தலையங்கம் (இலங்கை முஸ்லிம்கள்)

முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்கள், வன்முறைகள் என்பன இலங்கை நாட்டுக்கு ஒன்றும் புதியதல்ல. ஆனால் சுமார் ஒன்றரை வருடங்களாக தொடர்ந்தும் முஸ்லிம்கள் மன உழைச்சலுக்கும், மத நிந்தனைகளுக்கும் அவதூறுப் பிரச்சாரத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருவது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

17.03.2013 கண்டியில் நடைபெற்ற பொதுபலசேனாவின் பொதுக் கூட்டத்தில் தமக்குப் பின்புலமாக இருப்பது யார் என்பதை மிகத் தெளிவாகவே அவர்கள் அறிவித்துவிட்டார்கள். சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்களும் அரசியல் யாப்பின் அடிப்படையில் மக்களை வழிநடத்த வேண்டியவர்களும் இனவாத, மதவாத சக்திகளுக்குப் பக்க துணையாக மாறிவிட்டார்கள். பயிரை மேய வேலிகளே தயாராகிவிட்டன.
இந்நிலையில் இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகளின் வாய்களுக்குப் பூட்டும், கைகளுக்கு விலங்கும் இடப்பட்டுள்ளன. தேர்தல் களங்களில் சிங்கங்களாக கர்ஜித்தவர்கள் பராளுமன்றத்தில் அசிங்கங்களாக அமர்ந்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் மேடைகளில் சீறிப் பாயும் தலைவர்கள் பாராளுமன்றத்தில் பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டனர். இவர்களைப் பாராளுமன்ற ஆசனங்களில் அமர வைத்து அழகு பார்ப்பதற்காக இந்த சமூகத்தின் எத்தனையோ இளைஞர்களின் உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளன என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். இந்த சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
முஸ்லிம் ஆன்மீகத் தலைமை மீது இருந்த நம்பிக்கையும் சிறிது சிறிதாக சிதைந்து வருகின்றது; சிதைக்கப்படுகின்றது. இஸ்லாமிய அமைப்புக்கள் அடுத்து என்ன செய்வதென்று தீர்மானிக்க முடியாத நிலையில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் சிலர் புதிய தலைவர்களைத் தேடுகின்றனர். அப்படிச் சிலர் உருவாகி வருகின்றனர். சமூகத்தை வழிநாடாத்தக்கூடிய அளவுக்கு அவர்களிடம் போதிய அனுபவமோ, ஆற்றலோ, அறிவோ இருக்க வாய்ப்பு இல்லை. மக்கள் இந்தத் தலைமைகள் பின்னால் சென்றால் எதிர்காலம் எப்படி அமையும் என்று சொல்ல முடியாது.
சட்டம் தன் கடமையைச் செய்தால் மக்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைப்பார்கள். ஆனால், இதுவரை நடந்த எந்த துரோகச் செயலுக்கும் எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை. யாரும் கண்துடைப்புக்காகக் கூட கைது செய்யப்படவில்லை.
