பிக்ஹுத் தஃவா: தவறு செய்பவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? | கட்டுரை.

தஃவா என்பது இஸ்லாத்தின் முக்கியமானதொரு அம்சமாகும். இதற்கு நபி(ச) அவர்களது வாழ்வில் அழகிய வழிகாட்டல் உள்ளது. அவரவர் அவரவரது விருப்பங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப தஃவா செய்ய முடியாது. உஸ்மான் (ர) அவர்களைக் கொலை செய்தவர்களும், முஸ்லிம்களுக்கு எதிராக வாள் ஏந்தியவர்களும் தஃவாவின் பெயரில் ‘தீமையைத் தடுத்தல்” என்ற போர்வையில்தான் இந்த அராஜகங்களை அரங்கேற்றினர்.

தஃவா என்பது சீர்திருத்தத்திற்கான வழியாக இருக்க வேண்டுமே தவிர சீர்குலைப்பதாக அமைந்துவிடக் கூடாது. சில தஃவா அணுகுமுறைகளால் தீமைகள் அழிவதற்குப் பதிலாக வளரவும், நன்மைகள் குறையவும் ஆரம்பித்துவிடுகின்றன. எனவே, அழைப்புப் பணியில் ஈடுபடும் போது தூர நோக்கும், நிதானமான அணுகுமுறைகளும் அவசியமாகும். இந்த அடிப்படையில் தவறுகளைத் திருத்த முற்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய, கவனத்திற் கொள்ள வேண்டிய சில செய்திகளை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

01. திட்டுவது தீர்வைத் தராது:
தவறு செய்தவர்களைத் திட்டுவதால் அவர்கள் திருந்தப்போவதில்லை. பெற்ற பிள்ளை என்றாலும் தவறு செய்யும் தம் பிள்ளையைப் பார்த்து முட்டாளே! மூதேவியே! நீ உருப்பட மாட்டாய், உனக்கு மூளையில்லையா….. என்ற தோரணையில் திட்டித் தீர்க்க ஆரம்பித்தால் அவர்கள் திருந்துவதற்குப் பதிலாக வெறுப்புக் கொள்வர். வம்புக்காகத் தவறு செய்ய முற்படுவர். தீமையில் தீவிரம் கொள்வர்.

எனவே, தஃவாக் களத்தில் திட்டித் தீர்ப்பதையும் ஆத்திரத்தையும், கோபத்தையும் கொட்டித் தீர்ப்பதையும் தவிர்க்க வேண்டும். இதனால் ‘நல்லா குடு குடு எனக் கொடுத்தேன்… கிழி கிழி எனக் கிழித்தேன்…” என வீராப்புப் பேச முடியுமே தவிர, இதன் மூலம் யாரையும் திருத்தவும் முடியாது, அது தஃவா செய்ததாகவும் ஆகாது. எனவே, திட்டித் தீர்ப்பதைத் தவிருங்கள்.

கண்களைத் திறந்துவிடுங்கள்:
தப்புச் செய்யும் பலரும் தாம் செய்வது தப்பு என்பதைத் தெரியாமலேயே செய்து கொண்டிருக்கின்றனர். மற்றும் பலரும் தப்பை நன்மையென நம்பிச் செய்கின்றனர். சிலர் தவறு என்று புரிந்தாலும் அதன் பாரதூரத்தை விளங்காதுள்ளனர். சிலர் சரியான உணர்வில்லாமல் இருக்கின்றனர். முதலில் இவர்களது கண்கள் திறக்கப்பட வேண்டும். இவர்கள் இருப்பது தவறில் என்பதை அவர்களே உணர வாய்ப்பளிக்க வேண்டும். இந்த நிலையில் இருப்பவர்கள் குறை கூறப்பட்டால், குத்திக்காட்டப்பட்டால் தாங்கிக் கொள்ளமாட்டார்கள், மாறாக கோபம் கொள்வார்கள். அதன் பின்னர் நாம் சொல்லும் உண்மையை அவர்களது உள்ளம் ஏற்றுக் கொள்ள மாட்டாது. எனவே, அவர்களது கண்களைத் திறக்கச் செய்ய வேண்டும். அவர்கள் தவறில் இருப்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதன் பின்னர் சரியான வழியை அவர்களே தேட ஆரம்பிப்பார்கள்.

