பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (2)

மூஸா(அலை) அவர்கள் தன்னிடம் (மனித உருவில்) வந்த வானவரது கண்ணைப் பழுதாக்கினார் என்ற ஹதீஸ் புஹாரி, முஸ்லிம் உட்பட ஆதாரபூர்வமான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை nஷய்க் முஹம்மது அல் கஸ்ஸாலி மறுக்கின்றார். அத்துடன் இந்த ஹதீஸுக்கு அறிஞர்கள் அளித்த விளக்கங்களையும் மறுக்கின்றார். இது பற்றி அவர் கூறும் போது,

இந்த அறிவிப்பைப் பாதுகாக்க எடுக்கப்படும் இத்தகைய முயற்சிகள் அனைத்தும் தகுதியற்றவை. மேலும் அவை அங்கீகரிக்கப்பட முடியாத அற்பத்தனமான பாதுகாப்பாகும். (பக்கம்:40) என்று குறிப்பிடுகின்றார்.
இந்த ஹதீஸ் பற்றி விமர்சிக்கும் போது ஒரு இளைஞர் வந்து கேள்வி கேட்டதாகவும், தான் இந்த ஹதீஸ் பற்றி சிந்தித்துப் பார்த்ததாகவும், இது குறைபாடுடையது என்பதைக் கண்டு கொண்டதாகவும் nஷய்க் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இமாம்களான அஹ்மத், இப்னு குஸைமா, இமாம் மாஸிரி போன்ற பெரும் பெரும் மேதைகளெல்லாம் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்றும், இதனை பித்அத் வாதிகள் மறுத்து வருவதாகவும் கூறுகின்றனர். இதே வேளை இந்த ஹதீஸை விளக்க அவர்கள் கூறிய தகவல்களைத்தான் nஷய்க் அவர்கள் தகுதியற்றதென்றும், அற்பத்தனமானது என்றும் விமர்சிக்கின்றார்.
இதே வேளை ஹதீஸின் உள்ளடக்கத்தில் (மதனில்) உள்ள குறையைப் புலமைமிக்க வர்களால்தான் கண்டு பிடிக்க முடியும் என்றும் கூறுகின்றார். இது பற்றி அவர் குறிப்பிடும் போது,
“ஹதீஸின் மத்னில் இருக்கும் குறைபாட்டை (இல்லத்) புலமைமிக்க அறிஞர்கள் மட்டுமே கண்டு கொள்வர்….” (பக்கம்:40) என்று குறிப்பிடுவதன் மூலம் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் கூறிய இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் இப்னு குஸைமா மற்றுமுண்டான அறிஞர்களைப் புலமை அற்றவர்களாகவும், தன்னிடம் அவர்களிடம் இல்லாத அந்தப் புலமை ரொம்பவே இருப்பதாகவும் சித்தரிக்க முனைகின்றாரா என்ற கேள்வி எழுகின்றது.
பிக்ஹ் சட்டவிதிகளுடன் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுகள் பற்றிப் பேசும் போது அறிஞரவர்கள் இதே பாணியைத்தான் கையாண்டுள்ளார்கள்.
குர்ஆனின் சட்டத்தை ஸுன்னா மாறுமா? இல்லையா? என்பது குறித்து அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் இருக்கின்றது. அறிஞர்களான ஹஸ்ஸான் இப்னு அதீய்யா, அஹ்மத் இப்னு ஹஸ்ம், குர்தூபி போன்ற அறிஞர்கள் சுன்னா குர்ஆனின் சட்டத்தில் மாற்றத்தை உண்டாக்கும் என்ற கருத்தில் இருக்கின்றனர். nஷய்க் அவர்கள் இதற்கு மாற்றுக் கருத்தில் இருக்கின்றார்கள். மாற்றுக் கருத்தில் இருப்பதில் எமக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் இது பற்றிக் கூறும் போது,
சுன்னா அல் குர்ஆனின் சட்டத்தை இரத்துச் செய்யும் அல்லது மாற்றும் என்று யாராவது கூறினால் அது வீண் பிரம்மையாகும். (பக்கம்:172)
அப்படியாயின் மேற்குறிப்பிட்ட அறிஞர்களெல்லாம் வீண்பிரம்மைக்கு உட்பட்டவர்களா?
பொதுவான பிக்ஹ் சட்டம் பற்றிப் பேசும் போதும் அறிஞர் அவர்கள் இத்தகைய தாக்குதலைத்தான் கையாளுகின்றார்கள்.

