24-07-2009 அன்று இரவு 7.00 மணி முதல் நடுநிசி வரை பேருவளை, மககொட பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையின் போது நடந்த அசம்பாவிதங்கள் குறித்து ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் A.L. கலீலுர் ரஹ்மான் அவர்களால் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கை;
பேருவலை, மககொட பிரதேசத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மான் என்ற பெயரில் குர்ஆன், சுன்னா அடிப்படையில் செயற்பட்டு வரும் மஸ்ஜித் திட்டமிட்ட முறையில் ஒரு குழுவால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின்போது, இரண்டு மாடிகளையுடைய மஸ்ஜித், இரண்டு மாடிகளையுடைய மத்ரஸா, வாசிகசாலை மற்றும் வைத்திய நிலையம் உட்பட சுமார் 30 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டு பள்ளிவாசல் முழுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின்போது மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வாசலைச் சேர்ந்த 13 நபர்கள் கோரமாகத் தாக்கப்பட்டு கத்திகளாலும் வாட்களாலும் வெட்டப்பட்டு இருவர் கோரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மற்றும் பலர் வைத்திய சாலையில் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
மனிதாபிமானமற்ற இந்தக் கோரச் செயலை எமது ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தக் குற்றச் செயலைத் தூண்டிவிட்டவர்கள், துணை நின்றவர்கள் இதில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் ஜமாஅத் கண்டிக்கிறது. அல்லாஹ்விடம் அவர்களைப் பொறுப்புச் சாட்டுகிறது.
இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், இதனைத் தூண்டி விட்டவர்கள், இதற்கு துணை நின்றவர்கள் அனைவரும் பாரபட்சமற்ற முறையில் சட்டத்தின் முன் நிறுத்தி விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என எமது ஜமாஅத் கோருகின்றது.
இந்த அசம்பாவிதத்தின் போது தகவல் கிடைத்தும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து முடியும் வரையில் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் போதுமான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பொலிஸாரின் அசமந்தப் போக்குக் குறித்து எமது ஜமாஅத் மிகவும் வேதனையடைகின்றது.
சட்டம் ஒழுங்கை பொலிஸார் நிலைநாட்ட முடியாதவாறு சட்டத்தின் கரங்களைக் கட்டிப்போட்ட மறைமுக அரசியல் சக்திகளை அரசு இனம்காண வேண்டும். அரசுக்கும், பொலிசுக்கும் அபகீர்த்தியைத் தேடித்தந்த இத்தகைய அரசியல்வாதிகளை இனங்கண்டு, நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என எமது ஜமாஅத் வேண்டுகிறது.
முற்றுமுழுதாக மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மீது மற்றொரு குழு மேற்கொண்ட வன்முறையாக இது இருக்கும் போது, இரு தரப்பாரும் மோதிக் கொண்ட, இரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்பட்ட நிகழ்வாக இதைச் சித்தரித்த ஊடகங்களின் தவறான போக்கையும் எமது ஜமாஅத் கண்டிக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் அவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்கின்றோம். அத்துடன் அனைவரும் அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்து துரிதமாக செயற்பட்டு சட்ட ரீதியாக நீதியையும் நியாயத்தையும் பெற்றெடுக்க முயல வேண்டும் என நாம் வேண்டுகின்றோம்.
இவ் அசம்பாவிதங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் முறைப்படி தொடரப்பட வேண்டிய அதே வேளை, இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும், முஸ்லிம் சமய, கலாசாரத் திணைக்களமும் போதிய அக்கறையும், கரிசனையும் எடுக்க வேண்டுமென்றும் ஜமாஅத் வேண்டி நிற்கின்றது.