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த நாட்டுப்புற அரபியுடன் நபியவர்கள் நடந்து கொண்ட முறை இதற்கு சிறந்த உதாரணமாகும். நபி(ச) அவர்கள் அவர் மீது கோபத்தைக் கொப்பளிக்கவில்லை. ஆத்திரத்தை அள்ளி வீசவில்லை. இது தவறான செயல் என்பதை நல்ல வார்த்தைகள் மூலம் உணர்த்தினார்கள்.

தவறு நடந்து முடிந்துவிட்டது. தவறு செய்தவர் இதே தவறை மீண்டும் செய்யக் கூடாது. இதுதான் அவருக்குச் செய்யும் தஃவாவின் நோக்கமாகும். அவரை அவமானப்படுத்துவதோ அல்லது அசிங்கப்படுத்துவதோ தஃவாவின் இலக்கன்று. எனவே, நல்ல வார்த்தைகளினூடாக அவரது தவறை உணர்த்த முயல வேண்டும்.

கனியிருக்க காய் கவர்தல் நன்றன்று:
நல்ல, நாகரிகமான வார்த்தை இருக்கும் போது மென்மையாக, தன்மையாகப் பேசும் வாய்ப்பு உள்ள போது கடினமான, கசப்பான வார்த்தைகளை ஏன் பயன்படுத்த வேண்டும்? மரத்தில் நல்ல கனிகள் இருக்கும் போது காய்களை ஏன் பறிக்க வேண்டும்? எனவே, தவறை நல்ல வார்த்தைகள் கொண்டு தடுக்க வேண்டும்.

முன்பெல்லாம் கடைகளில் ‘கடன் இல்லை” என்றொரு பதாகையைப் பார்க்கலாம். இது வருபவரின் முகத்தில் அடித்தது போல் இருந்தது. ‘இன்று மட்டும் கடன் இல்லை” என்று சூசகமாக மாற்றியமைத்தனர். மற்றும் சிலர், ‘நீங்கள் நாணயமானவர்கள்தான். ஆனால், உங்களுக்குக் கடன் தரும் அளவுக்கு நாங்கள் வசதியானவர்கள் இல்லை” என்று திருத்தினர். சொல்வது ஒரே விடயமாக இருந்தாலும் வார்த்தை அணுகுமுறைகள் வித்தியாசமானதாகும்.

இப்படிச் செய்யாதே! அப்படிச் செய்யாதே! என்பதை விட இப்படிச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே! இதை இப்படிச் செய்தால் என்ன? என்று அவரிடமே கருத்துக் கேட்பது போல் கேட்கலாம். அது அவரை சிந்திக்கவும் வைக்கும். தான் செய்தது தவறுதான் என்பதை உணரவும் வைக்கும்.

தர்க்கம் செய்வதைத் தவிருங்கள்:
தவறு செய்பவனிடம் விவாதித்து அவனது தவறை உணர்த்த முயன்றால் அவன் தனது தவறை நியாயப்படுத்தவே முற்படுவான். தன்மானப் பிரச்சினையும் சுய கௌரவமும் அவனது தவறை ஏற்கச் செய்யாது. இதனால் அவன் இன்னும் பல தவறுகளைச் செய்யவே அது தூண்டும். அது மட்டுமன்றி அதிகம் தர்க்கம் செய்தால் ‘நான் இப்படித்தான் செய்வேன், அதைக் கேட்க நீ யார்?, உன்னால் என்ன செய்ய முடியும்?… என அவன் முரண்டு பிடிக்க ஆரம்பிக்கலாம்.

