பித்அதுல் ஹஸனா (தொடர்-3)

பித்அத் கூடாது என்று கூறும் போது மாற்றுக் கருத்துள்ள சில அறிஞர்கள் பித்அத் கூடாது தான் இருந்தாலும் நல்ல பித்அத் (பித்அதுல் ஹஸனா) ஆகுமானது என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது தவறானது என்பது குறித்தும் பித்அத்தில் (வழிகேட்டில்) நல்ல பித்அத் (நல்ல வழிகேடு) என்று ஒன்று இல்லை என்பது குறித்து கடந்த இதழ்களில் நாம் பார்த்தோம். இது குறித்து மேலதிக தெளிவுக்காக இவ்வாக்கம் எழுதப்படுகிறது.

“பித்அதுல் ஹஸனா” என்ற ஒன்று இல்லை என்று கூறும் போது மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் பித்அதுல் ஹஸனா என்ற வார்த்தையை மதிக்கத்தக்க பல அறிஞர்களும் பயன்படுத்தியுள்ளார்களே! அவர்களுக்கு இது தெரியாதா என்ற தோரணையில் கேள்வி எழுப்புகின்றனர். இந்த கேள்விக்கு விடையாக இந்த ஆக்கம் அமையும்.
“பித்அதுல் ஹஸனா” என்ற ஒன்று இல்லை என நாம் கூறும் போது எமது கருத்தாக மட்டும் இல்லாமல் ஹதீஸை ஆதாரமாக வைத்தோம். மற்றும் இப்னு மஸ்ஊத், இப்னு உமர்(ர) போன்ற நபித் தோழர்கள், இமாம் “ஷாஃபிஈ(ரஹ்), இமாம் மாலிக்(ரஹ்) போன்றோரது கருத்துக்களையும் எடுத்து வைத்தோம். “பித்அதுல் ஹஸனா” என்ற ஒன்று இல்லை என இவர்கள் கூறுகின்றார்கள். “பித்அதுல் ஹஸனா” என்று ஒன்று இருந்தால் அந்த செய்தி இந்த ஸஹாபாக்களுக்கும், இமாம்களுக்கும் தெரியாமல் போய்விட்டதா? என்ற கேள்விக்கு பதில் தேடியாக வேண்டும்.
“பித்அதுல் ஹஸனா” இருக்கிறது என்று கூறிய இமாம்களை விட இவர்கள் அறிவாளிகளா? அந்த இமாம்களுக்கு விளங்காதது இவர்களுக்கு விளங்கிவிட்டதா? என்றெல்லாம் சில அறிஞர்கள் வாதிக்கின்றர்.
“பித்அதுல் ஹஸனா” இல்லை எனக் கூறிய ஸஹாபாக்கள் இமாம்களை விட, இருக்கிறது எனக் கூறும் நீங்கள் அறிவாளிகளா? அவர்களுக்கு விளங்காதது உங்களுக்கு மட்டும் விளங்கிவிட்டது என்று கூற வருகிறீர்களா?
அடுத்து மதிக்கத்தக்க அறிஞர்கள் “பித்அதுல் ஹஸனா” என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். இருப்பினும் இதே அறிஞர்கள் ஹதீஸில் இல்லாத சில நடைமுறைகளுக்கு எதிராகப் பேசியுள்ளார்கள். அவர்கள் “பித்அதுல் ஹஸனா” என்று கூறிய சில பித்அத்துக்களுக்கும் கூடாது எனக் கூறிய பித்அத்துக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. எனவே, பித்அதுல் ஹஸனா என்று கூறுவதில் அவர்கள் தமக்குத் தாமே முரண்படுகின்றனர்.
கண்ணியத்திற்குரிய அறிஞர்களைக் குறை கூற வேண்டும் என்பதோ அவர்கள் இந்த தீனுக்கு ஆற்றிய பணிகளைக் குறைத்து மதிப்பிட வேண்டும் என்றோ நாம் கடுகளவும் கருதவில்லை. உண்மை தெளிவாக உணரப்பட வேண்டும் என்பது மட்டுமே எமது எண்ணமாகும். இந்த அடிப்படையில் “பித்அதுல் ஹஸனா” என்ற கருத்தை முன்வைத்துள்ள மதிக்கத்தக்க அறிஞர்கள் சிலர் மற்றும் சில பித்அத்துக்கள் விடயத்தில் கூறியிருக்கும் கருத்துக்கள் சிலவற்றை தொகுத்துத் தருவது பொருத்தமாக அமையும். என்று எண்ணுகின்றோம்.
