பித்அதுல் ஹஸனா (தொடர்-2)

மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்கள் என்பதையும், பித்அத் கள் அனைத்தும் வழிகேடுகள் என்பதையும் பித்அத்தினால் ஏற்படக் கூடிய பாரதூரமான மார்க்க ரீதியான விபரீதங்களையும் பார்த்தோம். இந்த விபரீதங்களைக் கருத்திற்கொள்ளாத சிலர் சில தவறான வாதங்களை முன்வைத்து நல்ல பித்அத்தும் இருக்கின்றதென வாதிக்கின்றனர். இந்த வாதம் தவறானதாகும்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டால் நபி(ச) அவர்கள் பித்அத்களைக் கண்டித்ததில் அர்த்தமில்லாமல் போகும். “எல்லா பித்அத்களும் வழிகேடுகளே!” என்று கூறியதில் அர்த்தமற்றுப் போய் விடும். இந்த மார்க்கம் பூரணப்படுத்தப்பட்டு விட்டதென்ற குர்ஆனின் கூற்றை மறுப்பது போன்று ஆகிவிடும். அவரவர் தாம் விரும்பிய விதத்தில் மார்க்க வழிபாடுகளை உருவாக்க முடியுமென்றால் அல்லாஹ் இறைத் தூதர்களை அனுப்பியதிலும் அர்த்தம் இல்லாமல் போய்விடும். இவ்வாறு இஸ்லாத்தின் அடிப்படைகளையே ஆட்டங்காணச் செய்யும் அபத்தமான வாதமாகவே “பித்அதுல் ஹஸனா” வாதம் இருக்கின்றது.
இது குறித்து ஸஹாபாக்கள்-அறிஞர்கள் சிலரது கூற்றுகளைத் தருவது இந்த இடத்துக்கு ஏற்றமாக இருக்குமெனக் எண்ணுகின்றேன்.
அபூபக்கர்(ர) அவர்கள் கூறியதாக இப்னு ஸஅத்(ர) அவர்கள் கூறும் போது பின்வருமாறு குறிப்பிட்டதாகக் கூறுகின்றனர்;
அதாவது, “மனிதர்களே! நிச்சயமாக நான் (மார்க்கத்தில் உள்ளதைப்) பின்பற்றுபவனே! புதிதாக எதையும் உருவாக்குபவன் அல்ல! நான் நல்லது செய்தால் எனக்கு உதவி செய்யுங்கள்! நான் தவறி விட்டால் என்னை நேர்ப்படுத்துங்கள்!”.
(தபகாதுல் குப்ரா 3/136)
அபூபக்கர்(ர) அவர்கள் பித்அத்தைக் கண்டித்திருப்பதை இது உணர்த்துகின்றது.
இவ்வாறு நாம் கூறும் போது “நபி(ச) அவர்கள் குர்ஆனைத் தனி நூலாக ஆக்கவில்லை! அபூபக்கர்(ர) அவர்கள்தான் குர்ஆனைத் தனி நூலாக ஒன்று திரட்டினார்கள்! இது பித்அத் இல்லையா?” எனச் சிலர் கேட்பர்.
நபி(ச) அவர்களது காலத்திலேயே குர்ஆன் நபியவர்களால் நியமிக்கப்பட்ட “குத்தாபுல் வஹீ” எனும் வஹீயை எழுதுவோராலும், தனி நபர்களாலும் எழுதிப் பாதுகாக்கப்பட்டன. ஆயத்துகள் இறங்கும் போது இதை இந்த ஸூறாவில் இந்த ஆயத்துக்கு அடுத்ததாகப் பதிவு செய்யுங்கள்!” என நபி(ச) அவர்கள் கட்டளையிடுவார்கள். அவ்வாறே பதிவு செய்யப்பட்டு வந்தது. நபி(ச) அவர்களது மரணத்தின் பின்னர் குர்ஆனை முழுமையாக மனனம் செய்த நபித் தோழர்கள் யுத்தங்களில் மரணித்த போதுதான் அங்குமிங்குமாகத் தனித் தனியாகப் பதியப்பட்ட குர்ஆனை முழுமையாக ஒரே நூலாகப் பதிந்து பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் உணரப்பட்டது. அபூபக்கர்(ர) அவர்கள், உமர்(ர) அவர்களது ஆலோசனையின் பேரில் இந்த முடிவைச் செய்தார்கள். குர்ஆனைக் குறிக்க “அல்கிதாப்” (வேதம், புத்தகம்) என்ற பதம் அல்குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது.
