கடமைகளை மறந்த உரிமைகள்.

மே 01 சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனைய சர்வதேச தினங்களை விட தொழிலாளர் தினம்தான் அரசியல் கட்சிகளால் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றது. தொழிலாளர் உரிமையைப் பேசுவதை விட கட்சியின் பலத்தைத் தூக்கிக் காட்டுவதற்கும் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஊட்டுவதற்குமுரிய தினமாகவே இத்தினம் அரசியல் கட்சிகளால் பெரிதும் கொண்டாடப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் முதலாளித்துவ வர்க்கங்களால் தொழிலாளர்கள் நசுக்கப்பட்டனர். அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டன. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை. சக்திக்கு மீறிய பணிகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. இவ்வாறு ஆதிக்க சக்திகளாலும் முதலாளித்துவ வர்க்கத்தினராலும் தொழிலாளர் சமூகம் வஞ்சிக்கப்பட்டு வந்தது.

தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னர் இன்று சர்வதேச அளவில் தொழிலாளர் உரிமைகளைப் பேணக் கூடிய சட்டதிட்டங்கள் உள்ளன. அவர்களுக்கான ஊதியம், வேலை நேரம், ஓய்வு, சலுகைகள் என்பன நிர்ணயிக்கப்பட்டு அதற்கு எதிரான நடவடிக்கைகளை சட்ட ரீதியில் அணுகுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

சர்வதேச சட்டங்கள் தொழிலாளர் உரிமைகளைப் பற்றிப் பேசும் முன்னரே இஸ்லாம் தொழிலாளர் நலன் பற்றிப் பேசியது. நபி(ச) அவர்கள் காலத்தில் அடிமைகள் இருந்தனர். அவர்கள் மனிதப் பிறவிகளாகவே மதிக்கப்பட்டது கிடையாது. நபி(ச) அவர்கள் இத்தகைய அடிமைகளை வேலை செய்யப் பணிப்பதாக இருந்தாலும் அவர்களின் சக்திக்கு மீறிய வேலைகளைக் கொடுக்கக் கூடாது, பாரமான பொருட்களை சுமக்குமாறு பணித்தால் எஜமானனும் கூட நின்று ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் அடித்துத் துண்புறுத்தப்படக் கூடாது. அவர்களுக்குரிய உணவு வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் போதித்தார்கள்.

இதே வேளை, இஸ்லாம் உழைப்பை ஊக்குவிக்கின்றது. உழைக்கும் வர்க்கம்தான் நாட்டின் முதுகெலும்பாக நிற்கின்றது. இஸ்லாமிய தூதைச் சுமந்து வந்த இறைத்தூதர்களும் உழைப்பாளிகளாக இருந்துள்ளனர். ஸகரிய்யா நபி தச்சராகவும், தாவூத் நபி கவசம் செய்பவராகவும், அனைத்து நபிமார்களும் ஆடு மேய்த்தவர்களாகவும் இருந்துள்ளனர். நபி(ச) அவர்கள் ஆடு மேய்த்துள்ளார்கள், வர்த்தகம் செய்துள்ளார்கள்.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும் உழைப்பாளியை இஸ்லாம் உயர்வாகப் பார்க்கின்றது. உழைப்பாளிகளின் பயண வசதிகளைக் கவனத்திற் கொண்டு நீண்ட நேரம் தொழுவதையும் இஸ்லாம் தவிர்க்கச் சொல்கின்றது. தொழுது முடிந்தால் பூமியில் பரந்து சென்று உழையுங்கள் என்கின்றது. இஸ்லாம் இவ்வாறு உழைப்பின் உயர்வு பற்றியும் பேசுகின்றது. உழைப்பாளியின் உரிமை பற்றியும் பேசுகின்றது.

