பிக்ஹுல் இஸ்லாம் தொடர் – 19 – தஹிய்யதுல் மஸ்ஜித் | கட்டுரை.

பள்ளிக்குள் நுழைபவர் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தஹிய்யதுல் மஸ்ஜித் (மஸ்ஜித் காணிக்கைத் தொழுகை) தொழுவது சுன்னத்தாகும்.

‘உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத்துக்கள் தொழும் வரை அமர வேண்டாம்’ என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: கதாதா இப்னு ரபீஃ(வ)
ஆதாரம்: புஹாரி (444), இப்னு குஸைமா(1827), இப்னுமாஜா (1012)

பள்ளிக்குள் நுழைந்தவர் அதில் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என இந்த ஹதீஸ் கூறுகின்றது. ஒருவர் குத்பாவுடைய நேரத்தில் பள்ளிக்குள் நுழைந்தாலும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டே அமர வேண்டும்.

கத்பானி கோத்திரத்தைச் சேர்ந்த ஸுலைக் என்பவர் நபி(ச) அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது பள்ளியினுள் வந்து அமர்ந்தார். இரண்டு ரக்அத்துக்கள் தொழுதீரா? என நபியவர்கள் கேட்ட போது அவர் இல்லை என்றார். எனவே, நபி(ச) அவர்கள் அவரை எழுந்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுமாறு ஏவினார்கள். (பார்க்க: முஸ்லிம் (58-875), இப்னுமாஜா (1114), அபூதாவூத் (1116)

எனவே, குத்பா உரை நடக்கும் போது பள்ளிக்குள் வந்தாலும் சின்னதாக இரண்டு ரக்அத்துக்கள் தொழாமல் அமரக் கூடாது. மறதியாக தெரியாமல் ஒருவர் அமர்ந்துவிட்டால் கூட உடனே எழுந்து தொழுதுவிட வேண்டும் என இந்த ஹதீஸ் கூறுகின்றது.

வாஜிபா? சுன்னத்தா?

நபி(ச) அவர்கள் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையை இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து ஏவியிருப்பதால் இது வாஜிபான தொழுகையா அல்லது சுன்னத்தான தொழுகையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

பிரபலமான ஒரு ஹதீஸில் ஒரு நபித் தோழரிடம் ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழ வேண்டும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள். அதற்கு அந்த நபித்தோழர் வேறு தொழுகை என்மீது கடமையா? என நபியவர்களிடம் கேட்ட போது இல்லை, சுன்னத்தான தொழுகைதான் உண்டு என்று கூறினார்கள். இது போன்ற ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை சுன்னத்தானது என சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

மற்றும் சிலர் தொழாமல் அமர வேண்டாம் என்ற கட்டளை தொழுவதை வாஜிபாக (கட்டாயமாக) ஆக்குவதுடன் தொழாமல் அமருவதை ஹராம் (தடையாக) ஆக்குகின்றது. இந்த அடிப்படையில் இந்த ஏவல் என்பது வாஜிபைக் காட்டுகின்றது என்று கூறுகின்றனர்.

இருப்பினும் தொழாமல் அமர வேண்டாம் என்ற இந்த ஏவல் கட்டாயம் என்பதைக் குறிக்காது என எடுப்பதே பொருத்தமானதாகும்.

”நபி(ச) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ச) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ வெட்கப்பட்டு சபையின் பின்னால் அமர்ந்து விட்டார். நபி(ச) அவர்கள் உபதேசத்தை முடித்ததும் ‘அந்த மூன்று நபர்களையும் பற்றிக் கூறட்டுமா?’ என்று கேட்டுவிட்டு முதலாவது நபரோ அல்லாஹ்வின் பால் ஒதுங்கிக் கொண்டார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். அடுத்தவரோ வெட்கப்பட்டார். எனவே, அல்லாஹ்வும் வெட்கப் பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே, அல்லாஹ்வும் அவரை அலட்சியப் படுத்தினான்’ என அபூ வாக்கித் அல் லைஸீ(வ) அறிவித்தார்.’ (புஹாரி: 66-474)

இந்த ஹதீஸைப் பார்க்கும் போது தொழாமல் அமருவது ஹராம் அல்ல என்பதைப் புரியலாம். ஏனெனில், வந்த இருவரும் பள்ளியில் அமர்ந்துள்ளனர். அவர்கள் தொழுதது பற்றி எதுவும் கூறப்படவில்லை. எனவே, தொழாமல் அமர்வது ஹராம் அல்ல. எனினும், தஹிய்யதுல் மஸ்ஜித் என்பது வலியுறுத்தப்பட்ட சுன்னா என்று கூறலாம். ஒருவர் பள்ளிக்குள் நுழையும் நேரம் தொழுவது தடுக்கப்பட்ட நேரமாக இருந்தாலும் அவர் பள்ளியில் அமர விரும்பினால் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுதுவிட்டு அமரலாம். இது குறித்து முன்னரே விபரிக்கப்பட்டுள்ளது.

