நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும்

நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும்

பிரிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த சமூக அமைப்பில் இஸ்லாமிய அகீதா போதிக்கப்பட்ட பின்னர் அந்த சமூகம் சகோதரத்துவ சமூகமாக மாறியது.

‘நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். மேலும் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்தபோது உங்களது உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி, அவனது அருளினால் நீங்கள் சகோதரர்களாக மாறியதையும், நீங்கள் நரகக் குழியின் விளிம்பில் இருந்த போது, அதைவிட்டும் உங்களை அவன் காப்பாற்றி, உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடையை நினைவு கூருங்கள். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறு அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.” (3:103)

பிரிந்து எதிரிகளாக இருந்தவர்கள், நரகத்தின் விளிம்பில் இருந்தவர்கள் இஸ்லாம் எனும் நிஃமத் மூலம் சகோதரர்களாக மாற்றப்பட்டார்கள். உடைந்த உள்ளங்களையும் இணையச் செய்து உறவாடச் செய்யும் சக்தி இஸ்லாத்திற்கு உண்டு. அவ்ஸ்-கஸ்ரஜ் எனப் பிரிந்து, போர் புரிந்து வந்த மதீனத்து மக்கள்தான் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மூலம் அன்ஸார்கள் எனப் போற்றப்படும் நிலைக்கு உயர்ந்தார்கள்.

இஸ்லாம் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் சக்திமிக்கது. ஆனால், இன்று மார்க்கத்தைப் பேசும் போது பிரிவுகள்தான் அதிகரித்துக் கொண்டே செல்கின்றதே! ஏன் அவ்வாறு என்பதுதான் புரியவில்லை.

சரியான மார்க்கம் பேசப்படவில்லையா? சரியான மார்க்கம் பேசப்பட்டால் பிரிவு வராது ஒற்றுமைதான் வர வேண்டும். அல்லது, சரியான மார்க்கத்தைப் பிழையாகப் போதிக்கின்றோமா? நாம் சொல்வது சரியாக இருந்து சொல்லும் முறை பிழைத்துப் போனாலும் பிளவுகள் ஏற்படும். எனவே, தவறு எங்கே இருக்கின்றது என இனம் கண்டு அதைக் களைந்து மார்க்கப் பிரச்சாரத்தின் மூலம் மூர்க்கத்தனம் வளராமல் இஸ்லாம் கூறும் அன்பு, சகோதரத்துவம் போன்ற உணர்வுகள் வளர முயற்சிக்க வேண்டி உள்ளது.

இதனை நோக்கமாகக் கொண்டு சமூக ஒற்றுமைக்கு நபித்தோழர்கள் கொடுத்த முக்கியத்துவத்தை சிறிது தெளிவுபடுத்தலாம் என நினைக்கின்றேன்.

தலைமைத் தெரிவு:

நபி(ச) அவர்கள் மரணித்துவிட்டார்கள். அவர்களது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படவும் இல்லை. மதீனத்து ஸஹாபாக்கள் ஒன்று சேர்ந்து ஒரு தலைவரைத் தெரிவு செய்ய முற்படுகின்றார்கள். செய்தியறிந்த அபூபக்கர்(வ), உமர்(வ), அபூ உபைதா(வ) ஆகியோர் அவ்விடத்திற்கு விரைகின்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடக்கின்றது. முஹாஜிர்களில் ஒருவரையும், அன்ஸாரிகளில் ஒருவரையும் தலைவராக்குவோம் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. அபூபக்கர்(வ), உமர்(வ) ஆகியோர் இதை மறுத்து நியாயத்தைத் தெளிவுபடுத்துகின்றனர். ஈற்றில் அபூபக்கர்(வ) அவர்கள் ஏகமனதாக தலைவராகத் தெரிவு செய்யப்படுகின்றார்கள்.

சமூகம் பிளவுபட்டுவிடக் கூடாது என்பதில் நபித்தோழர்கள் காட்டிய அக்கறையைத்தான் இது எடுத்துக் காட்டுகின்றது. ஒரு தலைவர் தெரிவு செய்யப்பட்டால் அவரை நீக்குவது கஷ்டமாகும், பிளவுகளும் ஏற்படும். எனவே, நபி(ச) அவர்களை நல்லடக்கம் செய்வதை விட பிளவுக்குக் காரணமாக அமையும் இந்தத் தலைமைத் தெரிவைத் தடுக்க வேண்டும் என எண்ணுகின்றனர். ஒரு சமூகத்திற்கு இரு தலைமைகள் என்ற நிலைப்பாட்டையும் அவர்கள் ஏற்கவில்லை. அந்த வாசலைத் திறந்தால் மற்ற மற்ற குலங்களும், கோத்திரங்களும் தமக்கென தனித் தனி தலைமைகளை ஏற்படுத்திக் கொள்ள முற்படும். தலைமைகள் அதிகரிப்பது சமூகத்தைச் சின்னாபின்னமாக்கிவிடும்.

