பித்அத்தின் வகைகள் (பகுதி-1)

கொள்கை சார்ந்த பித்அத்துகள்:
மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து பித்அத்துகளும் வழிகேடுகள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் பித்அத் பற்றிப் பேசும் எமது சகோதரர்கள் பித்அத் பற்றி விரிவான விளக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். ஏனெனில் பித்அத்தை விட்டும் விலக வேண்டும் என்பதை எமது சகோதரர்கள் விளங்கியுள்ளனர். எனினும் இபாதத் சார்ந்த பித்அத் விடயத்தில் மட்டும் தான் இந்தத் தெளிவு எமது சகோதரர்களிடம் இருக்கின்றது. கொள்கை சார்ந்த பித்அத் பற்றிய விழிப்புணர்வோ, வெறுப்புணர்வோ எம்மிடம் போதியளவு இல்லாமல் இருப்பதைக் காண்கின்றோம். எனவே பித்அத் குறித்து விரிவாக விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பித்ஆ அல் இஃதிகாதிய்யா (கொள்கை சார்ந்த பித்அத்துகள்):
இவைதான் பார-தூரமான பித்அத்துகளாகும். இதில் ஒரு பித்அத் – அதாவது, கொள்கை சார்ந்த பித்அத் எம்மிடம் ஊடுருவி விட்டால் பல ஸுன்னாக்களை அது கொலை செய்துவிடும். கூட்டு துஆ, கத்தம் போன்ற பித்அத்துகள் கண்ணுக்குத் தெரிந்து விடும். எனவே இவற்றிலிருந்து விடுபடுவது இலகுவாகும். ஆனால் கொள்கை சார்ந்த பித்அத் கண்ணுக்குத் தெரியாமல் கல்புக்குள் நுழைந்து எம்மை ஆட்சி செய்ய ஆரம்பித்து விடும். அந்த பித்அத்தை வைத்துத்தான் அதன் பின் நாம் குர்ஆன்-ஸுன்னாவைப் புரிந்துகொள்ள முற்படுவோம். எனவே அது எமக்குத் தொடர்ந்தும் இஸ்லாம் பற்றிய தவறான விளக்கத்தைத் தந்து, அந்த விளக்கம் தான் இஸ்லாம் என்றும், அதற்கு மாற்றமான அனைத்தும் தவறு என்றும் எண்ணச் செய்து விடும். எனவே கொள்கை சார்ந்த பித்அத்துகள் விடயத்தில் நாம் மிக விழிப்பாக இருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு எம்மில் பலரிடம் இல்லை என்பது துர்ப்பாக்கிய நிலையாகும்.

உதாரணமாக, இலங்கையில் ஒரு குழு குறித்த ஒருவருக்கு பைஅத் செய்யாத முஸ்லிம்கள் அனைவரையும் காஃபிர்கள் என்று கூறுகின்றனர். இது பித்அத்தான கொள்கையாகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் பைஅத் செய்யாத முஸ்லிம்களுக்கு ஸலாம் சொல்வது, அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுவதைத் தவிர்ப்பது போன்ற பித்அத்துகளையும் செய்து வருகின்றனர். இதே வேளை இவர்கள் கூட்டு துஆ, மஹ்ஷர் போன்ற பித்அத்துகளைத் தவிர்ந்து வருகின்றனர்.
சில ஊர்களில் இவர்கள் தனியாக ஜும்ஆ, ஜமாஅத்துத் தொழுகை நடத்தி வருகின்றனர். எமது சகோதரர்களில் சிலர் தம்மை ‘முஸ்லிம்’ என அங்கீகரிக்காத அவர்களது பள்ளியைத் தேடிச் சென்று அங்கே தொழுகின்றனர். அவர்களது ஜும்ஆவில் கலந்துகொள்கின்றனர். இதனால் பலத்த சிந்தனைச் சிக்கலுக்கும் உள்ளாகின்றனர். ‘ஏன் அங்கே போனீர்கள்?’ என்று கேட்டால், ‘ஊர்ப் பள்ளியில் கூட்டு துஆ ஓதுகின்றனர்! மஹ்ஷர் ஓதுகின்றனர்! ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள் சொல்கின்றனர்! எனவே இந்த பித்அத்துகளிலிருந்து தவிர்ந்துகொள்வதற்காகத்தான் அங்கே போனோம்!’ என்கின்றனர்.
