பிக்ஹுல் இஸ்லாம் – 15 – ஸலாத்துல் வித்ர்

வித்ர் தொழுகையும் கியாமுல்லைல் தொழுகைக்குள் அடங்கக் கூடியதுதான். இருப்பினும் கியாமுல்லைல் இரவுத் தொழுகைக்கும் வித்ர் தொழுகைக்குமிடையில் சில வித்தியாசங்கள் உள்ளன.

எனவே, ஹதீஸ்கலை, பிக்ஹ் கலை அறிஞர்கள் இரண்டையும் தனித்தனித் தலைப்பாக பேசியுள்ளனர். இந்த அடிப்படை யில்தான் இங்கு வித்ர் தொழுகை குறித்துத் தனித் தலைப்பாக நோக்கப்படுகின்றது.

வித்ர் என்றால் ஒற்றைப்படை அதாவது 1, 3, 5, 7 என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். இந்த அடிப்படையில்தான் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.

‘உங்களில் ஒருவர் (சிறுநீர் கழித்துவிட்டு) கற்களைக் கொண்டு சுத்தம் செய்வதென்றால் ‘பல்யூதிர்’ ஒற்றைப்படையான எண்ணிக்கையில் கற்களைக் கொண்டு சுத்தம் செய்யட்டும்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: தாரமீ- 723, இப்னு ஹிப்பான்- 1410

இந்த அடிப்படையில் ‘வித்ர்’ என்றால் ஒற்றைப்படை என்று அர்த்தப்படும். ஸலாதுல் வித்ர் என்றால் இஷாவுக்கும் சுபஹுக்கும் இடையில் தொழப்படும் ஒற்றைப்படைத் தொழுகையைக் குறிக்கும். இதன் மூலமாகத்தான் கியாமுல் லைல் இரவுத் தொழுகை முடிக்கப்படும். தனியாகத் தொழப்படும் ஒரு ரக்அத்தோ அல்லது 3, 5, 7 என சேர்த்து ஒரே ஸலாத்துடன் முடிக்கப்படும் தொழுகையாகவோ இது இருக்கும். இரவுத் தொழுகையின் இறுதித் தொழுகையாகவும் இது அமைந்திருக்கும்.
வித்ரும் கியாமுல் லைலும்:
சில அறிவிப்புக்களில் இரவுத் தொழுகைக் கும் வித்ர் என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘நபி(ச) அவர்கள் எத்தனை ரக்அத்துக்களைக் கொண்டு வித்ர் தொழுவார்கள் என நான் ஆயிஷா(Ë) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘நான்கையும் மூன்றையும் (7) கொண்டும், ஆறையும் மூன்றையும் (9) கொண்டும், எட்டையும் மூன்றையும் (11) கொண்டும், பத்தையும் மூன்றையும் (13) கொண்டும் தொழுதுள்ளார்கள். ஏழை விடக் குறைவாகவோ, 13 ஐ விடக் கூடுதலாகவோ அவர்கள் தொழுததில்லை” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அபூ கைஸ்(வ)
நூல்: அபூதாவூத்- 1362, மிஷ்காத்- 1264

இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்று சொல்கின்றார்.

இந்த அறிவிப்பில் முழு இரவுத் தொழுகையும் வித்ர் என்று கூறப்பட்டாலும் ஆயிஷா(Ë) அவர்கள் சற்று பிரித்துக் கூறியிருப்பதையம் அவதானிக்கலாம். நான்கும் மூன்றும் என்று கூறும் போது மூன்று என்பது வித்ரையும் முன்னால் உள்ள 4, 6, 8, 10 என்பன கியாமுல் லைலயும் குறிக்கும். இந்த அடிப்படையில் வித்ரையும் கியாமுல் லைலையும் இப்படி பிரித்துப் பார்க்கலாம்.

« கியாமுல் லைலுக்குள் வித்ர் அடங்கும். ஆனால், வித்ருக்கு முன்னால் தொழுத கியாமுல் லைல் வித்ரில் அடங்காது.

« சட்டரீதியில் பார்த்தால் கியாமுல் லைலை விட வித்ர் வலியுறுத்தி ஏவப்பட்டுள்ளது. நபி(ச) அவர்கள் தம் பயணத்திலும் தொழுத சுன்னத்தாக சுபஹுடைய முன் சுன்னத்தும் வித்ரும் திகழ்கின்றன. எனவேதான் அபூஹனீபா(ரஹ்) போன்ற அறிஞர்கள் வித்ரை வாஜிப் என்றனர். ஆனால், கியாமுல் லைல் அந்தளவு வலியுறுத்தப்பட்டதன்று.

« ‘நபி(ச) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களின் விரிப்பில் அவர்களுக்குக் குறுக்கே உறங்கிக் கொண்டிருப்பேன். அவர்கள் வித்ர் தொழ எண்ணும் போது என்னை எழச் செய்வார்கள். அதன்பின்னர் வித்ரு தொழுவேன். ‘
அறிவிப்பவர்: ஆயிஷா(Ë)
புஹாரி: 512

இங்கே வித்ர் தொழுகையையும் கியாமுல் லைலையும் நபி(ச) அவர்கள் பிரித்துப் பார்த்திருப்பதைக் காணலாம்.

« இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! நீ முடித்துக் கொள்ள நாடினால் ஒரு ரக்அத்தைத் தொழு! அது முன்னர் தொழுததை ஒற்றையாக ஆக்கி விடும்.’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(வ) அறிவித்தார்.

(இரண்டாவது அறிவிப்பாளராகிய) காஸிம், ‘மக்கள் மூன்று ரக்அத்களை வித்ராகத் தொழுவதை நாம் காண்கிறோம். எல்லாமே அனுமதிக்கப்பட்டதுதாம். இதில் எப்படிச் செய்தாலும் குற்றமில்லை என கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டார்கள். (புஹாரி: 993)

இங்கும் நபி(ச) அவர்கள் கியாமுல் லைலையும் வித்ரையும் பிரித்துக் கூறியுள்ளார்கள். இரவுத் தொழுகை வித்ரைக் கொண்டு முடிவு செய்யப்படும். இரண்டிரண்டாத் தொழுது ஈற்றில் ஒரு ரக்அத் தொழுதால் அந்த ஒரு ரக்அத் வித்ராகவும் இரண்டிரண்டாகத் தொழுதது கியாமுல்லைலாகவும் இருக்கும். அல்லது 3, 5, 7 ரக்அத்துக்கள் தொடராகத் தொழப்பட்டால் அது வித்ராகவும் அதற்கு முன்னர் இரண்டிரண்டாகத் தொழப்பட்டது கியாமுல் லைலாகவும் இருக்கும். இப்படியான வேறுபாடுகள் இருப்பதனாலேயே அறிஞர்கள் இரண்டையும் வேறுபடுத்தி நோக்கியுள்ளனர்.

வித்ர் தொழுகையின் சட்டம்:

வித்ர் தொழுகை ‘வாஜிப்’ – கட்டாயம் தொழப்பட வேண்டிய தொழுகை என்பது இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்களது கருத்தாகம். வித்ர் தொழுகையை ஏவி வரக்கூடிய ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றன.

ஏனைய அறிஞர்கள் வித்ர் தொழுகையை வாஜிப் அல்ல என்றும் கட்டாய சுன்னத் என்றும் கூறுகின்றனர். ஐவேளைத் தொழுகைதான் கடமை என்பதைக் குறிக்கக் கூடிய ஹதீஸ்களை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றனர். இதுதான் சரியான முடிவாகும். இது குறித்து இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் போது,

‘இரவுத் தொழுகை தொழுதவருக்கு வித்ர் தொழுவது வாஜிப் என்று குறிப்பிடுகின்றார்கள். ‘உங்கள் இரவுத் தொழுகையின் இறுதியாக வித்ரை ஆக்கிக் கௌ;ளுங்கள்’ என்ற ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இதுதான் ஏற்புடைய பார்வையாகத் தென்படுகின்றது.’

தொழுகையின் நேரம்:

இஷா தொழுகைக்கும் சுபஹ் தொழுகைக்கும் இடையில் இது தொழப்பட வேண்டும். இரவின் மூன்றாம் பகுதியில் தொழுவது ஏற்றமானதாகும். இது குறித்து கியாமுல்லைல் பகுதியில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழலாமா?:

ஒருவர் வித்ர் தொழுதுவிட்டு உறங்குகின்றார். இடையில் மீண்டும் விழிப்பு வந்து மீண்டும் சுன்னத் தொழலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. ‘உங்கள் தொழுகையின் இறுதியாக வித்ரை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ என ஹதீஸ் கூறுகின்றது. வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழலாமா என்ற ஐயம் பொதுவாக ரமழான் காலங்களில் எற்படுவதுண்டு. இது குறித்து அறிஞர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தொழலாம். ஆனால், வித்ரை உடைக்க வேண்டும். அதாவது, வித்ர் தொழுத ஒருவர் உதாரணமாக, ஐந்து ரக்அத் வித்ர் தொழுதுள்ளார். அவர் மீண்டும் தொழ ஆசைப்பட்டால் முதலில் தனியாக ஒரு ரக்அத் தொழ வேண்டும். இதன் மூலம் ஏற்கனவே அவர் தொழுத ஐந்து ரக்அத்துக்களுடன் இந்த ரக்அத்தும் சேர்ந்து ஆறு ரக்அத்துக்களாகிவிடும். முன்னர் தொழுத வித்ர் நீங்கிய பின்னர் அவர் விரும்பிய அளவு தொழுதுவிட்டு மீண்டும் வித்ர் தொழுது தொழுகையை முடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
ஷாபி மத்ஹபுடைய அறிஞர்களில் சிலரும் நபித்தோழர்களில் சிலரும் இந்தக் கருத்தில் உள்ளனர். இரவுத் தொழுகையின் இறுதியாக வித்ர் இருக்க வேண்டும் என்ற ஹதீஸை மையமாக வைத்தே இந்த முடிவுக்கு இவர்கள் வருகின்றனர். (பார்க்க: திர்மிதி- 470) பின்வரும் காரணங்களால் இந்த முடிவு வலுவிழந்து போகின்றது.

