சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு

இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

மஸ்ஜித்களுக்கு எதிராகச் செயற்படுதல், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் சிக்கலை உண்டுபண்ணுதல் என இவர்களது தேசத் தூரோகச் செயல்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதை அண்மைய நிகழ்வுகள் மூலம் நாம் அறியமுடிகின்றது.
இந்த நாட்டின் எதிர்க்கட்சியினரும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பேசி சிங்கள இனவாத சக்திகளைக் கவரும் மனநிலைக்கு மாறியுள்ளனர். இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் முஸ்லிம்கள் விரும்பாத இன்னும் சில கருத்துக்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிய பேச்சுக்கள் இதனையே உணர்த்துகின்றன. எனவே, இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக முஸ்லிம் சமூகம் ஓரணியில் திரண்டு நல்லெண்ணம் வளர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னனி அரசாகங்கத்தின் அமைச்சருமான பாடலீ சம்பிக ரணவக்க எழுதியுள்ள “அல் ஜிஹாத், அல் கைதா இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் கடந்த காலம், தற்காலம், எதிர்காலம்” என்ற நூலில் பெரும் சரித்திரப் புரட்டைச் செய்துள்ளார்.
“வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களது சொத்துக்களை புலிகள் கைப்பற்றிக் கொண்டது போல் தப்பி வந்த அந்த முஸ்லிம்கள் புத்தளத்திலும் கல்பிட்டியிலும் உள்ள சிங்களவர்களது சொத்து, செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள். (பக்கம் 278)”
இப்படி ஒரு அண்டப்புழுகை தனது நூலில் அமைச்சர் என்ற உயர் அந்தஸ்தில் இருந்து கொண்டு பதிவு செய்துள்ளார். புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் உண்ண உணவில்லாது அடுத்தகட்ட வாழ்க்கைக்கே வழிதெரியாமல் வந்தவர்கள். எப்படி சிங்கள மக்களது சொத்துக்களை அபகரித்தார்கள்? புலிகள் ஆயுத முனையில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல் சிங்கள மக்களை முஸ்லிம்கள் எதைக் கொண்டு வெளியேற்றினார்கள்? புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை உலகமே அறியும்! சிங்கள மக்களது சொத்துக்களை முஸ்லிம்கள் அபகரித்தார்கள் என்று இவர் மட்டும்தான் சொல்கின்றார். அப்படி முஸ்லிம்கள் அபகரித்திருந்தால் சிங்களவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? பிரச்சினை வந்திருக்காதா? குறைந்த பட்சம் பொலீஸிலாவது முறைப்பாடு செய்யாமல் இருந்திருப்பார்களா? நமது கண்ணுக்கு முன்னால் நடந்த உண்மை நிகழ்வுகள் குறித்தே இப்படி பொய்யை அவிழ்துவிட்டவர் கடந்த காலம், எதிர்காலம் பற்றிப் பேசினால் எவ்வளவு பெரிய பொய்களையும், கற்பனைகளையும் வெளியிடுவார் என்பதை எவரும் எளிதாக யூகிக்கலாம்.
புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை ஒத்துக்கொள்ளும் இவர், புலிகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் தொடர்பிருந்ததாக சித்தரிக்க முற்படுவது அடுத்த அண்டப்புழுகாகும்.
தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் புலிகளுடன் இணையாமல் நாட்டுக்கு விசுவாசமாகவே நடந்து கொண்டனர். முஸ்லிம்கள் புலிகளுக்கு உதவாத காரணத்தினால்தான் வடக்கிலிந்து முழுமையாக விரட்டப்பட்டார்கள். இந்தத் தியாகத்தை சம்பிக்கவோ, அவர் சார்ந்த அமைப்பினரோ இந்த நாட்டுக்காக செய்திருப்பார்களா?
புலிகள் கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற முற்பட்டனர். அதற்காக காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை என முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கடத்தல், கப்பம் கோரல், கொலை செய்தல் என எல்லா இன்னல்களையும் தாங்கிக் கொண்டு கிழக்கிலேயே முஸ்லிம்கள் வாழ்ந்தனர். அன்று முஸ்லிம்கள் உயிருக்குப் பயந்து வெளியேறியிருந்தால் புலிகளின் தமிழ் ஈழக் கனவு நனவாகியிருக்கும். பிரபா-கருணா பிரிவும் தவிர்க்கப்பட்டிருக்கும். இன்று வடகிழக்கு தனி நாடாக மாறியிருக்கும். முஸ்லிம்களது உயிர்த் தியாகத்தால்தான் இன்று இது ஒன்றுபட்ட ஒரு தனி தேசமாக திகழ்கின்றது. இந்தத் தியாகத்தைச் செய்த முஸ்லிம்களைத்தான் புலிகளுடன் சேர்ந்தவர்கள் என்றும் தேசப் பற்றில்லாதவர்கள் என்றும் சம்பிக்க சாடி வருகின்றார்.
இந் நாட்டில் புலிகள் நடாத்திய முக்கியமான பல தாக்குதல் சம்பவங்களுக்குப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பலரும் துணை போயுள்ளனர். பணத்துக்காக பல முக்கிய அதிகாரிகளே புலிகளுக்கு உதவியுள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் இத்தகைய ஈனச் செயல்களில் ஈடுபட்டதில்லை. ஒரு கட்டத்தில் “சிங்கள கொட்டியா” (சிங்களப் புலிகள்) என்ற சொல் பயன்படுத்தப்படும் அளவுக்கு சிங்கள மக்கள் சிலரது உதவி புலிகளுக்குக் கிடைத்துள்ளது. இப்படியிருக்க முஸ்லிம்களுக்குப் புலிகளுடன் தொடர்பிருந்ததாகவும் முஸ்லிம்கள் தேசத் துரோகிகள் என்றும் சம்பிக்க கூறுவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.
கடாபி இலங்கை வந்த போது இலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று பேசினாராம். கடாபி நாற்பது வருடம் ஆட்சி செய்த லிபியாவையே அவர் இஸ்லாமிய நாடாக மாற்றாத போது இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று அவர் எப்படிப் பேசுவார் என்றெல்லாம் யோசிக்காமல் சம்பிக்க போன்றவர்கள் கிணற்றுத் தவளைகள் போல் சிந்திப்பது கேள்விக்குறியாயுள்ளது.
முஹம்மத் இப்னு காஸிம் இந்தியா வந்த போது 5000 பிக்குகளைக் கொன்றார் என்றொரு தகவலையும் அவர் குறிப்பிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றுகின்றார். இந்தியாவை முஸ்லிம்கள் 800 வருடங்கள் ஆண்டுள்ளார்கள். இருந்தும் அங்கே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறவில்லை. இந்தியா வந்த முஹம்மத் இப்னு காஸிம் பிக்குகளைக் கொன்று குவித்திருந்தால் ஆலயங்களை அழித்திருந்தால் 800 வருடங்கள் இது நடந்திருந்தால் எச்ச சொச்சங்கள் கூட இல்லாத அளவுக்கு அங்கு சிலை வணக்கம் அழிக்கப்பட்டிருக்குமே! ஏன் அப்படி நடக்கவில்லை? என்று இந்த சிந்தனைச் சூனியங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
உண்மை என்னவென்றால், இந்தியாவை ஆண்ட முஸ்லிமல்லாத மன்னர்களை விட முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்திய மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டதால்தான் சிறு தொகையினராக இருந்த முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்களை 800 வருடங்கள் ஆள முடிந்தது. இல்லையென்றால் பிரிட்டிஷை விரட்டியதை விட வேகமாக முஸ்லிம் ஆட்சியாளர்களை இந்திய மக்கள் விரட்டியிருப்பார்கள். ஆயுத பலத்தை விட ஆள்பலமே மேலோங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்களது ஆட்சியை அவர்கள் அங்கீகரிக்கும் அளவுக்கு முஸ்லிம் மன்னர்கள் நாட்டு மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டனர் என்பதுதான் உண்மை வரலாறாகும்.
இஸ்லாம் பரவுவதற்கு காமமும் பணமும் தான் காரணம் என்று வக்கிர வார்த்தையால் தாக்கியுள்ளார் சம்பிக்க!
“சிலருக்கு அரபிகளது வியாபார மற்றும் காம கலாசாரத்துடன் இணைவதற்கு பாரம்பரிய பௌத்த மதம் தடையாக இருந்தது. உதாரணமாக மலாயாவின் அரசன் (1400 ஆம் வருடம்) பல மனைவியரை வைத்துக் கொண்டு காம சுமகம் பெற பௌத்தம் தடையாக இருந்ததனால் அவன் இஸ்லாத்திற்குள் சென்றான். இஸ்லாம் அப்பகுதிகளில் அப்படித்தான் பரவியது.” (பக்கம் 55)
இது அப்பட்டமான பொய் என்பதற்கு நடைமுறை உலகே சான்றாகும். சில பௌத்த துறவிகள் துறவி ஆடையை அணிந்து கொண்டே காம லீலைகளில் ஈடுபட்ட நிகழ்வுகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. இப்படியிருக்கும் போது ஒரு மன்னன் காமத்துக்காக மதத்தை மாற்ற வேண்டுமா? சம்பிக்க கூட பல பெண்களுடன் வாழ்க்கை நடாத்த விரும்பினால் சட்டபூர்வமாக திருமணம் செய்யாமல் எத்தனை பெண்களுடனும் வாழ எந்த நாட்டிலும் தடையில்லை. இதிலிருந்து இது இவரது கீழ்த்தரமான வக்கிர புத்தியால் எழுந்த கற்பனை என்பது வெள்ளிடை மழை.
இவர் சொல்வது உண்மையென்றால் இஸ்லாத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் பலதார மணம் புரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். அப்படியும் நடக்கவில்லை. இன்று ஐரோப்பாவில் வெகு வேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது. அங்கு காமத்துக்கு எந்தத் தடையும் இல்லை. ஆட்டம், பாட்டு, கூத்து, ஆபாசம் என்று அலைபவர்களைக் கூட இஸ்லாம் கவருகின்றது. அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்னர் பழைய காம வாழ்க்கை வாழ முடியாது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் வருகின்றார்கள்! இப்படியிருக்க சம்பிக்க கூறும் கூற்று எவ்வளவு பெரிய பொய்யென்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
காமத்தைக் காட்டி மதத்தைப் பரப்புவதென்றால் முஸ்லிம்களும் ஆண்-பெண் வேறுபாடின்றி அரைகுறை ஆடையுடன் கலந்து கொஞ்சிக் குலாவும் மதக் கிரியைகளையும் அங்கீகரித்திருப்பர். வேறெந்த மதத்திலும் கடைப்பிடிக்கப்படாத அளவுக்கு ஆண்-பெண் கலப்பில்லாத, கவர்ச்சியான ஆடையமைப்பில்லாத ஆட்டம், பாட்டு, கூத்து போன்றவற்றை அங்கீகரிக்காத சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பதை நடுநிலை மக்கள் சிந்தித்துப் பார்த்து இவரின் கோர முகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இவர் தனது நூலில் அரபு மத்ரஸாக்கள், குர்ஆன் மத்ரஸாக்களைக் கூட தீவிரவாதத்தின் மையங்களாகச் சித்தரித்துள்ளார். இத்தகைய கருத்துக்கள் இனங்களுக்கு மத்தியில் தப்பெண்ணங்களை வளர்ப்பதினாலும் எதிர்காலத்தில் இனக்கலவரங்களுக்குக் காரணமாக அமைவதாலும் இது போன்ற கருத்துக்களையுடைய நூற்களை அரசு தடைசெய்ய வேண்டும்.
தேசிய ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் சீர்குலைக்க எத்தணிக்கும் இத்தகைய தேசத் துரோகக் குற்றவாளிகள் மீது நீதித்துறை தமது கவனத்தைத் திருப்ப வேண்டும்.
இவரது இந்த சிந்தனையை உள்வாங்கிய ஒரு குழு முஸ்லிம்களது கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஒரு கலவரத்தை உண்டுபண்ண சதி செய்து வருகின்றது. கல்விக் கூடங்களில் கூட சில நெருக்கடிகளை முஸ்லிம் மாணவர்கள் சந்திக்கும் இக்கட்டான நிலையும் ஏற்பட்டு வருகின்றது.
எனவே, முஸ்லிம் சமூகப் புத்திஜீவிகள், அரசியல் தலைமைகள் இது குறித்து நிதானமான தூரநோக்குப் பார்வையுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.
சம்பிக்கவின் இது போன்ற கருத்துக்கள் ஐம்பது அல்லது நூறு வருடங்களின் பின் சரித்திரமாக மாறலாம். இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் கூட இந்நூல் இனக்கலவரங்களை உண்டுபண்ணும். எனவே, இக்கருத்துக்களுக்கான மறுப்புக்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இது போன்ற நூற்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்து அதையும் ஒரு பதிவாக்க வேண்டியுள்ளது. இராமர் கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற தவறான சரித்திரம்தான் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட அடித்தளமானது. இது போன்று எதிர்காலத்தில் இலங்கையில் பிரச்சினைகள் எழாமல் இருக்க மறுப்புக்களும் பதியப்பட வேண்டும். இது குறித்து முஸ்லிம் புத்திஜீவிகள் கவனம் செலுத்த வேண்டும் என பணிவாய் வேண்டிக் கொள்கின்றோம்…..
இவ்விடயத்தில் அனைத்துத் தரப்பினரையும் அல்லாஹ் ஒன்றிணைப்பானாக!

One comment

  1. //“சிலருக்கு அரபிகளது வியாபார மற்றும் காம கலாசாரத்துடன் இணைவதற்கு பாரம்பரிய பௌத்த மதம் தடையாக இருந்தது. உதாரணமாக மலாயாவின் அரசன் (1400 ஆம் வருடம்) பல மனைவியரை வைத்துக் கொண்டு காம சுமகம் பெற பௌத்தம் தடையாக இருந்ததனால் அவன் இஸ்லாத்திற்குள் சென்றான். இஸ்லாம் அப்பகுதிகளில் அப்படித்தான் பரவியது.” (பக்கம் 55)//
    அப்படியானால் அவன் இஸ்லாத்திற்கு மாறும் வரை அவனுக்கு பெளத்தம் போதித்தது காம சுகமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.