இவர்கள் கண்ணுக்குப் புலப்படும் செயல் சார்ந்த ‘பித்அத்’ எனும் குழியில் இருந்து தப்பிக் கண்ணுக்குத் தெரியாத கொள்கை சார்ந்த படுகுழியில் விழுந்துள்ளனர். நடைமுறை ரீதியான பித்அத்தைத் தவிர்க்க வேண்டும் என்று விளங்கிய இவர்கள் அதை விடப் பார-தூரமான கொள்கை ரீதியான பித்அத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வதையே இது எடுத்துக் காட்டுகின்றது. எனவே கொள்கை ரீதியான பித்அத் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
வரலாற்றில் ஏற்பட்ட ‘கொள்கைசார் பித்அத்’ பற்றிய பின்னணிகளைச் சுருக்கமாக நோக்கலாம்.
அலிதான் முதல் கலீஃபா:
நபி(ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னர் அபூபக்கர்(ரலி) அவர்கள் கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மற்றும் சிலர் அலி(ரலி) அவர்கள் கலீஃபாவாவதை விரும்பினர். உதாரணமாக, அப்பாஸ்(ரலி) அவர்கள் போன்ற ஒரு சில நபித் தோழர்களது விருப்பமாக இது இருந்தது. இது ஒரு சாதாரண நிகழ்வு. இதை யாரும் குறைகாண முடியாது. எனினும் பின்னால் வந்த ஒரு குழு நபி(ஸல்) அவர்கள் தனக்குப் பின்னர் அலிதான் கலீஃபாவாக வர வேண்டும் என்று வஸீயத் செய்திருந்தார்கள் என அதை மார்க்கமாக மாற்றினர். இதனால் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னர் அலி(ரலி) அவர்கள்தான் கலீஃபாவாக வர வேண்டும் என்றவொரு ‘கொள்கை சார்ந்த பித்அத்’ உருவானது.

இவர்கள் ஷீஆக்கள் எனப்பட்டனர். இந்தக் கொள்கை சார்ந்த பித்அத், இன்னும் பல வழிகேடுகளை உருவாக்கியதுடன், இஸ்லாமிய வரலாற்றில் இரத்தக் கறையை ஏற்படுத்திய பல துக்ககரமான நிகழ்வுகளுக்கும் காரணமாக அமைந்து விட்டது. இன்று வரை அந்தக் கறை படிந்த வரலாறு தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
அலிதான் முதலாவது கலீஃபா என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு என்றால் அதற்கு மாற்றமாகக் கலீஃபாக்களாகப் பதவி வகுத்த முன்னைய மூன்று கலீஃபாக்களின் நிலை என்ன என்று கேள்வி வந்தது? அவர்கள் துரோகிகள், காஃபிர்கள், முர்தத்துகள் என்று நாகூசாமல் கூறினர்.
அந்த மூன்று கலீஃபாக்களுக்கும் உதவியவர்களது நிலை என்ன என்ற கேள்வி வந்த போது அவர்கள் அனைவரும் முர்த்தத்துகள் என்றனர். இவ்வாறு அவர்கள் உருவாக்கிய ஒரு பித்அத்தான கொள்கை பல பித்அத்தான கொள்கைகளை ஈன்றெடுத்தது.
இன்று வரையும் ஷீயாக்கள் நபித் தோழர்களைக் காஃபிர்கள் என்று கூறி வருகின்றனர். ஈரான் போன்ற நாடுகளில் மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் ஈவிரக்கமற்ற கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். ஏனைய முஸ்லிம்களை அவர்கள் முஸ்லிம்களாகவே கருதுவதில்லை.
