நாற்பது வயதில் புரியும்.! | கட்டுரை.

‘மனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே சுமந்து, சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுத்தாள். அவனை(க் கர்ப்பத்தில்) சுமப்பதும், அவனுக்குப் பால் குடியை மறக்கடிக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடை களுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் புரிவதற்கும் எனக்கு அருள்பாலிப்பாயாக! எனக்கு என் சந்ததியைச் சீர்படுத்துவாயாக! நிச்சயமாக நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டேன். நிச்சயமாக நான் முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களில் உள்ளவனாவேன் என்று (பிரார்த்தித்துக்) கூறுவான்.’ (46:15)

உலகில் உள்ள பெற்றோர்கள் அனைவரும் தியாகிகளாவர். ஆனால், பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் துரோகிகளாகவே நடந்து கொள்கின்றனர்.

இன்று பெரிதும் ஒதுக்கப்படும் உறவாகப் பெற்றோர்கள் ஆகிவிட்டனர். உங்கள் பெற்றோர் உங்களுக்காகச் செய்த தியாகங்களை நீங்கள் எண்ணிப் பார்த்தால் அதற்கு நன்றிக் கடன் செலுத்திட முடியாது என்பதை உணர்வீர்கள்.

கருவில் உங்களைச் சுமக்கும் போது உங்கள் தாய் பட்ட கஷ்டம் உங்களுக்குப் புரியுமா? கருவில் அவள் உங்களை மட்டும் அல்ல கனவுகளையும் சுமந்தாள். தன் எதிர்காலத்தை சுமப்பதாகக் கற்பனை செய்தாள். நீங்கள் கருவில் இருக்கும் போது உங்களுக்காக உணவை ஒதுக்கினாள், உறக்கத்தை இழந்தாள், உடல் சுகத்தை இழந்தாள். உங்களுடன் சேர்ந்து பெரும் கஷ்டத்தையும் சுமந்தாள். அத்தனையையும் உங்களை எண்ணி சுகமான சுமையாகப் பார்த்தாள்.

அவள் கஷ்டப்பட்டுத்தான் சுமந்தாள். கஷ்டத்துடன்தான் பெற்றெடுத்தாள். இந்தக் கஷ்டமும் சிரமமும் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. அதன் பின்னரும் இரண்டு வருடங்கள் அவள் பால் தருவதற்குப் பட்ட கஷ்டமும் புரியாத புதிர்தான்.

உங்களைப் பெற்று வளர்த்த உங்கள் தாயும் தந்தையும் செய்த தியாகங்கள் உங்களுக்குப் புரியாது! உங்களுக்காக அவர்கள் தங்கள் சுகங்களை இழந்துள்ளனர். இளமைக் கால இன்பங்களை அர்ப்பணித்துள்ளனர்.

தாயின் அன்பு கூட பிள்ளைகளுக்குப் புரியும். ஆனால், தந்தையின் உண்மையான பாசத்தைப் பிள்ளைகள் புரிந்து கொள்வது கிடையாது. பெரும்பாலான பிள்ளைகள் தந்தையை பெரும் வில்லனாகவே பார்க்கின்றனர்.

உங்களுக்கு புதிய சப்பாத்து வாங்கித் தந்து விட்டு தேய்ந்து போன செருப்புடன் அவர் அலைவதைப் பார்க்கவில்லையா? 3500 அல்லது 4000 ரூபாய்க்கு டெனிம் வாங்கித் தந்துவிட்டு 500 ரூபா பழைய சாரத்துடன் அவர் வலம் வருவதைக் காணவில்லையா? தான் உழைக்கும் பணத்தில் உருப்படியாக உண்ணாமல், குடிக்காமல் உங்களுக்கு விருப்பமான உணவுகளையும் பானங்களையும் அவன் வாங்க முற்படுவது உங்களுக்குப் புரியவில்லையா? உங்களுக்கு மிதிவண்டி வாங்கித் தந்துவிட்டு நடந்து செல்லும் காட்சியின் அகோரம் புரியவில்லையா?

