ஜமாஅத்துத் தொழுகை – இமாமத்தும் அதன் சட்டங்களும் | பிக்ஹுல் இஸ்லாம் – 35

ஜமாஅத் தொழுவதாக இருந்தால் ஒருவர் இமாமாக தொழுகையை நடத்த வேண்டும். இமாமின் தகுதி என்ன? யார் இமாமத் செய்ய வேண்டும் என்ற விபரம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய தொன்றாகும்.

காரீஆ? பகீஹா?
இமாமத் செய்பவர் அல்குர்ஆனை அழகிய முறையில் ஓதக் கூடியவராக இருக்க வேண்டும் என இமாம்களான அபூ ஹனீபா மற்றும் தவ்ரீ அஹ்மத் ஆகியோர் கருதுகின்றனர்.

அழகிய தொனியில் ஓதுவதை விட சட்டதிட்டங்கள் பற்றிய அறிவு அதிகம் உள்ள பகீஹ்தான் தொழுகை நடத்த அதிகம் தகுதியானவர் என ஷாபிஈ மற்றும் மாலிக் மத்ஹபினர் கருகின்றனர். இரு சாராரும் தமது கூற்றுக்கு பின்வருமாறு ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.

அழகாக ஓதுபவர்:
1. ‘மூவர் இருந்தால் ஒருவர் இமாமத் செய்யட்டும். அவர்களில் யார் அதிகம் அழகாக ஓதுபவராக இருக்கின்றாரோ அவரே இமாமத்துக்குத் தகுதியானவராவார்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரீ (ர)
நூல்: முஸ்லிம் 672-289, நஸாஈ 782, 840,
இப்னு குஸைமா 1508, 1701
2. ஒரு சமூகத்தை அவர்களில் குர்ஆனை அழகாக ஓதுபவர் தொழுவிக்கட்டும். கிராஅத்தில் அனைவரும் சமமாக இருந்தால் அவர்களில் சுன்னாவை அதிகம் அறிந்தவர் தொழுவிக் கட்டும். சுன்னாவை அறிவது (பின்பற்றுவது என்பவற்றில் சமமாக இருந்தால் ஹிஜ்ரத்தில் முதியவர் தொழுவிக்கட்டும். ஹிஜ்ரத்தில் அனைவரும் சமகாலத்தவர் என்றால் இஸ்லாத்தை ஏற்றதில் முதியவரை முற்படுத்துங் கள். ஒருவரின் அதிகாரத்தில் மற்றொருவர் இமாமத் செய்ய வேண்டாம். ஒருவரது வீட்டில் அவருக்கென்று இருக்கக் கூடிய பிரத்தியேக இடத்தில் அவரது அனுமதியின்றி அமர வேண்டாம்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மஸ்ஊத் அல்அன்ஸாரி(வ)
நூல்: முஸ்லிம் 673-290, இப்னு மாஜா 980, அபூ தாவூத் 582, திர்மிதி 235, நஸாஈ 780

3. என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி(ச) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ச) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ச) அவர்கள், ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்று கூறினார்கள்’ எனக் கூறினார்கள். எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்து கொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.’ (புகாரி:4302)

4. இப்னு உமர்(ர) அறிவித்தார்: ‘முதன் முறையாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்யவந்தவர்கள், குபா என்ற பகுதியிலுள்ள உஸ்பா என்ற இடத்தில் தங்கினார்கள். நபி(ச) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருவதற்கு முன்புவரை அபூ ஹுதைபா(ர) அவர்களின், அடிமை, ஸாலிம் தாம் மக்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்தினார். அவர் குர்ஆனை அதிகம் ஓதிய வராக இருந்தார்.’ (புகாரி:692)

இந்த ஹதீஸ்கள் குர்ஆனை அதிகம் மனனமிட்டவர் அழகிய தொனியில் ஓதக் கூடியவரே இமாமத்திற்கு மிகத் தகுதியானவர் என்று கூறுகின்றன. இதனடிப்படையில் காரீ ஒருவர்தான் இமாமத்திற்கு அதிகம் தகுதியுடையவர் என முதல் சாரார் கூறுகின்றனர்.

மார்க்கத்தை அதிகம் அறிந்தவர்:
இரண்டாவது சாரார் மார்க்கத்தை அதிகம் அறிந்தவரே இமாமத் செய்வதற்குத் தகுதியானவர் என்று கூறுவதுடன் அதற்குப் பின்வரும் ஆதாரங் களைக் சான்றாக முன்வைக்கின்றனர்.
1. நபி(ச) அவர்கள் தமது மரண நேரத்தில் அபூபக்கர்(ர) அவர்களைத் தொழுகை நடத்து மாறு கூறினார்கள். அவர் ஒரு காரியாக இருக்க வில்லை. எனவே, காரியை விட மார்க்கத்தை அதிகம் அறிந்தவரே பொருத்தமானவர்.