அல் இஸ்-இப்னு அப்துஸ் ஸலாம் என்பவர் “பித்அதுல் ஹஸனா” இருக்கின்றது என்று கூறிய அறிஞர்களில் ஒருவராவார். அவர் குனூத் ஓதும் போது கையைத் தூக்கி ஓத வேண்டுமா என்பது குறித்து பேசும் போது பின்வருமாறு கூறுகின்றார்கள்.
குனூத்தின் போது கையை உயர்த்துவது விரும்பத்தக்கது அல்ல. சூரதுல் ஃபாத்திஹாவில் வரும் துஆவுக்கோ, இரண்டு ஸஜதாக்களுக்கிடையில் ஓதப்படதும் துஆவுக்கோ கையை உயர்த்தாதது போன்றே குனூதில் கையை உயர்த்தாமல் இருக்க வேண்டும். இது குறித்து எந்த ஆதாரபூர்வமான ஹதீஸும் இல்லை. இவ்வாறே அத்தஹிய்யாதில் ஓதப்படும் துஆவுக்கும் கைகளை உயர்த்தக் கூடாது. நபி(ச) அவர்கள் தமது இரு கைகளையும் உயர்த்திய சந்தர்ப்பங்கள் அல்லாத துஆக்களின் போது கைகளை உயர்த்துவது விரும்பத்தக்கது அல்ல. துஆ முடிந்ததும் தமது இரு கைகளாலும் அறிவிலிகள் தாம் முகத்தைத் தடவுவர். குனூத்தில் ஸலவாத்து ஓதுவது கூடாது. குனூத் துஆவில் நபி(ச) அவர்கள் கற்றுத் தந்ததை விட அதிகப்படுத்துவதோ அல்லது குறைப்பதோ கூடாது.
இந்த செய்தி அறிஞர் அவர்களின் பதாவா நூலில் 392 ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. குனூத்தில் கையை உயர்த்தி துஆச் செய்வது, குனூத்தில் ஸலவாத்து ஓதுவது, நபியவர்கள் கைகளை உயர்த்தி துஆக் கேட்காத சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்தி துஆக் கேட்பது, துஆக் கேட்ட பின்னர் கரங்களால் முகத்தைத் தடவுவது இவற்றில் எல்லாம் என்ன குற்றம் இருக்கிறது? நபி வழியில் ஆதாரம் இல்லை என்பதை விட இதில் வேறு ஏதும் தவறுகள் உள்ளனவா? “பித்அதுல் ஹஸனா” இருக்கிறது என்று கூறும் அறிஞர் அவர்கள் இவற்றையெல்லம் ஏன் பித்அதுல் ஹஸனாவிலே சேர்க்கவில்லை? பித்அதுல் ஹஸனா பற்றி பேசும் அறிஞர்கள் பித்அத் விடயத்தில் தமக்குத் தாமே முரண்பட்டிருப்பதைத் தானே இது உறுதிப்படுத்துகின்றது.
இதே அறிஞர் அமல்களைச் செய்துவிட்டு அதன் நன்மைகளை மரணித்தவர்களுக்கும், உயிருடன் இருப்பவர்களுக்கும் ஹதியா செய்வது பற்றி தமது பதாவாவில் கூறும் போது,
ஒருவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு ஒரு நல்லமலைச் செய்து விட்டு அதன் நன்மையை உயிருடன் இருப்பவருக்கோ அல்லது மரணித்தவருக்கோ ஹதியாச் செய்தால் அந்த நன்மை அவரைச் சென்றடையாது
“மேலும், மனிதனுக்கு அவன் முயற்சித் ததைத் தவிர வேறு எதுவும் இல்லை” (அன்னஜ்ம்:39)
ஸதகா, நோன்பு, ஹஜ் போன்ற …… விதிவிலக்கு அளிக்கப்பட்ட அமல்கள் அல்லாமல் வேறு அமல்களை மரணித்தவருக்கு சேர்ப்பிப்பதற்காகச் செய்தாலும் அதுவும் சென்றடையாது. பதாவா அல் இஸ்-இன்னு அப்துஸ்ஸலாம் 289)
குர்ஆனை ஓதி ஹதியாச் செய்தால் அது சேரும் என்று சிற அறிஞர்கள் கூறியிருக்கும் போது “பித்அதுல் ஹஸனா” இருக்கிறது என்று கூறும் இந்த அறிஞரோ அதை மறுக்கின்றாரே! இதை ஏன் அவர் பித்அதுல் ஹஸனாவில் சேர்க்கவில்லை?
