பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (1)

Nool Vimarsanam
அஷ்ஷெய்க. முஹம்மது அல் கஸ்ஸாலி அவர்கள் “அஸ்ஸுன்னா, அந்நபவிய்யா பைய அஹ்லில் பிக்ஹி வஅஹ்லில் ஹதீஸ்” என்ற பெயரில் அரபியில் ஒரு நூலை எழுதினார். இதனை ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம். எப். ஸைனுல் ஹுஸைன் ((நளீமி) M.A (Cey)) அவர்கள் அழகுற தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

பிக்ஹ் துறையினருக்கும், ஹதீஸ் துறையினருக்கும் மத்தியில் “நபிகளாரின் சுன்னா” என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூலில் சுன்னாவிற்கு மாற்றமான பல செய்திகளும், நபித்தோழர்கள், தாபிஈன்கள், ஹதீஸ் துறை இமாம்கள் போன்றோர்களைக் குறைகூறக்கூடிய அம்சங்களும் நிறைந்துள்ளன. அத்துடன் பல நபிமொழிகளும்; மறுக்கப்பட்டுள்ளன.
இந்நூல் அரபியில் வெளியிடப்பட்ட போதே பலத்த சர்ச்சைகள் எழுந்ததுடன் மறுப்புக்களும் வெளிவந்தன. இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டதன் மூலம் மாற்றுக் கருத்தைப் பதிவு செய்யும் கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டனர்.
சர்வதேச வலைப்பின்னலை உடைய அமைப்புக்கள் தமது முகாம் சார்ந்த அறிஞர்களது ஆக்கங்களை தாய்மொழிக்கு மாற்றும் போது தாம் வாழும் சூழல் சமூகத்திற்கு இது தேவைதானா? என்பதை ஒருகணம் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும்.
அந்த அறிஞர்கள் வாழ்ந்த சூழல், சந்தித்த சவால்கள், சமூகப் பிரச்சினைக்கு ஏற்ப அவர்கள் எழுதிய சில ஆக்கங்கள் எமது சமூக சூழலுக்கு அவசியமற்றதாகவும், அவசியம் தவிர்க்கப்பட வேண்டியதாகவும் கூட இருக்கலாம்.
குறிப்பாக முஹம்மத் அல் கஸ்ஸாலி போன்ற அறிஞர்கள் தாம் சார்ந்த சமூகத்திற்கு ஒத்துப் போகும் விதத்தில் கருத்துக்களை முன்வைக்கும் போக்குடையவர்களாவர். இவர்கள் முன்வைத்த சில தீர்வுகள் எமது சமூகத்திற்கு மட்டுமல்ல சுன்னாவுக்குக் கூட முரண்பட்டவைகளாக இருப்பது தவிர்க்க முடியாததாகும்.
சுன்னா மீPதும், ஹதீஸ் துறை அறிஞர்கள் மீதும் கொண்ட அன்பினால் தான் இந்த விமர்சனம் எழுதப்படுகின்றது. இந்த ஆக்கம் இயக்க வேறுபாட்டிலோ, இயக்க வெறியினாலோ, காழ்ப்புணர்வினாலோ எழுந்தது அல்ல என்பதை உறுதியாகக் கூறுகின்றோம். ஷெய்க் கஸ்ஸாலியின் இதே அனுகுமுறையில் சில தவ்ஹீத் தரப்பினர் ஹதீஸ்களை மறுத்த போதும் நாம் அதை எதிர்த்தோம், எதிர்த்தும் வருகின்றோம். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆசிரியர் பற்றிய அறிமுகம்:
ஷெஷய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி அவர்கள் 1917.09.23 இல் எகிப்திலுள்ள “நக்லுல் இனப்” எனும் கிராமத்தில் இஸ்லாமியப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தார்கள். 1999.03.10 இல் மரணித்தார்கள். இவர் பிறந்த ஊர் “முஹம்மது அப்துல்லாஹ், முஹம்மத் ஸல்தூத்” போன்ற அறிஞர்களை ஈன்றெடுத்த பிரதேசமாகும். (மார்க்க அனுகுமுறையில் இவர்களுடனும் நமக்கு முரண்பாடு உள்ளது என்பது தனி விடயம்)

எகிப்தின் அல் அஸ்ஹரில் கற்ற ஷெய்க் அவர்களுக்கு இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் ஸ்தாபகர் “ஹஸனுல் பன்னா” அவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டது. அவரே இவரிடம் “அல் இஹ்வானுல் முஸ்லிமீன்” இதழில் கட்டுரை எழுதுமாறு வேண்டும் அளவுக்கு சிறந்த எழுத்தாற்றலைப் பெற்றிருந்தார். அரை நூற்றாண்டிற்கும் அதிகமான காலத்தைக் களப்பணியிலும், சமூகப் பணியிலும் கழித்த ஷெய்க் அவர்கள், 70 இற்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார்கள். இவரது ஆக்கங்களில் “ஹுலுகுல் முஸ்லிம்” என்ற நூல் நான் விரும்பி வாசித்த நூலாகும்.
இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்திற்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும், கீழைத்தேய ஆய்வாளர்கள் இஸ்லாம், இஸ்லாமிய ஷரீஆ தொடர்பில் தொடுக்கும் வாதங்களுக்கும் பதில் கூறி இஸ்லாமிய நெறியைப் பாதுகாக்க முனைந்தவர். இவரது இஸ்லாமிய சேவைக்காக “மன்னர் பைஸல்” சர்வதேச விருதைப் பெற்றவர். தபீபுல் உம்மா (சமூகத்தின் நோய்களைத் தீர்க்கும்) வைத்தியர், அஸ்ருல் ஒஸ்தாத் (காலத்தின் போதகர்), மவ்கிஉல் பிக்ஹ் (சிந்தனைக் கூடம்) என்றெல்லாம் சிலாகித்துப் போற்றப்பட்டவர்.
ஜாமிஉல் அஸ்ஹர், ஜாமிஅதுல் மலிக் அப்துல் அஸீஸ், ஜாமிஅது உம்முல் குரா, ஜாமிஅது கதர் என பல பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். இவ்வளவு இருப்பினும் இவர் சிந்தனை ரீதியில் முஃதஸிலா சிந்தனைப் போக்கால் தாக்கப்பட்டவர். இந்த சிந்தனையால் தாக்கப்பட்ட “முஹம்மத் அப்துஹு” போன்ற அறிஞர்களுடன் ஒப்பிடும் போது இவர் பரவாயில்லை எனலாம்.
ஷெய்க் கஸ்ஸாலி அவர்கள் தனது கருத்துக்கு குர்ஆன், சுன்னாவில் பலமான ஆதாரம் இருந்தால் அந்த இடத்தில் குர்ஆன், சுன்னாவுடன் நின்று கொள்ளும் அதே வேளை தனது கருத்துக்கு மாற்றமாக ஹதீஸ் இருந்தால் அப்போது மட்டும் இமாம் அபூ ஹனீபா, இமாம் இப்னு ஹஸ்ம் போன்றவர்களது கருத்துக்குப் பின்னால் மறைந்திருந்து ஹதீஸை மறுக்கும் போக்கை இந்நூலில் பரவலாகக் காணலாம். இந்த ஆபத்தான போக்குக் குறித்தும், ஹதீஸ்களை மறுக்கும் விதம் குறித்தும் எச்சரிக்கை செய்வதற்காகவே இந்த விமர்சனத்தை விரிவாக சமூகத்திற்கு முன்வைக்க விளைகின்றோம்.
நூலின் தரம்
நூல் தரமாகவும், நேர்த்தியாகவும் அச்சிடப்பட்டுள்ளது. நூலின் கட்டமைப்பு, எழுத்தமைப்பு அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்க்கும் ஆற்றல் பாராட்டத்தக்கது. ஒரு மொழிபெயர்ப்பு நூலை வாசிக்கின்றோம் என்ற எண்ணமே எழாத அளவுக்கு தரமாக மொழியாக்கம் செய்துள்ளார் என்ற வகையில் அவரைப் பாராட்டலாம். அவர் தனது ஆற்றலை இதைவிடச் சிறந்த பணிக்கு இன்னும் அதிகமாகப் பயன்படுத்த அல்லாஹ் அருள் புரியட்டும்.

