சிறுவர்களும் உளச்சோர்வும்

தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெறாத போது, நோய்க் கிருமிகளின் தாக்கத்தின் போது உடல் பலவீனப்படுகின்றது. இவ்வாறே உள்ளத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகள், இழப்புக்கள் இடம் பெறும் போது உள்ளம் சோர்ந்து போகின்றது.

இந்த உளச் சோர்வு என்பது பெரியவர்களிடம் ஏற்பட்டால் கூட ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் சிறுவர்கள் இந்நிலைக்கு ஆளானால் பாதிப்பு பெரிதாகிவிடும். நீண்ட கால மனச் சிக்கல்களுக்கும் நடத்தை மாற்றங்களுக்கும் அது வழிவகுக்கும். இந்த வகையில் குழந்தைகளிடம் மனப் பாதிப்பையும் உளச் சோர்வையும் ஏற்படுத்தும் காரண்ங்கள் சிலவற்றை இந்தக் கட்டுரையின் மூலம் இனம் காட்ட விரும்புகின்றேன்.
குழந்தைகளை மலர்களுக்கு ஒப்பிடுவார்கள். அவர்கள் எப்போதும் மலர்ந்த முகத்துடன் காட்சி தருவதால் இந்த ஒப்பீடு! குழந்தைகளை வண்டுகள் என்றும் சிட்டுக் குருவிகள் என்றும் கூட கூறுவர். ஓய்வில்லாமல் இவர்கள் இயங்கிக் கொண்டிருப்பதால் இந்த ஒப்பீடு!
உடல் ரீதியான எந்த நோயும் இல்லாத குழந்தைகளின் முகத்தில் சோகம் அப்பியிருக்கின்றதென்றால் அவர்கள் இயங்காமல் சோம்பிக் கிடக்கின்றார்கள் என்றால், கூட்டாக இயங்க விரும்பாமல் தனித்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள் உள ரீதியாகப் பாதிக்கப் பட்டிருக்கின்றார்கள். அவர்களது உள்ளம் புன்பட்டிருக்கின்றது என்பது அர்த்தமாகும். இதற்கான காரணம் கண்டறியப்பட்டு களையப்படாவிட்டால் காலப் போக்கில் அவர்களின் நடத்தை, பழக்கவழக்கம் அனைத்திலும் பாரிய வீழ்ச்சி ஏற்படலாம். எனவே, குழந்தைகளிடம் இவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளை முதலில் கண்டறிய வேண்டும்.
01. பிரிவு:
குழந்தைகளிடம் நெருங்கி வாழ்ந்தவர்களின் பிரிவு குழந்தைகளின் உள்ளத்தை வாட்டி வதைக்கும். சூரியன் மறையும் போது சூரியகாந்தி வாடுவது போல் பிரிவுகளின் போது குழந்தைகளின் மனம் வாடுகின்றது, வதங்குகின்றது. நெருங்கிப் பழகியவர்கள், உறவினர்கள், நண்பர்களின் பிரிவுகள் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் பிரிவுகள் பல காரணங்களால் ஏற்படுகின்றது.

அ) மரணம்:
தாய், தந்தை, பாட்டி போன்றோரின் மரணத்தால் இளம் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. இருப்பினும் இந்த இழப்பைக் குறைக்குமுகமாக சூழவுள்ளவர்கள் அன்பு காட்டி அரவணைத்தால், சூழலை சற்று மாற்றினால் வெகு விரைவில் இந்த இழப்பினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு விடுவர். இந்த சந்தர்ப்பங்களில் இறந்தவர்களைப் பற்றி குழந்தைகளின் முன்னிலையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அவர் இல்லாவிட்டாலும் நமக்கு பக்க பலமாக உறவினர்கள் உண்டு என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதத்தில் சூழ இருப்பவர்கள் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

இதையெல்லாம் பெரியவர்கள் அறிந்திருந்தாலும் பிள்ளையின் முன்னால் இருந்து கொண்டே இறந்தவரின் மரணம், அதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளை வீட்டுக்கு வருபவர்களோடு பேசுகின்றனர். இடையிடையே வந்தாலும் “இதுண்ட உம்மா மௌத்தாகி எத்தன வருஷம்! அப்ப இவ நல்லா சிருசில்லையா?” என்று கவலையைக் கிண்டிக் கிளறிவிட்டுச் செல்கின்றனர்.
பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் தப்புத் தவறு செய்கின்ற போது அவர்களை வளர்ப்பவர்களே, “தாயைத் திண்டது… தந்தையைத் திண்டது… போகும் போது இதையும் கட்டிக் கொண்டு போயிருந்தா நிம்மதியா இருந்திருப்போம்” என்றெல்லாம் பேசி குழந்தையின் மனதை ரணப்படுத்துகின்றனர். கீறிக் கிழிக்கின்றனர். இவர்கள் இதயமே இல்லாதவர்கள். இது போன்ற பேச்சுக்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் வீட்டை விட்டும் ஓடுதல், தீய நட்புக் கொள்ளுதல், போதைக்கு அடிமையாதல், தற்கொலைக்கு முயற்சித்தல் போன்ற பாதிப்புக்களுக்குள்ளாகின்றனர்.
ஆ) தாய்-தந்தை தகராறு:
தாய்-தந்தையர் தொடர்ந்தும் தகராறு செய்து கொண்டிருந்தால் அது குழந்தைகளிடம் மனச் சோர்வை ஏற்படுத்தும். நன்றாக சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் தமக்கிடையே சண்டை செய்யும் போது சோர்ந்து போய் அமைதியாக ஓரிடத்தில் அமந்து விடுவதைக் காணலாம். எனவே, பெற்றோரின் சண்டைகள் பிள்கைளிடம் மனப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பெற்றோரைப் பிரிவதும் குழந்தைகளின் மனதைப் பெரிதும் பாதிக்கின்றது. பெற்றோரைப் பிரிதல் என்பது பல காரணங்களால் நடக்கின்றது.
இ) விவாகரத்து: தாய்-தந்தையர் தமக்கிடையே உள்ள முரண்பாடு காரணமாக விவாகரத்து செய்து கொள்கின்றனர். இதன் போது பிள்கைள் தாய் அல்லது தந்தையிடம் இருக்கும் நிலை ஏற்படுகின்றது. சில போது தாயிடம் சில குழந்தைகளும் தந்தையிடம் சில குழந்தைகளும் இருக்க நேரிடுகின்றது. இதன் போது ஒரு குழந்தை தனது தாயை அல்லது தந்தையை இழக்கின்றது. உடன்பிறந்த உறவுகள், பாட்டன்-பாட்டி என்கின்ற பல உறவுகளையும் இழக்க நேரிடுகின்றது. பெற்றோர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டிற்றாக இந்தப் பிஞ்சுகளை எதற்காக வாட்டி வதைக்க வேண்டும்? இதில் மற்றுமொரு கொடுமையும் நடக்கின்றது.