(பார்க்க: 2:2, 2:83, 2:89, 2:129, 151, 176, 177, 213, 231)

நபி(ச) அவர்கள் உயிருடனிருக்கும் போது வஹீ வந்துகொண்டிருந்த காரணத்தினால் நூலாக்கப் பணியைச் செய்ய முடியாது. எனவே எழுதிப் பாதுகாக்கும் பணி மட்டும்தான் நடந்தது. நபி(ச) அவர்களது மரணத்தின் பின் நூலாக்குவதற்கு இருந்த தடையும் நீங்கி விட்டது. குர்ஆனைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடும் அவசியமாகி விட்டது.
அடுத்து, குர்ஆனை நூலாக ஆக்கியதென்பது தனியான இபாதத் அல்ல. இதனால் இஸ்லாமிய இபாதத்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குர்ஆனை ஓதுவதில் கூட மாற்றங்களோ, திருத்தங்களோ ஏற்படவில்லை. எனவே இது பித்அத்தில் சேராது. சில அறிஞர்கள் “பித்அதுல் ஹஸனா” என்றொரு பிரிவு இருப்பதாகக் கூறுகின்றனர். “எது நல்ல பித்அத்?” என்று கேட்டால் “மத்ரஸா கட்டுவது, பள்ளி கட்டுவது, குர்ஆன் ஒன்று திரட்டப்பட்டது, ஒலிபெருக்கியில் அதான் சொல்தல் மற்றும் பயான்களை நிகழ்த்துவது என்று பித்அத்தில் சேராத சில அம்சங்களை “நல்ல பித்அத்” என்ற பிரிவில் சேர்க்கின்றனர். இது தவறாகும்.
பித்அத் குறித்து இப்னு மஸ்ஊத்(ர) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்;
“(உள்ளதைப்) பின்பற்றுங்கள்! புதிதாக எதையும் உருவாக்காதீர்கள்! நீங்கள் போதுமாக்கப்பட்டு விட்டீர்கள்! எல்லா பித்அத்களும் வழிகேடுகளே!”
(தபரானீ 9/154, 8770, மஜ்மஉஸ் ஸவாயித் 1/181)

இருப்பதைப் பின்பற்றினாலே போதும். புதிதாக எதையும் நீங்கள் உருவாக்க வேண்டியதில்லை. மார்க்கம் உங்களுக்குப் பூரணமான வழிகாட்டலைத் தந்திருக்கின்றது. நீங்கள் எதையும் உருவாக்கும் அளவுக்கு மார்க்கம் குறைவடையவில்லையென்று கூறும் இப்னு மஸ்ஊத்(ர) அவர்கள் பித்அத்களை வன்மையாகக் கண்டிப்பவராகவும் இருந்தார்கள். இதனையும் மார்க்கத்தில் நல்ல பித்அத்தென்று எதுவும் இல்லை என்பதையும் பின்வரும் சம்பவம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
பள்ளியில் ஒரு கூட்டம் ஒன்று கூடியிருந்து கூட்டாக திக்ர் செய்துகொண்டிருந்தனர். இது பற்றிக் கேள்விப்பட்ட இப்னு மஸ்ஊத்(ர) அவர்கள் அந்த இடத்துக்குச் சென்று அவர்களைப் பின்வரும் வார்த்தைகள் மூலம் கண்டித்தார்கள்.
“முஹம்மத்(ச) அவர்களின் தோழர்களும், மனைவியரும் உயிருடனிருக்கின்றனர்! அவரது ஆடைகளும், பாத்திரங்களும் கூட அப்படியே இருக்கும் போது இவ்வளவு விரைவாக உங்களை வழிகெடுத்தது எது?” என்று கேட்டார்கள்.
