இரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவருக்கும் தோட்டம் இருந்தன. இருவரும் விவசாயிகள். அதில் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்ட இறை விசுவாசி. மற்றொருவர் இறை நிராகரிப்பில் உள்ளவர். அல்லாஹ்வைப் பற்றியோ மறுமையைப் பற்றியோ சரியான நம்பிக்கை அவரிடம்
இருக்கவில்லை. அல்லாஹ் அந்த இறை நிராகரிப்பாளருக்கு இரண்டு தோட்டங்களை வழங்கி இருந்தான். தோட்டத்தில் திராட்சை காய்த்து கொத்துக்
கொத்தாக காட்சித் தந்தது. தோட்டத்தைச் சூழ பேரீத்தம் மரங்கள் இருந்தன. மரங்களுக்கு நடுவே வேறு பயிர்களும் செழித்து வளர்ந்தன. அந்த இரு தோட்டங்களுக்கும் மத்தியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது.
ரம்மியமான தோட்டம்
பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான காட்சி. திராட்சை, ஈத்த மரம், வேறு பயிர்கள், ஆறு என அனைத்து வளங்களும் அவனுக்கு வழங்கப்பட்டிருந்தன. கூடவே அவனிடம் ஆணவமும் ஒட்டிக் கொண்டது. அவனது நண்பனைப் பார்த்தான். அவனிடம் இதுபோன்ற வளங்கள் இருக்கவில்லை. “உன்னைவிட நான்
பணபலமும் மக்கள் செல்வாக்கும் மிக்கவன்” என பெருமையுடன் பேசினான். அல்லாஹ்வின் வளங்களுக்கு நன்றி செலுத்தாமல் அவற்றை வைத்து அவன் ஆணவம் கொண்டான்.
இருவரும் அவனது தோட்டத்துக்குள் சென்றனர். தோட்டத்தின் செழிப்பைப் பார்த்து அவனுக்கு பெருமை தலைக்கடித்தது. “எனது இந்த தோட்டம் எப்போதும் அழிந்து போகாது என நான் நினைக்கின்றேன். உலகம் அழியும்… என்று சொல்கிறார்கள். அப்படி அழிந்து மறுமை வரும் என்றும் நான் நினைக்கவில்லை. அப்படியே வந்தாலும் இந்த உலகத்தில் இப்படியான வளங்களைத் தந்த அல்லாஹ் இதைவிட சிறந்ததை மறுமையில் தராமலா விடுவான்” என வாதிட்டான்.அவனது நண்பனுக்கு இவனது ஆணவம் பிடிக்கவில்லை. அதைவிட மறுமையை மறுக்கும் இவனது மனநிலை பிடிக்கவில்லை. எனவே, நண்பன்
வழிகெட்டு விடக்கூடாது என்பதற்காக அவனுக்குப் புத்திகூற ஆரம்பித்தான். நல்ல நண்பர்கள் எப்போதும் நண்பர்களை நல்வழிப்படுத்தத்தானே முற்படுவர்.
நண்பனின் அறிவுரை
“உன்னை மண்ணாலும், ஒருதுளி இந்திரியத்தாலும் படைத்த உன் இரட்சகனை மறுக்கிறாயா? சாதாரண ஒரு துளி நீரில் இருந்து உன்னைப் படைத்தவன் மீண்டும்
உன்னை உயிர் கொடுத்து எழுப்ப மாட்டான் என்று எண்ணுகிறாயா? தப்பு நண்பா தப்பு! எனக்கு உன்னைப் போல் பண பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லாவிட்டால் நான் அல்லாஹ்வையே என் இரட்சகனாக ஏற்றுள்ளேன். அவனுக்கு எதையும் நான் இணை வைக்க மாட்டேன்.
உனது தோட்டம் செழிப்பாக உள்ளது. இது உனது ஆற்றலால் உருவானது அல்ல… நீ உன் திறமையால் இதைப் பெற்றதாக எண்ணுகிறாய். நீ உன் தோட்டத்திற்கு தற்பெருமையோடு நுழையாமல் ‘மாஷாஅல்லாஹ்.. லாகுவ்வத இல்லாபில்லாஹ்’ என்று நுழைந்திருக்க வேண்டும். அல்லாஹ் நாடியதே நடக்கும்.
சக்தி அனைத்தும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று நம்புவதுதான் உண்மையான இறை நம்பிக்கையாளனின் வார்த்தையாகும். நீ தற்பெருமை கொள்ளாதே! அல்லாஹ்வின் ஆற்றலைப் புரிந்துகொள். பணம் இருக்கிறது என பெருமை கொள்ளாதே! அல்லாஹ் நாடினால் உனது தோட்டத்தை
விட சிறந்ததை எனக்குத் தரலாம் என்று நாம் நம்புகின்றேன். நீ உன் நிலையில் தொடர்ந்திருந்தால் உனது தோட்டத்தை அல்லாஹ் அழித்துவிடவும் ஆற்றல் உள்ளவன்” என்று எடுத்துக் கூறினான்.
ஆணவக்காரனுக்கு அறிவுரை பயனளிக்காது! நல்ல நண்பனின் அறிவுரையை அவன் ஏற்கவில்லை. தனது தோட்டம் தனது திறமை என்ற எண்ணம்தான் அவனது மனதில் இருந்தது. தனது தோட்டங்களுக்கு மத்தியில் ஒரு ஆறு ஓடும்போது எப்படி தோட்டம் செழிப்பை இழக்கும் என அவன் எண்ணினான்.
ஆணவத்திற்கு தண்டனை
ஒருநாள் காலை ஆணவம் கொண்ட அந்த தோட்டக்காரன் தன் தோட்டத்திற்கு வந்தான். தோட்டத்தில் இருந்த மரங்கள் எல்லாம் தலைகீழாக பிறண்டிருந்தது.
