தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்சங்கள் – 3

    தொழும் போது தடுக்கப்பட்ட விடயங்கள் குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.

விரல்களைக் கோர்த்தல்:
தொழும் போது ஒரு கையின் விரல்களை மறு கையின் விரல்களோடு கோர்ப்பது தடுக்கப்பட்டுள்ளது.

”உங்களில் ஒருவர் தனது வீட்டிலேயே வுழூச் செய்து கொண்டு பள்ளிக்கு வந்தால் அவர் திரும்பிச் செல்லும் வரையில் தொழுகையிலேயே இருக்கிறார்’ என நபி(ச) அவர்கள் கூறிவிட்டு, ‘இப்படிச் செய்யாதீர்கள்’ எனக் கூறி தமது விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: இப்னு குஸைமா- 439, ஹாகிம்-744
(இமாம் அல்பானி, தஹபி ஆகியோர் இதனை ஸஹீஹானது என்று குறிப்பிடுகின்றனர்.)

நபி(ச) அவர்கள் பள்ளியில் விரல்களைக் கோர்த்து அமர்ந்திருக்கின்றார்கள் என்பதை ஹதீஸ்கள் மூலம் அறியலாம்.

அபூ ஹுரைரா(வ) அறிவித்தார். ‘நபி(ச) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்தார்கள். தங்களின் வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்தார்கள். தம் வலது கன்னத்தை இடக்கையின் மீது வைத்தார்கள். அவசரக்காரர்கள் பள்ளியின் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டுத் ‘தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது’ என்று பேசிக் கொண்டார்கள். அபூ பக்ரு(வ), உம்ர்(வ) ஆகியோரும்; அங்கிருந்தனர். (இது பற்றி) நபி(ச) அவர்களிடம் கேட்க மக்கள் அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் (இரண்டு கைகளும் நீளமான) துல்யதைன் என்பவர் இருந்தார். அவர் ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகையின் ரக்அத் குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா?’ என்று கேட்டார். ‘குறைக்கப்படவும் இல்லைÉ நான் மறக்கவுமில்லை’ என்று நபி(ச) கூறிவிட்டு (மக்களை நோக்கி) ‘துல்யதைன் கூறுவது சரிதானா?’ என்று கேட்க ‘ஆம்’ என்றனர் மக்கள்.

(தொழுமிடத்திற்குச்) சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தாவைச் செய்து, பின் தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி(த் தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்டதாக ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்தார்கள். அபூ ஹுரைரா(வ) லுஹர், அஸர் தொழுகை என்று கூறாமல் குறிப்பாக ஒரு தொழுகையைக் கூறினார்கள் என்றும் தாம் அதை மறந்துவிட்டதாகவும் இப்னுஸீரீன் குறிப்பிடுகிறார்.’
(புஹாரி: 482)
எனவே, விரல்களைக் கோர்த்துக் கொள்வதைப் பொதுவான தடையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

நாபிஉ அவர்களிடம் விரல்களைக் கோர்த்துக் கொண்டு தொழும் மனிதர் பற்றி நான் கேட்ட போது ‘இப்னு உமர் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்களின் (யூதர்களின்) தொழுகை இது’ என அவர் பதிலளித்தார் என இப்னு இஸ்மாயீல் இப்னு உமையா கூறுகின்றார்.
பைஹகி-852,
ஆதாரம்: அபூதாவூத்-27
அல்பானி (ரஹ்) இதனை ஸஹீஹானது எனக் குறிப்பிடுகின்றார்.

நெட்டி முறித்தல்:
சிலருக்கு நெட்டி முறிப்பது இயல்பான குணமாக இருக்கலாம். தொழுகையிலும், தொழுது முடிந்ததும் முறித்துக் கொண்டே இருப்பார்கள். தொழும் போது நெட்டி முறிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சாதாரணமாக ஒருவர் தொழும் போது நெட்டி முறித்தால் அதை ‘மக்ரூஹ்’ – வெறுக்கத்தக்கது என்பர். ஏனெனில், இது தொழுகையை விட்டும் மனதைப் பராக்காக்கும் காரியமாகும். அதிகமாக ஒருவர் நெட்டி முறிக்கிறார் என்றால் அது ஹராமாகும். ஏனெனில், தொழுகையுடன் விளையாடுவது போலாகும்.

இப்னு அப்பாஸ்(வ) அவர்களது அடிமை ஷுஃபா(வ) அவர்கள் கூறுகின்றார்கள்.’நான் இப்னு அப்பாஸ்(வ) அவர்களுக்குப் பக்கத்தில் தொழும் போது எனது விரல்களில் நெட்டி முறித்தேன். தொழுது முடிந்ததும் இப்னு அப்பாஸ்(வ) அவர்கள் உனக்கு தாய் இல்லாமல் போகட்டும். நீ தொழுது கொண்டிருக்கும் போது நெட்டி முறிக்கின்றாயே! என்று (எச்சரித்துக்) கூறினார்கள். ‘
ஆதாரம்: அல் ஜாமிஉல் ஸஹீஹ், முஸன்னப் இப்னு அபீiஷபா(7280)
அல்பானி (ரஹ்) இதனை ஹஸனான அறிவிப்பு என்கின்றார்.

