திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது இலங்கை அரசியல். ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்றம் இன்னொரு கட்சி வசமும், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றுமொரு கட்சி வசமும் சிதறிச் சென்றுள்ளன. வட்டாரமும் (60) விகிதாசாரமும் (40) கலந்த இந்த தேர்தல் முறையில் நடந்த முதலாவது உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் நாட்டில் பாரிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்தத் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட பலங்கள் என்ன என்பதைக் கட்சித் தலைமைகள் மக்கள் மத்தியில் கூறி தமது தொண்டர்களுக்கு ஒட்சிசன் வழங்கி வந்தாலும் உண்மையில் ஏற்பட்ட பலவீனங்களை அவர்கள் அறிவார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ
இன்றைய இலங்கையின் மிகச் செல்வாக்குப் பெற்ற தனிநபராக அவரைத் தேர்தல் அடையாளப்படுத்தியுள்ளது. ஒரு நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை விடவும் ஒரு முன்னாள் ஜனாதிபதி| இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் அதிக செல்வாக்குப் பெற்றவராகத் திகழ்வது ஆச்சரியமான விடயம்தான்.
இருக்கும் அரசியல் தலைமைகளில் அதிக அரசியல் நுணுக்கம் அறிந்தவராகவும் அவரை இத்தேர்தல் அடையாளப்படுத்தியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாம் முறையும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது, மக்கள் அதை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஒரு ஜனாதிபதியாக இருந்தவர் பாராளுமன்றத் தேர்தலில் பங்குபற்றுவதா? என்று எண்ணினர். தனக்கு ஏற்பட்ட தோல்வி பெரிய தோல்வி அல்ல என்பதையும் புதிய அரசு மீது மக்கள் அதிருப்தியடையும் போது, தன்னால் மீள் எழுச்சி பெற முடியும் என அவர் போட்ட கணக்கு தப்பாகிப் போகவில்லை.
இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அதிக ஆசனங்களைப் பெற்றாலும் அதிலும் ஒரு பலவீனம் தெளிவாகத் தெரிகின்றது. அவரது வாக்கு வங்கி சரிந்தேயுள்ளது. புதிய தேர்தல் முறையால் அவர் விஸ்வரூபம் எடுத்தது போன்ற காட்சி புலப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பெற்று வந்த வாக்கு விகிதாசாரத்தைப் பார்த்தால் இது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
2010 ஜனாதிபதித் தேர்தல் 57.88%
2015 ஜனாதிபதித் தேர்தல் 47.58%
2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 44.65%
இவ்வாறு பார்க்கும் போது இந்த மூன்று வருட காலத்திற்குள் அவரது வாக்கு வங்கி 3% வீதத்தினால் (சுமார் 08 இலட்சம் வாக்குகள்) சரிந்துதான் உள்ளது. இதை அவர் தெளிவாகவே உண்ர்ந்துள்ளார்.
அவரது வாக்கு வங்கி சரிந்தாலும் அவர் எப்படி அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றார் என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழலாம்.
ஒன்று, இந்தத் தேர்தல் முறை ஏற்படுத்திய சாதகம். அடுத்து, சென்ற 2015 தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ எதிரணியினர் அனைவரும் ஒன்றாக நின்றனர். இப்போது அவர்கள் தனித்தனியாக நின்றுள்ளதால் வாக்குகள் சிதறியுள்ளன. இதை இப்படியும் பார்க்கலாம்.
மஹிந்த அணியினர் இம்முறை பெற்ற வாக்குகள் 4,941,952. அவரது எதிரணியினர் தனித்தனியாகப் பெற்ற மொத்த வாக்குகள் 6,127,465. இந்த அடிப்படையில் ஒரு ஜனாதிபதித் தேர்தலை எதிர் கொள்வதாக இருந்தால் மஹிந்த 1,185,513 வாக்குகள் பின் நிற்பார். எனவே, அவரது அடுத்த இலக்கு இந்தப் பின்னடைவைச் சரி செய்யும் விதத்தில் செயற்படுவதாக இருக்கும்.
இரு வழிகள்.