இன்றைய காலகட்டத்தில் உழைப்பாளிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் குறைந்துவிட்டன எனலாம். அப்படியே அடக்குமுறைகள் நடந்தால் தொழிலாளர் சங்கங்கள் தொழில்சங்க நடவடிக்கைகளில் இறங்கிவிடுகின்றனர். தொழிலாளர்களுக்கு நியாயம் வேண்டி குரல் எழுப்ப தொழிலாளர் உரிமை பேணும் அமைப்புக்கள் உள்ளன. எனவே, தனிப்பட்ட சில தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. ஆனால், கூட்டாக தொழிலாளர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் குறைந்துள்ளன எனலாம்.

இஸ்லாம் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிப் பேசும் அதே நேரம் அவர்களது கடமைகள் பற்றியும் பேசுகின்றது. தொழிலாளர்கள் குறித்த வேலையைச் செய்யும் சக்தியுடையவர்களாகவும், நம்பிக்கையுடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இன்று தொழிலாளர்கள் தமது பணி விடயத்தில் நம்பிக்கை, நாணயமற்றவர்களாக மாறியுள்ளனர்.

‘உழைப்பாளியின் வியர்வை காய்வதற்குள் அவனுக்குரிய ஊதியத்தைக் கொடுத்துவிடுங்கள்” என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். உழைப்பாளிக்கு உரிய முறையில் வஞ்சகம் செய்யாமல் ஊதியத்தை வழங்க வேண்டும் என இந்த செய்தி உழைப்பாளியின் உரிமையைப் பேசும் அதே வேளை, தொழிலாளி தன் எஜமானுக்கு துரோகம் செய்யக் கூடாது என்றும் கூறுகின்றது. தொழிலாளியின் வியர்வை காய்வதற்குள்… என்ற வாசகத்தின் மூலம் ஒரு தொழிலாளி வியர்வை சிந்தும் அளவுக்கு அதாவது, எஜமானுக்கு விசுவாசமாக சிரமத்தை ஏற்று பணி செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

இன்று தொழிலாளர் உரிமை பேசப்படும் அளவுக்கு அவர்களின் கடமை பேசப்படுவதுமில்லை, பேணப்படுவதுமில்லை. தொழிலாளர்கள் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றினால் நாடு எப்போதோ முன்னேறியிருக்கும். குறிப்பாக, அரச ஊழியர்களின் பணி சரியாகவும், நிறைவாகவும் நிறைவேற்றப்பட்டால் நாடு நலம்பெறும்.

அரச ஊழியர்கள் தொழிலாளர்களுக்குரிய அனைத்து சௌபாக்கியங்களையும் அனுபவிக்கின்றனர். சம்பளம், ஓய்வூதியம், வரையறுக்கப்பட்ட வேலை நேரம், விடுமுறை, கடன்கள்…. இப்படி பலதையும் அனுபவித்துக் கொண்டு பணி செய்வதில் அசட்டையாக உள்ளனர்.

நிறைவான சம்பளத்தைப் பெறும் இவர்கள் சாதாரண ஒரு ஆவணத்தை சரி செய்ய இலஞ்சத்தை எதிர்பார்க்கின்றனர். மேசை நிறைய பைல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க அரட்டையடிப்பதிலும், வீணாக பொழுது போக்குவதிலும் காலத்தைக் கழிக்கின்றனர். சின்னதொரு பணியாக இருந்தாலும் நாடி வருபவர்களை அலையவிட்டு நாய்படாதபாடு படவைக்கின்றனர்.

தொழிலாளர் உரிமை பற்றிப் பேசும் இவர்கள் பயணாளிகள், மக்கள் உரிமையை மதிப்பதில்லை. எல்லாம் முடிந்த ஒரு பைலில் சாதாரண ஒரு கையொப்பமிடுவதற்குக் கூட மாதக் கணக்கில் அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது. இவர்களின் இத்தகைய அசமந்தப் போக்கினால் மக்களுக்கு அரசின் மீது வெறுப்பு ஏற்படுகின்றது. அது மாத்திரமின்றி பல எதிர்பாராத தேவையற்ற பிரச்சினைகள், இழப்புக்களைக் கூட சந்திக்க நேரிடுகின்றது.