எனவே, அபூ பக்கர்(வ) அவர்கள் இந்த சமூகம் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்றால் முஹாஜிர்களில் இருந்துதான் தலைவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றார்கள். அன்ஸாரிகளும் அதை ஏற்றுக் கொள்கின்றார்கள். இஸ்லாமிய வரலாற்றில் அன்ஸாரிகளில் எவரும் தலைவர்களாக இருந்ததில்லை.

எனவே, சமூகம் பிளவுபடக் கூடாது என்றால் தலைமைகள் அதிகமாகக் கூடாது. தலைமைகள் அதிகமாகக் கூடாது என்றால் தலைமைத்துவ ஆசையை சிலர் விட்டுக் கொடுக்க வேண்டும். ஒருசிலருக்கு இருக்கும் தலைமைத்துவ ஆசை, நானா நீயா என்ற போட்டி, பொறாமை கொண்டவர்கள் பழிவாங்கப்படும் சூழ்நிலைகள் சமூக ஐக்கியத்தின் எதிரிகளாகும்.

முரண்பாட்டை விரும்பாமை:

நபித்தோழர்கள் கருத்து முரண்பாட்டை வெறுத்தனர். ஒன்றுபட்ட சமூக அமைப்பை வலியுறுத்தினர்.

இப்னு மஸ்ஊத்(வ) அவர்கள் இப்படிக் கூறுகின்றார்கள்.

‘மக்களே! தலைமைக்குக் கட்டுப் படுங்கள். கூட்டமைப்புடன் இணைந்திருங்கள். இவையிரண்டும் பேணும்படி அல்லாஹ் வலியுறுத்திய அவனது கயிராகும். கட்டுப்படுவதிலும், ஜமாஅத்துடன் இணைந்திருப்பதிலும் நீங்கள் வெறுக்கக் கூடிய விடயங்கள், பிரிவினையில் நீங்கள் விரும்பக் கூடியதை விட சிறந்ததாகும்.”
உமர்(வ) அவர்கள், ‘எனக்குப் பின்னர் நீங்கள் பிரிந்துவிடாதீர்கள்.” என எச்சரிப்பவராக இருந்தார்கள்.

அலி(வ) அவர்கள் பின்வருமாறு இது குறித்து போதித்துள்ளார்கள்.

‘கருத்து முரண்பாடுகள் மார்க்கத்தை மொட்டையடித்துவிடும். மக்களுக்கு மத்தியில் பஸாதை உண்டுபண்ணும் வீண் சர்ச்சைகள் அமல்களை அழித்துவிடும். கருத்து முரண்பாடு உங்களை பித்னாவின் பக்கம் அழைக்கும். பித்னா உங்களை நரகின் பக்கம் அழைக்கும்.”

‘மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்களுக்குள் முரண்பட்டுக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் துணிவிழந்து, உங்கள் பலமும் இல்லாமல் போய்விடும். பொறுமையாக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.” (8:46)
(தம்முல் கலாம் லில் ஹர்வீ: 4ஃ9)

இது அலி(வ) அவர்களின் போதனையாகும். பிளவுகளைத் தவிர்க்க தினமும் அது குறித்த எச்சரிக்கையூட்டல் அவசியமாகும். ஆனால், இன்று மார்க்கத்தின் பெயரில் பிளவுபடுவது அவசியம் என்பதுதான் அதிகம் போதிக்கப்படுகின்றது.

நபித்தோழர்களும் கருத்து வேறுபாடுகளும்:

நபித்தோழர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகளே வரவில்லையா என்றால் அவர்களுக்கு மத்தியில் மஸாயில் விடயங்களில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இது குறித்து இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் போது, ‘ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈன்களில் உள்ள உலமாக்கள் கருத்து வேறுபாடு பட்டால் இது விடயத்தில் அல்லாஹ்வின் கட்டளையை அவர்கள் பின்பற்றினர்.

‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத்தூதருக்கும் உங்களில் அதிகாரமுடையோருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் முரண்பட்டுக் கொண்டால், நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்வோராக இருந்தால், அதனை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் (தீர்வை வேண்டி) திருப்பிவிடுங்கள். இதுவே மிகச் சிறந்ததும் அழகான முடிவுமாகும்.” (4:59)

சில போது, செயல்சார்ந்த அறிவுசார்ந்த விடயங்களில் அவர்களது கருத்துக்கள் வேறுபட்டுள்ளன. இருப்பினும் அவர்களுக்கிடையே உள்ள நேச உணர்வுகளுக்கும், மார்க்க ரீதியான சகோதரத்துவ உணர்வுக்கும் பங்கத்தை ஏற்படுத்தவில்லை.” என்ற கருத்தைத் தெரிவிக்கின்றார்கள். (பகாலா: 42ஃ95)

கருத்து வேறுபாடுகளை குர்ஆன், ஸுன்னாவின் அடிப்படையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். அப்படித் தீர்த்துக் கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டால் பெரும்பாலான முரண்பாடுகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும்.

‘இந்த கருத்து முரண்பாடுகளுடனே அவர்கள் தமக்குள் நேசம் கொண்டவர்களாகவும், ஒருவருக்கொருவர் நல்லது செய்கின்றவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய சகோதரத்துவம் நீடித்து நிலைத்து நின்றது. இஸ்லாம் கூறும் சினேகம் கொள்வதன் ஒழுங்குகள் துண்டிக்கப்படவில்லை.” (சுருக்கம்…)
அல்ஹுஜ்ஜா பீ பயானில் மஹஜ்ஜா:
பக்கம் – 241)

சமூக கட்டமைப்பு குழையாமல் இருக்க வேண்டும் என்றால் அகீதா விடயத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட இடமளிக்கக் கூடாது. ஏற்படும் முரண்பாடுகளை குர்ஆன், ஸுன்னாவின் அடிப்படையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். மஸாயில், இஜ்திஹாது போன்ற விடயங்களில் எற்படும் கருத்து வேறுபாடுகள் பிளவாக, பகையாக, பிணக்காக, உருவாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

கருத்து வேறுபாடுகள் பிளவேற்படாது தடுக்கட்டும்:

இது குறித்து இமாம் இஸ்மாயீல் அல் அஸ்பஹானி(ரஹ்) அவர்கள் கூறும் போது,

‘மார்க்க சட்ட விடயங்களில் கருத்து வேறுபாடு பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பிரியவில்லை. தனித்தனிக் குழுக்களாகவும் அவர்கள் மாறவில்லை. அவர்கள் மார்க்கத்தின் அடிப்படை விடயங்களில் பிரியவும் இல்லை. தங்களுக்கு (சிந்திக்க) அனுமதியுள்ள விடயங்களில் சிந்தித்தார்கள். இதனால் பல மஸாயில்களில் அவர்களின் கருத்துக்கள் மாறுபட்டன. மாற்றாமல் இஸ்லாமிய சகோதரத்துவ உணர்வுடன் இஸ்லாம் கூறும் அன்பு, நேசம், ஒருவரை ஒருவர் மதித்தல் என்பன போன்ற பண்புகளுடனும் பழகிக் கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.”

பிளவைத் தடுக்கும் விட்டுக் கொடுப்புக்கள்:

உஸ்மான்(வ) அவர்கள் கலீபாவாக இருக்கும் போது மினாவில் லுஹர், அஸர், இஷா ஆகிய தொழுகைகளை நான்கு நான்கு ரக்அத்துக்களாகவே தொழுது வந்தார்கள். மினாவில் சுருக்கித் தொழுவதுதான் சுன்னத்தாகும். உஸ்மான்(வ) அவர்கள் இரண்டு காரணங்களால் இப்படிச் செய்ததாக அறிவிப்புக்களில் இடம்பெற்றுள்ளன.

1. அவர் மக்காவில் திருமணம் முடித்தார். எனவே, தான் மக்காவில் பயணி அல்ல என அவர் கருதினார். இமாமாக இருந்ததால் அவர் நான்கு ரக்அத்துக்களாக தொழுகை நடாத்தினார்கள்.

