நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்| கட்டுரை.

நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்… நவீன கால பிர்அவ்ன்களின் கொடூரங்களிலிருந்து இஸ்லாமிய சமூகம் ஈடேற்றம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்திப் பிரார்த்தனை புரிவோமாக!

இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் திகழ்கின்றது. போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது. ‘ஷஹ்ருல்லாஹ்” – அல்லாஹ்வின் மாதம் என இம்மாதம் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது!

ஹிஜ்ரி கணிப்பீடும் தனித்துவப் போக்கும்:
கி.மு., கி.பி. என உலக மக்கள் காலத்தைக் கணிக்கும் போது இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த ஹிஜ்ரத் தியாகப் பயணத்தினை மையமாகக் கொண்டு கலீபா உமர்(வ) அவர்கள் இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டை அறிமுகப்படுத்தினார்கள்.

கலீபா அவர்களினதும் நபித்தோழர்களினதும் ஒன்றுபட்ட இந்த நடவடிக்கை முஸ்லிம் சமூகம் தனது தனித்துவத் தன்மையைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்துகின்றது. பிற சமூகங்களுக்கு ஒப்பாவதை இஸ்லாம் கண்டிக்கின்றது. யார் எக்கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அக்கூட்டத்தைச் சேர்ந்தவரே என்பது நபிமொழியாகும். பிற சமூகங்களின் கலாசாரத்தைப் பின்பற்றி தனித்துவத்தை இழந்து அவர்களுடன் இரண்டறக் கலந்து கரைந்து போவதை இஸ்லாம் விரும்பவில்லை.

முஸ்லிம் சமூகம் தனது பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், ஆடை அலங்காரங்கள், புறத் தோற்றம் அனைத்திலும் தனித்துவத்துடன் மிளிர வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனையாகும். இதனால்தான் தாடியை வளருங்கள், மீசையைக் கத்தரியுங்கள், யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் என இஸ்லாம் பேசுகின்றது.

புறத்தோற்றத்தில் ஒரு சமூகத்தை நாம் பின்பற்றினால் எமது உள்ளமும் நடத்தைகளும் அவர்களைப் போன்றே மாற ஆரம்பித்துவிடும். இந்த உளவியல் உண்மையை உணர்ந்ததினால்தான் உமர்(வ) அவர்கள் காலக் கணிப்பீடு விடயத்திலும் முஸ்லிம் சமூகத்திற்கென ஒரு தனித்துவமான நிலைப்பாடு நீடிக்க வேண்டும் என நினைத்தார்கள். ஹிஜ்ரிக் கணிப்பை நிர்ணயித்தார்கள்.

இஸ்லாம்; பண்பாடு, பழக்கவழக்கங்கள், நாகரிகம் என்பவற்றில் தனித்துவத்தைப் போதித்தாலும் மனிதநேயம், நீதி, நேர்மை என்று வந்துவிட்டால் அது சர்வதேசப் பார்வையுடன் நடந்து கொள்கின்றது.
பிர்அவ்னின் அழிவும் மூஸா நபியின் வெற்றியும்:
இஸ்லாமிய உலகிற்கு மிகப்பெரும் எதிரிகளாக இருப்பவர்கள் இஸ்ரேலியர்கள். இதில் எந்த இரகசியமோ மாற்றுக் கருத்தோ இல்லை. ஆண்டாண்டு காலமாக பகையும், வெறுப்புணர்வும் நின்று நீடித்துக் கொண்டே வருகின்றது. அதிலும் குறிப்பாக யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நீங்காத பகையுண்டு!

யூத சமூகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்தான் மூஸா நபி. இஸ்ரவேல் சமூகத்தை எகிப்திய மன்னர்கள் அடிமைப்படுத்தி வந்தனர். இஸ்ரேலிய சமூகத்தின் அடிமைத்துவச் சங்கிலியை அறுத்தெறியப் போராட்டம் நடாத்திய இறைத்தூதர்தான் மூஸா நபி. இஸ்ரேல் சமூகத்திற்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்த அநியாயக்கார அரசன் பிர்அவ்ன் முஹர்ரம் மாதம் 10 ஆம் நாள்தான் கடலில் மூழ்கி அழிந்தான். இஸ்ரேல் சமூகம் ஈடேற்றம் பெற்ற இந்நாளில் முஸ்லிம் சமூகம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி நோன்பு நோற்று வருகின்றது.

இந்த நாளைக் கருத்திற் கொண்டு இஸ்ரேல் சமூகம் கடவுளுக்கு நன்றிக்காக எதுவும் செய்கின்றதா, இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால், 1400 வருடங்களுக்கும் அதிகமாக இந்நாளில் மூஸா நபியும் அவருடன் இருந்த இஸ்ரேல் சமூகமும் பாதுகாக்கப்பட்டு அநியாயக்காரன் பிர்அவ்னும் அவனது படையும் அழிக்கப்பட்டதற்காக முஸ்லிம் சமூகம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றது.

நீதி கிடைத்துள்ளது. விடுதலை கிடைத்துள்ளது! இன்று எமது எதிரிகளாக இருக்கும் இனத்தின் மூதாதையர்களுக்குக் கிடைத்தாலும் அது நல்லதுதான். நன்றி பாராட்டத்தக்க நாள்தான் என இஸ்லாம் போதித்து முஸ்லிம் மக்களை வழிநடாத்துகின்றது. தனித்துவம் பேணுவோம். நல்லது யாருக்கு நடந்தாலும் மகிழ்ச்சியடைவோம் என்ற மனநிலையை இஸ்லாம் வளர்க்கின்றது.