நூலாசிரியர் அஹ்லுல் பிக்ஹ், அஹ்லுல் ஹதீஸ் என்ற பதங்களை அடிக்கடி பயன் படுத்துகின்றார். நூலின் தலைப்பாகவும், இப்பதம் இடம்பெற்றுள்ளது. எனினும் ஒரு இடத்தில் கூட இந்தப் பதம் யாரைக் குறிக்கின்றது என்பது குறித்த விளக்கம் இடம்பெறவில்லை. இது நூலுக்குப் பெரும் குறையாகும். அவர் அனேக இடங்களில் அஹ்லுல் ஹதீஸினரை மட்டம் தட்டிப் பேசியுள்ளார். அவர் அஹ்லுல் ஹதீஸ் எனக் கூறுவது இவர்களைத்தான் எனத் தெளிவாகக் குறிப்பிட்டு மட்டம் தட்டியிருந்தால் மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டதை விட கூடுதல் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகத் தவிர்த்தாரோ என்னவோ!
நூல் நெடுகிலும் ஹதீஸ் ஆஹாத், ஹதீஸ் முதவாதிர், ழன்னி, கத்யீ, இஜ்மா, சுன்னா, ஆதத் போன்ற அறபுக் கலைச் சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அறபு மொழியில் அவர் எழுதியதால் இந்தக் கலைச் சொற்களுக்கு விளக்கம் தேவையில்லை என அவர் கருதியிருக்கலாம். இருப்பினும் மொழிபெயர்ப்பாளர் கலைச்சொல் விளக்கக் குறிப்பொன்றை இணைத்திருக்கலாம். நூலின் ஆரம்பத்தில் பிஸ்மியோ, ஸலவாத்தோ இடம்பெறாமையும் ஒரு குறையாகவே தென்பட்டாலும் நூலாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும் பிஸ்மி கூறியே பணியை ஆரம்பித்திருப்பர் என்று நல்லெண்ணம் வைக்கலாம்.
01. நூலின் பீடிகை:
நூலாசிரியர் பீடிகைப் பகுதியில் பின்வருமாறு கூறுகின்றார்.

“நான் இந்த நூலில் வெளியிட்டுள்ள தீர்ப்புக்களுக்கான பொறுப்பை தனியாகச் சுமந்து கொள்ளவும், இவற்றுக்கு எதிராகக் கிளர்ந்தெழக்கூடிய எதிர்ப்புக்களை தனித்து நின்று முகம் கொடுக்கவும் நாடினேன். (பக்கம்-02)
நூலாசிரியரின் இந்தக் கூற்று எதை உணர்த்துகின்றது! இந்நூலில் மக்கள் கிளர்ந்தெழத் தக்க கூற்றுக்கள் உள்ளதைத்தானே உறுதி செய்கின்றது? இதற்கு எதிர்ப்பு வரும். அந்த எதிர்ப்பை நானே எதிர்கொள்கின்றேன்” என்கிறார். அப்படியிருக்க இந்த நூலை ஏன் தமிழ் பேசும் சமூகத்திற்கு இறக்குமதி செய்ய வேண்டும்? இதைத் தவிர்த்திருக்கலாமல்லவா?
இந்நூலில் மொழிபெயர்ப்பாளர் “மொழிபெயர்ப்பாளர் உரை” என்ற பகுதியில்,
“இந்நூலிலும் அவர் பெரும்பான்மை அறிஞர்களுடன் முரண்படும் வகையில் சில கருத்துக்களை எழுதியுள்ளார். இதனால்தான் இந்த நூல் மூல மொழியில் வெளிவந்த போது மக்கள் மத்தியில் அதிர்வலைகள் ஏற்பட்டன. இந்நூலிலுள்ள சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை…..” (பக்கம்-13) என்று குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான அறிஞர்களுடன் முரண்படக் கூடிய, மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடிய மொழிபெயர்ப்பாளருக்குக் கூட உடன்பாடில்லா கருத்ததுக்கள் அடங்கிய நூலை எதற்காகத் தமிழ் உலகுக்குக் கொடுக்க வேண்டும்?