இமாம் மாலிக்(ரஹ்) அவர்களிடம் ஒருவர், சுன்னாவைப் பற்றி அறிந்தவர் ஒருவருடன் அது குறித்து விவாதிக்கலாமா? எனக் கேட்ட போது, ‘இல்லை, அவரிடம் சுன்னாவைச் சொல்ல வேண்டும். ஏற்றுக் கொண்டால் சரி. இல்லாவிட்டால் மௌனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

தஃவாவுக்கு உறவுகள் வலுப்பட வேண்டும். உறவுகளை உடைத்துவிட்டு, உள்ளங்களைச் சிதைத்துவிட்டு தஃவா செய்ய முடியாது. தர்க்கம் என்பது உறவுகளை உடைக்கும். உள்ளங்களை சிதைக்கும். கதவுகளை அடைக்கும். இது குறித்து அப்துல்லாஹ் இப்னு ஹஸன்(வ) அவர்கள் கூறும் போது,

‘தர்க்கம் நீண்ட கால நட்பையும் கெடுக்கும். இறுக்கமான உறவுகளையும் உடைக்கும். இதில் உள்ள குறைந்தபட்ச தீமை அடுத்தவரை மிகைக்க வேண்டும் என்ற எண்ணமாகும். மிகைக்க வேண்டும் என்ற எண்ணம் உறவுகளை உடைக்கக் கூடிய முக்கிய காரணிகளில் ஒன்றாகும்” எனவே, தர்க்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

உங்களை நினைத்துப் பாருங்கள்:
‘தனக்கு விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாத வரையில் ஒருவரும் முஃமினாக முடியாது” என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த அடிப்படையில் நீங்கள் யாருடைய தவறைத் திருத்தப் போகின்றீர்களோ அவரது நிலையில் உங்களை வைத்து சிந்தித்துப் பாருங்கள். சில வேளை நாமே நம்மிடம் தவறை சுட்டிக் காட்டுபவருடன் கோபித்துக் கொள்கின்றோம். அவர் சொன்னது சரிதான். சொன்ன இடம் சரியில்லை, சொன்ன முறை சரியில்லை, சொல்கின்ற முறையில் சொல்லியிருந்தால் ஏற்றிருப்பேன். கேட்கின்ற முறையில் கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன் என நாமே கூறும் நிலை ஏற்படுகின்றது.

எல்லா மனிதர்களுக்கும் மானமும் மரியாதையும் சுய கௌரவமும் முக்கியமாகும். யாரும் அதை இலேசாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எம்மைப் போன்றுதான் அடுத்தவர்களும் இருப்பார்கள். இந்த நிலையில் நான் இருந்தால் எப்படிச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புவேனோ அதே முறையில் அவரிடம் சொல்ல வேண்டும் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும்.

மென்மை வேண்டும்:
அழைப்புப் பணியில் சகிப்புத் தன்மையும் மென்மையான போக்கும் அவசியமாகும். அழைப்புப் பணியில் ஏற்பட்ட கடும்போக்குதான் கவாரிஜ்கள் என்ற வழிகேடர்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. சொல்வது உண்மையாக இருக்க வேண்டும். சொல்லும் விதம் மென்மையாக இருக்க வேண்டும். சில போது மென்மைத் தன்மையை இழந்த உண்மை மறுக்கப்பட்டதற்கு கடும்போக்கான எமது தஃவா காரணமாக அமைந்துவிட்டால் நாம் தஃவா என்ற பெயரில் பாவத்தை செய்தவராக மாறிவிடுவோம்.

