சந்தேகம் களைந்து சமூக நல்லிணக்கம் வளர்ப்போம்.

இலங்கை முஸ்லிம்கள் நெருக்கடி நிறைந்த சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு புறம் அரசியல் வாதிகளின் அரசியல் நலன்களுக்காக அவர்கள் நசுக்கப்படுகின்றனர். மறுபுறம் வியாபார நோக்கங்களுக்காக அவர்கள் நெருக்கப்படுகின்றனர். இன்னொரு புறம் இனவாத, மதவாத சக்திகளின் வன்முறைகளையும் வசைபாடல்களையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் இலங்கை மக்கள் மத்தியில் அவர்கள்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றனர்.

ஒரு நாடு இருந்தால் அதில் பல குற்றங்கள் புரிகின்றவர்கள் இருப்பார்கள். ஒரு இனத்தையோ மதத்தையோ சார்ந்தவர் குற்றம் செய்தால் அந்த இனத்தையோ மதத்தையோ தண்டிக்கவும் முடியாது, குற்றம் சுமத்தவும் முடியாது.

ஒரு சமூகம் சார்ந்தவர் தவறு செய்தால் அந்த சமூகம் சார்ந்தவர்களை பாதிக்கப்பட்டவரது சமூகம் அழிப்பதும், தண்டிப்பதும் நாடு உருப்படுவதற்கான வழியல்ல. குற்றம் செய்தவர்கள் தயவு-தாட்சன்னியமின்றி பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும். அத்தோடு தனிநபர் பிரச்சினைகள் சமூகப் பிரச்சினைகளாக எக்காரணம் கொண்டும் மாற்றப்படக் கூடாது.

கண்டி-திகன இன வன்முறை முடிந்த பின்னர் BBS ஞானசார தேரர், ‘அடித்தால் அடிப்போம், கொன்றால் கொல்வோம்’ என்று பேசினார். அடித்தால் அடிப்பது நியாயம்தான். ஆனால், ஒருவர் அடித்தால் அவரது சமூகத்தைச் சேர்ந்த, இந்த செயலைப் பிழையென்று கூறக் கூடிய, தவறில் எந்தப் பங்கும் வகிக்காத மக்களை அடிப்பதும் அவர்களது சொத்துக்களை அழிப்பதும் என்ன நியாயம்?

ஒரு மதகுரு அதுவும் அன்பையும் அகிம்சையையும் அதிகம் போதிக்கும் பௌத்த மதகுரு இப்படிப் பேசுவது நியாயமா? இதுதான் பௌத்த தர்மமா?

அமைச்சர் சம்பிக ரணவக்க இது தொடர்பில் பேசும் போது மீண்டும் பள்ளிகளில் அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாகவும் ஜிஹாத் பற்றியெல்லாம் பேசுகின்றார்கள் என்றும் பேசுகின்றார். இந்த நாட்டில் தொடராக 5-6 வருடங்களாக பள்ளிகள் தாக்கப்பட்டு வருகின்றன. வர்த்தக நிலையங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இது வரைக்கும் முஸ்லிம்கள் எங்காவது ஆயுதம் ஏந்திப் போராடினார்களா?

அடித்தால் அடிப்போம் என்று பேசும் ஞானசார தேரர் அவர்களே! இந்த சம்பவத்தில் 24 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. இதற்கு முன்னரும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்கள் பன்சலைகளைத் தாக்கியதனால்தான் பள்ளிகள் தாக்கப்பட்டனவா? ஏன் பெரும்பான்மை சமூகத்தைத் தவறான வழியில் அழைத்துச் செல்கின்றீர்கள்?

இதற்கு முன்னரும் இலங்கையில் பல தனிநபர் தகராறுகள் நடந்துள்ளன. ஆனால், அது இனவாதமாக உருவாகவில்லை. இன்று தனிநபர் தகராறுகள் இனவாதத் தாக்குதலை உருவாக்கும் என்ற நிலை உருவானதற்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம்கள் பற்றி மேற்படி மதகுரு மற்றும் அரசியல் தலைவர்கள், இனவாத சக்திகள் கட்டவிழ்த்துவிட்ட இனவாதக் கருத்துக்களும் கட்டுக் கதைகளுமேயாகும்.

எனவே, நாடு அமைதியான பாதையில் பயணிக்க இனவாத செயற்பாடுகள் தடை செய்யப்பட வேண்டும். இனவாதம் பேசுவோர் பாரபட்சமின்றி தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

முஸ்லிம்கள் பற்றி சொல்லப்பட்ட அவதூறுகளை மறுக்கும் பொறுப்பு அரசுக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் இருக்கின்றது.

கொத்து ரொட்டியில் ஆண்மை நீக்க மருந்து போடப்பட்டது என்பது அவதூறு என்பதை அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது போன்ற இனவாதக் கருத்துக்களை மறுக்கும் பொறுப்பு அரசுக்கும் இருக்கின்றது.

இவ்வாறே வியாபார போட்டி காரணமாக NO LIMIT ஆடைகளில் குழந்தை பெறுவதை தடுக்கும் மருந்து இருப்பதாகவும் முஸ்லிம் ஹோட்டல்களில் சிங்களவர்களுக்கு உணவு கொடுக்கும் போது மூன்று முறை துப்பிவிட்டுக் கொடுப்பதாகவும் இவ்வாறே முஸ்லிம் பள்ளிகள், பாடசாலைகள், நிறுவனங்கள் தொடர்பிலும் அவதூறுகள் கூறப்பட்ட போது நாம் உடனுக்குடன் அதை மறுத்து தர்க்க ரீதியான தகவல்களை நாம் பெரும்பான்மை இன மக்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். இதை நாம் செய்யத் தவறியதன் விளைவாக அவர்களுக்கு முஸ்லிம்கள் தொடர்பில் சந்தேகமும் சிலருக்கு வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.

அந்த வெறுப்பு அடுத்த சந்ததியிடம் இதை விட அதிகமாக செல்வாக்குச் செலுத்தும். காலப் போக்கில் பெரும்பான்மை சமூகத்தால் வெறுக்கப்படும் சமூகமாக நாம் மாறும் நிலை ஏற்பட்டுவிடும். அதற்கான வித்தே இப்போது விதைக்கப்படுகின்றது. மியன்மாரில் நடந்ததும் இதுதான்.

எனவே, காலம் கடந்துவிட்டாலும் இன்னும் இந்த நாட்டில் இந்த இனவாதக் கருத்துக்களால் முஸ்லிம்களை வெறுக்காத மக்கள், நடுநிலையாக சிந்திக்கும் மக்கள் இருக்கின்றனர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எம்மைப் பற்றிய தெளிவுகள் அடங்கிய சிறு சிறு காணொலிகள் தயாரித்து சமூக வலைத்தளங்களினூடாக அவற்றைப் பரப்பி பெரும்பான்மை சமூக மக்களின் மனதில் ஏற்படுத்தப்பட்டுள்ள சந்தேக நோயைக் களையும் அவசியம் உள்ளது.

அத்துடன் எம்மிடம் காணப்படும் இறுக்கமான சில தன்மைகள் மார்க்கம் வலியுறுத்தாத அதே வேளை, அடுத்த சமூகங்களை விட்டும் எங்களைத் தூரமாக்கும் செயற்பாடுகளை இனம் கண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை ஒழித்து வர வேண்டும்.

இவ்வாறே எமது சமய நடவடிக்கைகளால் அடுத்தவர்கள் கஷ்டப்படும் சந்தர்ப்பங்களை இனம் கண்டு அவற்றை ஒழுங்குபடுத்த முனைய வேண்டும்.

நாட்டுச் சட்ட திட்டங்கள் விடயங்களில் நாம் விடும் தவறுகளை உடன் நிறுத்த வேண்டும். உதாரணமாக| வெள்ளிக்கிழமை தினங்களில் போக்குவரத்து விதிகளை மீறுவது, ஜும்ஆ முடிந்த பின்னர் பாதை ஒழுங்குகளை மீறி அடுத்தவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவது என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அடுத்து, எமது இளைஞர்கள் சரியான ஒழுங்கு முறையில் நெறிப்படுத்தப்பட வேண்டும். சமூக நலனையும், நாட்டு நிலையையும் உணர்ந்து செயற்படும் பக்குவத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

இஸ்லாம் கூறும் நல்ல விடயங்களை முஸ்லிம்களாகிய நாம் முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுவதும் காலத்தின் கட்டாயத்தில் உள்ளது.

எனவே, நாம் இது போன்ற நல்ல மாற்றங்களை எம்மிடம் ஏற்படுத்தாது அன்னதானம் வழங்குவது, இப்தார் வழங்குவது, தன்சல் கொடுப்பது போன்ற செயற்பாடுகள் ஒரு நாளும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என்பதைப் புரிந்து செயற்பட கடமைப்பட்டுள்ளோம். சில வேளை, நாம் மார்க்க ரீதியில் தடம் புறளவும் இது வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

முதலில் நாம் எம்மைப் பற்றிய சந்தேகங்களை களைய முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சி நடந்து கொண்டிருக்கும் போதே நம்மை நாம் செப்பணிட்டு மாற்றிக் கொண்டு வர வேண்டும். இரண்டும் ஒரே முனையில் சந்திக்கும் போது ஏராளமான சந்தேகங்கள் களையப்பட்டு நல்லெண்ணம் உருவாகிவிடும். இந்த சூழலில் எமது ‘அஹ்லாக்’ – பண்பாடுகளால் அவர்களை நாம் ஈர்க்க முயல வேண்டும்.

இச்சூழலில் தமிழ்-முஸ்லிம் உறவில் விரிசலை உண்டாக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. எமது இளைஞர்கள் சிலரின் சமூக வலைத்தள செய்திகளும் இதற்கு உரமூட்டுவதாக அமைகின்றன. இரு இன மக்களுடனும் இணக்கமான வழியில் பயணிப்பதே எமது இருப்புக்கு ஏற்ற வழியாகும். இது குறித்து மார்க்க வழிமுறைகளுக்கு முரண்படாத விதத்தில் ஆழமாக ஆராய்ந்து மக்களை வழிநடத்துவது அரசியல் மற்றும் சமூக, சமயத் தலைவர்களின் பாரிய பொறுப்பும் கடமையுமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.