கன்னிப் பெண்ணாயினும், விதவைப் பெண்ணாயினும் அவரவர் சம்மதம் பெற்றே திருமணம் செய்விக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் விதியாகும். பல்வேறுபட்ட அறிவிப்புக்கள் இதை உறுதி செய்கின்றன. இது குறித்து nஷய்க் அவர்கள் (பக்கம்:46-47) ஆதாரங்களின் அடிப்படையில் பேசுகின்றார். இதில் அறிஞர் அவர்களின் கருத்தே சரியானது என்பதிலும் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஒருவரை திருமணம் பண்ணுமாறு கூறிப் பெண்களை நிர்ப்பந்தித்துத் திருமணம் செய்விக்க முடியாது. இதற்கு மாற்றமாக தந்தைக்குக் கன்னிப் பெண்ணை நிர்ப்பந்தித்துத் திருமணம் செய்விக்கும் உரிமை இருப்பதாக சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இது தவறான கூற்றாகும் என்பதுதான் எமது நிலைப்பாடாகும். எனினும் இது பற்றி nஷய்க் அவர்கள் விவாதிக்க முனையும் போதும் முடிவாகக் கூறும் கூற்றுத்தான் எமக்கு ஆச்சர்யத்தைத் தருகின்றது. இது பற்றிய கருத்தைத் துவங்கும் முன்னர் “சில சட்ட ஞானத்தையும், அறிவிப்புக்களையும் விட்டுவிட்டு சில சட்டங்களைச் சொல்லியிருப்பதைப் பார்க்கின்ற போது எமக்கு ஆச்சர்யம் மேலிடுகின்றது” (பக்கம்:46) என்று கூறிவிட்டே தொடர்கிறார்.
இவ்வாறிருந்தும் கூட தந்தைக்கு அவரது வயது வந்த மகளை அவள் விரும்பாதவனுக்கு நிர்ப்பந்தமாகத் திருமணம் செய்து கொடுப்பதை ஷாபி மத்ஹபினரும், ஹன்பலி மத்ஹபினரும் அனுமதித்துன்னனர்.
இக் கண்ணோட்டம் பெண்களை இழிவு படுத்தல் பாரம்பரியத்துடன் இணங்கிச் செல்வதாகவே நான் கருதுகின்றேன். (பக்கம்:47) என்று குறிப்பிடுகின்றார்.
பெண்களை அவள் விரும்பாதவனுக்கு நிர்ப்பந்தித்து திருமணம் செய்து கொடுக்கலாம் என்பது தவறான கருத்து எனக் கூறுவதை நாம் குறைகாணவில்லை. இந்தக் கூற்றைக் கூறியவர்களின் கூற்றைத் தவறான இஜ்திஹாத் அதுவாகும். இருப்பினும் இக் கூற்றைக் கூறியவர்கள் பெண்ணை இழிவுபடுத்தும் ஆணாதிக்கச் சிந்தனையின் தாக்கத்தால்தான் இப்படிக் கூறினார்கள் என்ற கருத்தைப் பதிவு செய்வதை அங்கீகரிக்க முடியாதுள்ளது.
இந்த ஆணாதிக்கச் சிந்தனையுடையவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மதீனாவின் ஏழு முக்கிய சட்ட அறிஞர்களில் இருவராகிய இமாம் அல் காஸிம் மற்றும் ஸாலிம் இமாம் ஆமிர் அஸ்ஸஹ்பி, இப்னு அபீலைலா, இமாம் அல்லைத், இமாம்களான மாலிக், ஷhபிஈ, அஹமத் இவர்கள்தான் பெண்மையை இழிவுபடுத்தும் ஆணாதிக்கச் சிந்தனையின் விளைவால் கருத்து வெளியிட்டவர்கள் என அஷ;nஷய்க் கஸ்ஸாலி கூறுகின்றார்.
இவ்வாறு இமாம்களை விமர்சித்தவர் அடுத்த பந்தியிலேயே திருமணத்திற்கான வலி தொடர்பில் சுன்னாவுக்கு மாற்றமான கருத்தை முன்வைக்கின்றார். அறிவிப்புக்களுக்கு மாற்றமான கருத்தை முன்வைப்பது குறித்து ஆச்சர்யப்பட்டவர் “வலீ” விஷயத்தில் அறிவிப்புக்களுக்கு மாற்றமாகப் பேசுகின்றார். இது குறித்து நாம் தனித் தலைப்பில் விபரிக்கவுள்ளோம்.
04. ஹதீஸ் துறையினர் பற்றிய விமர்சனம்:
nஷய்க் அவர்களின் இந்த நூலை நிதானமாக வாசித்து வந்தால் அனேக இடங்களில் ஹதீஸ்துறை அறிஞர்களைக் குறை கூறுவதைக் காணலாம். பிக்ஹ் துறையினருக்கும், ஹதீஸ் துறையினருக்கும் மத்தியில் நபிகளாரின் சுன்னா என இரு சாராருக்கும் மத்தியில் தீர்ப்புக் கூறும் நீதிபதியாகத் தன்னை ஆக்கிக் கொண்ட அறிஞர் அவர்கள், ஓரிரு இடங்களில் நியாயமான, நடுநிலையான கருத்தை முன்வைத்தாலும் பல இடங்களில் பிக்ஹ் துறையினரை உயர்த்தி ஹதீஸ் துறையினரை மட்டம் தட்டுவதைக் காணலாம். இதற்கான சில உதாரணங்களைக் கீழே தருகின்றோம்.