பித்அதுல் ஹுரூஜ்:
‘ஹவாரிஜ்கள்’ எனும் பித்அத்தான கொள்கை வாதிகள் இஸ்லாமிய வரலாற்றில் தோற்றம் பெற்றனர். இவர்களது தோற்றம் குறித்து நபி(ஸல்) அவர்களே முன்னறிவிப்பும் செய்திருந்தார்கள். இவர்கள் வணக்க-வழிபாடுகள் விடயத்தில் மிகப் பேணுதலானவர்கள். அவர்களது தொழுகையும், நோன்பும், மார்க்க ஈடுபாடும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் கவர்ச்சிகரமானதாகவும், பேணுதல் மிக்கதாகவும் இருந்தது. குர்ஆன்-ஹதீஸ் என்பதில் உறுதியாக இருந்தனர். முரட்டுத்தனமான இயல்பும், நன்மைகள் விடயத்தில் இவர்களிடம் இருந்த தீவிரமான போக்கும் இவர்களிடம் பித்அத்தான பல கொள்கைகளை உருவாக்கியது. இந்தக் கொள்கைகள் காரணமாக தம்மைச் சேராத முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதற்கும் அவர்கள் தயங்கவில்லை.

பெரும் பாவம் செய்பவர்களை இவர்கள் காஃபிர்கள் எனக் கருதினர். நரகம் செல்வோர் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் என்றும் நம்பினர். இது இவர்கள் மார்க்கத்தில் உருவாக்கிய பித்அத்தான கொள்கையாகும். இந்த கொள்கை காரணமாக பெரும் பாவம் செய்பவர்களாகத் தாம் கருதுபவர்களைக் கொன்று குவிப்பதை வணக்கமாகக் கருதினர். அவர்களது பார்வையில் காஃபிர்களான அலி(ரலி), முஆவியா(ரலி), அம்ர் இப்னு ஆஸ்(ரலி) போன்ற நபித் தோழர்களைத் திட்டம் தீட்டிக் கொலை செய்ய முயற்சித்து அலி(ரலி) அவர்களைக் கொலையும் செய்தனர்.
பொதுவான ஒரு விடயத்தில் மக்களிடம் தீர்ப்புக் கேட்டார். அல்லாஹ்விடம்தான் தீர்ப்புக் கேட்க வேண்டும். மனிதனிடம் தீர்ப்புக் கேட்பது குஃப்ர். எனவே குஃப்ரைச் செய்த அலி கொல்லப்பட வேண்டும் என அவர்கள் நம்பினர்.
அலி(ரலி) அவர்கள் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட ஒரு ஸஹாபி என்பதைக் கூட அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. அவரைக் கொல்லத் தயங்கவும் இல்லை.
நரகம் செல்பவன் நிரந்தரமாக நரகத்தில் இருப்பான் என்று நம்பினார்கள். எனவே இணை வைக்காத நரகவாசிகள் பின்னர் சுவனம் நுழைவிக்கப்படுவர் என்பதைப் பலமாக மறுத்ததுடன் இந்தக் கருத்தில் வரும் நபிமொழிகளைக் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி மறுக்கவும் அவர்கள் தயங்கவில்லை.
ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறும் பின்வரும் சம்பவம் இதை உணர்த்துகின்றது;
நான் ஹவாரிஜ்களின் சிந்தனைத் தாக்கத்திற்குள்ளாகி இருந்தேன். நாம் ஒரு கூட்டமாக ஹஜ்ஜுக்குச் சென்றோம். நாம் மதீனாவுக்கு வந்த போது ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் மக்களுக்கு ஹதீஸ்களை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (சுவனம் நுழைவிக்கப்படும்) நரகவாசிகள் பற்றிய ஹதீஸ்களைக் கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான், ‘அல்லாஹ்வின் தூதரின் தோழரே! நீங்கள் என்ன கூறிக்கொண்டிருக்கின்றீர்கள்? அல்லாஹ்வின் திருமறையில் ‘யாரை நீ நரகில் நுழைவித்தாயோ அவனைக் கேவலப்படுத்தி விட்டாய்’ (3:192) என்கின்றான். ‘அவர்கள் நரகிலிருந்து மீண்டு வர முயற்சிக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள்’ (32:20) என்று கூறுகின்றான். இப்படி இருக்க நீங்கள் (அதற்கு மாற்றமாக) என்ன கூறிக்கொண்டிருக்கின்றீர்கள்?’ என்று கேட்டேன்.
அதற்கு ஜாபிர்(ரலி) அவர்கள், ‘நீ குர்ஆனை ஓதியுள்ளாயா?’ எனக் கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். அதற்கவர்கள், ‘மகாமு முஹம்மத் பற்றி அறிந்துள்ளாயா?’ எனக் கேட்டார்கள். அதற்கும் நான் ‘ஆம்!’ என்றேன். அதன் வழியாக அல்லாஹ் நரகத்திலிருந்து வெளியேற்ற விரும்புபவர்களை வெளியேற்றுவான்!’ என விளக்கமளித்தார்கள். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரைத் தவிர வேறு எவரும் ஹவாரிஜிகள் கருத்தின் பக்கம் சாரவில்லை. ‘நீங்கள் நாசமாக! இந்த ஷைக் (ஜாபிர் ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் மீது பொய் கூறுகிறார் என நீங்கள் நினைக்கின்றீர்களா?’ என நாம் பேசிக் கொண்டோம் என அறிவிப்பாளர் கூறுகின்றார்.
(பார்க்க: முஸ்லிம் 493)

மேற்படி சம்பவத்தை அறிவிப்பவர் கவாரிஜிய்ய சிந்தனையால் தாக்கம் பெற்றவர். கடுகளவு ஈமான் உள்ளவனும் ஷிர்க் செய்யாவிட்டால் நரகத்திலிருந்து ஈடேற்றம் பெறுவான் என்ற ஹதீஸ்களுக்கு மாற்றமான கொள்கையில் கவாரிஜ்கள் இருந்தனர்.
அல்லாஹ் யாரை நரகத்தில் நுழைவிக் கின்றானோ அவனை அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டதாக குர்ஆன் கூறுகின்றது. நரகம் சென்றவனுக்கு மீண்டும் சுவனத்தைக் கொடுத்தால் அது இழிவுபடுத்தியதாகாது. அவனை கண்ணியப்படுத்தியதாக ஆகிவிடும். எனவே நரகில் நுழைந்தவன் சுவனம் செல்வான் என்பது குர்ஆனுக்கு முரண்படுவதால் அது குறித்த ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர்.
இவ்வாறு இவர்கள் உருவாக்கிய ஒரு கொள்கை சார்ந்த பித்அத் எண்ணற்ற ஸுன்னாக்கள் மறுக்கப்படவும், புதிய புதிய பல பித்அத்தான செயற்பாடுகள் உருவாகவும் காரணமாக அமைந்தது.
பித்அதுல் முஃதஸிலா:
இஸ்லாமிய உலகில் ‘முஃதஸிலா’ என்ற கொள்கை சார்ந்த பித்அத் வாதிகள் தோன்றினர். இவர்களும் வெளிப்படையான ஷிர்க்-பித்அத்துகளையும், மூட நம்பிக்கைகளையும் விட்டு விலகியே இருந்தனர். இவர்கள் குர்ஆன்-ஸுன்னாவை விட சுய அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். குர்ஆன்-ஸுன்னாவை வைத்துத் தீர்ப்புப் பெறுவதை விட்டு விட்டுக் குர்ஆன்-ஸுன்னாவையே தமது பகுத்தறிவுக்குட்பட்டதாக்கினர். எனவே தமது அறிவு ஏற்றுக்கொள்ளாதவற்றை நிராகரித்தனர். சூனியம், கப்றுடைய வேதனை, கண்ணூறு, ஷபாஅத்து எனப் பல அம்சங்கள் இவர்களது சிந்தனைத் தாக்கத்தால் நிராகரிக்கப்பட்டன.