ஷெய்க் அவர்களை தமிழ் பேசும் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் சர்ச்சைகளை ஏற்படுத்தாத அவரது வேறு ஆக்கங்களை மொழி பெயர்த்திருக்கலாமல்லவா? மொழிபெயர்ப்பாளர் ஷெய்க் கஸ்ஸாலி அவர்கள் பெரும்பான்மை அறிஞர்களுடன் முரண்படும் வகையில் கருத்துக் கூறியிருப்பதாகக் கூறுகின்றார்.
நூலாசிரியர் கூறுவதைக் கவனியுங்கள்,
“நான் எனக்கென ஒரு கருத்து இருந்தாலும் முரண்பாடுகளையும், புற நடைகளையும் வெறுக்கின்றேன் என்பதை அல்லாஹ் அறிவான். நான் (ஜமாஅத்) சமூகத்துடன் இனைந்து செல்லவே விரும்புகின்றேன். சமூகத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் நோக்கில் எனக்கு திருப்தியான கருத்தையும் விட்டுக்கொடுப்பேன்” (பக்கம்- 57)
தனது கருத்தையும் முரண்படக் கூடாது என்பதற்காக விட்டுக் கொடுப்பதாகக் கூறுகின்றார், புற நடைகளை வெறுப்பதாகக் கூறுகின்றார். இருப்பினும் அனேக அறிஞர்களுக்கு புற நடையிலான கருத்துக்களைத் தான் அவர் இந்நூலில் முன்வைத்துள்ளார். இதற்கு மொழிபெயர்ப்பாளரின் கூற்றே நிதர்சனமான சாட்சியாகும். “இசை கேட்டல்” போன்ற சாதாரண விடயத்தில் கூட nஷய்க் அவர்கள் தனது கருத்தை சமூக ஒற்றுமைக்கும், முரண்பாடுகளைக் களைவதற்குமாக விட்டுக் கொடுக்கவில்லை என்பதைத்தான் நூல் நிரூபிக்கின்றது. இத்தகைய ஒரு நூல் சமூகத்திற்குத் தேவையா? என்பது சிந்திக்கத்தக்கதாகும்.
02. ஸஹாபாக்கள் மீதான விமர்சனம்
இந்த நூலாசிரியர் நவீன காலப் பேரறிஞர்களுள் ஒருவராகக் மதிக்கப்படுகின்றார். இருப்பினும், ஸஹாபாக்கள், ஹதீஸ்துறை அறிஞர்கள் குறித்த அவரது கூற்றுக்கள் விமர்சனத்திற்குரியதாகும். இவரது இத்தகைய கூற்றுக்கள்தான் இந்த விமர்சனக் கட்டுரைக்கான முக்கிய தூண்டுதலாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நபித்தோழர்களைக் குறை கூறுபவர்களை வெறுப்பதென்பது சுவனம் செல்லும் கூட்டத்தின் குணப் பண்புகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உமர்(ரழி) குறித்த விமர்சனம்:
“தனது குடும்பத்தார் அழுவதால் மையத்து வேதனைக்குள்ளாக்கப் படுகின்றது” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற கருத்துப்பட உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இது குறித்து ஆயிஷா(ரழி) அவர்கள் குறிப்படும் போது அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும். அவர் பொய்யுரைக்கவில்லை. எனினும் மறந்துள்ளார் அல்லது தவறிழைத்துள்ளார். இறந்தவர்களுக்காக அழுவதால் மையத்துத் தண்டிக்கப்படுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. இவர்களோ அழுகிறார்கள், அவரோ தண்டிக்கப்படுகின்றார் என்ற சூழ்நிலையைத்தான் குறிப்பிட்டார்கள் என விளக்கினார்கள்.