பிள்ளை தாயிடம் இருக்கின்றது. தந்தை பிள்ளையைப் பார்க்க விரும்புகின்றான் அல்லது பிள்ளை தந்தையைப் பார்க்க விரும்புகின்றது. இந்த விருப்பத்திற்கு தாயும் தாயின் குடும்பத்தினரும் தடையாக இருக்கின்றார்கள். கணவன்-மனைவி உறவென்பது இடையில் வந்தது. இடையில் முறிவடையலாம். பெற்றோர்-பிள்ளை உறவென்பது இரத்தத்துடன் இரத்தமாகக் கலந்த ஒன்றாகும். அதைப் பிரிக்க முடியாது. இந்த உறவுக்குத் தடையாக இருக்கலாமா? கணவன்-மனைவி இருவரும் கோபத்தில் பிரிந்துள்ளனர். பாசத்துடன் இருக்கும் பெற்றோர்-பிள்ளை உறவைப் பிரிக்கவோ அறுக்கவோ முடியுமா? பசுவையும் கன்றையும் பிரித்து தனித்தனியாக விற்பனை செய்வதைத் தடைசெய்த இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம் சமூகத்தில் இப்படியும் நடக்கலாமா? கணவன்-மனைவி இருவரும் பிரிந்தாலும் குழந்தைகளின் இரத்த உறவுக்குத் தடை விதிக்கக் கூடாது என்கின்ற அடிப்படையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து பிள்ளைகளுக்காக ஒரு சில பிரச்சினைகளைச் சமாளித்துக் கொண்டு சேர்ந்து வாழும் பக்குவத்தைப் பெற்றோர்கள் பெற வேண்டும். பெற்றோர்கள் பிரிவதால் பிள்ளைகள் பெரிதும் நொந்து போய்விடுகின்றனர்.
ஒரு முறை எனது மனைவியும் மகளும் பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்தனர். எனது மகன் வந்து உம்மா எங்கே என்று கேட்டான். நான் சற்று நடிப்புடன் உம்மா சண்டை பிடித்துக் கொண்டு உம்மம்மா வீட்டுக்குப் போய்விட்டா! நீங்க என்னுடன் இருங்க! நான் உங்கள நல்ல முறையில் பாத்துக்கிறன்! கடையில சாப்பாடு வாங்கித் தாரன் என்று கூறினேன். மகன் கதிரையில் படுத்துக் கொண்டு கண்கள் கலங்கிய நிலையில் இருந்தான். அவனைக் கண்டதும் உண்மையைச் சொல்ல நினைத்தாலும் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பதால் சும்மா இருந்தேன். சற்று நேரத்தின் பின் தாத்தா எங்கே! என்று கேட்டான். தாத்தா என்னோட இருக்க ஏலாதுன்னு உம்மாவோட போயிட்டா! அது போகட்டும் நான் உங்கள பாத்துக்கிறேன் என்றேன். அவனது கண்களிலிருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
நான் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் போது எனது மனைவியும் மகளும் வருகின்றார்கள். மனைவி நடந்து வர மகள் ஓடி வந்ததால் அவள் கொஞ்சம் முந்தி வந்து விடுகின்றாள். அவளது சத்தம் கேட்டதும் தாத்தா என சத்தம் போட்டு அழுதுகொண்டே மகன் ஓடினான். உம்மா எங்கே என்று கேட்டான். உம்மா வருகிறார். நாம் இங்குதான் சென்றோம் என்று மகள் கூறியதும் அவனுக்கு வந்த கோபத்தில் “ஏன்டா நாயே பொய் சொன்னாய்?” என முதுகில் உதைந்தான். பெற்றோர்கள் பிரிவதால் குழந்தைகள் எவ்வளவு வேதனைப் படுகின்றார்கள் என்பதை அவனது ஏச்சும் அந்த உதையும் எனக்கு உணர்த்தியது. எனவே, முடிந்த வரை மண முறிவுகளைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாவிட்டால் குழந்தைகளின் உறவுகளுக்கு அதைத் தடையாக ஆக்கக் கூடாது.
ஈ) வெளிநாட்டுப் பயணங்கள்: பெற்றோர்கள் வெளிநாடு செல்வதால் சில பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். ஒரு தந்தை வெளிநாட்டில் இருந்து வருகின்றார். அவரது மகனின் துச்சனம் அதிகரிக்கின்றது. என்னென்னமோ செய்கின்றார். அவனை உளவியல் ஆய்வுக்கு உட்படுத்திய போதுதான் இப்படியெல்லாம் பெரிய சேட்டை செய்தால்தான் தாயால் மட்டும் இவனைக் கட்டுப்படுத்த முடியாது. நானும் வீட்டில் இருக்க வேண்டும் என நினைத்து எனது தந்தை வெளிநாடு செல்லாமல் வீட்டில் இருப்பார் என்ற எண்ணம் அவனது ஆழ்மனதில் பதிந்துள்ளது. அதுதான் அவன் ஷைத்தான் ஆட்டம் போட்டுள்ளான் என்பது தெரிய வந்தது. இப்படி பெற்றோரின் பிரிவால் மனம் வெந்து வெதும்பி வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதை அல்லாஹ்தான் அறிவான்.