1. ஒரு இரவின் இரண்டு வித்ர் தொழுகைகள் இல்லை என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு குஸைமா- 1101, அபூதாவூத்: 1440, திர்மிதி: 470)

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு இரவில் இரு வித்ர் தொழ முடியாது. இதை சரிபண்ணவே ஏற்கனவே தொழுத வித்ரை உடைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஏற்கனவே வித்ர் தொழுதவர் தனியாக ஒரு ரக்அத் தொழுது தான் ஏற்கனவே தொழுத வித்ரை உடைக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து. அப்படி உடைத்துவிட்டு தனக்கு வேண்டிய அளவு தொழுதுவிட்டு பின்னர் வித்ர் தொழுதால் அவர் இறுதித் தொழுகையாக வித்ரை ஆக்கியவராகவும் ஒரு இரவில் இரண்டு வித்ர் தொழுதவராகவும் மாறிவிடுவார் என்பது இவர்களது அபிப்பிராயமாகும்.

ஆனால், கவனமாக அவதானித்தால் ஒரே இரவில் மூன்று வித்ர் தொழப்படும் நிலை இங்கே உருவாகின்றது. எனவே, இது தவறான நிலைப்பாடாகும்.

« வித்ர் அல்லாமல் தனியாக ஒரு ரக்அத் தொழக்கூடிய ஒரு தொழுகையை இஸ்லாம் அறிமுகப்படுத்தியதில்லை. இங்கு அது நடைபெறுகின்றது.

« முதலில் தொழுத வித்ர் முடிந்துவிட்டது. பின்னர் உறங்கிவிட்டு மீண்டும் எழுந்து ஒரு ரக்அத் தொழுவது அந்த வித்ரை முறித்து இரட்டையாக மாற்ற முடியாது. எனவே, இந்த நடைமுறை போதிய ஆதாரமற்ற நடைமுறையாகத் தென்படுகின்றது.

இது குறித்து மாற்றுக் கருத்துக் கூறும் அறிஞர்களின் பின்வரும் முடிவு பொருத்தமாகப் படுகின்றது.

ஏற்கனவே வித்ர் தொழுதவர் மீண்டும் தொழ நினைத்தால் அவர் தொழுது கொள்ளலாம். ஆனால், அவர் மீண்டும் வித்ர் தொழக் கூடாது. உதாரணமாக, வித்ர் தொழுத ஒருவர் இரவில் விழிக்கின்றார். அவர் இரட்டைப்படையாக விரும்பிய அளவு தொழலாம். மீண்டும் வித்ர் தொழக் கூடாது. அப்படி வித்ர் தொழுதால் ஒரு இரவில் இரு வித்ர் தொழக் கூடாது என்ற ஹதீஸை மீற நேரிடும் என்பது இவர்களின் வாதமாகும்.

இந்த முடிவை எடுக்கும் போது உங்கள் இரவுத் தொழுகையின் இறுதித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்ற ஹதீஸ் மீறப்படுவதாகத் தென்படும். ஒருவர் இரவுத் தொழுகையின் இறுதித் தொழுகையாக வித்ரைத்தான் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ஒரே நேரத்தில் இரவுத் தொழுகை தொழும் ஒருவர் நான்கு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு பின்னர் மூன்று ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு பின்னர் நான்கு ரக்அத் தொழும் விதத்தில் தொழுவது கூடாது. இதே வேளை வித்ருக்குப் பின்னரும் தொழுவதற்கான சலுகை இருப்பதை நபியவர்கள் உணர்த்தியுள்ளார்கள். அந்த ஆதாரங்களை இக்கருத்துடைய உலமாக்கள் தமது நிலைப்பாட்டிற்குப் பலமான ஆதாரமாகக் கொள்கின்றனர்.

‘நபியவர்கள் இரவில் 13 ரக்அத்துக்கள் தொழுவார்கள். 8 ரக்அத்துக்கள் தொழுவார்கள். பின்னர் வித்ர் தொழுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்துக்களை இருந்தவர்களாகத் தொழுவார்கள். ருகூஃ செய்ய விரும்பினால் எழுந்து ருகூஃ செய்வார்கள். அதானுக்கும் இகாமத்துக்கும் இடையில் இரண்டு ரக்அத்து தொழுவார்கள்.’
அறிவிப்பவர்: ஆயிஷா(Ë)
நூல்: இப்னு குஸைமா:11102

நபியவர்கள் வித்ருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுததாக இப்னு குஸைமா (1105), அபூதாவூத்: 1340, 1351, இப்னுமாஜா: 1195, திர்மிதி: 471 என பல நூற்களிலும் ஹதீஸ்கள் பதிவாகியுள்ளன.

எனவே, வித்ர் தொழுதவர் மீண்டும் விழித்து தொழ நினைத்தால் இந்த சலுகையின் அடிப்படையில் மீண்டும் தொழலாம். அவர் அதன் பின்னர் வித்ர் தொழ வேண்டியதில்லை என்பதே வலுவான கருத்தாகத் திகழ்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.