(குறிப்பு: உமர்(ரழி) அவர்களது அறிவிப்பை ஷெய்க் கஸ்ஸாலி மட்டுமன்றி தவ்ஹீத் வட்டாரத்தில் சிலரும் மறுக்கின்றனர். ஷெய்க் கஸ்ஸாலி அவர்கள் மறுக்கும் ஹதீஸ்கள் பற்றி விளக்கும் போது இது குறித்த உண்மை நிலை விரிவாக விளக்கப்படும். இன்ஷா அல்லாஹ்)
நூலாசிரியர் இது குறித்த தகவல்களை நூலில் 19-21 வரையான பக்கங்களில் குறிப்பிட்டு விட்டு,
“உமரது அந்தஸ்திலுள்ள அறிவிப்பாளர் கூட பிழை விடுவது அசாத்தியமானதல்ல…” (பக்:22) என்று குறிப்பிடுகின்றார்.
இவர் கூறுகின்ற குற்றச்சாட்டை விட்டும் உமர்(ரழி) அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்பதை பின்னர் நாம் தெளிவுபடுத்துவோம். உமர் போன்ற பெரியவர்களே ஹதீஸ்களை அறிவிக்கும் போது பிழை விடுவார்கள் என்ற கருத்தைப் பதிவு செய்வதன் நோக்கம் என்ன? இது ஏற்படுத்தும் சந்தேகம் அனைத்து ஹதீஸ்களையும் பாதிக்குமல்லவா? ஸஹாபாக்களில் ஏற்படும் சந்தேகம் புனித குர்ஆனில் கூட ஐயத்தை ஏற்படுத்துமல்லவா?
இந்த அறிவிப்பு விடயத்தில் உமர்(ரழி) அவர்களைக் குறை கூறியவர் இந்த ஹதீஸைப் பதிவு செய்த ஹதீஸ் நூல் அறிஞர்களையும் குறைகாண்கின்றார்.
ஆயிஷh(ரழி) அவர்களால் மறுதலிக்கப்பட்ட இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் கிரந்தங்களில் இன்றும் பதிவாகியுள்ளது. அது மட்டுமல்ல இப்னு ஸஃத் அவரது “அத்தபகாதுல் குப்ரா” என்ற நூலில் வேறுபட்ட சில அறிவிப்பாளர் வரிசைகளினூடாக இந்த ஹதீஸை மீட்டி மீட்டிக் குறிப்பிட்டுள்ளார். (பக்:19)
ஆயிஷா(ரழி) அவர்கள் குர்ஆன் வசனத்தை ஆதாரம் காட்டி மறுத்த பின்னரும் அவர்களால் மறுக்கப்பட்ட ஹதீஸ்களைப் பதிவு செய்தவர்களைக் குறை காண்கின்றார். அவ்வாறு அவரால் குறை காணப்படுபவர்களில் இப்னு ஸஃத் ஒருவர். மற்றவர்கள் யார் தெரியுமா? இமாம்களான புஹாரி(ரஹ்), முஸ்லிம(ரஹ்);, அஹ்மத்(ரஹ்), இப்னு அபீiஷபா(ரஹ்) மற்றும் பல அறிஞர்கள்!.. ஆயிஷh(ரழி) மறுத்த பின்வரும் மறுக்கப்பட்ட ஹதீஸைப் பதிந்துவிட்டார்களாம்.
ஹப்பாப் இப்னுல் அரத்(ரழி) பற்றிய விமர்சனம்

இவர் ஆரம்ப கால ஸஹாபியாவார். இஸ்லாத்திற்காகப் பல சிரமங்களைத் தாங்கியவர். இவர் ஒரு ஹதீஸை அறிவிக்கின்றார். இந்த ஹதீஸ் ஷெய்க் கஸ்ஸாலியின் சிந்தனைக்கு எட்டவில்லை. இந்த ஹதீஸ் குறித்து விமர்சிக்கும் போது nஷய்க் கஸ்ஸாலி கூறும் வார்த்தையைக் கவனியுங்கள்.
