பலஸ்தீன் பதறுகின்றது! காஷ்மீர் கதறுகின்றது! சிரியா சீரழிகின்றது! ஆப்கான் அழிந்துவிட்டது! ஈராக் இடி விழுந்தது போலாகிவிட்டது! இருக்கும் அனைத்து நாடுகளிலும் முஸ்லிம்களின் முகாரி ராகம் கேட்கின்றது.
ஏன் இந்த நிலை? இஸ்லாமிய உம்மத்திற்கு ஈடேற்றம் இல்லையா? விடிவு இல்லையா? தொல்லைகளும் தோல்விகளும் ஏன் முஸ்லிம் உம்மத்தைத் துரத்துகின்றன?
இப்படியானதொரு ஐயம் பலரது மனதிலும் இருக்கலாம். இதற்கான தெளிவை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வது அவசியமாகும்.
சோதனை அல்லாஹ்வின் ஒரு சுன்னத்:
ஈமான் கொண்டவர்களை அல்லாஹ் சோதிப்பதென்பது அவனது சுன்னா – வழிமுறை யாகும். அந்த சோதனை முஃமின்களுக்கு இழப்பை ஏற்படுத்தலாம். இழிவை ஏற்படுத்தாது. மாறாக உயர்வைத்தான் தரும்.
‘நாங்கள் நம்பிக்கை கொண்டு விட்டோம்” என்று மனிதர்கள் கூறியதனால் அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார் கள் என எண்ணிக் கொண்டனரா?”
‘நிச்சயமாக இவர்களுக்கு முன்பிருந்தவ ர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம். நிச்சயமாக அல்லாஹ் உண்மை உரைத்தவர் களையும் நன்கறிவான், மேலும், பொய்யுரைத்த வர்களையும் நன்கறிவான்.” (29:2-3)
‘உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்றது உங்களுக்கு வராமல் நீங்கள் சுவர்க்கம் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா? அவர்களை வறுமையும், துன்பமும் பீடித்தன. மேலும், அத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டோரும் ‘அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்” என்று கூறுமளவுக்கு அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டனர். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கின்றது.” (2:214)
எனவே, இது சோதனைதானே தவிர இழிவோ அழிவோ அல்ல!
மரணம் என்பது தோல்வியன்று:
முஸ்லிம்களைப் பொருத்தவரையில் மார்க்கத்திற்காக மரணிப்பது தோல்வியன்று. அதை இஸ்லாம் பெரும் பேறாகப் பார்க்கின்றது. ஒரு நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் நெருப்பில் போட்டு படுகொலை செய்யப் பட்டனர். அவர்கள் அனைவரும் சுவனத்தைப் பெற்றனர். இதைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, ‘பவ்சுல் கபீர்” இது மிகப்பெரும் வெற்றி என்று கூறுகின்றான். அல்லாஹ்வுக்காக உயிரையும் பொருளையும் இழப்பது இஸ்லாத்தின் பார்வையில் மிகப்பெரும் வெற்றியாகும். அது தோல்வி கிடையாது.
நல்லது:
அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர் வெற்றியைத்தான் ஆசை வைப்பர். இதுதான் இயல்பு. வெற்றி இலக்கை எனது கண்களால் காண வேண்டும் என்பதே ஒரு போராளியின் இலட்சியமாக இருக்கும். ஆனால், வெற்றியை விட வீர மரணமே மேலானது, சிறந்தது என அல்லாஹ் கூறுகின்றான்.
‘நம்பிக்கை கொண்டோரே! நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும் ஒரு வியாபாரத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?”
‘நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள். மேலும், உங்களது செல்வங்களாலும், உங்களது உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர்புரியுங்கள். நீங்கள் அறிபவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு சிறந்ததாகும்.”
‘(அவ்வாறு செய்தால்) அவன் உங்களது பாவங்களை உங்களுக்கு மன்னித்து, சுவனச் சோலைகளில் உங்களை நுழைவிப்பான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். மேலும், நிலையான சுவனச் சோலைகளிலுள்ள தூய்மையான வாழ்விடங்களிலும் (உங்களை நுழைவிப்பான்.) இதுவே மகத்தான வெற்றியாகும்.”
‘நீங்கள் விரும்பும் மற்றொன்றும் உண்டு. (அது) அல்லாஹ்விடமிருந்துள்ள உதவியும், சமீபமான வெற்றியுமாகும். (நபியே!) நம்பிக்கை யாளர்களுக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக!”
(61:10-13)
அல்லாஹ்வுக்காக உயிரையும் பொருளையும் இழப்பது உங்களுக்கு நல்லது. நீங்கள் வெற்றியையும் அல்லாஹ்வின் உதவியையும் விரும்புகின்றீர;கள். அதுவும் உங்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று அல்லாஹ் இங்கே கூறுகின்றான். இந்த அடிப்படையில் இழப்பது நல்லதுதான் என குர;ஆன் கூறுகின்றது.
