‘(நபியே!) அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் விலகிச் சென்றிருப்பார்கள். எனவே, அவர்களை நீர் மன்னித்து, அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடி, காரியங்களில் அவர்களுடன் ஆலோசனையும் செய்வீராக! நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) முழுமையாக நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்.’ (3:159)
இந்த வசனம் நபி(ச) அவர்களின் சிறப்பியல்புகளைக் காட்டுகின்றது. நபி(ச) அவர்கள் மென்மைப் போக்குள்ளவர்களாக இருந்தார்கள். கடின வார்த்தை பேசுபவராக அவர் இருக்கவில்லை.
அவரது அந்த அன்பான போக்குதான் நபித்தோழர்களை அவருடன் இறுகப் பிணைக்கச் செய்தது. சின்னச் சின்னக் குறைகளையும் தோண்டி எடுப்பவராக அவர் இருக்கவில்லை. மன்னிப்பவராகவும் மன்னிப்பை வேண்டுபவராகவும் அவர் இருந்தார்.
அத்துடன் அவர் நபியாக இருந்தும் பொது விவகாரங்களில் தனது இச்சைக்கு ஏற்ப செயற்படாமல் நபித்தோழர்களுடன் கருத்துப் பரிமாறி முடிவு செய்பவராக இருந்தார். சிலபோது தனது முடிவுக்கு மாற்றமான முடிவை ஒருவர் முன்வைத்து அது சரியாக இருக்கும் பட்சத்தில் தனது கருத்தில் பிடிவாதமாக இருக்காமல் சாதாரண மனிதர்களின் கருத்தையும் நடைமுறைப்படுத்தினார்.
இன்றைய தலைவர்கள் தமது அபிப்பிராயத் திற்குத் தலை அசைக்கும் நிர்வாகிகளையே விரும்புகின்றனர். தனது முடிவுக்கு மாற்றுக் கருத்துத் தெரிவிப்பவர்களை எதிரிகளாகப் பார்க்கின்றனர். சில போது அபிப்பிராயம் கேட்பதே இல்லை என்கின்ற நிலைப்பாட்டைக் கடைப் பிடிக்கின்றனர். இதுதான் இயக்கங்கள், அமைப்புக்களின் வீரியத்தைக் கெடுப்பதுடன் விரிசல்களையும் ஏற்படுத்தி வருகின்றது. சுன்னாவைப் பேண வேண்டும் என்று போதிக்கும் அமைப்புக்கள் தமது அமைப்பு நிர்வாக விடயங் களிலேயே இந்த நபி(ச) அவர்களின் தலைமைத்துவ வழிமுறைகளைப் புறக்கணிப்பதுதான் அமைப்புக்களின் சரிவுக்கும் பிரிவுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
அல்லாஹ்வின் உதவி:
اِنْ يَّنْصُرْكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَـكُمْۚ وَاِنْ يَّخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِىْ يَنْصُرُكُمْ مِّنْۢ بَعْدِه وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ
‘அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை மிகைப்பவர் எவருமில்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால் அதன் பின் உங்களுக்கு யார்தான் உதவி செய்வான்? எனவே, நம்பிக்கை யாளர்கள் அல்லாஹ்வின் மீதே முழுமையாக நம்பிக்கை வைக்கட்டும். ‘ (3:160)
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை யாராலும் ஜெயிக்க முடியாது என்று அல்லாஹ் கூறுகின்றான். எங்களது எதிரி யாராக இருந்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெறத் தகுதியானவர்களாக எம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவே எமது வெற்றிக்கு வழியாகும். எமது வெற்றிக்குத் தேவையான பௌதீக வளங்களை எவ்வளவுதான் நாம் திரட்டி வைத்துக் கொண்டாலும் அல்லாஹ் எம்மை கைவிட்டால் நாம் வெற்றி பெறவே முடியாது! நாம் முழுமையாக அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். பௌதீக வளங்களில் அல்ல.