ஹப்பாப்(ரழி) நோய்வாய்ப்பட்டிருந்த போது உலகப் பொருட்களை அபசகுணமாகவே பார்த்தார். இதன் காரணமாகவே அவர் அப்படிச் சொன்னார் என்றே அவரது மேற்குறிப்பிட்ட கூற்றை நோக்கவேண்டியுள்ளது. (பக்கம்: 128)
உமர்(ரழி) பற்றிக் கூறிய கூற்றை விட இது சற்றுக் கடின வார்த்தையும், குழப்பம் நிறைந்த கூற்றுமாகும். ஒரு நபித்தோழர் நோயின் போது ஹதீஸ் என்ற பெயரில் உளறினார் என்று கூறவருகின்றார். நபித்தோழர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டால் ஹதீஸ்களுக்கு உரிய பெறுமானம் இல்லாது போய்விடும். ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடிக்காத செய்திகளையும், புரிய முடியாத கூற்றுக்களையும் நபித்தோழர்களின் தனிப்பட்ட கருத்துஎன்றும் உளரல் என்றும் ஒதுக்கித்தள்ள ஆரம்பித்துவிடுவர். இதைத்தான் இவர்கள் விரும்புகின்றனரா?
ஸல்மான்(ரழி) அவர்கள் பற்றிய விமர்சனம்:
ஸல்மான்(ரழி) அவர்கள் சிறந்ததொரு நபித்தோழர். நபி(ஸல்) அவர்கள் ஸல்மான் என்னைச் சேர்ந்தவர் எனக் கூறும் அளவிற்கு சிறப்புப் பெற்றவர். இவரது ஆலோசனைப் பிரகாரம் தான் “அஹ்ஸாப்” போரின் போது நபி(ஸல்) அவர்கள் அகழி தோண்டி தற்காப்பு ஏற்பாட்டைச் செய்தார்கள். இவர் ஒரு ஹதீஸை அறிவிக்கின்றார். ஷெய்க் கஸ்ஸாலி அவர்களது அறிவு ஒத்துக் கொள்ளவில்லை. இதோ அது குறித்து அவர் பேசும் போது,

ஸல்மான் கூறும் ஹதீஸ் அவரது தனிப்பட்ட உளக்கிடக்கையின் வெளிப்பாடாகும். அதனடிப்படையில் பொதுவான ஷரீஆ ஒன்றைப் பெற முடியாது. (பக்கம்: 169)
ஸலாமான்(ரழி) அவர்கள் தனிப்பட்ட கருத்தை ஹதீஸ் எனப் பொய்யாகப் புனைந்து ரைத்தார்களா? ஏன் இந்தக் குற்றச்சாட்டு?
நபி(ஸல்) அவர்கள் உலகப் பற்றற்ற தன்மை பற்றிப் பேசியுள்ளார்கள். அதே வேளை செல்வத்தைத் தேடுவதையும் வலியுறுத்தியுள்ளார்கள். அபூதர் அல் கிபாரி, ஸஅத் இப்னு ஆமிர் போன்ற சில நபித்தோழர்கள் உலகப் பற்றற்ற தன்மையில் அதிகப் பிடிப்புள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் கூறும் கூற்றுப்படி வாழமுடியாவிட்டால் விட்டுவிடுங்கள். ஒரு நபித்தோழர் நபியவர்கள் கூறினார்கள் என்று கூறும் போது இது அவரது தனிப்பட்ட கூற்று எனக் கூறுவது நபித்தோழர்களைப் பொய்ப்படுத்தும் குற்றச் செயல் அல்லவா? இந் நூலின் 16 ஆம் பக்கத்தில் நபியவர்கள் மீது பொய்யுரைப்பது மார்க்கத்தில் போலிகளை இணைக்கின்ற, அல்லாஹ்வின் மீது அபாண்டங்களைச் சுமத்துகின்ற குற்றச் செயல் என்றும் நரகத்திற்குப் போவதற்குரிய பாவம் என்றும் குறிப்பிடுகின்றார். ஹப்பாப்(ரழி) அவர்கள் நபியின் பெயரில் நோயில் உளறினார் என்கின்றார். ஸல்மான்(ரழி) தனிப்பட்ட உளக்கிடக்கையை ஹதீஸ் எனக் கூறினார் என்கின்றார். இந்த நபித்தோழர்களையும் நரகவாதியாக்க (நஊதுபில்லாஹ்) முனைகின்றாரா?