இந்தச் சந்தர்ப்பத்தில் சில போது பொறுமையின் எல்லையைத் தாண்டும் சிலர் தவறான முடிவை எடுக்கலாம். அப்படி தவறான முடிவை எடுத்தால் அவர்களின் முதல் இலக்காக முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அடுத்த இலக்காக இஸ்லாமிய பிரச்சார அமைப்புக்களின் தலைவர்களும் அமையலாம். ஏனெனில், வெறுப்புக் கொண்டவர்கள் முதலில் வெறுப்பை உள்ளுக்குள்தான் வெளிப்படுத்துவார்கள். தமிழ் இளைஞர்களால் தமிழ்த் தலைவர்கள் குறிவைத்து குதறப்பட்டது போன்ற ஒரு சூழ்நிலை உருவாகலாம். எனவே, இந்த மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு தலைமைகள் மீது உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறினாலும் எல்லாப் பிரச்சினைகளையும் சட்ட ஒழுங்குகளுக்கும் ஜனநாயக மரபுகளுக்கமையவுமே நாம் எதிர்கொள்ள வேண்டும். பொதுபலசேனாவின் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தால் நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு அது உள்ளாகி இருக்கும். இப்போது கூட ஒன்றும் கை நழுவிப் போய்விடவில்லை. அவர்களின் மத நிந்தனைகள், அவதூறுகள் என்பவற்றுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முஸ்லிம்களை ஆயுதப் போராட்டம் ஒன்றின் பக்கம் திருப்புவதற்காகத்தான் இப்படி தொடர்ச்சியான நெருக்குதல் கொடுக்கப்படுகின்றதோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது. அப்படியொன்று நடந்துவிட்டால் இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் இருக்கின்றது என்ற பெயரில் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கலாம். தேடுதலின் பெயரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இலங்கைத் தீவில் பயங்கரவாதம் இருக்கின்றது என்று கூறிவிட்டால் வெளிநாடுகள் கூட இலங்கைக்கு ஒத்துழைக்கும். அமெரிக்கா போன்ற இலங்கையோடு முரண்பட்டுள்ள நாடுகள் கூட இலங்கைக்கு ஒத்துழைப்பு நல்கலாம். எனவே, பொறுமையும் சட்ட நடவடிக்கையுமே இன்று எம்முன்னால் உள்ள ஒரேயொரு முறையாகும்.
இஸ்லாமிய அமைப்புக்கள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து நல்ல பௌத்த தலைவர்களையும், பிற சமூக மக்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டு இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் நகர்வுகள் மூலமாகவும் சர்வதேச சட்டங்களூடாகவும் கூட எமது பிரச்சினையை அணுக வேண்டியுள்ளது.
இலங்கையின் அரசியல் சாசனம் சகல மதங்களுக்கும் சமத்துவமான உரிமையை வழங்கியுள்ளது. ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் தான் விரும்பும் கொள்கையையும், மதத்தையும் பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் உரிமை உள்ளது. ஒரு இலங்கைப் பிரஜை இலங்கையில் எந்த இடத்திலும் விற்கலாம்ளூ வாங்கலாம். இதற்குப் பூரண உரிமை பெற்றுள்ளான். ஒருவன் விரும்பும் ஆடையை அணியும் சுதந்திரம் பெற்றுள்ளான். இவை அத்தனைக்கும் எதிராக பொதுபலசேனா செயற்பட்டு வருகின்றது.
இலங்கையில் பௌத்தம் தவிர்ந்த ஏனைய கலாசாரங்கள் இருப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு தென்னந்தோட்டம் இருந்தால் அதை தென்னந்தோட்டம் என்றுதான் அழைக்கின்றோம். அங்கே இருக்கும் ஏனைய பயிர்கள் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை என அறிவிலித்தனமாக வாதாடுகின்றனர்.
இரு இலட்சம் தென்னை மரங்கள் இருக்கின்றன. அதைத் தென்னந்தோட்டம் என்போம். அதற்கு அருகில் இருபதாயிரம் மாமரங்கள் இருக்கின்றன. அதை மாந்தோப்பு என்போம். அதைத் தொடர்ந்து பத்தாயிரம் வாழைமரங்கள் உள்ளன. அதை வாழைத்தோட்டம் என்றுதான் கூறுவோம். இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் சாதாரண களைகளாக இல்லை. தனித்தனித் தோப்புக்களாக உள்ளனர் என்பதை இவர்கள் மறந்துவிடுகின்றார்கள்.
ஏனைய சமய கலாசாரத்தையும், தனித்துவத்தையும் மறுக்கும் விதமாகத்தான் இந்த உலக மகா தத்துவத்தை உதிர்ந்து வருகின்றார்கள் இந்த மாமேதைகள்(?).