ஆண்கள் கொல்லப்பட்டால் வழங்கப்படுகின்ற தண்டப் பணத்தின் அரைப்பகுதியே பெண் கொலை செய்யப்பட்டால் வழங்கப்பட வேண்டும் என்று அஹ்லுல் ஹதீஸ் பிரிவினர் கூறுகின்றனர். இவர்களின் மோசமான சிந்தனையையும், நடத்தையையும் புலமை பெற்ற அறிஞர்கள் மறுதலிக்கின்றனர்.(பக்கம்-24)
வாழ்க்கையின் அனைத்து விடயங்களையும் முழுமையாக உள்ளடக்கிய இஸ்லாத்தில் ஹதீஸ் அறிவிப்புக்கள் எத்தகைய அந்தஸ்தைப் பெறுகின்றன என்பது பற்றிய தெளிவில்லாமல் அவர்கள் அவற்றையே முழுமுதல் ஆதாரமாகக் கொள்கின்றனர். (பக்கம்-29)
அல் குர்ஆனின் சொற்களின் பக்கமும், அதன் கருத்துக்களின் பக்கமும் கவனத்தை ஈர்க்கவே நாம் வேட்கை கொண்டுள்ளோம். அஹ்லுல் ஹதீஸைச் சார்ந்த அதிகமானோர் இவற்றிலிருந்து திரையிடப்பட்டவர்களாகவே உள்ளனர். அவர்கள் வேறு சோலிகளில் மூழ்கியிருப்பதால் வஹியிலிருந்து அறிவருந்துவது அவர்களால் இயலாமற் போயுள்ளது. (பக்கம்-32)
உண்மையில் இரு சாராரும் ஒருவர் அடுத்தவர் பால் பரஸ்பரத் தேவையுடை யோராவே உள்ளனர். ஸுன்னா இல்லாமல் பிக்ஹ் இல்லைளூ பிக்ஹ் இல்லாமல் ஸுன்னா இல்லை. இவை இரண்டின் ஒத்துழைப்பின் மூலமே இஸ்லாத்தின் மகத்துவம் பூரணத்துவம் அடைகின்றது.
அவர்களில் ஒரு சாரார் தம்மிடம் இருப்பது மாத்திரம் போதுமானது என இறுமாப்புக் கொள்கின்ற போது சோதனை உருவாகின்றது. பிடிவாதத்தினாலும், அறிவீனத்தினாலும் இச் சோதனை விஷ்வரூபம் எடுக்கின்றது. (பக்கம்-33)
ஹதீஸ் துறையில் ஈடுபடும் சிலர் அல் குர்ஆனை ஆராய்ந்து பார்ப்பதையும் அதன் அண்மிய மற்றும் சேய்மையான கருத்துக்களை விளங்கிக் கொள்வதையும் கஷ்டமாகக் கருதுகின்றனர். அதே நேரம் ஹதீஸொன்றை செவிமடுத்து அதிலிருந்து சட்டம் பெறுவதை அவர்கள் இலகுவாகக் கருதுகின்றனர். இதனால்தான் நாட்டுக்கும், மக்களுக்கும் துரதிஷ்டம் பீடித்துள்ளது. (பக்கம்-35)
யாருக்கு இஸ்லாமிய சட்ட ஞானம் இல்லையோ அவர்கள் தம்மால் விளங்கிக் கொள்ள முடியாத ஹதீஸின் மூலம் அல்லது விளங்ககிக் கொண்ட ஆனால் அல் குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு முரணாக அமைந்த ஹதீஸ் மூலம் இஸ்லாத்திற்கு சேதம் ஏற்படுத்தாமல் வாயை மூடிக் கொண்டிருப்பதே கடமையாகும். (பக்கம்-75)
“பெண்கள் ஐங்காலக் கூட்டுத் தொழுகை எதிலும் கலந்து கொள்வது விரும்பத்தக்கதல்ல எனக் கூறுகின்ற பிறிதொரு ஹதீஸும் மக்கள் மத்தியில் பரவியுள்ளது. அதுமட்டுமன்றி பெண் வீட்டில் தொழுவதற்கு நாடினால் தனிமையான ஒதுக்குப் புறத்தை அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் எனவும் அந்த ஹதீஸ் வேண்டுகின்றது. இதன்படி அவள் அறையில் தொழுவதை விட மறைவிடத்தில் தொழுவது சிறந்தது. ஒளியில் தொழுவதை விட இருளில் தொழுவது சிறந்தது!
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் இதற்குப் பின்னால் அல்லாஹ்வின் தூதரில் முதவாதிரான நடைமுறை சுன்னாக்களை மறைக்கப் பார்க்கிறார். (பக்கம்-78)

சட்ட அறிஞர்களிடத்தில் ஏற்புடைய நம்பத்தகுந்த விடயங்களாக கருதப்படுகின்றவைக்கு முரணாக முஹத்திஸ்கள் அறிவிப்புச் செய்பவற்றைக் கண்டு சட்ட அறிஞர்கள் நிச்சயமாக திடுக்கமடைவர். (பக்கம்-81)
ஹதீஸ்துறையில் ஆதாரமில்லாதவற்றை எடுத்துக் கொண்டு மார்க்கம் என்ற மைதானத்திற்குள் துழைந்து அவற்றை சந்தைப் படுத்துகின்றவர் போலி நாணயங்களை எடுத்துக் கொண்டு சந்தைக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு செல்பவரைப் போலாகும். காவல் துறையினர் அவரைப் பிடித்து கையில் விலங்கிட்டால் அவர் தன்னையே நொந்து கொள்ளட்டும். (பக்கம்-82,83)
அவ்வாறே ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மற்றும் அறிவிப்புக்களாக இருந்தாலும் அவற்றின் சரியான கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் இஸ்லாமிய இயக்கங்களை நாம் கேட்டுக் கொள்கின்றோம். பிக்ஹ் துறை இமாம்களே அக்கலையில் எசமான்கள். (பக்கம்-82)
அவற்றை இமாம்களான இப்னு ஹன்பலோ இப்னு தைமிய்யாவோ அல்லது வேறு எவர் குறிப்பிட்டிருந்தாரும் சரியே! (பக்கம்-144)
வேட்டைப் பல் உள்ள வேட்டைப் பிராணிகள் அனைத்தையும் சாப்பிடுவது ஹராமாகும் என்ற ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது. இதற்கு விளக்கமளிக்கையில், அல் குர்ஆன் பற்றி அறியாமை மிக மோசமான நிலையை அடைந்திருப்பதை நான் கண்டேன்.இந்த ஹதீஸ் மதீனாவில் வைத்து கூறப்பட்டதாக ஹதீஸ் விளக்கவுரையாளர் பொய்யாக வாதிடுகின்றார். (பக்கம்-148)
இந்த அறிவிப்பில் நம்பகத்தன்மை ஆட்டம் காணும் நிலையிலிருந்தும் கூட அஹ்லுல் ஹதீஸினர் மார்க்கம் பற்றிய குறைஞானம் காரணமாக அதனை மக்கள் மத்தியில் சந்தைப்படுத்துகின்றனர். (பக்கம்-150)
பிக்ஹ்துறை சார்ந்த அறிஞர்களே இஸ்லாம் பற்றிப் பேசுவர். தேனின் மீது ஈ மொய்ப்பது போல நம்பகமானவற்றுடன் போலியானவையும் கலந்துள்ள ஹதீஸ் நூல்களிலுள்ள அறிவிப்புகளுக்கு அவர்களே விளக்கம் கூறினர்.
ஆரம்ப காலம் முதல் பிக்ஹ்துறை அறிஞர்களே இஸ்லாத்தின் பெயரால் பேசுபவர்களாக இருந்தனர். நபித்துவப் பாரம்பரியம் பற்றி நன்கறிந்தவர்களாகவும் அவர்களே இருந்தனர். (பக்கம்-161,162)
அஹ்லுல் ஹதீஸைச் சேர்ந்த குறையுடையோர் ஹதீஸின் யதார்த்த நிலையையும் அது காட்டும் கருத்துக்களையும் அறியாத நிலையில் அதனைக் கண்டு கொண்டு பின்னர் முழு மார்க்கத்தையும் அதில் தேய்த்தெடுக்கின்றனர். (பக்கம்-188)
இது உபரி விவகாரங்களை உறுதிப்படுத்துவதில் மார்க்கப் பற்றுள்ள சிலரது வரம்பு மீறிய செயலாக இருக்க முடியும். பிக்ஹ் துறை அறிஞர்கள் இவ்வாறான நடத்தையினால் களங்கப்படாதவர்கள், தூய்மையானவர்கள். (பக்கம் – 137)
இவ்வாறு நூல் நெடுகிலும் காணப்படும் குத்தல், குறைத்து மதிப்பிடல் போன்ற வார்த்தைகளைக் கவனிக்கும் போது nஷய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி அவர்கள், தான் விளங்கிக் கொண்டதற்கு மாற்றமான கருத்தில் இருப்பவர்களைத் தரக்குறைவாகவே நோக்குவதாகத் தென்படுகின்றது. இது அவரது பொதுவான போதனைக்கே முரண்படுவதைக் காணலாம். இந் நூலில் பக்கம்-09 இல் பிக்ஹ் கருத்தில் தனது கருத்துக்கு மாற்றமான கருத்தைக் கொண்டவர்களை மூடர்களாகப் பர்க்கும் பார்வையை அறிஞர் அவர்கள் விமர்சிக்கின்றார்கள். நாமும் இதில் அறிஞர் அவர்களுடன் உடன்படுகின்றோம். இவ்வாறு போதித்த அறிஞர் அவர்களே தனது கருத்துக்கு மாறுபட்டவர்களைத் தரக்குறைவாக விமர்சிக்கலாமா?
“அஹ்லாக் இல்லாத பிக்ஹில் எந்தப் பெறுமானமும் இல்லை. (நூல்: இஸ்லாமிய சமூகம் இன்றும் எதிர்காலமும் ஒரு மீள்பார்வையும் எழுச்சிக்கான இங்கே அஹ்லாக் நிபந்தனைகளையும் (பக்கம்:24) பண்பாடு இல்லாத பிக்ஹினால் பயன்பாடு இல்லை எனப் போதித்த அறிஞர் அவர்களே தனக்கு முன்னர் இஸ்லாத்திற்காக சேவை செய்த அறிஞர்களைப் பண்பாடு இல்லாமல் குறை கூறலாமா? nஷய்க் அல்கஸ்ஸாலி அவர்களின் “ஹுலுகுல் முஸ்லிம்” நூலை முறையாக வாசித்த எவரும் இந் நூலை வாசிக்கும் போது முஸ்லிமின் பாண்பாடுகள் பற்றி இவ்வளவு அழகான நூலை எழுதிய ஒரு அறிஞரா இப்படி பண்பாடு இல்லாமல் எழுதுகின்றார் என்ற ஆச்சர்யத்திற்குள்ளாவது தவிர்க்கமுடியாததாகும்.
nஷய்க் அவர்கள் தன்னை பிக்ஹ்துறை அறிஞராக இனம் காட்டிக் கொள்கின்றார். எனவே, சாதாரண பிக்ஹ்துறை விடயங்களில் இந் நூலில் அவர்கள் விட்டுள்ள சில தவறுகளைத் தொட்டுக் காட்டுவது கட்டாயமாகின்றது.