இந்த இலக்கை எட்டுவதற்கு அவர் இரண்டு வழிமுறைகளைக் கையாளலாம். ஒன்று ஹீரோயிசம்! மற்றையது வில்லத்தனம்!
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோல்வியடைய சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிக முக்கியமான காரணமாகத் திகழ்ந்தன. எனவே, சிறுபான்மை மக்களைக் கவரும் விதத்தில் செயற்பட்டு அவர்களின் கணிசமான வாக்குகளைத் தன்பக்கம் ஈர்ப்பது!
தேர்தல் முடிந்த பின்னர் இம்முறை கணிசமான தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள் தமக்குக் கிடைத்துள்ளதாக உதய கம்பன்பில கருத்து வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தனிடமிருந்து பறித்து தமிழ் மக்களின் சாபத்தைப் பெற தாம் விரும்பவில்லை என்ற மஹிந்த தரப்பு கருத்துக்கள், சிறுபான்மை வாக்குகள் மீது அவர்களது வசீகரப் பார்வை விழுந்திருப்பதற்கு அத்தாட்சியாகும்.
அடுத்து, சிறுபான்மை வாக்குகள் கிடைக்காது எனும் போது பெரும்பான்மை வாக்கைப் பெற இனவாதத்தை இன்னும் பலமாகத் தூண்டி சிங்களப் பெரும்பான்மை வாக்குகளைக் குறிவைப்பது.
இந்த இரண்டில் முதல் வகை கொஞ்சம் சாதகமானது. ஆனால், இரண்டாவது வகை மிக ஆபத்தானது. அதே வேளை, முழுமையான வெற்றியைத் தரக் கூடியதுமன்று.
முஸ்லிம் கட்சிகள்:
முஸ்லிம் கட்சிகளும் இத்தேர்தலில் தாம் வரலாற்றில் இதுவரை பெறாத அளவுக்கு அதிக ஆசனங்களைப் பெற்றுவிட்டதாகக் கூறி தமது தொண்டர்களை உசுப்பேற்றி வருகின்றன.
முஸ்லிம் காங்கிரஸ் 185 பெற்றுள்ளதாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 159 பெற்றிருப்பதாகவும் மிகைப்படுத்திப் பேசப்படுகின்றது. ஆனால், கடந்த காலத்தில் இருந்த மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 4480 ஆகும். இம்முறை அந்த ஆசனங்கள் 8346 ஆக அதிகரித்துள்ளது. இந்த வகையில் 3866 ஆசனங்கள் கடந்த தேர்தலை விட அதிகமாகும். எனவே, கடந்த தேர்தலை விட அதிக ஆசனங்களைப் பெற்றுத்தான் ஆக வேண்டும். இந்த ஆசன அதிகரிப்பு பற்றி தொண்டர்கள் சிந்திக்காததால் தாம் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைக் கண்டுள்ளதாகப் பீற்றிக் கொள்கின்றனர்.
ஆனால், அதாவுல்லாஹ் அகலக் கால் வைக்காமல் ஆழக்கால் பதித்து அக்கரைப் பற்று மாநகர சபை, பிரதேச சபையைத் கைப்பற்றியுள்ளார். இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸின் இதயமாகக் கருதப்படும் அம்பாறைப் பகுதியிலேயே கல்முனை மாநகரசபை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, இறக்காமம், பொத்துவில் பிரதேச சபைகளை முஸ்லிம் காஸ்கிரஸ் இழந்துள்ளது. தனித்து எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பலவீனத்தை அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளோம் என்ற பலத்தால் மூடி மறைக்கும் முயற்சிதான் நடந்து வருகின்றது. எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நல்லாட்சி:
பிரதமரும் அவர் சார்ந்த கட்சியும் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இந்தத் தேர்தல் முடிவுகள் பெரிய கட்சிகளுக்குள்ளேயே பலத்த அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
பொய்த்துப் போன கணக்கு:
பிரதமரைப் பொருத்தவரை மஹிந்த தொடர்ந்து அரசியலில் இருப்பதையே விரும்பினார். சுதந்திரக் கட்சி இரண்டாக உடைந்து 50:50 மஹிந்த – மைத்திரி எனப் பிரிந்தால், ஐக்கிய தேசியக் கட்சியை இனி ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என அவர் கணக்குப் போட்டார்.
பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் கட்சி ஆதரவாளர்கள் சுதந்திரக் கட்சிக்கே வாக்களிப்பர். தனக்குப் போதிய வாக்குகள் கிடைக்காது என மஹிந்த நினைத்து கட்சியிலேயே போட்டியிட்டார். மஹிந்த தனிக் கட்சி அமைத்தால் சுதந்திரக் கட்சியினர் கட்சிக்காகத் தன்னுடன் இருப்பார்கள் என மைத்திரி கணக்குப் போட்டார். ஆனால், மஹிந்த தனது காலத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் பேட்டியிட்டு வெற்றி பெற்ற, பெறாத அபேட்சகர்களைத் தன்வசப்படுத்தி இப்படியொரு மௌனப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். கணக்குகள் தப்பாகிவிட்டன.
காரணம் என்ன?
ஆட்சியில் இருந்து கொண்டே உள்ளூராட்சி சபைகளை இழந்ததற்கான காரணங்கள் என்ன என்பதை நல்லாட்சி அரசாங்கம் கண்டு அவற்றைக் களையாவிட்டால் கைவசம் இருக்கும் வாக்குகளையும் இழக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை. தமது தரப்பு தவறுகளை உணராமல், மஹிந்த இனவாதம் மூலம் இழந்த வெற்றியைப் பெற்றுவிட்டார் என்று கூறுவது உண்மையும் அல்ல. அது சரியான தீர்வுக்கான வழியாகவும் அமையாது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிலர் வாழ்வா? சாவா? என்ற போராட்டம் நடாத்தித்தான் இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முஸ்லிம்கள் அதிகாலை எழுந்து விஷேடமாகத் தொழுது இறைவனிடம் பிரார்த்தித்துவிட்டு மைத்திரிக்காக வாக்களித்தனர். அதே முஸ்லிம்களில் கனிசமானவர்கள் இம்முறை மஹிந்தவுக்கு வாக்களித்துள்ளனர். அது மஹிந்த மீதான விருப்பத்தினால் அல்ல. மாறாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீதான அதிருப்திதான் காரணமாகும். எனவே, காரணங்கள் சரியாகக் கண்டறியப்பட வேண்டும்.
இந்த அரசு வந்து தான் சொன்ன சில விடயங்களைச் செய்து முடித்தது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கம், சரத் பொன்சேகா மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் சிராந்தினி ஆகியோருக்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்தல் போன்றவற்றைக் கூறலாம். ஆனால்,
1. ஊழலை ஒழிப்போம் எனும் கோஷத்தோடுதான் இந்த அரசு ஆட்சியில் அமர்ந்தது. ஆனால், ஊழல் ஒழியவில்லை. இந்த அரசின் மீதும் மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மஹிந்த மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் அவர் மக்களுக்குத் தெரியக் கூடிய அபிவிருத்திகளைச் செய்தார். எனவே, அபிவிருத்தி செய்து ஊழல் செய்வதை ஏற்கும் மனநிலையில்தான் மக்கள் உள்ளனர். அபிவிருத்தி செய்யாமல் ஊழல் செய்தால் எப்படி மக்கள் ஏற்பார்கள்?
2. ஜனாதிபதி தனது தேர்தல் உரைகளில் ‘தான் வெற்றி பெற்றதும் விமான நிலையம் மூடப்படும், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று முழங்கினார். ஆனால், அரசியல் குற்றங்கள், ஊழல்கள், படுகொலைகள், இனவாதக் குற்றச் செயல்கள் என்று எதைச் செய்தவர்களுக்கு எதிராகவும் சட்டத்தின் கரங்கள் பாயவில்லை. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்கள் ஏமாற்றத்தைத்தான் தழுவினார்கள்.
வஸீம் தாஜுதீனின் படுகொலை தேர்தல் காலத்தில் பரவலாகப் பேசப்பட்டது. அவரது மரணம் கொலைதான் என்பது உறுதியானதுடன் தேவையான சான்றுகளும் எடுக்கப்பட்டன. கொலைக்கான பின்னணி பலமானது என்பதை அறிந்திருந்தும் இந்தக் கையாலாகாத அரசு சான்றுகளைத் தொலைத்துவிட்டது. இவ்வாறான கையாலாகாத அரசை விட திறமைமிக்கவராக மஹிந்தவை மக்கள் பார்த்துள்ளனர்.
3. முஸ்லிம் சமூகம் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு சரியான நியாயம் கிடைக்கவில்லை. இனவாதம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு அமைதி நிலை இருந்தாலும் இந்த அரசிலும் இனவாத செயற்பாடுகள் நடக்கத்தான் செய்தன. உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையும் உள்ளது.
மியன்மார் முஸ்லிம்களின் படுகொலையை உலகமே கண்டித்த போதிலும், நல்லாட்சி அரசாங்கம் மௌனம் காத்து நல்லாட்சியின் மனோபக்குவத்தைக் காட்டியது.
4. ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமைச்சுப் பொறுப்புக்களில் அமர்த்தப்பட்டுள்ளனர். காட்சிகள் மாறினாலும் கதை மாறாத அரங்காக அதனைப் பார்க்கும் நிலையை இது ஏற்படுத்தியுள்ளது.
5. சிங்கள மக்கள் பெரிதும் அரச உத்தியோகங்களையே எதிர்பார்ப்பவர்கள். இந்த அரசில் போதிய அரச வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை.
6. மஹிந்த காலத்து அபிவிருத்திகள் நிறுத்தப்பட்ட அதே வேளை, திருப்திப்படுமளவுக்கு போதிய புதிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுமில்லை.
7. பிரதமர் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவினால் நேசிக்கப்படுபவர். ஜனாதிபதி அமைதியும், எளிமையும் கொண்டவர். மஹிந்த ஐரோப்பிய நாடுகளைப் பகைத்துக் கொண்டவர். எனவே, நல்லாட்சி வந்தால் வெளிநாட்டு உதவிகள் மற்றும் முதலீடுகள் இலங்கையில் பாரிய பொருளாதார அபிவிருத்தியை உண்டு பண்ணும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி ஏதும் பெரிதாக நடக்கவில்லை.
8. தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும்கட்சியினரே ஒருவரையொருவர் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தனர். இது பாரிய வீழ்ச்சியை உண்டு பண்ணியுள்ளது.
9. இலங்கையின் பௌதீக வளங்கள் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டமை இந்த அரசின் மீதான மக்கள் வெறுப்புக்கு இன்னுமோர் காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறான இன்னும் பல காரணங்களைக் கூறலாம். நல்லாட்சி தொடர்ந்து தன்னைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்தக் குறைகள் களையப்பட வேண்டும். இல்லையென்றால் ஆதரவாளர்களையும் இழக்கும் நிலை ஏற்படலாம். உள்ளூராட்சி மன்றங்களை வென்ற மஹிந்த அணிக்கு மாகாண சபைகளை வெல்வது இலகுவானதாகும். ஏனெனில், உள்ளூராட்சி மன்றங்களில் வென்றவர்கள் களப்பணியாற்றுவார்கள்.
எனவே, மாகாண சபைகளையும் பாராளுமன்றத்தையும் ஈற்றில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளையும் பறிகொடுக்கும் நிலை ஏற்படலாம். இவற்றைக் கவனத்திற் கொண்டு மீதமிருக்கும் இரு வருடங்களை திட்டமிட்டு நகர்த்த வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நல்லாட்சி உள்ளது. இல்லையென்றால் நாய்க்கு தலையாக இருப்பதை விட சிங்கத்துக்கு வாலாக இருக்கலாம் என்ற சிந்தனைப் போக்கு சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் ஏற்படலாம். எம்மைப் பாதுகாக்கும் பலத்துடன் இவர்கள் இல்லையென்று உணர்ந்துவிட்டால் எதிரியுடன் சமாதானம் செய்து கொண்டு சங்கமமாகிவிடுவது இயல்புதானே!ள் அழிவைத்தானே சந்திப்பார்கள்!