தந்தையின் பிரிவை விட தாயின் பிரிவு ஆபத்தானதாகும். இன்று பல தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் வெளியில் செல்கின்றனர். அவர்களின் பிள்ளைகளைப் பாட்டியிடம் அல்லது சகோதரிகளிடம் பாதுகாப்புக்காக விட்டுச் செல்கின்றர். சிலர் இக்குழந்தைகளை அன்புடன் வழிநடாத்துகின்றனர் என்பது உண்மைதான். இருப்பினும் தாயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மற்றும் சில இடங்களில் சோற்றை மட்டும் கொடுக்கின்றனர். பிள்ளைகள் தப்புத் தவறு செய்கின்ற போது கடுமையாகத் தாக்குகின்றனர். காலப்போக்கில் பிள்ளைகளின் பெயரில் அவர்கள் உழைக்கக் கற்றுக் கொள்கின்றனர். வெறுமனே எப்போது காசு வரும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கின்றனர்.
ஒரு தாய் வெளிநாடு செல்கின்றாள். விமான நிலையத்தில் அவளை உள்ளே அனுப்பி விட்டு பூங்காவில் விளையாடுகின்றனர். வீடு செல்ல ஆயத்தமாகும் போதுதான் 5-6 வயது பெண் பிள்ளைக்கு தாய் இல்லை என்பது புரிகின்றது. “உம்மா!… உம்மா!” எனக் கத்துகின்றது. சமாளித்துப் பார்க்கின்றனர். முடியாத போது அடித்தடித்து வாகனத்திற்கு ஏற்றுகின்றனர். தாய் விமானம் ஏறும் முன்னறே அவளது உடம்பில் அடி ஏறிவிடுகின்றது. இப்படி எத்தனை கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை அல்லாஹ் தான் அறிவான்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குழநதைகளைப் பிரிவதை குறிப்பாக, சின்னக் குழந்தைகளைப் பிரிவதை அவசியம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு வளரும் பிள்ளைகள் ஒழுக்க ரீதியில் பாரிய பின்னடைவை அடைகின்றனர். தவறான நடத்தை, கல்வியை இடை நடுவில் விடுதல், காதல் திருமணம், வீட்டை விட்டும் ஓடுதல், திருட்டு… போன்ற இன்னும் பல குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் பராயத்தினர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருப்பதை அறியலாம். எனவே, பொருளாதாரத்திற்காக எமது குழந்தைச் செல்வங்களை இழந்துவிடக் கூடாது என்பதில் பெற்றோர்கள் பெரிதும் கவனம் செலுத்த வேண்டும்.
தாய் வெளிநாட்டில் இருக்கும் போது சில சின்னஞ் சிறுசுகள் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாகின்றனர். சில போது தந்தை, மாமன் போன்ற நெருங்கிய உறவினர்களே இந்த ஈனச் செயலில் ஈடுபடுகின்றனர். சிறுவர்கள் கூட தன்னினச் சேர்க்கைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவை பிள்ளைகளிடம் பெரிய மாற்றங்களையும் நெறி பிறழ்வுகளையும் உண்டாக்கும்.
உ) கல்விக்காகப் பிரிதல்: சில பெற்றோர்கள் தமது பிள்ளைக் பெரிய கல்லூரிகளில் கற்கின்றனர் எனக் கூறிக் கொள்வதில் பெருமை கொள்கின்றனர். அதற்காக தமது பிள்ளைகளைப் பெரும் பெரும் கல்லூரிகளில் தங்கிப் படிக்க வைக்கின்றனர். சுய விருப்பமில்லாமல் பெற்றோர்களைப் பிரிந்து கற்கும் மாணவர்கள் மனச் சோர்வுக்கு உள்ளாகின்றனர். அத்துடன் அவர்களது கல்வி அபிவிருத்தியும் குன்றிவிடுகின்றது. ஈற்றில் இடை நடுவில் கல்வியை நிறுத்திவிடும் நிலையும் ஏற்பட்டுவிடுகின்றது. எனவே, பெருமைக்கு மாவு இடிப்பது போன்று பெற்றோர்கள் நடந்து கொள்ளக் கூடாது. பிள்ளைகள் தாமாக விரும்பினாலே தவிர அவர்கள் பிரிந்து சென்று படிக்கும் நிலையை ஏற்படுத்தலாகாது!
ஊ) இடம் மாறுதல்: குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாகவோ அல்லது தொழில் ரீதியான காரணங்களினாலோ இருக்கும் இடத்தை விட்டு விட்டு வேறோர் இடம் மாறும் நிலை ஏற்படுகின்றது. பழகிய இடத்தையும், பழக்கப்பட்ட சூழலையும், பழகிய நண்பர்களையும் பிரிவதால் குழந்தைகள் பெரிதும் உளச் சோர்வுக்கு உள்ளாகின்றனர். இதனால் பெரியவர்கள் கூட பாதிக்கப்பட்டாலும் இடம் மாறியதற்கான காரணத்தை அறிவதால் அவர்களால் அதை சகித்துக் கொள்ள முடிகின்றது. ஆனால் நாம் ஏன் இடம் மாறினோம் என்ற உண்மை தெரியாததால் பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறே பாடசாலை மாறும் போதும் பிள்ளைகள் பெரிதும் மனக் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். பழைய நண்பர்களை இழப்பது, புதிய மாணவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பன அவர்களுக்கு மன உளைச்சலையும் அமைதியின்மையையும் ஏற்படுத்துகின்றது.
எனவே, இது போன்ற சந்தர்ப்பத்தில் பொற்றோர்களும் பெரியவர்களும் அவர்களைப் பெரிதும் அனுசரித்தே நடக்க வேண்டும். புதிய இடத்தில் ஈர்ப்பு ஏற்படும் விதத்தில் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும். பழைய நண்பர்களைப் பிரியும் சந்தர்ப்பங்களில் பெற்றோரின் நெருக்கம் அவர்களுக்கு மிக மிக அவசியமாகும்.
02 இழப்புக்கள்:
இழப்புக்கள் மனச் சோர்வை அதிகரிக்கும் இன்னொரு காரணமாகும். அதிலும் குறிப்பாக உள்ளம் கவர்ந்த ஒன்றை இழக்கும் போது பாதிப்பு பெரிதாக இருக்கும். காணியை இழந்ததற்காக, சொத்தை இழந்ததற்காக பிள்ளைகள் வாடி வதங்கமாட்டார்கள். அவர்களுக்கேயுரிய பொருட்கள், அவர்களுக்கு விருப்பமானதை இழக்கும் போது கவலைப்படுவர். அவர்கள் விரும்பும் விளையாட்டுப் பொருட்கள், அவர்கள் நேசிக்கும் உபகரணங்கள் என்பவற்றை இழக்கும் போது அதிர்வடைவர். சுனாமி பேரணர்த்தத்தின் போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய ஒரு சிறுமி தனது கையில் விளையாட்டு பொம்மையையும் எடுத்துச் சென்ற காட்சி அவர்கள் அவர்களது பொருட்களை எவ்வளவு நேசிக்கின்றனர் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இது போன்ற இழப்புக்களை சந்திக்கும் போது பெற்றோர்கள் அவர்களை அதட்டி அடக்க முற்படாமல் ஆறுதல் கூறி அரவணைக்க வேண்டும்.

03. தோல்விகள்:
குழந்தைப் பருவத்திலிருந்தே தோல்வியைத் தாங்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். இதற்கு விளையாட்டுக்கள் நல்ல பயிற்சியாகும். தோல்விகளின் போது மனம் துவண்டு போகின்றது. சில குழந்தைகள் தோல்விகளைத் தாங்கிக் கொள்ள முடியாத மனநிலையில் உள்ளனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டியதாகும். இல்லாத போது பாரிய மனச் சிக்கல்களைப் போகப் போக சந்திக்க நேரிடலாம்.

தோல்விகள் பல வகை. விளையாட்டில், பரீட்சையில், காதலில், வர்த்தகத்தில் எனத் தோல்விகள் தொடர்கதையாகின்றன. தோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுக்கள். அவை தடைக்கற்கள் அல்ல என்பதை உணர்த்த வேண்டும். ஆனால் சில பெற்றோர் தோல்விகளின் போது பிள்ளைகளைக் கேவலப்படுத்துகின்றனர்.
உன்னால் முடிந்தது அவ்வளவுதான். இனி உன்னை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்களை முடக்கிவிடப் பார்க்கின்றனர். பரீட்சையில் தோல்வியுறும் போது குறிப்பாக, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோல்வியுறும் போது பிள்ளையை விட தாய் தளர்ர்ந்துவிடுகின்றாள். விழுவது எழுவதற்கு என்பதைப் பெற்றோர்கள் முதலில் புரிந்து கொண்டு பிள்ளைகளை உற்சாகப் படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
04. உணர்வுகள் நசுக்கப்படுதல்:
சிறு பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்களது உணர்வுகள் நசுக்கப்பட்டால் அவர்கள் பெரிதும் மனச் சோர்வுக்கு உள்ளாகின்றனர். பிள்ளைகளின் விளையாட்டுக்கள் தவிர கேலிக்கூத்து இவற்றை மதிக்கத் தெரியாதவர்களாக சில பெற்றோர்கள் இருக்கின்றனர்.

சிலர் பிள்ளைகளுக்குரிய மரியாதையைக் கொடுக்காமல் அவர்களை மட்டரகமாகவே நடாத்துகின்றனர். அவர்கள் உரிய முறையில் மதிக்கப்படாவிட்டால் அவர்கள் பெரிதும் கூனிக் குறுகிவிடுகின்றனர். எனவே, பெற்றோர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள், மத்ரஸா ஆலிம்கள் அனைவரும் குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து மதித்து நடக்க வேண்டும்.
05. பாலியல் பாதிப்புக்கள்:
இள வயதில் மனித மிருகங்களின் பாலியல் வக்கிரமங்களுக்குள்ளாகும் குழந்தைகளும் மனச்சோர்வுக்கு உள்ளாகின்றனர். அதிலும் குறிப்பாக குடும்ப உறுப்பினர்களால் இத்தொல்லைக்குட்படும் போது இன்னும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிலபோது பெற்றோரே தம்மை அவர்களுக்குப் பலிக்கடாக்களாக ஆக்கும் போது இன்னும் நொந்து நூலாகிவிடுகின்றனர்.

ஒரு கவிதை கூறும் செய்தி பின் வருமாறு அமைந்துள்ளது. ஒரு பாட்டன், பேத்தி, தாய், தாயோ தன் மகள் தன் தந்தையைக் கவனிக்க வேண்டும் என்று விரும்புகின்றாள். தனது தந்தைக்கு தேனீர் கொடுத்தல், வேறு உதவிகளைச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றாள். ஆனால் தாய் வேலைக்கு அனுப்பும் பேதெல்லாம் மகள் அலுத்துக் கொள்கின்றாள். மகள் தனது பாட்டனை சோம்பல் காரணமாகக் கவனிக்க மறுப்பதாக தாய் நினைக்கின்றாள். ஆனால் பாட்டன் அங்கே இங்கே என்று தொட்டுத் தொட்டு சில்மிஷம் செய்வதால்தான் பேத்தி தனியாகச் சென்று உதவத் தயங்குகின்றாள்.
இந்த நிலையில் இருக்கும் பெண் பிள்ளையின் மனது எவ்வளவு சஞ்சலப்படும் என்பதை எண்ணிப் பாருங்கள். பெண் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி ஆண் பிள்ளைகளுக்கும் பாலியல் நெருக்கடிகள் இருக்கின்றன. பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் உலகில் என்ன நடக்கின்றது என்பதை ஓரளவு புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகள் ஏதாவது ஒரு விடயத்தில் அடம்பிடித்தால் பிள்ளைகளை அதட்டித் தண்டித்து காரியம் சாதிக்கப் பார்க்காமல் பிண்ணனிக்கான காரணங்கள் யாது? என்பதைக் கண்டறிய முயல வேண்டும்.
06. வன்முறைகள்:
குழந்தைகள் வன்முறைகளுக்கு உள்ளாகும் போது நொறுங்கிப் போகின்றனர். மலர்களைக் கசக்கி சாறாய்ப் பிழிந்துவிட முயல்கின்றனர் சில கல்நெஞ்சக்காரர்கள். பெற்ற பிள்ளைகளிடமே கர்ண கொடூரமாக நடந்து கொள்ளும் பெற்றோரும் உள்ளனர். கட்டி வைத்து அடித்தல், உணவு கொடுக்காமல் பட்டினி போடுதல், பச்சை மிளகாய் தீத்துதல், எறும்பை எடுத்து மேலில் போடுதல், சூடு வைத்தல்….. என பெற்றோரின் மிருகத்தனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறே தமது பொறுப்பில் வளரும் பிற பிள்ளைகளையும், தம்மிடம் கற்கும் மாணவர்களையும் கொடூரமாகத் தண்டித்து அவர்களது உள வளர்ச்சியைக் கெடுக்கக் கூடியவர்கள் பலர் உள்ளனர். இத்தகைய குழந்தைகளும் வன்முறையாளர்களாகவே வளர்ந்து வருகின்றனர். இந்த நிலையிலிருந்து குழந்தைகளைக் காப்பது அனைவரினதும் கடமையாகும்.
குழந்தைகளிடம் சிறுபிராயத்திலேயே மரணம், மறுமை, கழாகத்ர் (விதி) பற்றிய அறிவைக் கொடுப்பது பல பிரச்சினைகளிலிருந்தும் அவர்கள் தம்மைக் காத்துக் கொள்ளக் கூடிய மனோ திடத்தைக் கொடுக்கும். இன்றைய இளம் சிறார்கள்தான் நாளைய தலைவர்கள். நாளைய தலைவர்களை இன்றே தளர்வடையச் செய்துவிடுவது மாபெரும் சமூக துரோகமாகும். எனவே, குழந்தைகளுக்கு நாமாக ஏற்படுத்தும் மனச் சோர்வுக்கான காரணங்களைக் கட்டாயம் களைந்தேயாக வேண்டும்.
அவர்களது உடல் விடயத்தில் கவனம் செலுத்துவதை விட அதிகமாக அவர்களது உள்ளம் விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அவர்களை உற்சாகமிக்கவர்களாகவும் உறுதிமிக்கவர்களாகவும் வளர்த்தெடுப்பதும், வார்த்தெடுப்பதும் பெற்றோர்களினதும், பெரியவர்களினதும் கட்டாயக் கடமையாகும்.
இந்தக் கடமைகளை உணர்ந்து செயற்பட அனைவரும் உறுதிபூணுவோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.