2. மார்க்கச் சட்டத்தை அறியாதவர் தொழுகை நடாத்தினால் அவர் குழப்ப நிலையை உருவாக்கலாம் .

3. நபித்தோழர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்கள் வெறுமனே குர்ஆனை மனனம் செய்யவில்லை. குர்ஆனை விளங்கி மனனம் செய்தனர். எனவே, அவர்களில் ஒருவர் காரியாக இருந்தால் அதேவேளை அவர் மார்க்கத்தை அறிந்தவராகவும் இருப்பார் என்பது கவனிக்கப் பட வேண்டியதாகும்.

இவ்வாறு இரு சாராரின் கருத்துக்களையும் அவதானித்தால் தொழுகையின் சட்டதிட்டங்களைத் தெரிந்த காரீ ஒருவரே தொழுகை நடத்த முற்படுத்து வதற்குத் தகுதியானவர் என்பதை அறியலாம். ‘காரீ’ என்பவர் அதிகம் குர்ஆனை மனனம் செய்தவராகவும், அழகிய முறையில் உரிய உச்சரிப்பு முறையுடன் ஓதக் கூடியவராகவும் இருக்க வேண்டும். இதே வேளை ஒருவர் குர்ஆனை அழகாக ஓதுகின்றார்;| சுன்னாவைப் பேணுவதில்லை. மார்க்க முரணான செயற்பாட்டில் ஈடுபடுபவராக இருக்கின்றார் என்றால் அவரின் அழகிய கிராஅத்துக்காக மட்டும் அவர் இமாமத்திற்கு முற்படுத்தப்படக் கூடாது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

நியமிக்கப்பட்ட இமாம்:
ஒரு இடத்தில் ஒருவர் இமாமாக நியமிக்கப்பட்டிருந்தால் அவரின் அனுமதி இல்லாமல் மற்றொருவர் இமாமத் செய்ய முடியாது. பின்னால் தொழுபவர் நியமிக்கப்பட்ட இமாமை விட குர்ஆனிலும் மார்க்க விளக்கத்திலும் வயதிலும் சிறப்புப் பெற்றவராக இருந்தாலும் நியமிக்கப்பட்ட இமாமே தொழுகை நடத்தத் தகுதியானவர். அவராக விரும்பி அனுமதித்தால் அனுமதி பெற்றவர் தொழுகை நடாத்தலாம். முன்னால் நாம் குறிப்பிட்ட ஹதீஸ் இதை உறுதி செய்கின்றது. ஒருவரின் அதிகாரத்தில் இன்னொருவர் இமாமத் செய்ய முடியாது. அவ்வாறே ஒருவரின் வீட்டில் அவரது அனுமதியின்றி மற்றொருவர் இமாமத் செய்ய முடியாது. பள்ளிகளுக்கு இமாமத் நியமனம் செய்யும் போது முடிந்தவரை அதிகம் குர்ஆனை மனனம் செய்த, அழகிய தொணியில் ஓதக் கூடிய, மார்க்க விளக்கமுள்ளவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்கதாகும். இந்த அடிப்படையில்,

* நியமிக்கப்பட்ட இமாம் இருந்தால் அவர் தொழுகை நடத்துவார். இல்லாத பட்சத்தில்,

* அழகாக குர்ஆனை ஓதக் கூடிய, தொழுகையின் சட்டங்களை அறிந்தவர்.

* அதிகம் சுன்னாவை அறிந்தவர்.
* அதில் சமநிலை இருந்தால் ஹிஜ்ரத்தில் முந்தியவர். அதில் சமநிலை இருந்தால்,

* இஸ்லாத்தில் முந்தியவர்;.

* அதில் சமநிலை இருந்தால் வயதில் மூத்தவர் என முற்படுத்தப்படலாம்.

இமாமாக இருப்பவர் அந்தஸ்த்தில் உயர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நபி(ச) அவர்கள் அபூபக்கர்(ர) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதுள்ளார்கள்.

இவர்களும் இமாமத் செய்யலாம்:
1. கண்பார்வை அற்றவர்.
கண்பார்வை அற்றவர் பார்வை உள்ளவர் களுக்கு இமாமத் செய்யலாம்.