இதை முன்னின்று நடத்தி அம்ர் என்பவரைப் பார்த்து,
“அம்ரே! நீங்கள் வழிகெட்ட பித்அத்தை உண்டாக்கி விட்டீர்கள்!” என்று கண்டித்ததுடன், “நீங்கள் முஹம்மத்(ச) அவர்களையும், அவர்களது தோழர்களையும் விட நேர்வழி பெற்றவர்களாகி விட்டீர்களா?” என்று கேட்டார்கள்.
(பார்க்க: தபரானீ 8557, 8558, 8559)

இந்த நிகழ்ச்சியை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்!
“நல்ல பித்அத்” என்ற ஒன்று இருக்குமாக இருந்தால் பள்ளியில் ஒன்று சேர்ந்து கூட்டாக திக்ர் செய்வதும் நல்ல பித்அத்தில் தானே சேரும்?
இதை ஏன் இப்னு மஸ்ஊத்(ர) அவர்கள் கண்டிக்க வேண்டும்?
மார்க்கத்தில் நல்ல பித்அத்தென்று ஒன்றும் இல்லை. பித்அத்கள் அனைத்துமே வழிகேடுகள்தான். எனவேதான் இப்னு மஸ்ஊத்(ர) அவர்கள் பள்ளியில் கூட்டு திக்ர் செய்தோரைக் கண்டித்தார்கள். இது நபி(ச) அவர்களோ, அவர்களது தோழர்களோ நடைமுறைப்படுத்தாத புதிய செயலாகும். இதை மார்க்கமென்றும், நல்லது என்றும் சொல்வதன் மூலம் இவர்கள் தம்மை நபியையும், நபித் தோழர்களையும் விடவும் அதிகம் நேர்வழியை அறிந்து கொண்டோராகக் காட்டிக்கொள்கின்றனர். எனவேதான் “நீங்கள் இந்தப் புதிய வழிபாட்டை உருவாக்குவதன் மூலம் நபி(ச) அவர்களை விடவும், நபித் தோழர்களை விடவும் உங்களை அதிகம் நேர்வழி பெற்றவர்களென்று கூற வருகின்றீர்களா?” என்று கேட்கின்றார்கள்.
மார்க்கத்தில் நல்ல பித்அத்தென்று எதுவும் இல்லை. பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகளே என்பதை இந்த நிகழ்ச்சி சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கின்றது.
இப்னு உமர்(ர) அவர்கள் இது பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்கள்;
“மக்கள் நல்லதாகக் கண்ட போதிலும் அனைத்து பித்அத்களும் வழிகேடுகளே!”.
இவ்வாறு கூறிய இப்னு உமர்(ர) அவர்கள் பித்அத் விடயத்தில் மிக விழிப்பாக இருந்தார்கள். ஒரு மஸ்ஜிதுக்கு இப்னு உமர்(ர) அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அதான் கூறிய முஅத்தின், அதன் முடிவில் “தொழுகை! தொழுகை!” என அதானில் இல்லாத சில வார்த்தைகளைக் கூறிய போது வயோதிபத்தினால் பார்வையை இழந்திருந்த இப்னு உமர்(ர) அவர்கள் “இது பித்அத்!” எனக் கூறி, “என்னை வேறு பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள்!” என்று கூறினார்கள்.
எனவே மார்க்கத்தில் “நல்ல பித்அத்” என்ற பேச்சுக்கு இடமேயில்லை. மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பார்ப்பதற்கு நல்லதாகத்தான் தென்படும். அது மார்க்கத்தில் இல்லாததென்பதால் அல்லாஹ்வின் அங்கீகாரத்துக்கு அப்பாற்பட்டது என்பதோடு வழிகேடாகும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இது குறித்து மார்க்க அறிஞர்கள் பலரும் உறுதியான நிலைப்பாட்டில் இருந்துள்ளனர்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.