ஸலாத்துல் வுழூ – வுழூவுக்கான தொழுகை:

‘ஒருவர் வுழூச் செய்தால் அந்த வுழூவுக்காகவும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்ளலாம்.

‘பிலால் (வ) அவர்களிடம் நபி(ச) அவர்கள் நீங்கள் இஸ்லாத்தை ஏற்ற பின் அதிகமாக நன்மையை எதிர்பார்த்துச் செய்த நல்லறம் எது? என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (வ) அவர்கள், அதிக நன்மையை எதிர்பார்த்து நான் செய்த நற்செயல் எதுவெனில், நான் அங்கசுத்தி (வுழூ) செய்து தூய்மையாகிக் கொள்ளும் போதெல்லாம் (இரண்டு ரக்அத்கள்) தொழுது கொள்வேன் என்று பதில் சொன்னார்கள். இதை அபூஹுரைரா (வ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.’ (புஹாரி: 7533)

இந்த ஹதீஸில் வுழூச் செய்யும் போதெல்லாம் பிலால் (வ) அவர்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதாகக் கூறுகின்றார்கள். நபி(வ) அவர்கள் அதைத் தடுக்கவில்லை. அங்கீ கரித்துள்ளார்கள். நபி(ச) அவர்களின் அங்கீ காரமும் சுன்னாவாகும் என்ற அடிப்படையில் வுழூச் செய்தவர் அதற்காக இரண்டு ரக்அத்துக் கள் தொழுவது சுன்னாவாகும். தொழாமல் இருப்பது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையை விடுவது போல் கண்டிக்கப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.

தவாபுக்கான தொழுகை:

கஃபதுல்லாஹ்வைத் தவாப் செய்தவர்கள் தவாபின் முடிவாக மகாமு இப்றாஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவது சுன்னாவாகும். இந்தத் தொழுகையில் முதல் ரக்அத்தில் பாத்திஹாவுக்குப் பின்னர் குல்யா அய்யுஹல் காபிரூன் சூறாவையும், இரண்டாம் ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹத் சூறாவையும் ஓதுவது சுன்னத்தாகும். மகாமு இப்றாஹிமுக்குப் பின்னால் தொழ இடம் கிடைக்கா விட்டால் எந்த இடத்திலும் சரி தொழுது கொள்ளலாம். தொழுவது தடுக்கப்பட்ட நேரத்தில் கூட இந்தத் தொழுகையைத் தொழுதுவதும் குற்றமில்லை. (இது குறித்து இன்ஷா அல்லாஹ் ஹஜ்ஜுடைய பாடத்தில் விபரிக்கப்படும்.)

இஸ்திஹாராத் தொழுகை:

இஸ்திஹாரா என்றால் தேர்ந்தெடுத்தல், தெரிவு செய்தல் என்று அர்த்தம் செய்யலாம். மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயத்தைச் செய்வதா? விடுவதா? என்பதில் குழப்பம் ஏற்பட்டால் தான் என்ன முடிவை எடுப்பது என்ற தீர்மானத்தை அடைவதற்காகத் தொழப்படும் தொழுகையே இதுவாகும்.

‘ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸலமீ(வ) அறிவித்தார்: இறைத்தூதர்(ச) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுக் கொடுப்பதைப் போன்று கற்றுக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும். பின்னர்

‘இறைவா! நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல்மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் -(தான் தொடங்கப் போகும் அந்தக் காரியம் இன்னதெனக் குறிப்பிட்டு) எனக்கு என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும் அல்லது என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும் நன்மை பயக்கும் என நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதை சுலபமாக்கித் தருவாயாக! பிறகு அதில் எனக்கு சுபிட்சம் அளித்திடுவாயாக! இறைவா! இந்தக் காரியம் எனக்கு என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும் அல்லது என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும் தீமை பயக்கும் என நீ அறிந்திருந்தால் இந்தக் காரியத்தைவிட்டு என்னைத் திருப்பி விடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதில் எனக்குத் திருப்தி அளித்திடுவாயாக!’ என்று பிரார்த்திக்கட்டும்.’
(புஹாரி: 7390 – 6385)

இந்த வகையில் ஒரு முடிவைத் தீர்மானிப்பதற்காக இஸ்திஹாரத் தொழுவதும் சுன்னாவாகும்.

கிரகணத் தொழுகை:
சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது குறிப்பிட்ட விதத்தில் தொழப்படும் தொழுகைக்கே கிரகணத் தொழுகை என்று கூறப்படும். நபியவர்களது காலத்திலும் கிரகணம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இத்தொழுகையைத் தொழுவித்து அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்கள்.

இந்த வகையில் கிரகனத் தொழுகைகள் சுன்னா முஅக்கதா எனும் வலியுறுத்தப்பட்ட சுன்னாவாகும்.
இன்ஷா அல்லாஹ் தொடர்
அடுத்த இதழில்….தாகும், ஏற்கத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.