நபி(ச) அவர்கள் தான் இல்லாத போது தனக்குப் பிறகு மதீனாவில் மக்களுக்குத் தொழுகை நடத்த (கண்பார்வை அற்றவரான) அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ர) அவர்களை நியமித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ர)
நூல்: இப்னு ஹிப்பான் 2134

மாற்றுத் திரனாளி ஒருவரைத் தனக்குப் பகரமாக தொழுகை நடத்தும் இமாமாக நபி(ச) அவர்கள் நியமித்து அவர்களை கண்ணியப் படுத்தியுள்ளமை கவனிக்கத்தக்கதாகும். இந்த வகையில் கண்பார்வை அற்றவர் மட்டுமல்லாது, தொழுகையின் சட்டங்களைப் பேணித் தொழக் கூடிய மாற்றுத் திறனாளிகள் யார் வேண்டுமானாலும் தொழுகை நடத்துவது ஆகுமானதாகும்.

2. அடிமை.
அன்று அடிமைகள் இருந்தனர். குர்ஆனை ஓதக் கற்ற அடிமை சுதந்திரமான முஸ்லிம்களுக்குத் தொழுகை நடத்தலாம். குர்ஆனை அழகாக ஓதக் கற்ற அபூ ஹ§தைபாவின் அடிமை ஸாலிம்(ர) அவர்கள் குறைஷி வம்சத்தவர்களுக்கே இமாமாக நின்று தொழுகை நடத்தியுள்ளார்கள். இந்த அடிப்படையில் குர்ஆனை ஓதக் கற்ற அடிமை ஒருவர் சுதந்திரமான மக்களுக்கு இமாமத் செய்யலாம்.

3. விபரமறிந்த சிறுவர்.
விபரமறிந்த சிறுவரும் தொழுகை நடத்தலாம். இதனை ஆறு அல்லது ஏழு வயது சிறுவரை இமாமாக நியமித்ததாக வந்துள்ள ஹதீஸ் மூலம் அறியலாம்.

4. பாவம் செய்தவர்.
பாஸிக் – (பாவி) ஒருவர் இமாமாக இருந்தால் அவருக்குப் பின்னால் தொழுதால் தொழுகை கூடும். ஆனால், பாஸிக்கை இமாமாக நியமிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருவர் நியமிக்கப்பட்டால் வேறு இமாம் இல்லாதபட்சத்தில் பிரிவினையைத் தவிர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அவருக்குப் பின்னால் தொழ வேண்டும்.

ஹஜ்ஜாஜ் பின் யூசுபுக்குப் பின்னால் இப்னு உமர் போன்ற முக்கிய ஸஹாபாக்கள் தொழுதுள்ளார் கள். எனவே, பாவம் செய்யும் ஒருவர் இமாமாக நியமிக்கப் பட்டிருந்தால் அவருக்குப் பின்னாலும் தொழலாம்.

5. நிலமை அறியப்படாதவர்.
ஒருவரின் உண்மை நிலை என்ன என்பது தெரியாது அவருக்குப் பின்னால் தொழுவதற்கு முன்னர் அவர் யார்? எவர் என்று தேடித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

நாம் ஒரு பள்ளிக்குச் செல்கின்றோம். அங்கு ஒருவர் தொழுகை நடத்துகின்றார். அவரின் உண்மை நிலையை அறிய வேண்டிய அவசியம் இல்லை. அவருக்குப் பின்னால் நின்று தொழலாம்.

ஒருவர் இமாமத் செய்கின்றார். நாம் அவருக்குப் பின்னால் தொழுதுவிட்டோம். அவர் ஒரு காதியானியாக இருந்துவிட்டால் இந்நிலையில் எமது தொழுகை செல்லுமா என்றால் செல்லும் என்பதே சரியானதாகும். அவர் காதியானி என்பது தொழுதவுடன் தெரிந்தால் அந்தத் தொழுகையை மீட்டித் தொழுவதுதான் சிறந்ததாகும்.

6. இணை வைப்பவரின் இமாமத்.
ஒருவர் இணை வைப்பவராக, குப்ரான செய்கையுடையவராக இருந்தால் அவர் இமாமத் திற்குத் தகுதியற்றவராவார். தெளிவான ஷிர்க்கைச் செய்பவர் என்பது உறுதியாகத் தெரிந்தால் அவருக்குப் பின்னால் தொழக் கூடாது.

7. பெண்ணிண் இமாமத்.
பெண் பெண்ணுக்கு இமாமத் செய்யலாம். பெண் ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியாது.

நபி(ச) அவர்கள் காலத்தில் பெண் ஆண்களுக்குத் தொழுகை நடத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை. பெண்களின் தொழுகை வரிசை ஆண்களுக்குப் பிந்தியதாகவே இருந்துள்ளது. எனவே, பெண் ஆணுக்கு இமாமத் செய்ய முடியாது.

தொடரும்…
இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.