நபித்தோழர்கள் பற்றிய இந்தக் கூற்றுக்கள் சுன்னாவின் நம்பகத் தன்மையில் களங்கத்தை ஏற்படுத்துகின்றதல்லவா? இவர் தன்னையும் தான் சார்ந்த சிந்தனை முகாம், குறித்தும் சிலாகித்துப் பேசும் போது அல்லாஹ்வின் வஹியை உலகில் மேன்மைப் படுத்துவதற்கும் மனித இயல்புக்கு நீதி வழங்குவதற்கும் இன்னும் நாகரிகம், அதன் இரட்சகனுடன் தொடர்புபடுத்தப்பட்டு நேர்வழியில் நடைபோடுவதற்காகவும் போராடும் முன்னனி இஸ்லாமியப் படையினர். நாமே (பக்கம்: 05) எனப் பீற்றுகின்றார். ஆனால் அவரது இத்தகைய கூற்றுக்கள் வஹியின் ஒரு பகுதியாகிய சுன்னாவைக் களங்கப்படுத்தி அதன் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
03. இமாம்கள் மீதான விமர்சனம்:
ஹதீஸ் தொடர்பான விடயத்தில் மட்டுமன்றி, பிக்ஹ் சட்டம், உஸுலுல் பிக்ஹ், காயிதாக்கள் அடிப்படை விதிகள் பற்றிப் பேசும் போதும் பல இமாம்களையும் இவர் விமர்சிக்கத் தயங்கவில்லை. இதே போன்று ஹதீஸ்கலை இமாம்களையும் இவர் காயப்படுத்துவதில் பின்வாங்கவில்லை. இவரது மற்றும் பல குற்றம் சுமத்தும் கூற்றுக்களை அவதானியுங்கள்.

ஷெய்க் முஹம்மத் கஸ்ஸாலி அவர்கள் நபித்தோழர்களை மட்டுமன்றி ஹதீஸ்களை அறிவிக்கும் பல அறிவிப்பாளர்களையும், ஹதீஸ்களைப் பதிவு செய்த இமாம்களையும் கூட விமர்சிக்கத் தவறவில்லை. இந்த விமர்சனங்கள் சிலபோது கேலியும், கிண்டலும் நிறைந்ததாகக் கூட அமைந்துள்ளன.
ஹதீஸ் அறிவிப்பாளர்களில் இமாம் நாபிஃ(ரஹ்) அவர்கள் முக்கியமானவராவார். இவர் குறித்து “அல் இர்ஷhத்” என்ற நூலில்,
நாபிஃ(ரஹ்) அவர்கள் இல்மில் இமாமாவார்கள் அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் என்பது ஏகோபித்த முடிவாகும். அவரின் அறிவிப்புக்கள் ஸஹீஹானதாகும் என்றெல்லாம் போற்றப்பட்டுள்ளது. இமாம் மாலிக்(ரஹ்) அவர்களது “ஸில்ஸிலதுல் தஹபிய்யா” தங்க அறிவிப்பாளர் தொடரில் ஒருவராக அவர் திகழ்கின்றார். இவர் பற்றி nஷய்க் அவர்கள் குறிப்பிடும் போது,
இது நாபிஃ(ரஹ்) தவறு விட்ட முதலாவது சந்தர்ப்பம் அல்ல. இதைவிட மோசமான தவறொன்றை அவர் இழைத்துள்ளார்…… (பக்:150)
இமாம் நாபிஃ தனது கருத்துக்கு மாற்றமாக ஒரு ஹதீஸை அறிவித்ததற்காக அவர் மீது அத்து மீறிய முஹம்மத் அல்கஸ்ஸாலி வழங்கும் ஒரு அவதூறாகவே இதை நாம் கருத வேண்டியுள்ளது.