இவர்கள் தாமாக ஒரு கொள்கையை உருவாக்கிக்கொண்டு அதற்குச் சாதகமாகக் குர்ஆன்-ஸுன்னாவை விளக்க முற்பட்டனர்.
உதாரணமாக, அல்லாஹ்வுக்குப் பேச்சு (கலாம்) என்ற பண்பு இல்லை என்பது இவர்களது நிலைப்பாடாகும்.
அல்குர்ஆனில் (7:143)

وَلَمَّا جَاءَ مُوسَىٰ لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ

என்று வருகின்றது. இதற்கு மூஸாவுடன் அல்லாஹ் பேசினான் என்பது அர்த்தமாகும். இதைக் ‘கல்லமல்லாஹ் மூஸா’ என மாற்றினால் மூஸா அல்லாஹ்வுடன் பேசினார் என்று வரும். எனவே ஒரு முஃதஸிலாக்காரன் இந்த வசனம் தனக்கு மாற்றமாக இருப்பதால் ‘கல்லமல்லாஹு என்பதை அதாவது, அல்லாஹ் பேசினான் என்பதை கல்லமல்லாஹ (அல்லாஹ்வுடன் பேசினான்) என மாற்றுவதற்கு ஏதாவது கிராஅத் முறை இருக்கின்றதா?’ என ஒரு அறிஞரிடம் கேட்கின்றான். தனது கருத்துக்கு மாற்றமாக இருப்பதால் குர்ஆனிலேயே கைவைக்க நினைக்கின்றான்.
உடனே அந்த அறிஞர்;

وَلَمَّا جَاءَ مُوسَىٰ لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ

என்ற வசனத்தை ஓதி, ‘இதற்கு என்ன செய்யப் போகின்றீர்கள்?’ எனக் கேட்கின்றார். எதிரி வாயடைத்துப் போகின்றான்.
அல்லாஹ்வுக்குப் ‘பேச்சு’ என்ற பண்பு இல்லை என்று இவர்கள் பித்அத்தான ஒரு கொள்கையை உருவாக்கிக் கொண்டதால் குர்ஆனை அல்லாஹ்வின் (கலாம்) பேச்சாக அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குர்ஆனை அல்லாஹ்வின் கலாமாக ஏற்காததால் அதனை ‘படைக்கப்பட்டது!’ என்று கூற நேரிட்டது. எனவே குர்ஆன் படைக்கப்பட்டது என்பதை ஏற்காத அறிஞர்களைச் சித்திரவதை செய்தனர். இதற்காகவே இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) சிறையில் சித்திரவதையைச் சந்திக்க நேர்ந்தது.
இமாம் அஹ்மத்(ரஹ்) ‘குர்ஆன் படைக்கப் பட்டது’ என்ற பித்அத்தான கொள்கைக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தினார்கள்.
குர்ஆன் படைக்கப்பட்டது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்களா? அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி) ஆகிய கலீபாக்கள் கூறினார்களா?
ஏன் அவர்கள் குர்ஆன் படைக்கப்பட்டது என்று கூறவில்லை? அவர்களுக்கு இது தெரியாதா?
அல்லாஹ்வுடைய தூதருக்கும், நான்கு கலீஃபாக்களுக்கும் தெரியாத ஒரு இஸ்லாமியக் கொள்கையை நீங்கள் எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?