திணிக்காமல் சிந்திக்க இடம் கொடுங்கள்:
சில விடயங்களை இப்படி இப்படித்தான் செய்ய வேண்டும் என்று முடிவுகளைத் திணிக்காமல் மாற்றுக் கருத்துள்ளவர்களிடம் அவர்கள் சிந்திக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அவர்களின் மூளைக்கு வேலை கொடுத்து சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

சிறையில் யூசுப்(அ)
யூசுப்(அ) அவர்கள் தனது சிறைத் தோழர்களுடன் பேசும் போது முதலில் அவர்களது சிந்தனையைத் தூண்டிவிட்டார்கள்.

‘சிறையிலுள்ள என் இரு தோழர்களே! வெவ்வேறான தெய்வங்கள் சிறந்தவைகளா? அல்லது அடக்கி ஆளும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வா?”

‘அவனையன்றி நீங்கள் வணங்குபவை, நீங்களும் உங்கள் மூதாதையர்களும் சூட்டிக் கொண்ட (வெறும்) பெயர்களேயன்றி வேறில்லை. இதற்கு அல்லாஹ் எந்தவொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி வேறு யாரையும் நீங்கள் வணங்கக் கூடாது என அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரிய மார்க்கமாகும். எனினும், மனிதர்களில் அதிகமானோர் அறிந்துகொள்ள மாட்டார்கள்.”
(12:39-40)
இந்த அணுகுமுறையை நாம் கைக்கொள்ள வேண்டும். ஒரு கருத்தை நாம் திணித்தால் அவர்கள் சில போது ஏற்றுக் கொண்டால் கூட முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால், அவர்கள் சிந்தித்துப் புரிந்து கொண்டு ஏற்றால் அதை விட்டும் ஒருபோதும் விலகவும் மாட்டார்கள். எனவே, அவர்களை சிந்திக்க வையுங்கள்.

விரிசல்களை உண்டாக்காத விமர்சனம்:
விமர்சனம் என்பது சிதைத்து சின்னா பின்னமாக்குவது அன்று. ஆக்கபூர்வமான விமர்சனம் என்பது செதுக்கி செப்பனிடுவதாகும். முகத்திரையைக் கிழிப்பதும், கேவலப்படுத்துவதும் விமர்சனத்தின் நோக்கமன்று. எனவே, அடுத்தவரை விமர்சனம் செய்யும் போது நல்ல பகுதிகளை நினைவூட்டி சீர் செய்ய முயற்சி செய்யுங்கள்.

‘அப்துல்லாஹ் இப்னு உமர் ஒரு ஸாலிஹான மனிதர். அவர் இரவில் தொழுதால் (இன்னும் எவ்வளவு நலவாக இருக்கும்)” என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 7029)

இதன் பின்னர் இப்னு உமர்(வ) அவர்கள் இரவில் அதிகம் தொழுபவராக இருந்தார்கள்.

இந்த அடிப்படையில் இதை இப்படிச் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இவர் எவ்வளவு நல்ல மனிதர் என்ற தோரணையில் விமர்சனம் செய்யலாம். குர்ஆன், கிறிஸ்தவர்களை விமர்சிக்கும் அதே வேளை அவர்களிடம் காணப்படும் சில நல்ல அம்சங்களையும் கூறுவதை அவதானிக்கலாம்.

மாற்றுக் கருத்தில் இருப்பவர்களை விமர்சிக்கும் போது அடிமட்ட நிலைக்குச் சென்று அவர்களில் எந்த நன்மையும் இல்லை என்கின்ற நிலைக்கு விமர்சிக்கக் கூடாது. அந்த விமர்சனத்தை நடுநிலையான, ஒழுக்கமான, மக்கள் ஏற்க மாட்டார்கள். எதிரியைத் தரக்குறைவாக விமர்சித்தோம் என்கின்ற மனத்திருப்தியை இது தரலாம். ஆனால், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தேவையற்ற கோபத்தையும், குரோதத்தையுமே ஏற்படுத்தும். எனவே, விமர்சனங்கள் நேர்மையானதாக, நடுநிலையானதாக அமையட்டும்.