இமாம் நாபிஃ(ரஹ்) மூடலாக அறிவித்த ஒரு செய்தியை வைத்து அவர் பெண்களின் மலவாயிலில்; உறவு கொள்வது ஆகுமானது என அறிவிப்பதாக தவறான தகவல் ஒன்று பரவியது. இது குறித்து இமாம் நாபிஃ(ரஹ்) அவர்களே அவர் உயிர் வாழும் போதே மறுப்புக் கூறிவிட்டார்கள்.
இமாம் நாபிஃ(ரஹ்) அவர்களிடம் பெண்களின் மலவாயிலில் உறவு கொள்ளலாம் என நீங்கள் இப்னு உமர்(ரழி) வழியாகக் கூறுவதாக செய்தி பரவலாகப் பேசப்படுகின்றதே என அபூ நழ்ர் என்பவர் கேட்ட போது இமாம் நாபிஃ அவர்கள்,
“நிச்சயமாக அவர்கள் என்மீது பொய்யுரைக்கின்றனர் என்று கூறிவிட்டு பின்புறமாக இருந்து பிறப்புறுப்பில் உறவு கொள்வது குறித்துத்தான் (2:223) வசனம் அங்கீகரித்து அருளப்பட்டதாக விபரிக்கின்றார்கள். (ஆதா: தப்ஸீர் குர்தூபி, (பாகம்:3, பக்கம்:92) சுனன் நஸாயீ: 8978)
அன்று அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை அவரே மறுத்த பின்னர் மீண்டும் தூசுதட்டி இந்த நூற்றாண்டு மக்களுக்கு nஷய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி அவர்கள் எடுத்துக் கொடுத்துள்ளார்கள். இது நியாயமா?
மறுமை நாளில் அல்லாஹு தஆலா முஃமின்களிடம் ஒரு “சூறத்தில்” – உருவத்தில் – வருவான் என்ற கருத்தில் ஸஹீஹ் முஸ்லிமில்; ஹதீஸ் பதிவாகியுள்ளது. ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி அவர்கள் இந்த ஹதீஸை மறுக்கிறார் அல்லது உருவம் என்பதற்குப் பண்பு என மாற்று விளக்கம் கொடுக்கின்றார். இது பற்றிப் பின்னர் நாம் அலசவுள்ளோம். இன்ஷh அல்லாஹ். இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம்களை அவர் விமர்சிக்கும் தவறான போக்குத்தான் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றது என்பது கவனத்திற் கொள்ளப்படத்தக்கதாகும். இது பற்றி அவர்களும் கூறும் போது,
அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிக்கும் நோயாளர்களில் சிலர்தான் இதனை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். உண்;மையான முஸ்லிமைப் பொறுத்தவரை இது போன்ற அறிவிப்புக்களை தன்னுடைய தூதர் கூறியதாக சொல்வதற்கு வெட்கப்படுவர். (பக்கம்: 186) என்று கூறுகின்றார்.
இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அபூ ஸஈதுல் குத்ரி(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஷெய்க் முஹம்மது அல்கஸ்ஸாலி அவர்கள் இத்தகைய அறிஞர்கள் மீது இரண்டு அபாண்டங்களைச் சுமத்துகின்றார்.
1. அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிக்கும் நோயாளிகள்.
2. உண்மையான முஸ்லிம் இல்லை.

இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் அறிவிப்பதாலோ என்னவோ உண்மையான முஸ்லிம் இந்தச் செய்தியை நபி(ஸல்) அவர்களுடன் இணைக்க வெட்கப்படுவார் என்று கிண்டலாகக் கூறுகின்றார். ஹதீஸ்களை அறிவிக்கும் விடயத்தில் அறிஞர் அவர்கள் அறிவிப்பாளர்களையும், ஹதீஸ்துறை அறிஞர்களையும் விமர்சிப்பதற்கான உதாரணங்களை இதுவரை கூறினோம். ஹதீஸ்களுக்கு விளக்கம் கூறும் அறிஞர்களையும் அவர்களது விளக்கம் தனது விளக்கத்திற்கு முரண்படும் போது விமர்சிக்கும் போக்கையும் இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.