2. மார்க்கம் தெரியாத சிலர் மினாவில் நான்கு ரக்அத்துக்களை இரண்டிரண்டாக தொழுததால் அந்த தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கையே இரண்டுதான் என தவறாக எண்ணிவிட்டனர். இதை அறிந்த உஸ்மான்(வ) அவர்கள் அந்த தவறான நிலையில் இருந்து பாமர மக்களை காப்பாற்ற இந்த முடிவை எடுத்தார்.

இந்த இரண்டு காரணங்களிலும் முதல் காரணத்தை விட இரண்டாம் காரணத்தில் உஸ்மான்(வ) அவர்களின் நிலைப்பாட்டிற்கு ஓரளவு நியாயம் உள்ளது. இருப்பினும் மினாவில் இரண்டிரண்டாகத் தொழுவதே சுன்னாவாகும். எனவே, இப்னு மஸ்ஊத்(வ) அவர்கள் இரண்டிரண்டாகவே தொழ வேண்டும் என்று கருத்துக் கொண்டார்கள். உஸ்மான்(வ) அவர்கள் நான்கு ரக்அத்துக்கள் தொழுவித்த போது இப்னு மஸ்ஊத்(வ) அவர்களும் நான்கே தொழுதார்கள். இது பற்றிக் கேட்ட போது, ‘கருத்து முரண்படுவது தீங்காகும்” எனப் பதில் கூறினார்கள்.
இந்த இடத்தில் இரண்டுதான் தொழ வேண்டும் என்று இப்னு மஸ்ஊத்(வ) அவர்கள் பிரிந்திருந்தால் அவருக்குப் பின்னாலும் ஒரு கூட்டம் உருவாகியிருக்கும். உம்மத் பிளவுபட்டிருக்கும். அந்தப் பிளவின் காரணமாக பல்வேறுபட்ட தீமைகள் உருவாகியிருக்கும். எனவே, சில விடயங்களில் மார்க்க நலன் நாடி விட்டுக் கொடுத்துச் சென்றுள்ளனர். இப்படி விட்டுக் கொடுத்துச் செல்லத்தக்க விடயங்கள் எவை, எது விடயத்தில் விட்டுக் கொடுக்க அனுமதியில்லை என்ற விடயத்தில் ஒரு தெளிவிருந்தால் பல பிரச்சினைகளைத் தீர்க்கலாம்.

இது போன்ற விடயங்களை மார்க்க மஸாயில் விடயங்களில் பொடுபோக்காக இருப்பதற்கு சான்றாக எடுத்துக் கொள்ளாமல் பிரச்சினைகள், பிளவுகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான வழியாக மட்டுமே இதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உஸ்மான்(வ) அவர்கள் சமூகம் பிளவுபடக் கூடாது என்பதற்காக தமது உயிரையே அர்ப்பணித்த வரலாற்றை நாம் பார்க்கின்றோம்.

உஸ்மான்(வ) அவர்கள் சிறை பிடிக்கப்படுகின்றார்கள். ஒரு ஆட்சியாளனுக்கு எதிராகப் புரட்சி நடந்தால் தனது ஆட்சியையும் தன்னையும் பாதுகாக்க எத்தனையாயிரம் உயிர்களை இழக்கவும் அவன் தயங்கமாட்டான். ஆனால், உஸ்மான்(வ) அவர்களைப் பாதுகாக்க நபித்தோழர்கள் சிலர் முறையிட்ட போது, ‘எனக்காக யாரும் இரத்தம் சிந்த வேண்டாம்! முஸ்லிம்களுக்கு மத்தியில் எனக்காக பிளவு ஏற்பட்டுவிடக் கூடாது” என உயிரைத் தியாகம் செய்தார்கள். இவ்வாறு சமூகம் பிளவுபட்டுவிடக் கூடாது என்பதில் நபித்தோழர்கள் காட்டிய கரிசணைக்கும், வழிகாட்டல்களுக்கும் நிறையவே சான்றுகளை அவர்களின் வரலாற்றில் காணலாம். சில வேளைகளில் அவர்களுக்கு மத்தியில் போர்களும் மூண்டுள்ளன. அவர்கள் சமூகம் பிளவுபடக் கூடாது என்பதில் காட்டிய கரிசணை அவர்களுக்கு மத்தியில் நடந்த போர்கள் அனைத்திலும் நமக்கு பாடங்களும், படிப்பினைகளும் உள்ளன. அவற்றை முன்னுதாரணங்களாகக் கொண்டு சமூக ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப முயல்வோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.