உளவு பார்க்காதீர்கள்:
அடுத்தவர்களைத் திருத்துவதற்காக அவர்களது இரகசியத் தவறுகளை உளவு பார்த்து கண்டுபிடித்துத் திருத்த முற்படாதீர்கள். வெளிப்படையான தவறுகளைத் திருத்துங்கள். உளவு பார்த்து திருத்த முற்பட்டால் அவர் உங்கள் மீது கோபம் கொள்ளலாம். நீங்கள் சொல்வதை ஏற்பதை விட உங்கள் குறைகளைத் தேட ஆரம்பிக்கலாம்.

உளவு பார்ப்பதையும், குறைகளைத் தேடுவதையும் இஸ்லாம் தடுத்துள்ளது.

அம்பலப்படுத்தாதீர்கள்:
இஸ்லாம் அடுத்தவர் குறைகளை மறைப்பதை விரும்புகின்றது. அடுத்த மனிதர்களின் தனிப்பட்ட குறைகளை அம்பலப்படுத்தக் கூடாது. நாம் நமது குறைகளை மறைக்கின்றோம். அடுத்தவர்களின் குறைகளை அம்பலப்படுத்துவது எப்படி நியாயமாக அமையும்?

இதே வேளை, ஒருவரது தவறான நடத்தை குறித்து உங்களுக்குத் தகவல் கிடைத்தால் அது பற்றி குறித்த நபருடன் பேச முற்பட்டால் அவருக்குரிய மரியாதையைக் கொடுத்துப் பேச வேண்டும்.

நீங்கள் இப்படிச் செய்ததாக ஒரு தகவல் கிடைத்தது. உங்களைப் போன்ற ஒரு நல்ல மனிதர் இப்படிச் செய்திருப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் தகவலை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக இதைச் சொல்கின்றேன் என்ற தோரணையில் கூறலாம்.

ஒருவரின் தவறை அவரிடம் கூறும் போதே இப்படியான கண்ணியமான முறையைப் பின்பற்ற வேண்டும் எனும் போது ஒருவரின் தவறை பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இணைய தளங்களிலும் உலாவர விடுவது எந்த விதத்தில் தஃவாவாக அமையும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

புகழக் கற்றுக் கொள்ளுங்கள்:
தவறுகளை சுட்டிக் காட்டுவது போன்றே நலவுகளைப் புகழவும் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகள், மாணவர்களது நலவுகளைப் புகழ வேண்டும். சின்ன நலவுகளையும் புகழும் போது பெரிய நலவுகள் உருவாகும். சில போது சின்னச் சின்ன அன்பளிப்புக்களையும் வழங்கலாம்.

அறிவை விட உணர்வுகள் பலமானது:
மனிதனது அறிவை விட உணர்வுகள் பலமானவை. வெட்கம், உரோசம், கோபம், பெருமை… போன்ற உணர்வுகளால் வடிவமைக்கப்பட்டவனே மனிதன். அறிவு சில விடயங்களை ஏற்கச் சொன்னாலும் சுய கௌரவத்திற்கும், தன்மானத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்றால் அந்த மனிதனது மனம் அதை ஏற்காது. எனவே, மனிதனது உணர்வுகளை ஊனப்படுத்தாது உண்மைகளை உரைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களது உணர்வுகளை ஊனப்படுத்திவிட்டு உண்மைகளை ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியாது.

எனவே, நாம் யாருக்கு தஃவா செய்கின்றோமோ அவர்களது உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர்களது உணர்வுகளை மதித்துத்தான் இதை நாம் சொல்கின்றோம் என்பதை அவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் நடக்க வேண்டும்.

இது போன்ற நல்ல வழிமுறைகள் மூலம் தஃவாவை நாம் முன்னெடுக்கும் போது இன்ஷா அல்லாஹ் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். எமது தஃவா அணுகுமுறைகளை உரிய முறையில் அமைத்துக் கொள்ள அல்லாஹ் அருள் புரிவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.