பாவாத மலையும் (Adam’s Peak) இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்┇Article.

இலங்கை சப்ரகமுவ மத்திய மாகாணங்களுக் கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் (7359 அடி) உயரத்தில் கூம்பு வடிவிலாக இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலை அனைத்து சமய மக்களாலும் புனிதத்துவத்துடன் நோக்கப்படுகின்றது. இந்த மலை உச்சியில் ஒரு பாதச் சுவடு உள்ளது.

மலை உச்சியில் 1.8 மீட்டர் அளவான பாறையில் இப்பாதம் பதிந்துள்ளது. இந்தப் பாதச் சுவடு புத்தருடையது என பௌத்தர்கள் நம்பி அதை வழிபட்டு வருகின்றனர். அவர்கள் இதை ‘சிறீபாத’ என அழைக்கின்றனர்.

இந்துக்கள் இது சிவனின் பாதச் சுவடு என்று நம்புகின்றனர். சிவன் நடனம் ஆடும் போது இமய மலையில் ஒரு காலையும் இம்மலையில் இன்னொரு காலையும் வைத்ததாக நம்புகின்றனர். ஆனால், இமய மலையில் இத்தகைய பாதச் சுவடு இருப்பதாக இதுவரையில் கேள்விப்படவில்லை. இந்த நம்பிக்கை காரணமாக இம்மலை இந்துக்களால் சிவனொலிபாத மலை என்று அழைக்கப்படுகின்றது.

இயேசு இலங்கை வந்ததாக எந்தச் செய்தியும் இல்லை. எனவே, கிறிஸ்த்தவர்களின் ஒரு பிரிவினர் இது செண்ட் தோமஸ் அவர்களின் பாதச் சுவடு என்று நம்புகின்றனர்.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் சுவனத்தில் தடுக்கப்பட்ட கனியைப் புசித்ததால் அங்கிருந்து பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் பூமியில் இந்த மலையில்தான் இறக்கப்பட்டார். அங்குபதிந்துள்ள பாதச் சுவடு முதல் மனிதர் ஆதம் அவர்களுடையது என்பது முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சிலரினதும் நம்பிக்கையாகும். எனவே, இது பாவாத (பாவா ஆதம்) மலை என்று முஸ்லிம்களால் அழைக்கப்படுகின்றது.

‘பாவா’ என்பது தந்தையைக் குறிக்கப் பயன் படுத்தப்படும். மனித குலத்தின் தந்தையாக இவர் இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் இம்மலை (Adam’s Peak) என்று அழைக்கப்படுகின்றது.

இந்த அனைத்துத் தரப்பாரின் நம்பிக்கைகளையும் கவனத்திற் கொண்டு பாவாத மலைக்கு வழிகாட்டும் பதாதைகளில் கூட சிங்களத்தில் சிறீபாத என்றும் தமிழில் சிவனொலிபாத மலை என்றும் ஆங்கிலத்தில் Adam’s Peak என்றும் போடப்பட்டுள்ளது.

இது மும்மதத்தினரின் நம்பிக்கையை மதிக்கும் வண்ணம் செயற்பட்ட விதமாகும். இருப்பினும் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது சிலர் பகிரங்கமாகவே இதில் இடம் பெற்றிருந்த Adam’s Peak என்ற எழுத்துக்கள் மீது கருமையான மையைப் பூசி முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுக்கும் விதத்தில் செயற்பட்டனர். இதற்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதிலிருந்து முஸ்லிம்களின் பூர்வீகத்தை அழிக்கும் நடவடிக்கைகளை ஆளும் வர்க்கத்தில் இருப்பவர்களும் விரும்புகின்றனர் என்பதை அறியலாம்.

இலங்கையில் உள்ள பல சுற்றுலாத் தளங்களில் அறபு மொழி மூலம் பதாதைகள், தகவல்கள் போடப்பட்டுள்ளன. உதாரணமாக, சீகிரிய தளத்துக்குச் சென்றால் எல்லா அறிவிப்புக்களும் அரபியிலும்; இடம்பெற்றுள்ளன.

இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் அதிருப்தியை வெளியிடுவதென்றால் அரபு மொழிஅறிவித்தல்கள் மீதும் கறுப்பு மைகள் பூசப்பட வேண்டும். ஆனால் அதை வெறும் சுற்றுலா தளமாகவும் வருமானத்திற்குரிய வழியாகவும் ஆளும் வர்க்கமும் இனவாத சக்திகளும் பார்க்கின்றன. ஆனால், சிறீபாதையை சுற்றுலாத் தளமாகப் பார்க்கவில்லை. அதை ஆதம் மலை என்று கூறுவது இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றை அங்கீகரிப்பதாக அமையும் என்று பார்க்கின்றனர். அது புத்தரின் பாதச் சுவடு என்ற பற்றில் அவர்கள் செய்திருந்தால் சிவனொலிபாத மலை என்பதையும் அவர்கள் அழித்திருக்க வேண்டும். முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறுப்பதற்காக அவர்கள் ஆதம் மலை என்ற எழுத்தை அழிக்க நினைக்கின்றனர் என்றால் எமது பூர்வீகத்தை நிறுவவும் ஏன் இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது.

அது யாருடைய பாதச் சுவடு?:
அங்கே பதிந்திருப்பது சாதாரண அளவில் உள்ள பாதச் சுவடு அல்ல. அது சராசரிப் பாதச் சுவடுகளை விட மிகப் பெரியதாகும். அந்தப் பாதச் சுவடு 5 அடி 4 அங்குல நீளமும் 2 அடி 6 அங்குலம் அகலமும் கொண்டது. புத்தர் வாழ்ந்த காலத்தையும், செண்ட் தோமஸ் வாழ்ந்த காலத்தையும் பார்த்தால் அந்தக் காலத்தவர்களின் காலின் அளவில் அது இல்லை. ஆனால், முதல் மனிதர் ஆதம் நபி பற்றிய இஸ்லாமிய மூலங்களில் சொல்லப்பட்ட தகவல்களைப் பார்க்கும் போது அவரது பாதம் பெரிதாக இருக்க வேண்டும் என்பதை அறியலாம்.

முதல் மனிதரின் உயரம்:

இறைத்தூதர் (PBUH) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (PBUH) அவர்களை (களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்’ என்று சொன்னான். அவ்வாறே ஆதம் (PBUH) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும் – உங்களின் மீது சாந்தி பொழியட்டும்’ என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், ‘உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்’ என்று பதில் கூறினார்கள். ‘இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)’ என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.
எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (PBUH) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (PBUH) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன’ என அபூ ஹுரைரா  (ர) அறிவித்தார்.’
நூல்: புகாரி:3326, 6227, 3327


முதல் மனிதர் 60 முழம் உடையவர் என இந்த செய்திகள் கூறுகின்றன. பாவாத மலையில் பதியப்பட்டுள்ள பாதச் சுவட்டின் அளவைப் பார்க்கும் போது புத்தர் கால மனிதனின் பாதச் சுவடாக அது இல்லை என்பது உறுதியாகும். ஆதம் நபி 60 முழம் உடையவர் என்பதால் அவரது பாதம் பாவாத மலையில் பதியப்பட்ட பாதச் சுவடு போல் பெரிதாக இருக்க வாய்ப்புள்ளதை உணரலாம்.

ஆதி மனிதனின் இருப்பிடம்:
முதல் மனிதர் ஆதம் நபி மக்காவில் இருந்துள்ளார் என்பது உறுதியானதாகும். ஏனெனில், அங்கு அவர் கஃபாவைக் கட்டியுள்ளார்.