இழப்பு அவர்களுக்கும் வரும்:
முஸ்லிம்களுக்கு இழப்பை ஏற்படுத்துப வர்களும் இழப்புக்களைச் சந்திக்கின்றனர். உஹது யுத்தத்தின் பின்னர் அல்லாஹ் முஃமின்களுக்குக் கூறிய ஆறுதல் வசனத்தின் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.
‘நீங்கள் மனம் தளர வேண்டாம். துக்கப் படவும் வேண்டாம். நீங்கள் நம்பிக்கை யாளர்களாக இருந்தால், நீங்கள்தான் மிக உயர்வானவர்கள்.”
‘உங்களுக்கு ஒரு காயம் (உஹதில்) எற்பட்டால் அது போன்றதொரு காயம் அந்தக் கூட்டத்திற்கும் (பத்hpல்) ஏற்பட்டே உள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம். (இவ்வாறு செய்வது) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் அறிந்து கொள்வதற்கும், உங்களிலிருந்து உயிர்த் தியாகிகளை எடுத்துக் கொள்வதற்குமேயாகும். அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.” (3:139-140)
நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள்தான் உயர்வானவர்கள் என்ற உத்தர வாதம் தரப்படுகின்றது. அடுத்து உங்களுக்கு ஓர் இழப்பு ஏற்பட்டால் அந்த இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கும் இழப்பு ஏற்படுகின்றன என அல்லாஹ் கூறுகின்றான். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்ப்பவர்களும் பல்வேறுபட்ட நேரடி, மறைமுக இழப்புக்களை சந்தித்தே வருகின்றனர். அண்மைய இஸ்ரேலின் காட்டுத் தீ இதற்கொரு நல்ல உதாரணமாகும்.
வெற்றி, தோல்வி மாறி மாறி வரும்:
ஒரு சமூகம் தொடர்ந்து வெற்றியை மட்டும் அடைந்து வராது. பத்ரில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். உஹதில் உங்களுக்குத் தோல்வி என்றதும் துவண்டுவிடக் கூடாது. தொடர் வெற்றி மமதையை ஏற்படுத்தும். தொடர் தோல்வி தொய்வை ஏற்படுத்தும். வெற்றி, தோல்வி மாறி மாறித்தான் வரும் என்று இங்கே ஆறுதல் கூறப்படுகின்றது.
உங்களை ஷஹீதுகளாக அல்லாஹ் ஆக்க விரும்புகின்றான்:
இந்த யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புக்குக் கூட அல்லாஹ் இரண்டு காரணத்தைக் கூறுகின்றான்.
1. உண்மையான முஃமின்களை இனம் காணுதல்.
2. உங்களில் சிலரை ஷஹீத் எனும் உயர்ந்த அந்தஸ்துக்குரியவர்களாக ஆக்குவது.
ஒரு முஸ்லிம் ஷஹாதத் எனும் உயர் அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றால் காபிர்களால் கொல்லப்பட வேண்டும். காபிர்களால் கொல்லப்படுவதென்றால் அவர்களின் கை ஓங்க வேண்டும். அதுதான் நடந்து கொண்டிருக் கின்றது. ஆனால், இறுதி வெற்றி இஸ்லாத்திற் காக இருக்கும் என்பதை இஸ்லாம் உறுதியாகக் கூறுகின்றது. இஸ்லாமிய உம்மத் நோயுறும், மரணிக்காது. இழப்புக்களையும் அழிவுகளையும் சந்திக்கும். ஆனால், அது அவர்களது மறுமையின் மகத்தான வெற்றிக்கான அடித்தளமாக இருக்கும்.
இஸ்லாம் உயிர்வாழ்கின்றது:
சிரியா, மியன்மார் காட்சிகளைக் காணும் போது இஸ்லாம் இன்னும் மனித உள்ளங்களில் வீரியத்துடன் உயிர் வாழ்வதைக் காணலாம். உயிருடன் புதைத்து மண்ணைப் போடும் போதும், கலிமாவைக் கைவிடாமல் மொழியும் முஸ்லிம்களின் உள்ளம் வீரியத்துடன் இருக்கின்றது. உயிருடன் எரிக்கப்படும் போதும் இஸ்லாத்தை விடாமல் உயிரை விடும் மக்கள் இஸ்லாம் வலிமையுடன் இருப்பதை நிரூபித்து விட்டே மரணத்தைத் தழுவுகின்றனர். ஆரம்ப கால வரலாறு மீண்டும் கண்முன்னே காட்சி தருகின்றது. வரலாறு உண்மைப்படுத்தப் படுகின்றது.
இந்தச் சோதனைகள், இழப்புக்கள், சோர்வுக்கும் அவநம்பிக்கைக்குமான அத்திவாரம் அல்ல. மாறாக, ஈமானை உரமூட்டவும் வலுவூட்டவுமான நிகழ்வுகளாகும். இந்த அடிப்படையில் இத்தகைய நிகழ்வுகள் எமது ஈமானை அதிகரிக்கச் செய்ய வேண்டுமே தவிர பலவீனப்படுத்திவிடக் கூடாது எனும் உண்மையை உணர்ந்து கொள்வோமாக!