ஒரு இலட்சம் தென்னை மரங்களுக்கு மத்தியில் ஒரு மாமரம் நிற்கின்றது. இந்தத் தோட்டத்தை தென்னந் தோட்டம் என்று கூறுவோம். பிரச்சினையில்லை. ஆனால், தென்னந் தோட்டத்துக்கு மத்தியில் ஒரு மாமரம் தனியாக நிற்பதால் அதில் மாங்காய் காய்க்கக் கூடாது, தேங்காய்தான் காய்க்க வேண்டும் என்று எந்த மாங்காய் மடையனாவது கூறுவானா? மாங்காய் காய்த்தாலும் அது தேங்காயுடைய அமைப்பில்தான் இருக்க வேண்டும் என்று கூறுவானா? தென்னந் தோட்டத்துக்கு மத்தியில் இருப்பதால் அந்த மாங்காயைப் பிழிந்தால் சாறு வரக் கூடாது பால்தான் வர வேண்டும் என்பானா? சிங்களவர்கள் அதிகமாக வாழும் நாட்டில் வாழும் முஸ்லிம்களும் தங்களைத் தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சிங்கள, பௌத்த கலாசாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற வாதமும் இவ்வாறே முட்டாள்தனமாக அமைந்துள்ளது. இது ஒரு கலாசாரத் திணிப்பு, கலாசாரத் தீவிரவாதமாகும்.
முஸ்லிம்கள் தாடி வளர்ப்பதையும், முஸ்லிம் பெண்கள் அபாயா அணிவதையும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று கூறுகின்றனர். இஸ்லாம் சொன்னதால் அவர்கள் இப்படிச் செய்கின்றார்கள். இது அடிப்படைவாதம் என்றால் பௌத்த துறவிகள் மொட்டை அடிக்கின்றனர்; ஏன் அடிக்கின்றனர் என்றால் பௌத்தம் சொல்கின்றமையால் செய்கின்றார்கள். அதனால் மொட்டையடித்துக் கொள்வதை யாரும் தீவிரவாதமாகக் கருதுவதில்லை. அதே போல முஸ்லிம்கள் தாடி வைப்பதையும் தீவிரவாதமாகக் கருதுவது பொருத்தமாகாது.
முஸ்லிம் பெண்கள் அபாயா அணிவது இஸ்லாமிய அடிப்படைவாதம் என்றால் பௌத்த துறவிகள் அணியும் ஆடை பௌத்த அடிப்படைவாதமாகும். முஸ்லிம்கள் இஸ்லாமிய அடிப்படையிலும் பௌத்தர்கள் பௌதத்தின் அடிப்படையிலும் வாழ்வதுதான் சரியானது. ஒன்றில் இரண்டும் அவரவர் சமயத்தையொட்டியது என இரண்டையும் அங்கீகரிக்க வேண்டும் அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதமும் பௌத்த அடிப்படைவாதமும் பிழையானது என்று கூற வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அவரவர் மதத்தின் அடிப்படையில் வாழ்வதை நாம் அங்கீகரிக்கின்றோம். ஆனால், பொதுபலசேனா பௌத்தர்கள் பௌத்தத்தின் பக்கம் மீள வேண்டும் என்று பிரசாரம் செய்யும் அதே நேரம், ஏனைய சமயத்தவர்கள் தமது தனித்துவமான சமய அடையாளங்களை விட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருப்பது முரண்பாடாகவும், சுயநலம் கொண்ட தீவிரவாதப் போக்காகவும் திகழ்கின்றது.
இவ்வாறு அறிவுக்கும் நடைமுறை உலகுக்கும், நீதி நியாயத்திற்கும், மனித நேயத்திற்கும், இலங்கை அரசியல் யாப்புக்கும், பௌத்த மதத்தின் உயர்ந்த தத்துவங்களுக்கும் எதிராகச் செயற்பட்டு வரும் பொதுபலசேனாவின் செயற்பாடுகளை அரசு தடுப்பதுதான் இந்த நாட்டுக்கு நன்மை பயக்கும். இவர்களது இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராகத் தொடராக வழக்குகள் தொடுக்கப்படுவது எதிர்கால சந்ததிகளுக்கு நாம் செய்யும் பெரிய உதவியாக அமையும் என்பது கவனத்திற் கொள்ளப்படத்தக்கது.
இல்லையென்றால் எல்லா அநியாயங்களையும் அரங்கேற்றிவிட்டு முஸ்லிம்கள்தான் பிரச்சினைக்குரியவர்கள் என்ற தவறான தகவலை வரலாற்றுப் பதிவாக மாற்றி எம்மை குற்றவாளிகளாகக் காட்டுவார்கள்.
சிந்திப்போம்!….. செயற்படுவோம்!,….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.