அநியாயக்கார அரசன் அழிக்கப்பட்ட இந்த மாதத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயக்காரர்களின் அழிவுக்காகவும் நாம் பிரார்த்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். சில மாதங்களாக காஷ்மீர் கதறுகின்றது. மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் கல்மனம் படைத்த காவல் துறையின் காட்டு தர்பார் காஷ்மீரில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. கற்பழிப்புக்கள், முதியவர், சிறுவர் மற்றும் பெண்கள் மீதான மிருக வெறித் தாக்குதல்கள் தொடர்ந்தவண்ணமுள்ளன. முஸ்லிம் சமூகத்தை நசுக்கி வரும் நவீன கால பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்.

ஷீஆயிஷமும் கர்பலாவும்:
இதோ ரஷ்ய நாஸ்திகமும் சிரியா அஸாத்தின் ஷீயாயிஸ நாஸகார சக்திகளும் ஒன்றிணைந்து நடாத்தும் கொலைவெறித் தாக்குதலால் அலெப்போ நகரம் மரண ஓலம் எழுப்பிக் கொண்டிருக்கின்றது. பார்க்கும் இடமெல்லாம் கட்டிட சிதைவுகளும் சிதைந்து போன சடலங்களுமாக சிரியா காட்சியளிக்கின்றது.

போர் செய்வது தடுக்கப்பட்ட இந்தப் புனித மாதத்தில் போர் நிறுத்த உடன்பாடுகள் இருந்த போதும் அதையெல்லாம் மீறும் இந்த நாசகார நடவடிக்கை ஷீஆக்கள் எனும் வழிகெட்ட அமைப்பினரின் கொடூரத் தன்மையினையும் கோர முகத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றது.

முஸ்லிம் உம்மத்திற்கிருக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக ஷீஆயிஸ சிந்தனை திகழ்கின்றது. ஷீஆக்களின் பார்வையில் அஹ்லுஸ் ஸுன்னாவைக் கொல்வது குர்பானாகும். அதனால்தான் எவ்விதக் குற்ற உணர்வும் இல்லாமல் பச்சிளம் பாலகர்களையும் விஷவாயு வீசிக் கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த வழிகெட்ட ஷீஆப் பிரிவினர் தமது தரங்கெட்ட கொள்கையைப் பரப்புவதற்கும் இந்த முஹர்ரம் மாதத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆம், இஸ்லாமிய வரலாற்றில் கறை படிந்த ஒரு சம்பவம் முஹர்ரம் 10 இல் நடந்தேறியது. முஹம்மத் நபி(ச) அவர்களின் அன்புப் பேரர் ஹுஸைன்(வ) அவர்கள் கர்பலாவில் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிகழ்வுதான் அதுவாகும். ஹுஸைன்(வ) அவர்களின் படுகொலை கவலை தரும் நிகழ்வுதான். ஆனால், இந்த நிகழ்வைக் கூட்டிக் கழித்தும், சேர்த்து, சிதைத்தும் பெரிதுபடுத்தி ஷீஆக்கள் இத்தினத்தைத் துக்க தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஹுஸைன்(வ) அவர்கள் மீதுள்ள அன்பினால்தான் இவர்கள் இப்படிச் செய்கின்றார்களா என்றால் இல்லையென்பதுதான் பதிலாகும். ஹுஸைன்(வ) அவர்களை விட ஷீஆக்கள் பெரிதும் நேசிக்கும் அலி(வ) அவர்களும் கொல்லப்பட்டார்கள். அந்த நாளை ஷீஆக்கள் துக்க தினமாகக் கொண்டாடுவதில்லை. உண்மையில் இவர்களுக்கு ஹுஸைன்(வ) அவர்கள் மீதிருந்த அன்பை விட உமையாக்கள் மீதிருந்த வெறுப்புதான் பெரியதாகும்.

உமையா ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதற்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பமாகவே இதைப் பயன்படுத்துகின்றனர். தற்போது ஷீஆ சிந்தனையை வளர்ப்பதற்கான வெறியூட்டும் நிகழ்வாக இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தினத்தைத் துக்க தினமாகக் கொண்டாடுவதும், இத்தினத்தில் தம்மைத்தாமே காயப்படுத்திக் கொள்வதும், ஒப்பாரி வைப்பதும் ஷீஆக்களின் வழிகெட்ட நடைமுறைகளாகும். இத்தினத்தில் படுகொலைக் கத்தம் என்ற பெயரில் சிலர் கத்தம் கொடுத்து வந்துள்ளதும் பித்அத்தான செயற்பாடுகளாகும்.

ஷீஆயிஷம் என்பது வழிகெட்ட சிந்தனைப் போக்கு மட்டுமன்றி இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரான மிகப்பெரும் நாசகார சக்தியுமாகும். இதனைக் கருத்திற் கொண்டு ஷீஆக் கொள்கையின் ஊடுருவல் குறித்து முஸ்லிம் சமூகம் மிகப்பெரும் விழிப்புணர்வுடன் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

இப்புனித முஹர்ரம் மாதத்தில் பிறை 09, 10 ஆம் தினங்களில் நோன்பு நோற்பதுடன் நவீன கால பிர்அவ்ன்களின் கொடூரங்களிலிருந்து இஸ்லாமிய சமூகம் ஈடேற்றம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்திப் பிரார்த்தனை புரிவோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.