‘ஷஃபான் மாதத்தில் நடுப்பகுதியில் “ஸலாதுர் ரகாயிப்” என்ற பெயரில் தொழுகை ஒன்று தொழப்படுவதுண்டு. இதனை சிலர் பித்அதுல் ஹஸனா என்று கூறுகின்றர். எனினும் மார்க்கத்தில் பித்அதுல் ஹஸனா இருக்கிறது என்று கூறும் பல அறிஞர்களும் இதை வண்மையாக மறுத்துள்ளனர். ஒரு தொழுகையை எதற்காக மறுக்க வேண்டும்? அதில் என்ன தீங்கு அல்லது குற்றம் இருக்கிறது! நபி வழியில் இல்லை என்பதை விட இதை இந்த அறிஞர்கள் தடுப்பதற்கு வேறு காரணம் இருக்கிறதா? இந்தக் காரணத்தை முன்வைத்துத் தான் நபி வழியில் இல்லாத புதிய வழிபாடுகள், தொழுகைகள் அனைத்தையும் நாம் பித்அத் என்கின்றோம்.
அல் இஸ்-இப்னு அப்துஸ்ஸலாம் அவர்கள்
என்ற நூலில் 7ஆம், 8ஆம் பக்கங்களில் இந்தத் தொழுகையைக் கண்டித்துள்ளார்கள். அறபா, முஸ்தலிபாவில் நிற்பது, ஜமாராவில் கல் எறிவது என்பவை இபாதத்துக்கள் தான். ஹஜ் அல்லாத காலத்தில் போய் அறபா, முஸ்தலிபாவில் நின்றால் அல்லது ஜமாராத்தில கல்லெறிந்தால் அது இபாதத் ஆகாது. எனவே, ஒரு இபாதத் செய்வதென்றால் அதற்காக கூறப்பட்ட நேரம், இடம் அனைத்தும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்று விபரிக்கின்றார்.
“ஷாஃபிஈ மத்ஹபின் பிரபலமான இமாமான இமாம் நவவி (ரஹ்) அவர்களும் பித்அத்தை நல்லது, கெட்டது எனப் பிரித்துள்ளார்கள். எனினும் அவர்களும் இந்தத் தொழுகையை தமது
பதாவா பக்கம் 57 இல் கண்டிக்கிறார்கள். இவ்வாறே அறிஞர் அப்துல்லாஹ் அல் காரிமூன் அவர்களும் பித்அதுல் ஹஸனா பற்றிப் பேசியவராவார். அவரும்
என்ற நூலில் இந்த பித்அத்தான தொழுகைகளையும், வணக்கங்களையும் கண்டிக்கின்றார்கள். இதனைத்தான் நாம் இன்று ஒட்டுமொத்தமான பித்அத்துக்களுக்கும் கூறுகின்றோம்.
இவ்வாறே இமாம் அபூ ஸாமா(ரஹ்) அவர்கள் மவ்லிதுன் நபியை பித்அதுல் ஹஸனா என்று கூறியவர். இவர் தனது
என்ற நூலில் ஏராளமான பித்அத்துக்களைக் கண்டிக்கிறார்கள். இவர் ஜனாஸா தூக்கும் போது இஸ்தஃபிரூ லஹு கபரல்லாஹு லகும்
என்று கூறுவதைக் கண்டிக்கிறார். ஜும்ஆவுக்கு முன் சுன்னத் இல்லை என்கின்றார். ஸலாதுல் ரகாயிப் கூடாது என்கின்றார். ஷஃபான் நடுப்பகுதியில் தொழப்படும் தொழுகை கூடாது என்கின்றார். மவ்லித் பித்அதுல் ஹஸனா என்றால் ஷஃபான் தொழுகை எப்படிக் கெட்ட பித்அத் ஆவது? என்ற கேள்விக்கு நியாயமான பதில் இருக்காது. ஷஃபான் தொழுகை நபி வழிக்கு மாற்றமானது என்றால் மவ்லிதுன் நபியும் நபிவழிக்கு மாற்றமானதே! அது கூடும், இது கூடாது என்று கூறுவது முரண்பாடாக இல்லையா?
மற்றும் பல அறிஞர்களும் பித்அதுல் ஹஸனா இருக்கிறது என்று கூறிவிட்டு பல பித்அத்துக்களை எதிர்த்து எழுதியுள்ளார்கள். மேலதிக விளக்கத்துக்காகவும் உறுதிக்காகவும் இன்னும் சில செய்திகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் நோக்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.