கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-1)

பல திக்குகளில் இருந்தும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம் உம்மத்துக்கும் சவால்கள் அம்பாக பாய்ந்துவரும் காலமிது. வேட்டைப் பொருளை நோக்கி வேட்டை மிருகங்கள் வேகமாகப் பாய்வது போல் பாயவும் முஸ்லிம் உம்மத்தைக் கடித்து குதறிப் போடவும் எதிரிகள் தருணம் பார்த்திருக்கும் நேரமிது.

இக்கட்டான இக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக, சண்டைகளாகப் பூதாகரமாக விஸ்வரூபமெடுத்துள்ளது ஆச்சரியமானதும் கவலைக்குரியதுமானதொரு நிகழ்வாகும்.
அந்நியன் எம்மை அழிக்கக் காத்திருக்க அதை எதிர்கொள்ளத் தயாராவதை விட்டு விட்டு எமக்கு நாமாக படுகுழி தோண்டிக் கொண்டிருக்கின்றோம். இந்தத் துர்ப்பாக்கிய நிலை நீங்கவேண்டும். கருத்து வேறுபாடுகளைக் களையும் வழிமுறையை குறித்தும், அதைக் கையாளும் விதம் குறித்தும், களைய முடியாத கருத்து வேறுபாடுகள் விடயத்தில் பிரிவினையாகவும் பிளவாகவும் மாறாத விதத்தில் செயற்படுவதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இவ்வாக்கம் எழுந்தது.
வேண்டாம் கருத்து வேறுபாடு
முஸ்லிம் உம்மத்துக்குள் கருத்து வேறுபாடுகள் வளர்க்கப்பட்டமைக்கு அடிப்படையான பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் அவற்றை தெளிவுபடுத்திவிட்டு கண்ணியத்துக்குரிய நான்கு இமாம்கள், மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு எழ நியாயமான காரணங்கள் பல இருந்தன. அவற்றை நோக்கலாம்.

(1) கருத்து வேறுபாட்டை பொதுவாகவே ஆகுமானது என சித்தரிக்க சிலர் முற்பட்டனர். தம்மிடம் உள்ள தவறான கருத்துக்களைத் திருத்திக் கொள்ளும் எண்ணம் இல்லாதவர்கள் இதையே பெரும் சாட்டாக வைத்து வேறுபாடுகளை நியாயப்படுத்தி வந்தனர்.
“எனது உம்மத்தில் உள்ள மார்க்க அறிஞர்கள் கருத்து முரண்பாடு கொள்வது எனது உம்மத்திற்கு அருளாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என கருத்து வேறுபாட்டின் வளர்ச்சிக்கு நல்ல பங்காற்றியுள்ளனர்.
அறிஞர் அல்பானி(ரஹ்) அவர்கள் இது அறிவிப்பாளர் தொடர் அற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தி எனக் குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறே இப்னு ஹஸ்ம்(ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பின் கருத்து,
“உமது இரட்சகன் அருள் புரிந்தோரைத் தவிர ஏனையோர் கருத்து முரண்பட்டோராகவே நீடித்திருப்பர். (11:118-119)
என்ற குர்ஆன் வசனத்தின் கருத்துக்கு முரணாக அமைந்திருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
“இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்” (3:103)
“நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்”(2:176)
“இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும்” (8:46)
என்ற வசனங்களும் மற்றும் பல ஆயத்துக்களும் கருத்து வேறுபாட்டைக் கண்டிப்பதால், கருத்து ஒருமைப்பாடே ரஹ்மத்தாகும். எனவே, கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு ஒருமுகப்பட்ட நிலை தோன்றுவதே சிறந்ததாகும்.
மத்ஹபு, இயக்க வெறி
சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் கால்பதித்து ஆளமாக வேரூன்ற தாம் சார்ந்த அமைப்பின் கொள்கைகளில் முரட்டுப் பிடிவாதம் காட்டுவதும் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாகும்.

