் இந்தச் செய்தியை நம்பி ஏர், களப்பையைத் தூக்கி எரிந்து அனைவரும் விவசாயத்தைக் கைவிட்டால் அந்த நாடு என்ன கதிக்கு ஆளாகும்? என்று கேள்வி எழுப்பித் தமது வழிகேட்டை மக்கள் மத்தியில் திணிக்க முற்படுகின்றனர். இந்த ஹதீஸ் விவசாயம் செய்யக் கூடாது என்று கூறுகின்றது என்றும் விவசாயத்தைக் கைவிடச் சொல்கின்றது என்றும் புரிந்து கொண்ட உங்களையும் உங்கள் வழிகேட்டையும்தான் தூக்கி எரிய வேண்டும்.
இந்த ஹதீஸ் விவசாயத்தை விடச் சொல்லவில்லை. அதில் மூழ்கிவிடக் கூடாது, அடிப்படைக் கடமைகளை மறந்து அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதைக் கூறவே கூறப்பட்டது. இதை இஸ்லாமிய உலகமும் சரியாகப் புரிந்து கொண்டது. எனவே, இந்த ஹதீஸுக்கும் விவசாயத்தைப் போற்றும் குர்ஆன் ஹதீஸ்களுக்கும் இடையில் எந்த முரண்பாட்டையும் இஸ்லாமிய உலகு காணவில்லை.
அளவுக்கு மீறினால்…..:
நபித்தோழர்கள் சிலர் தொழுகை, நோன்பு போன்ற இபாதத்துக்களில் அளவுக்கு மீறி ஆர்வம் கொண்ட போது நபி(ச) அவர்கள் அதைத் தடுத்துள்ளார்கள். இதை வைத்துத் தொழுகை, நோன்பு போன்றவற்றை அந்த ஹதீஸ் தடுப்பதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை.
போர்கள் நடந்து கொண்டிருக்கும் சமூக சூழலில் சிலர் விவசாயத்திலேயே முழுக் கவனத்தைச் செலுத்தினால் அந்த சமூகம் எதிரிகளின் நடவடிக்கையால் இழிவுக்குள்ளாகுவதைத் தவிர்க்க முடியாது.
ஏர் கலப்பை ஹதீஸ் முழுமையாக விவசாயத்தையும் ஏர் கலப்பையையும் பழிக்கின்றது என்று ஏனைய ஹதீஸ்களைக் கவனத்திற் கொள்ளாது பார்ப்பதால்தான் பிரச்சினையே எழுகின்றது. ஏனைய ஹதீஸ்களுடன் இணைத்து விவசாயம் செய்ய வேண்டும். ஆனால், அடிப்படையான கடமைகளைப் புறக்கனித்துவிடக் கூடாது. அப்படி அடிப்படையான கடமைகளை மறந்து விவசாயம்தான் வாழ்க்கை என்று வாழ்ந்தால் அது இழிவைத் தரும் என்று புரிந்து கொண்டால் எந்த முரண்பாடும் இல்லை. எந்த ஹதீஸையும் நிராகரிக்கும் நிலையும் ஏற்படாது.
குர்ஆனை நிராகரிக்கப் போகின்றார்களா?:
இவர்கள் குறித்த இந்த ஹதீஸை விளங்குவது போல் குர்ஆனை ஆராய்ந்தால் குர்ஆனையும் நிராகரிக்கும் நிர்ப்பந்த நிலை ஏற்படும். அதுதான் இந்தக் குழப்பவாதிகளின் குறிக்கோலாக இருக்குமோ என்று ஐயப்பட வேண்டி உள்ளது.
உலக வாழ்வை விரும்பக் கூடாதா?
‘யார் இவ்வுலக வாழ்வையும், அதன் அலங்காரத்தையும் விரும்புகின்றார்களோ அவர்களது செயல்க(ளுக்குரிய கூலிக)ளை அதில் நாம் அவர்களுக்கு முழுமையாகவே வழங்குவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்படமாட்டார்கள்.’
‘இத்தகையோருக்கு மறுமையில் நரகத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அங்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை அழிந்துவிடும். மேலும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணானவையே! ‘
(11:15-16)
உலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் விரும்பினால் மறுமையில் நரகம்தான் என்று இந்த வசனம் கூறுகின்றது. இந்த வசனம் உலக வாழ்வை விரும்பக் கூடாது என்கின்றது. ஆனால், உலகில் பயணித்து செல்வத்தைத் தேடுங்கள், வியாபாரம் செய்யுங்கள், உலகிலும் மறுமையிலும் நல்லதைத் தா! என்று பிரார்த்தியுங்கள் என்றெல்லாம் குர்ஆன் கூறுகின்றது. உலகை நேசிக்கக் கூடாது என்ற மேற்படி (11:15-16) வசனங்கள் மற்றும் பல வசனங்களுக்கு முரணாக இருப்பதால் இதை மறுக்க வேண்டும் என்று கூறுவார்களா?
அல்லது உலகை நேசித்தல் என்றால் மறுமையை மறந்து அளவு கடந்து நேசித்தல் என்று; செய்வது ஏனைய வசனங்களுடன் இணைத்து விளங்குவார்களா?
‘அல்லாஹ்வின் வேதனை திடீரென, அல்லது நேரடியாக உங்களிடம் வந்தால் அநியாயக்காரர்களான கூட்டத்தாரைத் தவிர வேறு யாரும் அழிக்கப்படுவார்களா? என்பதை (எனக்கு) அறிவியுங்கள் எனக் கேட்பீராக!’
(6:47)
அல்லாஹ்வின் வேதனை வந்தால் அநியக்காரர் கூட்டத்தினர் மட்டும் அழிக்கப்படுவார்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது. சுனாமி, பூமி அதிர்ச்சி, வெள்ளம், புயல்… போன்ற அழிவுகளின் போது நல்லவர்கள், பச்சிளம் பாலகர்கள் அழிக்கப்படுவதில்லையா? இந்தக் குர்ஆன் வசனம் நடைமுறைக்கு மாற்றமான கருத்தைதத் தருகின்றது என்று கூறுவார்களா? அல்லது இந்தக் குர்ஆன் வசனம் நடைமுறைக்கு மாற்றமான கருத்தைத் தருகின்றது. எனவே, இதை ஏற்க முடியாது என்று கூறுகவார்களா? அல்லது இது இறைத்தூதர்கள் வாழும் போது அவரது சமூகத்திற்கு மட்டும் உள்ள நிலை என்று பிரித்துக் கூறி ஏற்றுக் கொள்வார்களா?
நிராகரித்தோருக்கு இவ்வுலக வாழ்க்கை அலங்கரித்துக் காட்டப்பட்டுள்ளது.
‘நிராகரித்தோருக்கு இவ்வுலக வாழ்க்கை அலங்கரித்துக் காட்டப்பட்டுள்ளது. (அத னால்) அவர்கள் நம்பிக்கை கொண்டோரை பரிகசிக்கின்றனர். (அல்லாஹ்வை) அஞ்சி நடப்போர்தாம் மறுமை நாளில் அவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பார்கள். மேலும், அல்லாஹ், தான் நாடுவோருக்குக் கணக்கின்றி வழங்குவான்.’
(2:212)
என்று அல்லாஹ் கூறுகின்றான்.
எனவே, யார் யாருக்குக்கெல்லாம் உலகம் அலங்காரமாகத் தெரிகின்றதோ அவர்கள் அனைவரும் நிராகரித்தவர்கள் என்று இந்தக் குர்ஆன் வசனம் கூறுகின்றது. இந்த அடிப்படையில் உலகை அலங்காரமாகக் காணும் அனைவரும் காபிர்கள் என்று கூறுவார்களா? அல்லது இந்தக் கருத்தைத் தரும் இந்த வசனத்தை ஏற்க முடியாது என்று கூறுவார்களா?
‘பெண்கள், ஆண்மக்கள், தங்கம் மற்றும் வெள்ளியின் பெரும் குவியல்கள், அழகிய குதிரைகள், கால் நடைகள், விளை நிலங்கள் ஆகிய ஆசை ஊட்டுபவற்றை நேசிப்பது, மனிதர்களுக்கு அலங்கரித்துக் காட்டப் பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்வின் சுகபோகமே! அல்லாஹ்விடமோ அழகிய மீளுமிடமுண்டு.’
(3:14)
மேற்படி வசனத்தில் மனிதர்களுக்கு அலங்கரித்துக் காட்டப்பட்டுள்ளதாக அல்லாஹ் கூறுகின்றான் என்று கூறி ஏதேனும் ஒரு வசனத்தை நிராகரிப்பீர்களா?
இவர்களது குறைமதியும் குழப்ப குணமும் கொண்ட குதர்க்க சிந்தனையுடன் பார்த்தால் பல குர்ஆன் வசனங்களைக் கூட நிராகரிக்கும் நிலை ஏற்படும்.
எனவே, இத்தகைய வழிகேடர்களின் வழியில் சென்று ஹதீஸையும் அதன் பின் குர்ஆனையும் நிராகரிக்கும் நிலைக்குச் செல்லாமல் குர்ஆனையும் ஹதீஸையும் இணைத்து விளங்கி இரண்டில் எதையும் நிராகரிக்காத நேர் வழியில் நடை பயில முயல்வோமாக! அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக!
masha allah sirantha vilakkam . idanai thavaraha purinthu konda anaivarukkum allah hidayath koduppanaha.
பிபிஎஸ் அமைப்பினர் காட்டும் ஹதிஸ் அவர்கள் வேண்டுமென்றே கூறுகின்றனர் .அது போர்க்காலத்தில் உள்ள ஹதிஸ் .சாதரனமக்களிடம் நபிசல் அவர்கள் எங்ஙனம் பழகினர் என்பதற்கு ஏராளமான ஹதிஸ்களை காட்டலாம் ./.பிபிஎஸ் காரர்கள் இந்த ஹதிஸை காட்டியதை விட நீங்கள் விவசாய கருவிக்கு இந்த ஹதீஸை உதாரனம காட்டியிருப்பது கொடுமை .
புகாரியில் அந்த ஹதிசுக்கு ஆதாரமாக ,அந்த ஹதிசுக்கு என்று இடப்பட்ட தலைப்பை ஆதாரமாக காட்டுவது வேடிக்கை .
விவசாயத்திற்கு அல்லாமல் நாயை வளர்த்தால் நன்மைகள் பாழாகிவிடும் என்னும் பொழுது விவசாய கருவிகள் உள்ள இடத்தில் அல்லா இழிவை ஏற்படுத்துவான் என்று கூறுவது ஒருக்காலும் நபிமொழி யாக இருக்க முடியாது .இன்னொரு ஹதிஸ் மறுமை நாள்வரை விவ்சாயகருவியால் ஏற்படும் என்கிறது .
இந்த ஹதிஸை வெறுமனே நம்புவதைவிட ,இதை மக்கள் மத்தியில் சொல்லவும் ,அந்த இழிவு ஏற்படாமல் தடுக்கவும் நீங்கள் முயற்சிக்காமல் இருப்பது நியாயமா?
masha allah,Nalla vilakkam..
Sameebathil enaku oru image vanthathu whatsapp il, athil neengal THAREEKA vaathigaludan kai koarthathaaga athil pathivu seiya pattuirunthathu, oru sila visamigal athai fwd seithu kondu irukiraargal,, atharku thelivaana vilakkam tharavum