‘(அல்லாஹ்வை வணங்குவதற்காக) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட முதல் வீடு ‘பக்கா’ (எனப்படும் மக்கா)வில் உள்ளதாகும். (அது) பாக்கியம் பொருந்தியதும், அகிலத் தாருக்கு நேர்வழியுமாகும்.’
(3:96)

முதன் முதலில் உலகில் நிறுவப்பட்ட ஆலயம் கஃபாவாகும். அந்தக் கஃபா பழைய வீடு என்றும் இதனால் அழைக்கப்படுகின்றது. அல் குர்ஆனில் கஃபா ‘பைதுல் அதீக்’ பழமையான வீடு, ஆலயம் என இரு முறை குறிப்பிடப்பட்டுள்ளது. (பார்க்க: 22:29, 22:33)

எனவே, முதல் மனிதர் மக்காவில் வசித்துள்ளார் என்பது உறுதியாகும். இருப்பினும் அவர் இந்தியா, இலங்கை சார்ந்த பிரதேசங்களிலும் சஞ்சரித்துள்ளார் என அனுமானங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளும் அறிஞர்களின் கருத்துக்களும் கூறுகின்றன. அதில் ஒன்றுதான் பாவாத மலையும் அதில் பதிந்துள்ள காலடித் தடமுமாகும்.

முதல் மனிதரும் இலங்கையும்:

முதல் மனிதர் வானத்திலிருந்து இறக்கப்பட்டவர். அவர் இறங்கிய இடம் குறித்து குர்ஆனிலோ, ஹதீஸிலோ தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. வரலாற்றுக்கு முந்திய நிகழ்வு என்பதால் இதை வரலாற்று ரீதியாகவும் உறுதி செய்ய முடியாது! இருப்பினும் பல்வேறுபட்ட அல்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஆதம் நபி இந்தியாவில் குறிப்பாக ‘செரண்டீப்’ எனும் இலங்கையில் அதிலும் குறிப்பாக ஒரு மலையில் இறங்கியதாகக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு நோக்குவோம். البحر المحيط في التفسير (1ஃ 263)
وقيل: لما نزل آدم بسرنديب من الهند ومعه ريح الجنة، علق بشجرها وأوديتها، فامتلأ ما هناك طيبا،

ஆதம் நபி இந்து பிரதேசத்தில் உள்ள செரண்டீபில் இறங்கும் போது அவரோடு சுவனத்தில் இருந்து கொண்டு வந்த வாசனை இருந்தது. அதனை அந்தப் பகுதி மரங்களிலும் பரவவிட்டார். அந்தப் பிரதேசம் நறுமணம் மிக்கதாக மாறியது.
(பஹ்ருல் முகீத்: 1{263)

الدر المنثور في التفسير بالمأثور (1ஃ 135)
وَأخرج الطَّبَرَانِيّ وَأَبُو نعيم فِي الْحِلْية وَابْن عَسَاكِر عَن أبي هُرَيْرَة قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم: نزل آدم عَلَيْهِ السَّلَام بِالْهِنْدِ

தபரானி மற்றும் நுஅய்ம் ஹில்யாவிலும் இப்னு அஸாகிர் அபூ ஹுரைரா (ர) அவர்கள் மூலமாகவும் ஆதம் நபி இந்து பிரதேசத்தில் இறக்கப்பட்டதாக அறிவிக்கின்றார். (குறிப்பு: இது பலவீனமான செய்தியாகும்.)
(அத்துர்ருல் மன்தூர்: 1{135

وَأخرج ابْن أبي الدُّنْيَا فِي مكايد الشَّيْطَان وَابْن الْمُنْذر وَابْن عَسَاكِر عَن جَابر بن عبد الله قَالَ: إِن آدم لما أهبط إِلَى الأَرْض هَبَط بِالْهِنْد

ஆதம் நபி பூமிக்கு இறக்கப்பட்ட போது இந்துப் பிரதேசத்தில் இறக்கப்பட்டதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்வைத் தொட்டும் இப்னு அஸாகீர், இப்னுல் முன்திர் (மற்றும்) இப்னு அபீத்துண்யா மகாயிதுஷ் ஷெய்தானில் குறிப்பிடுகின்றனர்.
(அரத்துர்ருல் மன்தூர்: 1{135)