அல்லது தெரிந்திருந்தும் அதை அவர்கள் கூறாது மறைத்தார்கள் என்று கூறப் போகின்றீர்களா? அப்படி அல்லாஹ்வுடைய தூதரும், கலீஃபாக்களும் தெரிந்திருந்தும் கூறாது மறைத்தார்கள் என்றால் அவர்கள் மறைத்ததை எதற்காக நீங்கள் பகிரங்கப்படுத்தப் போகின்றீர்கள்? என இமாம் அஹ்மத் வாதிட்ட சத்திய வாதாட்டம் அவர்களுக்குச் சாட்டையடிகளைத்தான் பெற்றுக் கொடுத்தது.
இவ்வாறே இஸ்லாமிய உலகில் தோன்றிய பல வழிகெட்ட அமைப்புகள் ‘அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை’ என்ற தவறான பித்அத்தான கொள்கையை உருவாக்கின. அந்த பித்அத்தான கொள்கை பல்வேறுபட்ட ஹதீஸ்கள் மறுக்கப்படவும், குர்ஆன்-ஸுன்னாவின் போதனைகள் தவறாக விளக்கமளிக்கப்படவும் காரணமாக அமைந்தது.
காதியானிகள், பஹாயிகள் போன்றோர் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னரும் நபிமார்கள் வரலாம் என்ற பித்அத்தான கொள்கையை உருவாக்கினர். இதனால் இறுதி நபித்துவம் பற்றிய ஹதீஸ்களை மறுத்தும், இறுதி நபித்துவம் பற்றிய குர்ஆனின் கூற்றைத் திரித்தும் அவர்கள் விளக்கம் அளிக்கும் நிலை தோன்றியது.
மற்றும் சில வழிகெட்ட அமைப்புகள் ஈஸா(அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்ற பித்அத்தான கொள்கையை உருவாக்கினர். இதனால் ஈஸா நபியின் மீள்வருகை பற்றிய ஹதீஸ்களை மறுத்தனர். இது குறித்துப் பேசும் குர்ஆன் வசனங்களின் கருத்துகளைத் திரித்துக் கூறினர்.
இவ்வாறு பித்அத்தான கொள்கை வாதிகள் ஆதாரத்தின் அடிப்படையில் கொள்கையை அமைக்காமல் ஒரு கொள்கையை அமைத்துக் கொண்டு அந்தக் கொள்கைக்கு ஏற்ப ஹதீஸ்களை மறுக்கவும், குர்ஆனின் அர்த்தத்தைத் திரிக்கவும் முற்பட்டனர்.
இவர்கள் பேசும் போது குர்ஆன்-ஸுன்னா ஒன்றே பேசினர். இவர்களில் பல பிரிவினரும் வெளிப்படையான பித்அத்துகளை விட்டும் விலகியே இருந்தனர். எனினும் கொள்கை ரீதியான பித்அத் அவர்களிடம் ஆழமாக வேரூன்றி விட்டதால் அவர்களாக உருவாக்கிக் கொண்ட அந்த பித்அத்தான கொள்கைதான் அவர்களுக்கு முக்கியமாகப்பட்டது. அவர்களாக உருவாக்கிக் கொண்ட அந்த பித்அத்தான கொள்கைதான் அவர்களைப் பிறரிலிருந்து பிரித்துக் காட்டும் பிரதானமான அம்சமாகவும் மாறியது.
எனவே, பித்அத்துகளை வெறுக்கும் சகோதரர்கள் கொள்கை சார்ந்த பித்அத்துகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அறிய வேண்டும். அவற்றை அழிப்பதற்காப் பாடுபடுவது மார்க்கக் கடமை என்பதையும் புரிய வேண்டும். நடைமுறை ரீதியான பித்அத்திலிருந்து ஒதுங்கிக் கொள்கை சார்ந்த பித்அத்தை நாம் சரிகண்டால் நாம் பித்அத்தை விட்டும் விலகியவர்களாக முடியாது என்பதைப் புரிந்து கொண்டு கொள்கை பித்அத்தையும் எதிர்ப்பது என்ற கொள்கையில் உறுதியாக நிற்போமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.