அரச தொழிலாளர்கள் தொழிலை முறையாகச் செய்யாமல் இலஞ்சப் பேர்வழிகளாக மாறியுள்ளமை நாட்டை அழிவின் விளிம்புக்கே அழைத்துச் செல்கின்றது.

காவல்துறையினருக்கும் போதைப்பொருள் வியாபாரிகள், பாதாள உலகக் கோஷ்டியினருக்கும் இடையில் உள்ள உறவால் நாடு நலிவடைகின்றது. போக்குவரத்துத் துறை பொலிஸ் அதிகாரிகளின் பணம் பிடுங்கும் பிச்சைக்காரப் போக்கினால் நாட்டில் விபத்துக்களும், அழிவுகளும் அதிகரித்துள்ளன. அதிகாரிகளின் இலஞ்ச மோகத்தால் பணத்தைக் கொடுத்தால் எந்தக் காரியத்தையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

தொழில்களில் உயர்ந்த, கண்ணியமான தொழில்தான் ஆசிரியர் தொழில். வருங்கால சந்ததிகளை வடிவமைக்கும் இந்தப் பணி கூட பணம் பறிக்கும் பகல்கொள்ளையாக மாறிவிட்டது என்றால் மிகையாகாது. ஆசிரியர்கள், அதிபர்கள் தமது கடமைகளை நிறைவாக நிறைவேற்றினால் நாடு கல்வித் துறையில் பெரிய முன்னேற்றத்தை அடையும். ஆனால், அரசாங்க சம்பளத்தைப் பெறும் ஆசிரியர்களில் பலரும் பாடசாலை கற்பித்தலில் காட்டும் ஆர்வத்தை விட பிரத்தியேக வகுப்புக்களில்தான் அதிக அக்கறையைக் காட்டுகின்றனர். இதனால் பாடசாலை இலவசக் கல்வியில் மக்களுக்கு நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. பாடசாலைக்கு மட்டும் அனுப்பினால் போதாது, மாலை நேர பிரத்தியேக வகுப்புக்கு அதுவும் குறித்த பாடசாலையில் குறித்த பாடத்தை கற்பிக்கும் ஆசிரியரின் வகுப்புக்கு அனுப்பினால்தான் பிள்ளையை முன்னேற்றலாம் என்ற மனநிலை வளர்ந்துள்ளது.

இதனால் அரசின் இலவசக் கல்வித் திட்டத்தில் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். மாணவ சமூகம் பாடசாலை, மாலை நேர பிரத்தியேக வகுப்புக்கள் என தமது இளமையையும், ஓய்வையும், நிம்மதியையும்… இன்னும் பல அம்சங்களையும் தொலைத்துக் கொண்டிருப்பதுடன் கற்றலில் சலிப்படைந்தும் போய்விடுகின்றனர்.

எனவே, நாடு நலம்பெற வேண்டும் என்றால், முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடவேண்டும் என்றால் உழைப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்! அதே போன்று உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பேணப்பட வேண்டும்! உழைப்பாளிகளும் தமது ஊதியத்திற்குத் தகுந்த பணியை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும். வெறுமனே உழைப்பாளிகளின் உரிமையை மட்டும் பேசி நாட்டை முன்னேற்ற முடியாது.

எனவே, தொழிலாளர்கள் தமது கடமையை நிறைவாகச் செய்து தமது உழைப்பின், ஊதியத்தை ஆகுமானதாக மாற்றிக் கொள்வதுடன் நாட்டையும் முன்னேற்ற முயல வேண்டும். கடமைகளைக் செய்வோம்! உரிமைகளைப் பெறுவோம்! என்ற மனநிலை வளர வேண்டும். இதுவே நாட்டுக்கும், வீட்டுக்கும் நலமாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.