الدر المنثور في التفسير بالمأثور (1ஃ 139)
وَأخرج ابْن أبي حَاتِم عَن السّديّ قَالَ: نزل آدم بِالْهِنْدِ فَنَبَتَتْ شَجَرَة الطّيب

இப்னு அபீ ஹாதிம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் மூலம் ஆதம் நபி இந்து பிரதேசத்தில் இறங்கியதாகும். அந்தப் பிரதேசத்தில் வாசனைத் திரவியங்கள் நிறைந்த மரங்கள் விளைந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.
(அரத்துர்ருல் மன்தூர்: 1{139)

தப்ஸீருல் ஹானியில் அவர் செரண்டீபில் இறங்கியதாகவும் அவரிடம் ஹஜருல் அஸ்வத் கல் மற்றும் சுவனத்து இலை இருந்ததாகவும் அவர் இறங்கிய இடத்தில் வாசனை மரங்கள் முளைத்ததாகவும் கூறப்படுகின்றது. (பார்க்க: தப்ஸீருல் ஹாவி)
இதே கருத்து தப்ஸீர் ஹதாயிகுர் ரூஹ் லிர் ரைஹான்: 1{321), அல் பிதாயா வன்னிஹாயா: 1{89, ரூஹுல் பயான்: 1{111, அஹ்பாருஸ் ஸமான்: 72 ஆகியவற்றிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் ஒரு மலையில் இறங்கியதாக மற்றும் பல செய்திகள் கூறுகின்றன.

இந்துப் பிரதேசத்தில் செரண்டீப் எனும் இடத்திலுள்ள நூதா என்று அழைக்கப்படும் ஒரு மலை மீது ஆதம் நபி இறக்கப்பட்டார். (தப்ஸீர் அத் தஃலபீ: 1{84)

தப்ஸீர் அல் பகவியில் அந்த மலையின் பெயர் ‘நூத்’ என்று இடம்பெற்றுள்ளது. (தப்சீர் அல் பகவி: 1{84, தப்ஸீர் அல் ஹாஸின்: 1{39, பத்ஹ§ல் பயான் பீ மகாஸிதுல் குர்ஆன்: 1{136)

தப்ஸீர் குர்தூபியில் அந்த மலையின் பெயர் ‘பூதா’ என்று இடம்பெற்றுள்ளது. (தப்ஸீர் அல் குர்தூபி: 1{319, தாரீகுத் தபரி: 1{122)

ஏன் இந்த வித்தியாசம் என்ற சந்தேகம் எழலாம். உதாரணமாக தமிழில் ‘க’ வுக்கு மேலே புள்ளி வைத்தால் அதை ‘க்’ எனக் கூறுவோம். இந்தமாதிரி ஒரு எழுத்துக்கு அரபியில் புள்ளிக் குறியீடுகள் வைக்கும் பழக்கம் ஆதி காலத்தில் இருக்கவில்லை. ‘بஅரபு ப’ இது ஒரு அரபு எழுத்து. இதற்கு கீழே ஒரு புள்ளி வைத்தால் அது ‘ப’ எனப்படும். கீழே இரண்டு புள்ளி வைத்தால் அது ‘ய’ எனப்படும். மேலே ஒரு புள்ளி வைத்தால் ‘நூன்’ எனப்படும். இரு புள்ளி வைத்தால் ‘த’ எனப்படும். மூன்று புள்ளி வைத்தாலும் ‘தா’ வாக மாறிவிடும். அரபிகள் புள்ளிகளும் குறியீடுகளும் இல்லாமலேயே அரபு மொழிச் சொற்களைப் புரிந்து கொண்டு சரியாக வாசித்துவிடுவர். வேற்று மொழிச் சொற்களையும், பெயர்களையும் வாசிக்கும் போது குழப்பம் ஏற்படும். பூதா, நூத், நூதா என்பதெல்லாம் புள்ளிகள் இல்லாவிட்டால் ஒரே விதத்தில்தான் எழுதப்படும். இதனால் இந்தப் பெயர் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