ஆடைக்குள் கையைவிட்டுக் கொள்ளல்:
‘ஆடைக்குள் கையை வைத்துக் கொண்டு அப்படியே ருகூஃ, சுஜூது செய்வதை ‘அஸ்ஸந்ல்’ என்று கூறப்படும். இதை நபி(ச) அவர்கள் தடுத்தார்கள்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: அபூதாவூத் – 644

இந்த அடிப்படையில் ஒருவர் போர்வையைப் போர்த்தித் தொழுதால் அந்தப் போர்வைக்குள் கைகளை வைத்துக் கொண்டு அதற்குள்ளேயே ருகூஃ, சுஜூது செய்து கொள்வது வெறுக்கப்படுகின்றது. கைகளுக்குத் தனியாக கையுறை அணிந்தவர் அப்படியே தொழுவதை இது குறிக்காது என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டு;ம்.

கண்களை மூடிக் கொண்டு தொழுதல்:
சிலர் கண்களை மூடிக் கொண்டு தொழுதால் தக்வா அதிகரிக்கும் என நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும். தொழும் போது சுஜூது செய்யும் இடத்தைப் பார்க்க வேண்டும், முன்னால் யாராவது சென்றால் தடுக்க வேண்டும், தேள், பாம்பு போன்றவற்றைக் கண்டால் அடிக்கலாம் என்று வரும் ஹதீஸ்கள் அனைத்தும் கண்களைத் திறந்து கொண்டு தொழுவதுதான் சரியானது என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.

கண்களை மூடிக் கொண்டு தொழுவதன் மூலம் அல்லாஹ்வை நெருங்கலாம்É அதிக நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஒருவர் கண்களை மூடிக் கொண்டு தொழுதால் அது ஹராமாகும். ஏனெனில், கண்களை மூடிக் கொள்வதை அவர் இபாதத்தாக, நன்மை தரும் அம்சமாக நினைத்துக் செய்வதால் அது பித்அத்தாகிவிடுகின்றது. காரணம் இல்லாமல் மூடித் தொழுதால் அது வெறுக்கத்தக்கதாகவும் சுன்னாவுக்கு மாற்றமாகவும் அமையும்.

இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) அவர்கள் ‘தொழும் போது கண்களை மூடிக் கொள்வது நபி(ச) அவர்களின் வழிகாட்டலில் இல்லாதது’ எனக் குறிப்பிட்டு நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நபி(ச) அவர்கள் கண்களைத் திறந்து கொண்டுதான் தொழுதுள்ளார்கள் என்பதற்கு அநேக ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள். (ஸாதுல் மஆத் – 1ஃ294)

ருகூஉ, சுஜூதுவில் குர்ஆன் ஓதுவது:
தொழுகையில் ருகூஉ, சுஜூத் செய்யும் போது குர்ஆன் ஓதுவது தடுக்கப்பட்டதாகும்.

‘ருகூஉ, அல்லது சுஜூத் செய்தவனாக குர்ஆன் ஓதுவதை விட்டும் நான் தடுக்கப் பட்டுள்ளேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(வ)
ஆதாரம்: முஸ்லிம் – 207-479

இந்த அடிப்படையில் ருகூஉ, சுஜூதில் குர்ஆன் ஓதுவதைத் தவிர்க்க வேண்டும்.

முழங்கைகள் தரையில் படும்படி சுஜூத் செய்தல்:
சுஜூது செய்யும் போது எமது உள்ளங் கைகள் நிலத்தில் பட வேண்டும். சிலர் தமது முழங்கைகள் முழுமையாக நிலத்தில் படும்படி சுஜூது செய்வார்கள். இது தடுக்கப்பட்டுள்ளது.  இது பற்றி நபி(ச) அவர்கள் கூறும் போது,

‘இறைத்தூதர்(ச) அவர்கள் அறிவித்தார்கள். ‘ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடியுங்கள். உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது.”
அறிவிப்பவர்: அனஸ்(வ)
ஆதாரம்: புஹாரி- 882

மேற்குறிப்பிட்ட அடிப்படையில் சுஜூத் செய்வதை நபி(ச) அவர்கள் நாயின் நடைமுறைக்கு ஒப்பிட்டுள்ளதால் இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

நிலத்தைத் தடவுதல்:
சுஜூத் செய்யும் இடத்தில் கல் போன்றவை இருந்தால் அதைத் தடவி சரி செய்ய வேண்டிய தேவை இருந்தால் ஒரு முறை செய்து கொள்ளலாம். அதையும் செய்யாமல் விடுவதே சிறந்ததாகும்.

‘ஸஜ்தாச் செய்யும் போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி ‘நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு முறை மட்டும் செய்வீராக!’ என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: முஅய்கீப்(வ)
ஆதாரம்: 1207

எனவே, நிலத்தைத் தேவையில்லாமல் சரி செய்வதைத் தவிர்க்க வேண்டும். செய்தே ஆக வேண்டும் என்றால் ஒரு முறையுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.