வலி (பெண் தரப்பில் பொறுப்பானவர்) இல்லாத திருமணம்.
திருமணம் நடக்கும் போது பெண் தரப்பில் வலியொருவர் அவசியமாகும். பெண்ணின் தந்தை அல்லது அதையொத்த ஒரு உறவினர் மணமகனிடம் சட்டபூர்வமாக ஈஜாப் கூறி திருமணத்தினை நடாத்தி வைப்பர். ஹனபி மத்ஹபில் வலி அவசியமில்லை என்ற சட்டம் இருக்கிறது. குடும்பத்தின் அனுமதியில்லாமல் காதலித்து வீட்டை விட்டு ஓடிச் செல்லும் இளம் ஜோடிகள் தமது திருமணத்தை இந்த அடிப்படையில்தான் செய்கின்றனர். திருமணப் பதிவாளர்கள் இவர்களிடம் ஆயிரக் கணக்கில் பணத்தைக் கறந்துவிட்டு ஹனபி மத்ஹபின் அடிப்படையில் வலி (பெண் தரப்பில் பொறுப்பாளர்) இல்லாமல் திருமணம் நடந்ததாகப் பதிந்து விடுகின்றனர். nஷய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி அவர்கள் இந்த நூலிலும் அவரது ஏனைய நூல்களிலும் திருமணத்திற்கு பெண் தரப்பி;ல் வலி அவசியமில்லை என்ற கருத்தை முன்வைப்பதுடன் “வலி” அவசியம் எனக் கூறும் ஹதீஸ்களையும் மறுக்கின்றனர். இந்த நூலில் இது தொடர்பாகப் பேசும் போது,
“ஹனபீக்கள் அல் குர்ஆனின் வெளிப்படையான கருத்தை செயற்படுத்தும் வகையில் பெண்கள் திருமண ஒப்பந்தத்தை அவர்களாகவே செய்து கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளனர் என நாம் ஏலவே குறிப்பிட்டுள்ளோம்” (பக்கம்:47) பெண்களின் சம்மதமின்றி நிர்ப்பந்தித்து திருமணம் செய்விப்பது கூடாதென்பதை நிரூபிப்பதற்காக ஹதீஸ்களை ஆதாரம் காட்டிய அறிஞர் அவர்கள் “வலி” விடயமாகப் பேசும் போது ஹதீஸ்களைக் கண்டு கொள்ளலாமல் கருத்துத் தெரிவிக்கின்றார். அத்துடன் மற்றுமொரு இடத்தில் இதை நியாயப்படுத்தும் போது அதிசயமானதொரு வாதத்தையும் முன்வைக்கின்றார்.
குறிப்பிட்ட சட்டமொன்றை நிர்ணயிப்பதில் முஸ்லிம் சட்ட அறிஞர்களது கருத்துக்களில் வேறுபட்டவையாக இருந்தால் அவற்றில் மக்களது பாரம்பரியங்களுக்கு மிக நெருக்கமான சட்டத்தைத் தெரிவு செய்வது எமது கடமையாகும்.
ஐரோப்பாவில் பெண் தனது கணவனை சுயமாகவே தேர்ந்தெடுக்கிறாள். அதில் அவள் தனது ஆளுமையை ஒரு போதும் விட்டுக் கொடுப்பதில்லை. இந்நிலையில் நாம் ஐரோப்பியர்களது பழக்க வழக்கங்களுக்கு நெருக்கமானதாக விளங்கும் இமாம் அபூஹனீபாவின் கருத்தை விட்டுவிட்டு இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளுடன் சேர்ந்து மாலிக்கினதோ அல்லது இப்னு ஹன்பலினதோ கருத்தை அவர்கள் மீது திணிப்பது எமது பணியாக இருக்கக் கூடாது. அவர்களுக்கு அறிமுகமான கருத்து இருக்கும் போது ஆச்சரியமான கருத்தை அவர்கள் மீது திணிப்பது அவர்களைக் கஷ்டப்படுத்துவதாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டு அவர்களைத் தடுப்பதாகவும் அமையும். (பக்கம்:74-75)

திருமணத்தின் போது பெண் தரப்பில் பொறுப்பாளர் அவசியமா? இல்லையா? என்பதை ஹதீஸை வைத்து தீர்மாணிக்கத் தவறிய அறிஞர் அவர்கள், ஐரோப்பியப் பெண்களின் வழக்கத்தை அடிப்படையையாகக் கொண்டு தீர்மானமெடுப்பது ஆச்சரியமாக இல்லையா? இத்தகைய சிந்தனையுடைய அறிஞர்களின் கருத்துக்களை ஒரு பிரதேசத்திலிருந்து அடுத்த பிரதேசத்திற்கு எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பது அவசியமாகும். ஏனெனில், இவர்கள் தாம் வாழும் சமூக சூழலை அவதானித்து அதற்குத் தேவையான கருத்துக்களைத்தான் முன்வைக்கின்றனர்.
தாடி வைத்தல், இசை, ஆடை விவகாரம் தொடர்பில் இவர்கள் முன்வைக்கும் வாதங்கள் இதனை இன்னும் உறுதி செய்கின்றன. இசை, பாடல் ஆகுமானது என்ற தனது கருத்தை உறுதி செய்வதற்காக (பக்கம்:92-116) வரை 24 பக்கங்கள் எழுதிய அறிஞர் அவர்கள், வலி விடயத்தில் சில வரிகளை எழுதிவிட்டுத் தவிர்ந்து கொள்கின்றார்கள் என்றால் மனோ இச்சைக்கும், சுய கருத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கும் அளிக்கப்படும் முக்கியத்துவத்தைத்தான் இது உணர்த்துகின்றது.
தந்தை தன் மகளை நிர்ப்பந்தித்துத் திருமணம் செய்விக்கலாம் என்ற கருத்தை விமர்சிக்கும் போது “ஆணாதிக்க சிந்தனைப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முயற்சி” என விமர்சிக்க அறிஞர் அவர்களது இந்தக் கருத்தை ஐரோப்பாவின் அசிங்கமான கலாச்சாரத்தை முஸ்லிம் சமூகத்திற்குள் நுழைவிக்க எடுக்கப்படும் முயற்சி என நாம் விமர்சிக்கலாமா? அல்லது ஐரோப்பாவின் அடிவருடித்தனம் என்று கூறலாமா?
குர்ஆனின் வெளிப்படையான கருத்து, பெண் தனது திருமண ஒப்பந்தத்தை அவளாகவே செய்து கொள்வதற்கு அனுமதியளித்துள்ளது என்று nஷய்க் கூறுகின்றார். இது தவறான வாதமாகும். அவர் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இப்படிக் கூறுகின்றார். அது எந்த வகையில் தவறானது என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். அதே வேளை இவர் கூறுவதற்கு மாற்றமாக குர்ஆன் அமைந்திருப்பதையும், ஹதீஸ்கள் தெளிவாக “வலி”யின் அவசியத்தை வலியுறுத்தியிருப்பதையும் வாசகர்கள் புரிந்து கொள்வது அவசியமாகும்.
“(மூன்றாம் முறையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்தால், அவள் வேறு கணவனை மணமுடிக்கும் வரை இவனுக்கு அவள் ஆகுமானவளாக மாட்டாள். அ(வ்விரண்டாம் கண)வன் இவளை விவாகரத்துச் செய்து (முதற் கணவரும், இவளும்) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணமுடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மணவாழ்விற்கு) மீள்வதில் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். அறிந்து கொள்கின்ற சமூகத்திற்கு அவன் இவற்றைத் தெளிவு படுத்துகின்றான்.” (2:230)
வேறு கணவனை அவள் மணமுடிக்கும் வரை என குர்ஆன் கூறுவதால் அவள் தானாகவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையில்தான் nஷய்க் அவர்கள் “வலி” தேவையில்லை எனக் குர்ஆனின் வெளிப்படையான கருத்து கூறுவதாகக் கூறுகின்றார்.
உண்மையில் இந்த விடயத்தில் பயன் படுத்தப்பட்ட “தன்கிஹ” என்ற பதத்தின் அர்த்தம் திருமணம் அல்ல. உடலுறவு என்பதாகும். உடலுறவுக்கும் “நிகாஹ்” என்ற பதம் அரபியில் பயன்படுத்தப்படும். இந்த இடத்தில் உடலுறவு குறித்துத்தான் பேசப்படுகின்றது என்பது தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த வாதம் வலுவற்றதாகும். மூன்று முறை தலாக் கூறப்பட்ட பெண் மீண்டும் அதே ஆணைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் அந்தப் பெண் இன்னொருவரைத் திருமணம் செய்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு மத்தியில் உடலுறவும் நடந்து அவர்கள் இயல்பாகப் பிரிய வேண்டும் என்பது ஹதீஸ்களில் தொளிவாகக் கூறப்பட்டுள்ளது.
“நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்கள் தங்கள் (இத்தா)காலக் கெடுவின் எல்லையை நிறைவு செய்து (மீண்டும்) அவர்கள் தமக்குள் நல்ல முறையில் உடன்பட்டுக் கொண்டால் (அப்) பெண்கள் தங்களது கணவன்மார்களை (மறுமுறை) மண முடிப்பதை (பொறுப்புதாரிகளாகிய) நீங்கள் தடுக்க வேண்டாம். உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர் இதைக்கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இதுதான் உங்களுக்கு மிகத் தூய்மையானதும் பரிசுத்தமானதுமாகும். அல்லாஹ்தான் நன்கறிவான்ளூ நீங்களோ அறியமாட்டீர்கள்.” (2:232)
இந்த வசனத்திலும் திருமணம் பெண்களுடன் இணைத்துப் பேசப்படுவதால் பெண் தானே தனித்து நின்று தனது திருமணத்தை நடாத்திக் கொள்ளலாம் என்று வாதிடுகின்றனர். இதுவும் தவறாகும். இந்த வசனம் அருளப்பட்ட சந்தர்ப்பம் பெண்ணுக்கு “வலி” தேவை என்பதைத்தான் உறுதி செய்கின்றது. எனவேதான் இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் பெண்ணுக்கு “வலி” அவசியம் என்ற பாடத்தை இடும் போது
“அவர்கள் திருமணம் செய்வதைத் தடுக்காதீர்கள்” நீங்கள் என்ற அல்லாஹ்வின் வார்த்தையை வைத்து “வலி இன்றி” திருமணம் இல்லை என்று கூறுபவர்கள் யார்? என்பது பற்றிய பாடம் எனத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
“மஃகல் இப்னு யசார் என்பவர் தனது சகோதரியை ஒருவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவர் அப்பெண்ணைத் தலாக் கூறினார். இத்தாக் காலம் முடிந்த பின்னர் மீண்டும் அப்பெண்ணை மணமுடிக்க மஃகலிடம் பேசினார். அந்தப் பெண்ணும் அவருடன் வாழ விரும்பினார். இருப்பினும் மஃகல் மறுத்தார். அப்போதுதான் இந்த வசனம் இறங்கியது” (புஹாரி:45-29)
இந்த சந்தர்ப்பத்தில் மஃகல் பாவித்த வாசகம் தெளிவாகவே ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஃகல் இப்னு யசார் கூறுகின்றார். “எனக்கு ஒரு சகோதரி இருந்தாள். என்னிடம் அவளைப்; பெண் கேட்டு (பலரும்) வந்தனர். எனது சாச்சாவின் மகன் ஒருவரும் வந்தார். நான் அவளை அவருக்கு மணமுடித்துக் கொடுத்தேன். அவர் அவளை தலாக் (ரஜயி) கூறினார். அவளது இத்தாக் காலம் முடிந்த பின்னர் அவளை என்னிடம் பெண் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது இவர் வந்து மீண்டும் திருமணம் முடித்துத் தருமாறு கோரினார். அதற்கு நான் அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவளை உனக்கு ஒரு போதும் மணமுடித்துத் தரமாட்டேன் என்று கூறினேன்” (ஆதாரம்: அபூதாவூத்)
இந்த ஹதீஸ் பெண்தரப்பில் வலியின் அவசியத்தைத்தான் வலியுறுத்துகின்றது. குர்ஆனின் வெளிப்படையான கருத்தைத் தவறாக விளங்கிக் கொண்டு ஹதீஸ்களை மறுப்பதென்பது எவ்வளவு ஆபத்தான போக்கு என்பதைச் சற்று நிதானமாகச் சிந்தித்துப்பாருங்கள்.
“வேதத்தில் ஒரு பகுதியை நம்பிக்கை கொண்டு, மறு பகுதியை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் இவ்வாறு செய்வோருக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. மறுமையில் அவர்கள் கடுமையான வேதனையின் பால் மீட்டப்படுவார்கள். நீங்கள் செய்பவை பற்றி அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை” (2:85).
வேதத்தின் ஒரு பகுதியை ஏற்று மறு பகுதியை மறுப்பது பாரிய குற்றமல்லவா? குர்ஆனில் மணமுடித்தல் என்ற சொல் பெண்ணுடன் தொடர்புபடுத்திப் பயன்படுத்தப்பட்டிருப்பதை வைத்து இத்தகைய தவறான முடிவை எடுத்தவர்கள் பின்வரும் குர்ஆன் வசனங்களின் வார்த்தைப் பிரயோகத்தைச் சற்று அவதானிக்கக் கூடாதா?
“இணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும்வரை மணமுடிக்காதீர்கள். முஃமினான அடிமைப்பெண், உங்களைக் கவரக்கூடிய இணைவைக்கும் பெண்ணை விடச் சிறந்தவளாவாள். இன்னும், இணைவைக்கும் ஆண்களை அவர்கள் நம்பிக்கைகொள்ளும் வரை (உங்கள் பெண்களுக்கு) மணமுடித்து வைக்காதீர்கள். உங்களைக் கவரக்கூடிய இணைவைக்கும் ஆணை விட, முஃமினான அடிமை மேலானவனாவான். அவர்கள் நரகத்தின் பால் அழைக்கின்றனர். ஆனால், அல்லாஹ்வோ தனது நாட்டப்படி மன்னிப்பின்பாலும் சுவர்க்கத்தின் பாலும் அழைக்கின்றான். இன்னும் மனிதர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு தனது வசனங்களை அவர்களுக்கு அவன் தெளிவுபடுத்துகின்றான்.” (2:221)
என்று ஆண்களைப் பார்த்து அல்லாஹ் பேசுகின்றான். அதாவது முஷ;ரிக்கான பெண்களை நீங்கள் மணக்காதீர்கள் எனத் தடைவிதிக்கின்றனர்.
இதே தடை பெண்களுக்கும் போடப்படுகின்றது. அப்படித் தடுக்கும் போது முஷ;ரிக்கான ஆண்களை நீங்கள் மணமுடிக்காதீர்கள் எனப் பெண்களிடம் பேசப்படவில்லை.
இணை வைக்கும் ஆண்களை (உங்கள் பெண்களுக்கு) மணமுடித்து வைக்காதீர்கள் என்ற கட்டளை பெண்களின் “வலீ” பொறுப்புதாரிகளுக்கு இடப்படுவதால் பெண்ணின் திருமணத்தின் போது அவளின் “வலி” (பொறுப்புதாரி) இருப்பது அவசியம் என்பது உணர்த்தப்படுகின்றது. ஐரோப்பியப் பெண்களின் ஆளுமையைக் காப்பதற்காக இத்தகைய வாசனங்களையெல்லாம் முதுகுக்குப் பின்னால் வீசிவிட முடியாது.
இந்த வசனத்தில் கூட ஆணுடன் திருமணம் இணைத்துப் பேசப்படுகின்றது. திருமணம் முடித்தல் என்பது பெண்ணுடன் இணைத்துப் பேசப்படவில்லை.
“நீர் எனக்கு எட்டு வருடங்கள் கூலியாளராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் எனது இவ்விரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு நான் திருமணம் முடித்துத்தர விரும்புகின்றேன். நீர் பத்தாகப் பூர்த்தி செய்தால், அது உன் விருப்பத்தைச் சார்ந்தது. உம்மைச் சிரமப்படுத்த நான் விரும்பவில்லை. “இன்ஷா அல்லாஹ்” (அல்லாஹ் நாடினால்) என்னை நல்லவர்களில் நீர் கண்டுகொள்வீர் என அவர் கூறினார்” (28:27)
இங்கும் தந்தை பொறுப்பாக இருந்து திருமணம் முடித்துத்தருகின்றேன் என்று கூறப்படுவது கவனிக்கத்தக்கதாகும். இவ்வாறு இருக்கும் போது குர்ஆனின் வெளிப்படையான கருத்து “வலி” தேவையில்லை. பெண் தனது திருமணத்தைத் தானே நடத்திக் கொள்ளலாம் என இருக்கின்றது என்று கூறுவது எவ்வளவு தூரம் பாரதூரமானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதே வேளை நபிமொழிகளும் “வலி”யின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
“வலி இன்றி” திருமணம் இல்லை என நபி(ச) அவர்கள் கூறியதாக அபூ மூஸா(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி:1101, அபூதாவுத்: 2087) இந்த ஹதீஸை nஷய்க் அல்பானி ஸஹீஹானது என்று கூறுகின்றார்கள். இதே ஹதீஸ் ஆயிஷh(வ) அவர்கள் மூலமாகவும் அபூபுர்தா(வ) மூலமாகவும் அறிவிக்கப்படுவதையும் காணலாம். ஸஹாபாக்களின் அறிஞர்களான உமர்(வ), இப்னு அப்பாஸ்(வ), அபூஹுறைரா(வ) போன்றவர்களும் தாயிஈன்களில் உள்ள பிக்ஹ்துறை அறிஞர்களான ஸயித் இப்னுல் முஸையப், ஹஸனுல் பஸரி, ஹுரைஹ் மற்றும் இப்றாஹீம் அந்நகயீ, உமர் இப்னு அப்துல் அஸீஸ் போன்றவர்கள் வாயிலாகவும் இந்தக் கருத்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். (பார்க்க: சுனன் திர்மிதி) ஐரோப்பியப் பெண்களின் இயல்புக்காக இவர்கள் கூறிய சரியான கூற்றை விட்டுவிட வேண்டுமா?
இவர்கள் தமது பிள்ளைகள், சகோதரிகள் இவ்வாறு தனிப்பட்ட முடிவில் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிப்பார்களா? பிள்ளையைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கியவர்கள் ஆரம்பப் பாடசாலைக்குச் செல்வது, குர்ஆன் மத்ரஸாவிற்குச் செல்வது போன்ற விடயங்களைக் கூட மகிழ்வுடன் கொண்டாடியவர்களுக்கு தமது மகளின் திருமணம் நடந்து முடிந்த பின்னர்தான் தெரியவரும் என்றால் அதை எப்படி நியாயப்படுத்துவது?
காதலித்து வீட்டை விட்டும் ஓடிச் செல்கின்றவர்கள்தான் இந்தச் சட்டத்தை தமக்குச் சாதாகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த சட்டத்தை ஐரோப்பியர்களுக்கு ஏற்றது, பெண்ணுரிமைக்கு ஏற்றது, குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு இயைந்து செல்லக்கூடியது என்ற காரணங்களைக் கூறி இலங்கை சமூகத்திற்கும் அறிமுகம் செய்ய வேண்டுமா? இஸ்லாத்தின் சரியான கருத்தை முன்வைப்பது, அதிலும் குறிப்பாக பெண்ணின் பாதுகாப்பிற்கும், ஒழுக்கத்திற்கும் துணையாக இருக்கக்கூடிய கருத்தை முன்வைப்பது ஐரோப்பியர்களை இஸ்லாத்திற்கு வருவதை விட்டும் தடுக்கின்றது. என்று கூறி மார்க்கத்திற்கு முரணானதை மார்க்கம் என்று அறிமுகப்படுத்தலாமா?
ஷேய்க் கஸ்ஸாலி அவர்களிடம் ஹனபி மத்ஹபின் தாக்கம் இருப்பதையும், ஷhபிஈ, ஹன்பலி மத்ஹபுகள் மீது வெறுப்பு இருப்பதையும் இவரது கூற்றுக்கள் தெளிவுபடுத்துவதைக் காணலாம். மற்றும் பல இடங்களில் அவர் ஹனபி மத்ஹபை முற்படுத்துவதைக் காணலாம். அதற்கான மற்றுமொரு உதாரணத்தை நோக்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.