ஜும்ஆத் தொழுகை என்பது இரண்டு குத்பா உரைகளையும் இரண்டு ரக்அத்துத் தொழுகையையும் கொண்டது என்பதை முன்னரே குறிப்பிட்டோம். ஜும்ஆ தொழுகை நிறைவு பெற குத்பா என்பது ஷர்த்தாகும். நபி(ச) அவர்கள் தன் வாழ்நாளிலே எந்த ஜும்ஆத் தொழுகையையும் குத்பா இல்லாமல் நிகழ்த்தியதே இல்லை. அத்துடன்,
‘நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமை தினத்தில் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள். இன்னும், வியாபாரத்தையும் விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்து கொள்பவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.” (62:9)
இந்த வசனத்தில் குத்பாவின்பால் விரையுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இங்கு ‘திக்ர்’ என குத்பா உரைதான் கூறப்படுகின்றது. குத்பா உரையைச் செவிமடுப்பதற்காக விரைவது கட்டாயம் என்றால் குத்பா உரையும் கட்டாயமானது என்பதை அறியலாம்.
இந்த குத்பாவின் ஒழுங்குகள் குறித்து சுருக்கமாக நோக்குவோம்.
1. நின்ற நிலையில் நிகழ்த்துதல்:
குத்பா உரையை நின்ற நிலையில் நிகழ்த்துவது சுன்னத்தாகும். இரண்டு குத்பாவுக்கும் இடையில் ‘கதீப்’ சிறிது அமர்ந்து இரண்டையும் வேறுபடுத்த வேண்டும்.
“நபி(ச) அவர்கள் நின்ற நிலையில் குத்பா உரை நிகழ்த்துபவராக இருந்தார்கள். பின்னர் அமர்வார்கள். பின்னர் எழுந்து குத்பா உரை நிகழ்த்துவார்கள். நபி(ச) அவர்கள் அமர்ந்து கொண்டு குத்பா உரையை நிகழ்த்துவார்கள் என்று யாராவது கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார்…” என்று ஜாபிர் இப்னு ஸம்ரா(ர) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 862-35, அபூதாவூத்: 1093)
2. அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி மீது ஸலவாத்துக் கூறி குத்பாவை ஆரம்பித்தல்:
இது குத்பாவின் முஸ்தஹப்புகளில் ஒன்றாகும்.
“நபி(ச) அவர்கள் ஜும்ஆ தினத்தில் குத்பா நிகழ்த்தும் போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ர)
நூல்: (முஸ்லிம் 867-44)
நபி(ச) அவர்கள் உரை நிகழ்த்தும் போது ஷஹாதா மொழிந்து அல்லாஹ்வை அவன் தகுதிக்கு ஏற்ப புகழ்ந்துள்ளார்கள். (பார்க்க: புகாரி- 6636, 925)
3. குத்பதுல் ஹாஜா மூலம் துவங்குதல்:
குத்பாவை ஆரம்பிக்கும் போது அல்லாஹ் வைப் புகழ்ந்து நபியவர்கள் மீது ஸலவாத்துக் கூறி ஷஹாதா கூற வேண்டும்.
إنْ الْحَمْدُ لِلَّهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُه.ُ
இவ்வாறு ஹம்து ஸலவாத்து ஓதியதன் பின்னர் பின்வரும் மூன்று வசனங்களையும் ஓத வேண்டும்.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْن.َ
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி மரணித்து விடவேண்டாம். ” (3:102)
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا.
“மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவி லிருந்து படைத்த உங்கள் இரட்சகனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் அதிலிருந்து அதன் துணைவியைப் படைத்து, அவையிரண்டிலிருந்தும் அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். எவனைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்ற வரிடம் (உரிமைகளைக்) கேட்டுக் கொள்வீர்களோ அந்த அல்லாஹ்வையும் மேலும், இரத்த உறவுகளை(த் துண்டித்து நடப்பதை)யும் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்ப வனாக இருக்கின்றான்.” (4:1)
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ
يُّصْلِحْ لَـكُمْ اَعْمَالَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا.
“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும் நேர்மையான வார்த் தையையே கூறுங்கள்.”
“(அவ்வாறு செய்தால்) உங்கள் செயல்களை உங்களுக்கு அவன் சீராக்குவான். மேலும், உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படுகின்றாரோ நிச்சயமாக அவர் மகத்தான வெற்றியை ஈட்டிக் கொண்டார்.” (33:70-71)
நபி(ச) அவர்கள் ஹம்து ஸலவாத்தின் பின்னர் பின்வருமாறும் தமது குத்பா உரைகளில் கூறுவதுண்டு.
أَمَّا بَعْدُ، فَإِنَّ خَيْرَ الْأُمُورِ كِتَابُ اللَّهِ، وَخَيْرُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَة.ٌ
“காரியங்களில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறையில் சிறந்தது முஹம்மத் நபி(ச) அவர்களின் நேர் வழியாகும். காரியங்களில் கெட்டது நூதனங்களாகும். அனைத்து பித்அத்துக்களும் வழிகேடுகளாகும்” என்றும் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ர)
நூல்: முஸ்லிம் 867-43, இப்னு மாஜா-: 45, அஹ்மத்: 14984
(வேறு வேறு அமைப்பிலும் இதன் வாசகங்கள் வந்துள்ளன.)
இவற்றை குத்பாவின் ஆரம்பமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
4. உணர்வுபூர்வமாக குத்பாவை அமைத்தல்:
இன்றைய சில குத்பாக்கள் தாலாட்டுவது போன்று ஜும்ஆவுக்கு வந்தவர்களை உறங்க வைப்பதாக உள்ளன. நபி(ச) அவர்களது குத்பாக்கள் உணர்வுபூர்வமாகவும் உருக்கமாகவும் அமைந்திருக்கும்.
நபி(ச) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினால் அவர்களது கண்கள் சிவந்துவிடும். அவர்களது சப்தம் உயர்ந்துவிடும். தனது படையை எச்சரிக்கும் படைத் தளபதி போன்று அவரது கோபம் கூடிவிடும்…. என ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ர) அவர்கள் கூறுகின்றார்கள்.
நூல்: முஸ்லிம் 867-43, இப்னு மாஜா: 45, அபூதாவூத்: 4796
இந்த வகையில் குத்பாக்கள் தூக்கம் அளிப்பவைகளாக அல்லாமல் ஊக்கம் அளிப்பவைகளாக அமைவது அவசியமாகும். முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாஹ் தந்த சிறந்ததொரு ஊடகமாக ஜும்ஆவைப் பயன்படுத்த முடியும். எனவே, கதீப்கள் தமது குத்பாக்களை ஆக்கபூர்வமாக அமைத்துக் கொள்வது அவசியமாகும்.
சுருக்கமாக அமைத்தல்:
குத்பா உரைகள் சுருக்கமாக அமைதல் அவசியமாகும். மாநாடுகள் நடத்தும் போது உரைகளைக் கேட்பதற்கென மக்கள் நேரம் ஒதுக்கி வருகின்றார்கள். ஆனால், ஜும்ஆவுக்கு கடமை என்பதற்காக மக்கள் வருகின்றனர். அது நீண்ட உரைகளைக் கேட்கும் நேரமல்ல.
அரசு ஊழியர்கள் தமக்குக் கிடைக்கும் பகலுணவு நேரத்தில் தொழுகை முடிந்து, உண்டு விட்டு கடமைக்குச் செல்லும் நிர்ப்பந்தத்தில் இருப்பர். பயணிகள் தமது பணிகளை இடை நிறுத்திவிட்டு வந்திருப்பர். உணவகங்களை (ஹோட்டல்களை) மூடி விட்டு வந்தவர்கள் தொழுகை முடிந்து கடையைத் திறந்து பகலுணவு வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பர். குத்பாவுக்கு நேரத்துடன் வந்த வயோதிபர்கள், நோயாளிகள் இயற்கைத் தேவைகளை அடக்கிக் கொண்டு எப்படா குத்பா முடியும் என்ற ஏக்கத்தில் இருப்பர்.
இந்த நிர்க்கதி நிலையில் சில கதீப்கள் நேரம் அறியாமல் ஒரு மணித்தியாலம், ஒன்னேகால் மணித்தியாலம் என்று குத்பாவை நீட்டிக் கொண்டு செல்வர். அதுவும் குத்பாவில் விஷயமும் இருக்காது. அந்தக் குத்பாவுக்கு தலைப்பும் இட முடியாது. நிறையவே ஒத்த கருத்துச் சொற்களை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பர். நேரம் போதாது என்ற நிலை இருந்தாலும் குர்ஆன் வசனங்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்களையும் கூட இராகமிட்டு நீட்டி நிதானித்து ஓதிக் கொண்டிருப்பார்கள்.
இது போன்ற பெயற்பாடுகளால் மக்கள் குத்பா மீது வெறுப்புக் கொள்கின்றனர். சிலர் கடைசி நேரத்தில் கலந்து கொள்வோம் என்ற தோரணையில் செயற்படுகின்றனர். இது மக்களை சலிப்படையச் செய்துள்ளது. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
“அம்மார் எமக்கு குத்பா உரை நிகழ்த்தினார். அது சுருக்கமாகவும் அழகாகவும் அமைந்தது. அவர் குத்பா முடிந்து இறங்கிய பின் இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாமே என்று கேட்ட போது, ‘தொழுகை நீளமாகவும் குத்பா சுருக்கமாகவும் இருப்பது ஒரு மனிதனின் மார்க்க விளக்கத்தின் அடையாளம்” என நபி(ச) அவர்கள் கூற நான் கேட்டேன். எனவே, தொழுகையை நீட்டுங்கள், குத்பாவை சுருக்குங்கள். எனெனில், பேச்சில் சூனியம் உண்டு’” என அம்மார் கூறினார்.
அறிவிப்பர்: வாஸிர் இப்னு ஹையான்(ர)
நூல்: முஸ்லிம் 869-47, தாரமீ: 1597, அஹ்மத்:18317
எனவே, குத்பா சுருக்கமாக இருக்க வேண்டும். சுருக்கம் என்றால் எந்த அளவு என்று சரியாக மட்டிட முடியாது.
“நபி(ச) அவர்கள் வெள்ளிக்கிழமை உரையை நீட்டமாட்டார். அது சுருக்கமான சில வார்த்தைகளாகவே அமைந்திருக்கும்” என ஜாபிர் இப்னு ஸமூரா(ர) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(நூல்: அபூதாவூத் 1107, அஹ்மத்: 20846)
இந்த அறிவிப்பு ஸஹீஹானது என அல்பானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
“நபி(ச) அவர்கள் வாய் வழியாகவே நான் சூறா ‘கஃப்’ ஐ மனனமிட்டேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதன் மூலம் அவர்கள் குத்பா நிகழ்த்துவார்கள்” என பின்த் ஹாரிதா கூறுகின்றார்.
(நூல்: முஸ்லிம்: 873-51, அபூதாவூத்: 1100)
சூறா கஃப் அல்குர்ஆனின் 50வது அத்தியாயமாகும். இது 60 வசனங்களைக் கொண்டது. இந்த சூறாவை திருத்தமாக ஓதுவதென்றால் சுமார் 15 நிமிடங்கள் எடுக்கலாம். அதே வேளை குத்பதுல் ஹாஜா ஓதுவதற்கு 5 நிமிடம் எடுக்கலாம். இந்த அறிவிப்பில் சூறா கஃபை ஓதுவார்கள் என்று கூறாமல் கஃப் மூலம் குத்பா நிகழ்த்துவார்கள் என்று கூறப்படுவதன் மூலம் அதை வைத்து வேறு தகவல்களும் கூறியிருக்கலாம். சாதாரணமாக 30-35 நிமிடங்களுக்குள் குத்பா அமைவது நல்லதாகும்.
அல்குர்ஆனின் சில ஆயத்துக்களை ஓதுதல்:
நபி(ச) அவர்கள் சில வேளை ஒரு முழுச் சூறாவையே மிம்பரில் ஓதியுள்ளார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குத்பா உரையில் சில ஆயத்துக்களையாவது ஓத வேண்டும்.
நபி(ச) அவர்களது குத்பா பற்றி ஜாபிர் இப்னு ஸமூரா(ர) அவர்கள் குறிப்பிடும் போது, “…. மிம்பர் மீதிலிருந்து சில ஆயத்துக்களை ஓதுவார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: அஹ்மத்: 20878) இது ஸஹீஹ் லிஹைரி தரத்தை உடையதாகும்.)
யஃலா(ர) அறிவித்தார்: “நபி(ச) அவர்கள் மிம்பரின் மீது நின்ற வண்ணம், (குற்றவாளிகள் நரகத்தின் காவலரை நோக்கி) ‘யா மாலிக்’ – (’மாலிக்கே!’) என்று அழைப்பார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 43:77 ஆம்) வசனத்தை ஓதுவதைக் கேட்டிருக்கிறேன். ” (புகாரி: 3266)
எனவே, மிம்பரில் சில குர்ஆன் வசனங்களையாவது ஓதுதல் வேண்டும்.
மிம்பர் மேடைகளை இயக்க மோதல்களுக்கும், இயக்க விமர்சனங்களுக்கும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட கோபதாபங்களைத் தீர்ப்பதற்கும் மிம்பர் பயன்படுத்தப்படக் கூடாது. அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று பள்ளிக்கு வந்தவர்களை எமது சொந்த இலாப நஷ்டத்திற்குப் பயன்படுத்தலாகாது. குத்பா உரைகள் முறையாக நெறிப்படுத்தப்பட்டு அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமாக அமையப் பெற்றால் சமூகத்தில் நல்ல மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் காணலாம். சாதாரண உரைகளை விட ஜும்ஆ உரைகள் அதிகம் செல்வாக்குச் செலுத்தக் கூடியதாகும்.