“மத்ஹபு”வாதிகள் தமது இமாமின் தீர்ப்பைப் பற்றிப் பிடிப்பதில் ஒற்றைக் காலில் நிற்கின்றனர். இதற்கு சில சான்றுகள் கீழே தருகின்றோம்.
கர்கி என்பவர் கூறுகின்றார் “எமது இமாமின் கூற்றுக்கு மாற்றமாக குர்ஆனோ, ஹதீஸோ இருக்குமென்றால், ஒன்றில் அவை மாற்றப்பட்டவையாக இருக்க வேண்டும். அல்லது அவற்றுக்கு எம் இமாமின் கூற்றிற்கேட்ப “தஃவீல்” விளக்கம் கொடுக்கப்படும்” (பிக்ஹுஸ் ஸுன்னா)
மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற நான் தயாரித்து வைத்துள்ள முஹம்மதின் மார்க்கமும் அபூஹனீபாவுடைய மத்ஹபை நான் நம்புவதும் எனக்குப் போதுமாகும். (துர்ருல் முக்தார்)
அவரது மாணவர்களிடமும் அவரைப் பின்பற்றியவர்களிடமும் அவரது காலம் முதல் இன்று வரை ஞானத்தை அல்லாஹ் ஒப்படைத்து விட்டான். முடிவில் அவரது மத்ஹபின் அடிப்படையில் ஈஸா(அலை) அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள். (துர்ருல் முக்தார், பா-1 பக்-52)
ஞானத்தையே நாம் குத்தகையெடுத்து விட்டோம். வேறுபாட்டுக்கு அதில் பங்கில்லை என்று எண்ணுபவர்கள் ஒவ்வொருவரும் தாம் சார்ந்த மத்ஹபின் அடிப்படையிலேயே தீர்வு இருக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர். இந்நிலை தவறானதாகும். தன் கருத்தில் தவறு இருக்குமென்றோ, பிறர் கருத்தில் “சரி” இருக்கலாம் என்றோ, நம்பாதவர்கள் எப்படி சமரசம் செய்ய முன்வருவார்கள்?
நான்கு மத்ஹபுக்காரரிடம் இருந்த இமாம்கள் மீதுள்ள முரட்டு பக்தி தான் கருத்து வேறுபாடுகளுக்கு அடிப்படைக் காரணமாகும்.
இமாம்கள் பார்வையில்
“நான் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசினேன் என்பதை அறியாதவர் எனது பேச்சைக் கொண்டு “பத்வா” வழங்குவது ஹறாமாகும். நாங்களும் மனிதர்கள், இன்று ஒன்றைக் கூறி விட்டு, நாளை அதிலிருந்து நாம் மீண்டு விடலாம் என்றும் ஹதீஸ் ஸஹீஹ் என்றாகி விட்டால், அதுவே எனது மத்ஹபு” என்றும் இமாம் அபூஹனீபா(றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவ்வாறே, இமாம் மாலிக்(றஹ்) அவர்கள் “நானும் சரியாகவும், பிழையாகவும் கூறக்கூடிய மனிதனே! எனது கருத்தைக் கவனமாக அவதானியுங்கள். அதில் குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் உடன்பட்டு வரக்கூடியதை ஏற்றுக்கொள்ளுங்கள். உடன்படாதவற்றை விட்டு விடுங்கள்” என்று கூறியுள்ளார்கள்.

“ஒரு விடயம் சுன்னா என்பது தெளிவான பின்னர், அதை எவருடைய கூற்றுக்காகவும் விட்டு விடுவது “ஹலால்” ஆகாது என்ற விடயத்தில் முஸ்லிம்கள் ஏகோபித்த முடிவில் இருக்கின்றனர்” என இமாம் ஷாபிஈ(றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இது குறித்து இமாம் அஹ்மதிப்னு ஹன்பல்(றஹ்) அவர்கள் கூறும் போது, “நீங்கள் என்னைக் கண்மூடிப் பின்பற்றாதீர்கள். அவ்வாறே (இமாம்களான) மாலிக்கையோ, ஷாபியீயையோ, தவ்ரீயையோ கண்மூடிப் பின்பற்றாதீர்கள். அவர்கள் எங்கிருந்து எடுத்தார்களோ அங்கிருந்தே நீங்களும் எடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறே “நபி(ஸல்) அவர்களின் ஹதீஸை ரத்து செய்தவன் அழிவின் விளிம்பில் இருக்கின்றான்” என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நான்கு இமாம்களும் தமது கூற்றுக்கு மாற்றமாக ஹதீஸ் இருந்தால், தமது கூற்றை விட்டுவிட வேண்டும் என்பதில் ஏகோபித்த நிலையில் உள்ளனர். ஆனால், “மத்ஹப்” வெறி கொண்ட சிலர் இமாம்களின் இந்நிலைப் பாட்டுக்கு மாற்றமாக சுன்னாவை ஒதுக்கி விட்டு இமாம்களின் கூற்றில் தங்கி நிற்க முற்படுகின்றனர். கருத்து வேறுபாடுகள் நீங்காது நீடித்து நிலவ இது அடிப்படைக் காரணமாக உள்ளது.
தமது கூற்றில் தவறு இருக்கும் போது அல்லது பலவீனம் இருக்கும் போது அதை விட்டு விடுவோம் என்பதே இமாம்களின் தீர்ப்பாகும். இதை செயல் படுத்தாமல் இமாமின் கூற்றை இஸ்லாத்தை விட உயர்வாக மதிப்பது பெரும் குற்றமாகும். இவ்வாறே இயக்க வெறி கொண்டவர்கள் தமது இயக்க நிலைப்பாட்டிலும் தனி நபர்கள் மீது மோகம் கொண்டவர்கள் குறித்த நபரின் கருத்திலேயே நிற்க முற்படுகின்றனர்.
குர்ஆனின் பார்வையில்
“முஃமீன்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன். நன்கறிபவன்” (49:1)