தனது ஆசைகளையும் விருப்பங்களையும் உள்ளத்தில் புதைத்துப் பூட்டுப் போட்டுவிட்டு உங்கள் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் கால நேரம் பாராது இரவு பகலாய் மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து போன அவன் தேகத்தைப் பாருங்கள்! தன் இளமையை உங்களுக்காகத் தியாகம் செய்து விட்டு முதுமையின் வலியை அவன் சுமக்கும் போது உங்களால் அவன் புறக்கணிக்கப்பட்டால் அது எவ்வளவு பெரிய கொடுமையாக இருக்கும் என எண்ணிப் பாருங்கள்.

இளைஞர்களே! பெற்றோரின் அன்பைப் புரியாமல் அவர்களைப் புறக்கணித்துவிடாதீர்கள். அவர்களின் மனம் நோகும்படி பேசிவிடாதீர்கள். அவர்கள் உங்களுக்காகவே வாழ்கின்றனர்! உங்கள் எதிர்கால நலனுக்காகவே கஷ்டங்களைச் சுமந்து கொள்கின்றனர். எதிர் காலத்தில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, ‘நான் என்ன பாடுபட்டாலும் பரவாயில்லை… என்னைப் போன்று எனது பிள்ளை கஷ்டப்பட்டு விடக் கூடாது…’ என்ற எண்ணத்தில் தமது நிகழ் காலத்தைத் தியாகம் செய்கின்றனர்.

நீங்கள் இப்போது உணராவிட்டாலும் நீங்களும் ஒருநாள் தந்தையாக உங்கள் அன்பை உங்கள் குழந்தைகள் புரிந்து கொள்ளாமல் உங்களைப் பகைத்துக் கொள்ளும் போது நிச்சயமாக நீங்கள் உண்மையை உணர்வீர்கள். இதைத்தான் பின்வரும் வசனம் உணர்த்துகின்றது.

‘மனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே சுமந்து, சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுத்தாள்.’
(46:15)

தாய் பட்ட கஷ்டங்களைச் சொல்லி பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு குர்ஆன் கூறுகின்றது. மனிதனுக்கு நாற்பது வயதாகும் போது பின்வருமாறு துஆ செய்வான் என இந்த வசனம் கூறுகின்றது.

‘அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் புரிவதற்கும் எனக்கு அருள்பாலிப்பாயாக! எனக்கு என் சந்ததியைச் சீர்படுத்துவாயாக! நிச்சயமாக நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டேன். நிச்சய மாக நான் முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களில் உள்ளவனாவேன் என்று (பிரார்த்தித்துக்) கூறுவான்.’ (46:15)

தனக்கும் தன் பெற்றோருக்கும் செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பு.
அல்லாஹ் பொருந்திக் கொள்ளக் கூடிய அமல்களைச்செய்வதற்கான வாய்ப்பு.
எனது சந்ததிகளை எனக்காக சீர் செய்து தந்துவிடு!
நான் பாவமன்னிப்புக் கோருகின்றேன். நான் உனக்குக் கட்டுப்பட்ட முஸ்லிமாக இருப்பேன்.
நாற்பது வயது தாண்டிய பின்னர்தான் பெற்றோரின் பெருமை புரிகின்றது. தனது பிள்ளை தனக்கு மாறு செய்யும் போது தாய், தந்தையின் கவலை தெரிகின்றது. தனது பிள்ளைகள் சீராக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏக்கமும் எழுகின்றது.

உங்கள் பெற்றோரின் பெருமையைப் புரிந்து கொள்ள நாற்பது வயது வரை காத்திருக்கப் போகின்றீர்களா? உங்கள் பிள்ளைகளால் காயப்பட்ட பின்னர்தான் உங்கள் பெற்றோரின் கஷ்டம் உங்களுக்குப் புரியுமா?

எனவே, அந்த நிலை வருவதற்கு முன்னரே உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டால் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.