செழிப்பாகக் காட்சியளித்த அவனது தோட்டத்தின் ஏனைய விவசாயங்கள் எல்லாம் அழிந்து போயிருந்தது. அல்லாஹ்வுடைய தண்டனை அவனுக்கு வந்திருந்தது. அப்போதுதான் தனது தவறை உணர்ந்த அவன் தன் இறைவனுக்கு தான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே என்று கரங்களைப் பிசைந்து கொண்டான். அவனுக்கு அந்த அழிவில் இருந்து உதவி செய்ய யாரும் இருக்கவில்லை. தான் செய்த தவறு, தன்னுடைய ஆணவம், தன்னுடைய தவறான சிந்தனைப் போக்கிற்கு இந்த உலகிலேயே தனக்கு தண்டனைக் கிடைத்துவிட்டது என்பதை அவன் உணர்ந்தான்.
நல்ல நண்பனின் அறிவுரையை அவன் ஏற்கவில்லை. இறைவன் தந்த அருளுக்கு அவன் நன்றி செலுத்தவும் இல்லை. அல்லாஹ் வழங்கிய அருளை தனது ஆற்றலாலும் திறமையாலும் பெற்றது என்று தப்பாக எண்ணினான், தலைக்கணம் கொண்டான். அதுவே அவனது அழிவுக்கு இழிவுக்கும் வழியாக அமைந்தது.
எனவே அல்லாஹ் நமக்கு எந்தத் திறமையைத் தந்திருந்தாலும் அதை வைத்து நாம் ஆணவம் கொள்ளக் கூடாது. இது அல்லாஹ் தந்தது என்ற பணிவு இருக்க வேண்டும். மனிதனின் உலக வளர்ச்சியிலே எதில் வளர்ச்சியைக் கண்டாலும் அவனுக்கு பணிவு ஏற்பட வேண்டும். இந்த இறை நிராகரிப்பாளன் தன் தோட்டத்தின் வருமானத்தை எண்ணி ஆணவம் கொண்டான். வருமானம் அல்ல, அந்த தோட்டத்திற்காக அவன் செய்த முதலீடு, உழைப்பு அனைத்தும் அழிந்து போனது. இது நமக்கொரு படிப்பினையாக அமைய வேண்டும்.
இச்சம்பவம் சூரா அல்கஃப் 18ம் அத்தியாத்தில் 32 தொடங்கி 42 வரையுள்ள வசனங்களில் நாம் காணலாம்.
وَاضْرِبْ لَهُم مَّثَلًا رَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا ﴿٣٢﴾
كِلْتَا الْجَنَّتَيْنِ آتَتْ أُكُلَهَا وَلَمْ تَظْلِم مِّنْهُ شَيْئًا ۚ وَفَجَّرْنَا خِلَالَهُمَا نَهَرًا ﴿٣٣﴾
وَكَانَ لَهُ ثَمَرٌ فَقَالَ لِصَاحِبِهِ وَهُوَ يُحَاوِرُهُ أَنَا أَكْثَرُ مِنكَ مَالًا وَأَعَزُّ نَفَرًا ﴿٣٤﴾
وَدَخَلَ جَنَّتَهُ وَهُوَ ظَالِمٌ لِّنَفْسِهِ قَالَ مَا أَظُنُّ أَن تَبِيدَ هَـٰذِهِ أَبَدًا ﴿٣٥﴾
وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِن رُّدِدتُّ إِلَىٰ رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِّنْهَا مُنقَلَبًا ﴿٣٦﴾
قَالَ لَهُ صَاحِبُهُ وَهُوَ يُحَاوِرُهُ أَكَفَرْتَ بِالَّذِي خَلَقَكَ مِن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ سَوَّاكَ رَجُلًا ﴿٣٧﴾
لَّـٰكِنَّا هُوَ اللَّـهُ رَبِّي وَلَا أُشْرِكُ بِرَبِّي أَحَدًا ﴿٣٨﴾
وَلَوْلَا إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَاءَ اللَّـهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّـهِ ۚ إِن تَرَنِ أَنَا أَقَلَّ مِنكَ مَالًا وَوَلَدًا ﴿٣٩﴾
فَعَسَىٰ رَبِّي أَن يُؤْتِيَنِ خَيْرًا مِّن جَنَّتِكَ وَيُرْسِلَ عَلَيْهَا حُسْبَانًا مِّنَ السَّمَاءِ فَتُصْبِحَ صَعِيدًا زَلَقًا ﴿٤٠﴾
أَوْ يُصْبِحَ مَاؤُهَا غَوْرًا فَلَن تَسْتَطِيعَ لَهُ طَلَبًا ﴿٤١﴾
وَأُحِيطَ بِثَمَرِهِ فَأَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلَىٰ مَا أَنفَقَ فِيهَا وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُشْرِكْ بِرَبِّي أَحَدًا ﴿٤٢﴾
(நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம். (32)
அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை – எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம். (33)
இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக “நான் உன்மை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்” என்று கூறினான். (34)
(பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், “இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை” என்றும் கூறிக் கொண்டான். (35)
(நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்” என்றும் கூறினான். (36)
அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்டான். (37)
“ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்;) அல்லாஹ் – அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் – (38)
“மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது ‘மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ – அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை – என்று கூறியிருக்க வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் – (39)
“உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும். (40)
“அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி – அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்” என்று கூறினான். (41)
அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் “என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!” என்று கூறினான். (42) மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை.