அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள்
தாலூத்தும் ஜாலூத்தும்
‘மூஸாவுக்குப் பின் தங்கள் நபியிடம், ‘அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிட எமக்கு ஒரு மன்னரை நியமியுங்கள்” எனக் கேட்ட பனூஇஸ்ராஈல்களின் பிரமுகர்களை (நபியே!) நீர் அறியவில்லையா? அ(தற்க)வர், ‘உங்கள் மீது போர் விதிக்கப்பட்டால் நீங்கள் போராடாது இருந்து விடுவீர்களோ?” எனக் கேட்க, ‘நாம் எமது இல்லங்களையும் எமது குழந்தைகளையும் விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் போது, அல்லாஹ்வின் பாதையில் போராடாமல் இருக்க எமக்கு என்ன நேர்ந்தது?” எனக் கூறினர். ஆனால், அவர்கள் மீது போர் விதியாக்கப்பட்டபோது அவர்களில் சொற்பமானவர்களைத் தவிர (ஏனையோர்) புறக்கணித்தனர். அல்லாஹ் அநியாயக் காரர்களை நன்கறிந்தவன்.”
”நிச்சயமாக அல்லாஹ் ‘தாலூத்” என்பவரை உங்களுக்கு மன்னராக நியமித்துள்ளான்” என்று அவர்களது நபி அவர்களிடம் கூற, ‘ஆட்சிக்கு அவரை விட நாமே தகுதியுடையோராக இருக்கும் போது, பொருளாதார வளம் வழங்கப்படாத அவருக்கு எம்மை ஆளும் உரிமை எப்படி இருக்க முடியும்?” என்று கேட்டனர். ‘நிச்சயமாக அல்லாஹ் உங்களை விட அவரையே தேர்வு செய்து அறிவில் ஆற்றலையும், உடலில் வலிமையையும் அவருக்கு அதிகப்படுத்தியும் இருக்கின்றான். அல்லாஹ் தான் நாடுவோருக்கு தனது ஆட்சியை வழங்குகின்றான். மேலும் அல்லாஹ் விசாலமானவனும், நன்கறிந்தவனுமாவான்” என்று அவர் கூறினார்.”
”நிச்சயமாக அவரது ஆட்சிக்கான அடையாளமானது வானவர்கள் சுமந்து வரும் (ஒரு) பேழை உங்களிடம் வருவதாகும். அதற்குள் உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு மன அமைதியும் மூஸா, ஹாரூன் குடும்பத்தினர் விட்டுச் சென்றதில் எஞ்சியவைகளும் இருக்கும். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பின் நிச்சயமாக உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சியுள்ளது” என்று அவர்களின் நபி கூறினார்.”
‘பின்னர் தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது ‘நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஓர் ஆற்றின் மூலம் சோதிப்பான். எவரேனும் அதில் அருந்தினால் அவர் என்னைச் சார்ந்தவரல்லர். யார் அதில் அருந்தவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவராவார். எனினும் தன் கையளவு அள்ளி (அருந்தி)யவரைத் தவிர என்று கூறினார். அவர்களில் சொற்பமானவர் களைத் தவிர (மற்ற) அனைவரும் அதிலிருந்து அருந்தினர். பின்னர் அவரும் அவருடன் நம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்து சென்ற போது, ‘ஜாலூத்துடனும் அவரது படையுடனும் (போராட) இன்று எமக்கு எந்த வலிமையும் இல்லை” என்று (அவர்களில் சிலர்) கூறினர். ‘நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதியாக நம்பிக்கை கொண்டோர், ‘எத்தனையோ சிறு படைகள் பெரும் படைகளை அல்லாஹ்வின் உதவியினால்; வெற்றி கொண்டுள்ளனவே!” எனக் கூறினர். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.”
‘அவர்கள் ஜாலூத்தையும் அவனது படையையும் நேருக்கு நேர் சந்தித்த போது ‘எங்கள் இரட்சகனே! எங்கள் மீது பொறுமையைச் சொரிந்து எங்கள் பாதங்களைப் பலப்படுத்தி, நிராகரிப்பாளர்களான இக்கூட்டத்திற்கு எதிராக எமக்கு உதவி செய்வாயாக!” எனப் பிரார்த்தித்தனர்.
‘எனவே, அல்லாஹ்வின் உதவியினால் இவர்கள் அவர்களைத் தோற்கடித்தனர். தாவூத், ஜாலூத்தைக் கொன்றார். அல்லாஹ் அவருக்கு ஆட்சியையும் ஞானத்தையும் வழங்கி, தான் நாடுபவற்றிலிருந்து அவருக்குக் கற்றும் கொடுத்தான். அல்லாஹ் மனிதர்களில் சிலரைச் சிலர் மூலம் தடுக்காது இருந்தால் இந்தப் பூமி சீர் கெட்டிருக்கும். எனினும் அல்லாஹ் அகிலத்தார் மீது அருள் பாலிப்பவனாவான்.” (2:246-251)
இந்த நீண்ட வரலாற்றில் பல சம்பவங்கள் கற்றுத்தரப்படுகின்றன. அவற்றை சுருக்கமாக நோக்குவோம்.
இது மூஸா நபிக்குப் பின்னர் நடந்த நிகழ்ச்சி. இஸ்ரவேல் சமூகம் அநீதத்திற்கு உள்ளாக்கப்பட்ட காலகட்டம். அவர்கள் தம்மை ஊரை விட்டும் விரட்டியவர்களுக்கு எதிராகப் போராட ஒரு தலைவனை எதிர்பார்த்தனர். அவர்கள் தமது நபியிடம் இதனைக் கேட்டனர். போராட்டத்திற்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட தலைவன் தேவை என்பதை இது உணர்த்துகின்றது.
அநியாயமாக தமது இருப்பிடங் களிலிருந்து விரட்டப்பட்டவர்களுக்கு தமது உரிமையை வென்றெடுக்க போர் புரிய அனுமதியுள்ளதையும் இந்த சம்பவம் உணர்த்துகின்றது.
தலைமையை வேண்டிய மக்களுக்கு தாலூத் என்பவர் மன்னராக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்டார். யூத பரம்பரையில்தான் தலைவர்கள் வர வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாகும். எனவே, அவர்கள் இரண்டு காரணங்களை முன்வைத்து கேள்வி எழுப்பினர்.
ஒன்று, நாம்தான் ஆட்சிக்குத் தகுதியானவர்கள். இவர் எப்படி எமக்குத் தலைவராக இருக்க முடியும்? என்று கேட்டனர்.
இரண்டாவது, தாலூத் ஏழை வர்க்கத்தைச் சேர்ந்தவர். குடும்பப் பின்னணியும் செல்வாக்கும் இல்லாத இவர் எப்படி தலைவராக முடியும்? என்பது அவர்களது வாதம்.
இதற்கு அந்த நபி பதில் கூறும் போது மார்க்க ரீதியான ஒரு காரணத்தையும் தலைமைக்குத் தகுதியான இரண்டு அடிப்படைகளையும் பதிலாகச் சொன்னார்.
ஒன்று, இவரைத் தலைவராக நான் தெரிவு செய்யவில்லை. அல்லாஹ்தான் தெரிவு செய்தான். அல்லாஹ் நாடுபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுப்பான். இது அல்லாஹ்வின் முடிவு என்பது அவரது முதல் பதில்.
அடுத்து, தலைமைக்கு குடும்பப் பின்னணியோ, செல்வமோ அடிப்படை அல்ல. அவரிடம் கல்விஞானமும் உடல் பலமும் உள்ளது. அறிவும் ஆற்றலும் உள்ளது. தலைமைக்குத் தேவையான இந்தத் தகுதிகளை அல்லாஹ் அவரிடம் இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளான் என்று கூறினார்கள்.
இவரை அல்லாஹ்தான் ஆட்சியாளராகத் தேர்ந்தெடுத்தான் என்பதற்கு அந்த நபி ஒரு அத்தாட்சியையும் கூறினார்.
இஸ்ரவேல் சமூகத்திடம் ‘தாபூத்” என்றொரு பெட்டி இருந்தது. இதில் மூஸா மற்றும் ஹாரூன் நபி ஆகியோரின் குடும்பத்தினர் பாவித்த பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தன. இந்தப் பெட்டி தம்மிடம் இருக்கும் வரை தமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. அது அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெட்டியை மலக்குகள் கொண்டு வருவார்கள். இதுதான் இவரை அல்லாஹ் ஆட்சியாளராக ஆக்கியதற்கான அத்தாட்சி என்றார்கள். அப்படியே நடந்தது. அந்த மக்களும் இவரின் தலைமையை ஏற்றுக் கொண்டனர்.
‘தாபூத்” பெட்டியில் மூஸா மற்றும் ஹாரூன் நபியின் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அதை அடிப்படையாக வைத்து மகான்கள் என நம்பப்படுபவர்களின் பொருட்களைப் பாதுகாத்து அதன் மூலம் பரகத் பெறலாம் என்ற நம்பிக்கை சிலரிடம் உள்ளது. இது தவறாகும்.
இன்று மகான்கள் என்று கூறப்படுபவர்கள் உண்மையான மகான்களா? என்பது யாருக்கும் தெரியாது. அடுத்து ஒரு பொருளுக்கு அல்லாஹ்வோ, அவனது தூதர்களோ முக்கியத்துவம் வழங்காமல் வேறு யாரு முக்கியத்துவத்தையும், பரகத்தையும் வழங்க எந்த அனுமதியோ, அதிகாரமோ கிடையாது என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
போருக்குச் செல்லும் போது தாலூத் தன் படையினரைச் சோதித்தார். போகும் வழியில் ஒரு ஆறு வரும். அதில் ஒரு கைப்பிடியளவு தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். அதிகமாக யாரும் குடிக்கக் கூடாது, பாத்திரங்களில் யாரும் தண்ணீர் சேமிக்கவும் கூடாது என்றார். பொதுவாக பயணத்தில் நீர் நிலைகளைக் கண்டால் தண்ணீரைத் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான் கூறுவார்கள். ஆனால், தாலூத் மன்னர் தண்ணீரைப் பருகுபவர் என்னைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறினார்.
இந்த அடிப்படையில் மக்களிடம் கட்டுப்பாட்டையும், பொறுமையையும் ஏற்படுத்த சோதிக்கலாம் என்பதை இதிலிருந்து அறியலாம். குறிப்பாக, போர் படை வீரர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் பயிற்சிகளைக் கொடுக்கலாம் என்பதை இதிலிருந்து அறியலாம்.
இந்த மக்கள் ஜாலூத் என்பவனின் படையுடன் மோத வேண்டும். அவனது படை பலத்தைக் கண்ட பின் அவனுடன் மோத முடியாது என பின்வாங்கினர்.
ஆனால், அல்லாஹ்வை சந்திப்போம் என்ற உறுதியான எண்ணம் உள்ளவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு எத்தனையோ சிறு கூட்டங்கள் பெரும் கூட்டங்களை வெற்றி கொண்டுள்ளது என்று கூறி தமது உறுதியை வெளிப்படுத்தினர். போரில் வெற்றியும் கண்டனர்.
ஜாலூத் பெரும் வீரனாக இருந்தான். அவனை வீழ்த்துவது சிரமமாக இருந்தது. அவனை வீழ்த்துபவனுக்கு தனது மகளை மணமுடித்துக் கொடுப்பதாக தாலூத் கூறினார்.
தாவூத் நபி இளைஞராக இருந்தார்கள். ஆடு மேய்க்கும் அவர்கள் தனது ஆடுகளை வேட்டையாட முற்படும் கொடிய விலங்குகளை கல்லெறிந்து விரட்டிப் பழக்கப்பட்டிருந்தார்கள். அந்த அடிப்படையில் ஜாலூத்தை தாவூத் நபி வீழ்த்தினார்கள். இதன் மூலம் தாலூத்தின் படை வெற்றிபெற்றது. தாலூத் தன் மகளை தாவூத் நபிக்கு மணமுடித்துக் கொடுத்தார். தாவூத் நபியும் மன்னரானார். தாவூத் நபிக்கு அல்லாஹ் வஹீ மூலம் வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்தான்.
இதைத் கூறிவிட்டு சிலரை வைத்து சிலரை அல்லாஹ் தடுப்பதாகக் கூறுகின்றான்.
உதாரணமாக, ஒருவன் இன்னொரு இனத்தைக் கொல்ல நினைக்கின்றான். அவனை நான் கொன்றால் அவனது இனத்தவர்கள் என்னையும் எனது இனத்தவர்களையும் கொன்றுவிடுவார்கள் என்ற அச்சம் இவனைக் கொலையை விட்டும் தடுக்கின்றது. இப்படி ஒரு சமூகத்திற்கும், இனத்திற்கும், நாட்டிற்கும் எதிராகச் செயற்பட்டால் அவர்களும் பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற அச்சம் சிலபோது பூமியில் விளைய இருக்கும் குழப்பங்களில் இருந்து மக்களைக் காக்கின்றது. போர் செய்வதை இஸ்லாம் இந்த அடிப்படையில்தான் அங்கீகரித்துள்ளது என முத்தாய்ப்பாக இச்சம்பவத்தின் முடிவுரை அமைகின்றது.