இவர்கள் அல்லாஹ்வையும் அதன் தூதரையும் விட தமது இமாமை முற்படுத்துகின்றனர்.
“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்” (33:36)
இவர்கள் அல்லாஹ்வினதும், அவன் தூதரினதும் கூற்றுக்கு மாற்று அபிப்பிராயம் கொள்ள தமது இமாமுக்கு அல்லது இயக்கத்திற்கு அதிகாரம் இருப்பதாக நம்புகின்றனர்.
“எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும் (அல்லாஹ்வின்) இத் தூதரை விட்டுப் பிரிந்து, முஃமீன்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்ல விட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம். அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்” (4:115).
இவர்கள் தமது இமாமுக்கு மாற்றமாக உள்ள நபி வழிகளை பின்பற்றாமல் முஃமீன்களின் வழியில் செல்லாமல் தவறான வழியில் செல்கின்றனர்.
“அவரது கட்டளைக்கு மாறு செயவோர் தம்மைத் துன்பம் பிடித்துக்கொள்வதையோ, அல்லது நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்”. (24:63)
இந்த போக்கு இவர்களிடத்தில் நிபாக், பிஸ்க், குப்ர் என்பவற்றை ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கின்றோம்.
ஹதீஸின் பார்வையில்
“நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கின்றேன். அவை இரண்டையும் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள்” -அல்குர்ஆன், அஸ்ஸுன்னா என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் குர்ஆன்-சுன்னா அல்லாத அதற்கு முரண்பட்ட தமது இமாம்களின் முடிவுகளை மூன்றாவதொரு வழியாக எடுத்து வழிகெட்டுச் செல்கின்றனர்.
ஒரு முறை உமர்(ரலி) அவர்கள் “தவ்றாத்”தின் ஒரு பகுதியை எடுத்து வந்து “யா ரஸுலுல்லாஹ்! இது “தௌறாத்”தின் ஒரு பிரதியாகும்” எனக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மௌனமாக இருக்கவே அதனை வாசிக்க ஆரம்பித்தார்கள். நபி(ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் மாறத் துவங்கியது. இது கண்ட அபூபக்கர்(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களைப் பார்த்து “உமரே! உமக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் தூதரின் முகத்தை நீர் பார்க்கவில்லையா?” எனக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் முகத்தைப் பார்த்த உமர்(ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் கோபத்தில் இருந்தும், அவன் தூதரின் கோபத்தில் இருந்தும் அல்லாஹ்விடமே உதவி தேடுகின்றேன். அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாத்தை தீனாகவும், முஹம்மத்(ஸல்) அவர்களை நான் நபியாகவும் ஏற்றுக்கொண்டேன்” என்றார்கள்.
அதனைத் தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் “எவன் கையில் முஹம்மதின் உயிர் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக மூஸா இப்போது உங்கள் மத்தியில் தோன்றி நீங்கள் என்னை விட்டு விட்டு மூஸாவைப் பின்பற்றினாலும், வழிகெட்டு விடுவீர்கள். மூஸா உயிரோடு இருந்து எனது நபித்துவத்தையும் எத்தியிருந்தாலும், அவர் என்னைப் பின்பற்றியிருப்பார்” என்றார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)
ஆதாரம் : தாரமி 435.

ஒரு நபி இருந்து முஹம்மத்(ஸல்) அவர்களை விட்டு விட்டு, அந்த நபியைப் பின்பற்றினாலும், வழி கெடுவோம் எனின், நபிக்கு மாற்றமாக ஒரு தனி நபரின் தீர்ப்புக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தால், எம் நிலை என்ன எனச் சிந்தித்துப் பாருங்கள்.
எனவே, மத்ஹபு, இயக்க வெறி நீக்கப்பட்டு உண்மை எங்கிருந்து வந்தாலும், ஏற்கும் பக்குவம் ஏற்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முடியாது.
பொறாமை நீக்கம்
கருத்து வேறுபாடுகள் எழ பொறாமை அடிப்படைக் காரணமாக இருந்துள்ளது என்பதை அருள்மறை பின்வருமாறு கூறுகின்றது.

“தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக்கொண்டது மிகவும் கெட்டதாகும்.” (2:90)
“(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான். எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்.”(2:213)
“நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இது தான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர். எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்” (3:19).
இயக்கங்களுக்கும் உலமாக்களுக்கு மிடையிலுள்ள பொறாமைக் குணம் தீய கருத்து வேறுபாடுகளை விதைத்து விடுகின்றன. பொது மக்கள் இதற்குப் பலியாகி விடக் கூடாது.
தான் சாராத, அல்லது விரும்பாத இயக்கமோ, மக்களோ மேலோங்கிவிடக் கூடாது என்பதற்காகச் சிலர் பிழையான தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதைக் காணலாம். உதாரணமாக கூட்டு துஆ கூடாது என்பது தெளிவான பின்னரும் இதை ஏற்றுக்கொண்டால், “தவ்ஹீத் ஜமாஅத்” மக்கள் மனதில் இடம் பிடித்துவிடும் என்பதற்காக “பித்அத்”தான இச்செயலில் சில இயக்கவாதிகள் பிடிவாதம் காட்டுவதை உதாரணமாகக் கூறலாம்.
தற்பெருமை
சிலரிடம் இப்பண்பு இயல்பாகவே குடிகொண்டிருக்கும். நான் கூறும் அனைத்தும் சரி, அடுத்தவர்கள் கூறும் அனைத்தும் தவறானவை என்ற இறுமாப்பு இருக்கும். இதன் காரணமாக அடுத்தவர்களின் கருத்துக்களுக்கோ, ஆலோசனைகளுக்கோ இவர்கள் காதுகொடுக்க மாட்டார்கள். இதனால், கருத்து வேறுபாடு நீங்குவதற்கு மாற்றமாக அதிகரிப்பதையே காணலாம்.

அடுத்து, கர்வம் கொண்ட சிலர் முரண்பட்ட கருத்துக்களைக் கூறி சமூகத்தில் தம்மை முதன்மைப்படுத்திக்கொள்ள முற்படுவர். அரபியில் “நீ மற்றவர்களுக்குக் முரண்பட்டால் பிரபல்யம் பெறலாம்” என்று கூறுவர். இந்த அடிப்படையில் பிரபல்யத்தை விரும்பும் சிலரும் கருத்து வேறுபாடுகளை விதைத்துக் கொண்டிருக்கின்றனர்.
தப்பெண்ணம்:
சிலரின் பார்வை எப்போதும் இருண்டதாகவே இருக்கும். அவர்களின் எண்ணங்கள் தீமையையே சிந்திக்கும். தம்மைத் தவிர அடுத்தவர்களின் நன்மைகள் ஏதும் கூறப்பட்டால், அதைப் பொய்ப்பிப்பர் அல்லது அதற்கு ஏதேனும் உள்நோக்கம் கற்பிப்பர். வெளிப்படையான விடயங்களை விட்டு விட்டு அந்தரங்கம் பற்றியும் எண்ணங்கள் பற்றியும் தீர்ப்புக் கூற முன்வருவர். இதன் காரணத்தினால் அடுத்தவர்களின் கருத்துக்களுக்கு உள்நோக்கம் கற்பித்து தமது கருத்தை முன்வைப்பர். இதனால், முரண்பாடு விளையும். இது ஆபத்தான நிலையாகும். இதனால் கருத்து வேறுபாடு மட்டுமன்றி குரோதமும் உண்டாகும்.

இத்தகைய தவறான அடிப்படைகளால் கருத்து வேறுபாடுகள் விளைவதுடன் அவை முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவையும் பிரச்சினைகளையும் தோற்றுவித்து வருகின்றன. இதேவேளை, கடந்த கால அறிஞர்களுக்கு மத்தியிலும் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. அவை தோற்றம் பெற நியாயமான சில காரணங்கள் இருந்தன. அவற்றையும் நாம் புரிந்துகொள்வதினூடாக கடந்த கால அறிஞர்கள் பற்றிய நல்லெண்ணம் கெடாதிருக்க வழிபிறக்கும். அவற்றையும் சுருக்கமாக நோக்குவோம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.