தப்ஸீர் அத்தஆலபீயின் அடிக் குறிப்பில் அந்த மலையின் பெயர் ‘அர் ராஹுன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (மராஸிதுல் இத்லாஃ: 2{710)

மற்றும் சில குறிப்புக்களில் அந்த மலையின் பெயர் ‘வாஸ், வாஷிம்’ என்று இடம்பெற்றுள்ளது. (அல் முன்தலம் பீ தாரீகுல் முலூக் வல் உமம்: 1{139) அல்லாஹுதஆலா உஹது மலையை எமது நபிக்கும் தூர்ஸீனா மலையை மூஸா நபிக்கும் ஜூதி மலையை நூஹ் நபிக்கும் செரண்டீப் மலையை ஆதம் நபிக்கும் சிம்மாசனமாக ஆக்கியதாக ரூஹுல் பயானில் (8{233) இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஃதல்லாத மற்றும் பல குறிப்புக்களிலும் ஆதம் நபி செரண்டீப் மலையில் இறக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ஆதம் நபி இலங்கையில் மரணித்து அங்கேயே அடக்கப்பட்டதாகவும் செய்திகள் பதியப்பட்டுள்ளன.

இப்னு அப்பாஸ் (ர) அவர்கள் கூறுகின்றார்கள்: ”முதன் முதலில் மஹ்லால் இப்னு கைனான் இப்னு அறூஷ் இப்னு சீத் இப்னு ஆதம் காலத்தில்தான் சிலைகள் வணங்கப்பட்டன. ஆதம் நபி இந்து பிரதேசத்தில் செரண்டீபில் உள்ள ‘நூராஹ்’ என்ற இடத்தில் அடக்கப்பட்டார். அது மலைகள் நிறைந்த பூமியாகும். அவர் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் அவரது கப்ரை ஸியாரத் செய்து அவருக்கு அருள் வேண்டினர். காபீல் ஹாபீலைக் கொலை செய்த போது அவனை விரட்டிவிட்டனர். அவனும் அவனது சந்ததிகளும் அவர்களை விட்டும் விலகி இருந்தனர்;. அப்போது ஷைத்தான் நல்ல மனிதரின் தோற்றத்தில் வந்து சீது நபியின் பிள்ளைகள் ஆதம் மூலம் பரக்கத் பெறுகின்றார்கள். நீங்கள் ஆதமின் படத்தை வரைந்து அதன் மூலம் பரக்கத் பெறுங்கள் என்று தூண்டினான்……’ என்று இடம்பெற்றுள்ளது.(அல் பஹ்ருல் மதீத் பீ தப்ஸீரில் குர்ஆனில் மஜீத்: 7{149)

இந்தக் குறிப்புக்களை வைத்து நாம் ஆதம் நபி முதலில் இறங்கிய இடம் இலங்கை பாவாத மலைதான் என்பதை அடித்துச் சொல்ல முடியாது. ஏனெனில், இவைகள் எதுவும் உறுதியான ஆதாரங்கள் அல்ல. மாறாக கூற்றுக்கள்தான். முதல் மனிதன் பற்றி குர்ஆன், சுன்னா சொன்னது தவிர ஏனையவைகளை ஆய்வுகள் மூலமும் அனுமனங்கள் மூலமும் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

இவ்வாறு அணுமானம் செய்வது அகீதா விடயத்தில் தடுக்கப்பட்டதாகும். வரலாறு விடயத்தில் அணுமானங்கள் தடுக்கப்பட்டது கிடையாது. இருப்பினும் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்துக்கும் இந்த நம்பிக்கைக்கும் இடையில் இறுக்கமான தொடர்பு உள்ளது!

இன்ஷா அல்லாஹ் இதன் தொடரை எதிர்பாருங்கள்……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.