ஐவேளைத் தொழுகை

ஐவேளைத் தொழுகை:

                ‘தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு ‘(முற்றிலும்) அடிபணிந்தவர்களாக நில்லுங்கள்””

(அல்குர்ஆன்  2:238)

 

இஸ்லாம் ஐவேளைத் தொழுகையைக் கடமையாக்கியுள்ளது. இது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தெரியும். இருப்பினும் அஹ்லுல் குர்ஆன் என்ற பெயரில் இயங்கும் ஒரு குழுவினர் உள்ளனர். அவர்கள் ஹதீஸ்களை முழுமையாக மறுப்பவர்கள். தம்மைக் குர்ஆன்வாதிகள் என அழைத்துக் கொள்கின்றனர். அவர்கள் மூன்று வேளை தொழுதால் போதுமானது, ஐவேளை தொழ வேண்டும் என்று குர்ஆனில் வரவில்லை. மாறாக ஹதீஸில்தான் வந்துள்ளது ஹதீஸ்களை ஏற்க வேண்டியதில்லை என தவறாக வாதிட்டு வருகின்றனர். ஐவேளை தொழ வேண்டும் என்பதற்கு ஹதீஸ்களில் வந்துள்ள ஆதாரமே போதுமானது. இருப்பினும் அறபு மொழியறிந்த சாதாரணமானவர்கள் கூட இந்த வசனத்தை அவதானித்தால் ஐவேளை தொழுகைக்கு இந்த வசனமே ஆதாரமாக உள்ளதை அறியலாம்.

 

அறபு மொழியில் சில விஷேட அம்சங்கள் உள்ளன. ஒருமை, பன்மை என எல்லா மொழியிலும் உள்ளது. அறபு மொழியில் ஒருமை, இருமை, பன்மை என்று மூன்றாகப் பார்க்கப்படும். மூன்றும் அதற்குக் கூடியதுமே பன்மையாக அறபியில் பார்க்கப்படும். இந்த வசனத்தில் நீங்கள் ‘அஸ்ஸலவாத்” தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகின்றது. இதில் குறைந்த பட்சம் மூன்று வேளை தொழுகைகள் வந்து விடுகின்றது.

 

அடுத்து, நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகின்றது. அப்படியென்றால் நான்கு நேரத் தொழுகை என்று சிந்திப்பவர்கள் சிந்திக்கலாம். எனினும், நடுத்தொழுகை என்று தனியாக ஒரு தொழுகை குறிக்கப்படுவதாக இருந்தால் கட்டாயம் அது ஒற்றைப்படையான எண்ணிக்கையாகவே இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் அஸர்த் தொழுகை நடுத்தொழுகை என ஹதீஸ்கள் கூறுகின்றன. அஸருக்கு முன்னர் சுபஹ்-லுஹர் என இரண்டு தொழுகைகளும் பின்னர் மஃரிப்-இஷா  என்ற இரண்டு தொழுகைகளும் உள்ளன என்பதை இந்த வசனத்தின் மூலம் உணரலாம்.

 

சில போது அஹ்லுல் குர்ஆன்வாதிகள் மூவேளைத் தொழுகை என்றாலும் நடுத்தொழுகை வரலாம்தானே? என்று வாதிடலாம்.

 

நடுத்தொழுகை என்பதற்கு இந்த வாதம் சரியாகப் பட்டாலும் தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள் என்ற முதல் பகுதியில் அறபு மொழிப்பிரகாரம் பன்மை பயன்படுத்தப் பட்டுள்ளதால் குறைந்தபட்சம் அதற்குள் மூன்று நேரத் தொழுகை அடங்கிவிடுகின்றது. அது அல்லாமல் நடுத்தொழுகை என்ற ஒரு தொழுகையும் கூறப்பட்டுள்ளது.

 

எனவே, அந்த வாதம் ஏற்க முடியாததாகவுள்ளது. இந்த வசனம் மூன்று வேளை தொழுகை என்ற தவறான வழிகெட்ட கொள்கைக்கு மரண அடியாக அமைந்துள்ளது என்பதே உண்மையாகும்.

 

அல்லாஹ் உங்களுக்கு கற்றுத் தந்தான்:

 

‘(உரிய முறையில் தொழ முடியாது என) நீங்கள் அஞ்சினால் நடந்தவர்களாகவோ, அல்லது வாகனித்தவர்களாகவோ (தொழுது கொள்ளுங்கள்.) நீங்கள் அச்சம் தீர்ந்தவர்களாகிவிட்டால் நீங்கள் அறியாமல் இருந்தவற்றை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்ததைப் போன்று அவனை(த் தொழுது) நினைவு கூருங்கள்.”

(அல்குர்ஆன்  2:239)

 

‘அஹ்லுல் குர்ஆன்” என தம்மை அழைத்துக் கொள்பவர்கள் குர்ஆன் மட்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தது. ஹதீஸ் அல்லாஹ்விடமிருந்து வந்ததன்று என்ற அடிப்படையில் ஹதீஸ்களை முழுமையாக மறுத்து வருகின்றனர். அவர்களது வாதத்திற்கு இந்த வசனம் மறுப்பாக அமைந்துள்ளது.

 

இந்த வசனத்தில் அச்ச நிலையில் நடந்தவாறு, பயணித்தவாறு தொழலாம் என்று கூறப்படுகின்றது. அச்சம் நீங்கி அமைதி ஏற்பட்டால் அல்லாஹ் உங்களுக்கு கற்றுக் கொடுத்த முறைப்படி தொழுங்கள் என்று கூறப்படுகின்றது. ஆனால், குர்ஆனில் எந்த இடத்திலும் தொழும் முறை பற்றி விபரிக்கப்பட வில்லை. நபிமொழிகள்தான் தொழும் முறை பற்றி விபரிக்கின்றன. நபி(ச) அவர்கள் கற்றுக் கொடுத்ததைத்தான் இங்கு அல்லாஹ் தான் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகின்றான்.

 

எனவே, நபியவர்களது வாக்குகளும் அல்லாஹ்விடமிருந்து வந்த ‘வஹீ – வேத வெளிப்பாடே” என்பதை இந்த வசனம் உறுதியாகக் கூறுகின்றது.

 

அத்துடன் நபித்தோழர்களின் புரிதல் விளக்கங்களுக்கும் கூட ஒரு முக்கியத் துவத்தை இந்த வசனம் அளிக்கின்றது. அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்த பிரகாரம் என்று இங்கே கூறப்படுகின்றது. உங்களுக்கு என்று நபித்தோழர்கள்தான் விளிக்கப் படுகின்றார்கள். நபித்தோழர்கள் கற்ற பிரகாரம் தொழுவதென்பது இங்கே அங்கீகாரத்தை இதன் மூலம் பெறுகின்றது.

 

எனவே, அல்லாஹ்வால் கற்பிக்கப் பட்ட சமூகம் என்ற வகையில் நபித்தோழர் களின் விளக்கங்கள் முக்கியத்துவமும், முதன்மையும் பெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.