நபித்துவமும் ஒரு அருளே!:
‘நம்பிக்கையாளர்களுக்கு அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பியபோது, அல்லாஹ் அவர்கள் மீது நிச்சயமாகப் பேருபகாரம் புரிந்து விட்டான். அவர், அவர் களுக்கு அவனது வசனங்களை ஓதிக் காட்டி, அவர்களைப் பரிசுத்தப்படுத்தி, அவர் களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர்.’ (3:164)
நபி(ச) அவர்கள் பிறந்த தினத்தைக் கொண்டாடும் வழக்கம் முஸ்லிம் சமூகத்தில் பலரிடம் உள்ளது. நபி பிறந்த தினம் சிறந்த நாளா? அல்லது அவருக்கு வஹி அருளப்பட்ட நாள் சிறந்ததா? என்றால் அவருக்கு வஹி அருளப்பட்ட நாள்தான் சிறந்ததாகும். முஃமின்களுக்கு அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பிய போது அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான். என்று இங்கே கூறப்படுகின்றது. நபிக்கு நபித்துவம் கிடைத்த நேரம் அல்லாஹ் அருள் புரிந்த நேரமாகும். அந்த நாளையே கொண்டாட இஸ்லாம் வழிகாட்ட வில்லை எனும் போது இஸ்லாம் முக்கியத்துவம் கொடுக்காத நபி பிறந்த தினத்தைக் கொண்டாடுவது தவறான வழிமுறையாகும் என்பது தெளிவானதாகும்.
உயிர்த் தியாகிகள் உயிர் வாழ்கின்றனர்:
‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டவர்களை மரணித்தோர் என்று நிச்சயமாக நீர் எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தமது இரட்சகனிடத்தில் உயிருடன் இருக்கின்றனர். (அவனால்) அவர்கள் உணவளிக் கப்படுகின்றனர்.
‘அவர்களுக்கு அல்லாஹ் தனது அருட் கொடையிலிருந்து வழங்கியதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தவர் களாகவும், தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (வீர மரணமடையாது உயிருடன்) இருப்பவர்கள் பற்றி ‘அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’ என்று மகிழ்வுற்றவர்களாகவும் இருக்கின்றார்கள். ‘
(3:169-170)
அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களை இறந்தவர்கள் என்று எண்ணாதீர்கள். அவர்கள் தமது இரட்சகனிடத்தில் உயிருடன் உள்ளனர். அத்துடன் அவர்களுக்கு உணவும் அளிக்கப் படுகின்றது. அல்லாஹ் வழங்கிய அருளினால் அவர்கள் மகிழ்வுடன் உள்ளனர். தமது வழியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மரணிக்காத தமது சக தோழர்களும் சத்திய வழியில்தான் இருக்கின்றனர் என்ற மகிழ்வுடன் உள்ளனர். அவர்களுக்கு அச்சமும் இல்லை, துக்கமும் இல்லை என்று இந்த வசனங்களில் கூறப்படுகின்றது.
‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை மரணித்தோர் என்று கூறாதீர்கள். மாறாக, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால், நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.’ (2:154)
இங்கே அவர்களை ‘அம்வாத்’ – மையித்துக்கள் என்று கூற வேண்டும். அவர்கள் உயிருடன் உள்ளனர். ஆனால், நீங்கள் அறிய மாட்டீர்கள் என்று கூறப்படுகின்றது.
இந்த வசனங்களில் அல்லாஹ்வின் பாதையில் போராடி மரணிப்பவர்களின் சிறப்பு கூறப்படுகின்றது. அவர்களின் ‘ரூஹ்’ பச்சை நிற பறவையின் உடலில் ஊதப்பட்டு சுவனத்தில் அவர்கள் சுகமாக இருப்பார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற வசனத்தை வைத்து இறந்து போன நல்லடியார்களிடம் எமது தேவைகளைக் கேட்கலாம் என்ற தவறான கருத்தை சிலர் முன்வைத்துள்ளனர்.
இறந்து போன நல்லவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதாக இந்த வசனங்கள் கூறவில்லை. அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவர்கள் பற்றித்தான் இந்த வசனங்கள் கூறுகின்றன.
அத்துடன் அவர்கள் அல்லாஹ்விடம் உயிருடன் இருப்பதாகவும் அவர்கள் உயிருடன் இருப்பதை நீங்கள் உணர முடியாது என்றும் கூறப்படுகின்றது. இதன் மூலம் உலகத்தில் நாம் உயிருடன் இருப்பது போல் அவர்கள் உயிருடன் இருப்பதாக இந்த வசனம் கூறவில்லை என்பதைப் புரியலாம்.
அவர்கள் கப்ரில் உயிருடன் இருந்தால் கூட அவர்களிடம் பிரார்த்தனை செய்ய எந்த அதிகாரமும் இல்லை என்பதாலும் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் இஸ்லாம் கூறியிருப்பதாலும் இறந்த நல்லடியார்கள் என நம்பப் படுகின்றவர்களிடத்தில் துஆ செய்வதும், வேண்டுதல்கள் முன்வைப்பதும் ஷிர்க்கான செயற்பாடுகளாகும்.
தொடரும்…
இன்ஷா அல்லாஹ்.