முஸ்லிம் சமூகத்தை சீண்டிப் பார்ப்பதற்காகவும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிகளைக் கக்குவதற்காகவும் இஸ்லாமிய விரோத சக்திகள் காலத்துக்குக் காலம் சில பிரச்சினைகளைத் தூக்கிப் பிடிப்பதுண்டு! அதில் ஒன்றுதான் பொது சிவில் சட்டம் எனும் கோஷமாகும்.
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இனவாத, மதவாத சிந்தனைப் போக்குடைய PJP அரசு சில முன்னெடுப்புக்களை நகர்த்தி வருகின்றது. நடுநிலையான சில சிந்தனையாளர்களும் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமுகப்பட்ட போக்கையும் எடுத்துக் காட்டும் வண்ணம் ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம் என்ற வட்டத்திற்குள் வருவது நல்லதுதானே என்று சிந்திக்கின்றனர்.
பன்முகக் கலாசாரத்தையும் பண்பாட்டையும் உடைய மனிதக் குழுமங்களை ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வருவது என்பது நடைமுறைச் சாத்தியமற்றதாகும். இதே வேளை இது ஒரு வகையான கலாசாரத் திணிப்பாகவும், கலாசார ஏகாதிபத்தியமாகவும் மாறும். யார் யாருடைய கலாசாரத்தைப் பின்பற்றுவது என்ற தீராத பிரச்சினைதான் தோன்றும். பன்முகக் கலாசாரத்தைக் கொண்ட சமூகத்தில் அவரவர் அவரவரது கலாசாரத்தையும் பண்பாட்டையும் பின்பற்றும் அதேவேளை, மாற்றுக் கலாசாரத்தையும் பண்பாட்டையும் மதித்து நடக்கும் மனோ பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவைப் பொருத்தவரையில் சாதிவேறுபாடு அங்கு ஆழமாக வேரூன்றி உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் மிருகங்களை விடக் கேவலமாக நடாத்தப்படும் கொடூரம் தினம் தினம் அரங்கேறி வருகின்றது. சமயக் கடமைகளில் கூட அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இத்தகைய பாரிய பாகுபாட்டை வைத்துக் கொண்டு இந்துத்துவ அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனியார் சட்டத்தில் கைவைப்பது என்பது அவர்களது இஸ்லாமிய வெறுப்புணர்வின் வெளிப்பாடுதான் என்பது வெளிப்படையானது! அவர்களின் இந்த இஸ்லாமிய வெறுப்புணர்வுத் திட்டம் நாடு பூராகவும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோஷத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக இந்து மக்களைத் தூண்டிவிடவும், அதன் மூலம் ஏற்படும் இனவாத விரிசலில் குளிர்காயவும் அரசியல் ஆதாயம் தேடவுமே இ;த்தகைய அமைப்புக்கள் முயல்கின்றன.
இலங்கையில் இனவாதத்தின் மூலம் அரசியல் கோட்டை கட்டக் களமிறங்கிய இனவாத சக்திகளும் இதே பாணியைத்தான் கடந்த காலங்களில் கையாண்டன. ஹிஜாப், முஸ்லிம் தனியார் சட்டம், ஹலால்… போன்ற பிரச்சினைகளைத் தூக்கிப் பிடித்தன. இந்த இனவாத சக்திகளின் வெளிப்படையான இஸ்லாமிய எதிர்ப்புணர்வுத் திட்டங்கள் அடங்கிப் போன நிலையில் இது குறித்த சர்ச்சைகள் உள்ளிருந்து வர ஆரம்பித்துள்ளன.
முஸ்லிம் பெண்கள் முகம் மூடுவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாவைத் தொடர்ந்து ஏற்பட்ட முரண்பட்ட போக்குகள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றன.
இதே போன்று முஸ்லிம் தனியார் சட்டத்திலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோஷம் சில முஸ்லிம் பெண்களாலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவை களையப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை, இருக்கவும் முடியாது. ஆனால், எந்த வகையிலும் இஸ்லாத்தில் உள்ள ஒன்றை மாற்றவோ திருத்தவோ யாருக்கும் உரிமை கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டியுள்ளது.
பெண்களின் திருமண வயது எல்லையை நிர்ணயிப்பது என்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
பருவமடைந்த ஆண், பெண் இருபாலாரும் திருமணத்திற்கு உடல் ரீதியாக தயாராகிவிட்டனர். என்றலும் அவர்கள் திருமணம் செய்வதா இல்லையா? என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். பெண்கள் பருவ வயதை அடைந்தும் உரிய பக்குவத்தை அடையாமல் திருமணத்தில் இணைவதால் பல பிரச்சினைகளுக்குள்ளாகின்றனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இத்தனை வயதுக்கு முன்னர் திருமணம் செய்யக் கூடாது என்று சட்டம் இயற்றுவது தவறானதாகும்.
படிக்கும் வயதில், புத்தகத்தை சுமக்க வேண்டிய பருவத்தில் நான் பிள்ளைகளை சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டேன். எனவே, பதினெட்டு அல்லது இருபது வயதுக்கு முன்னர் பெண்களைத் திருமணம் முடித்துக் கொடுப்பதை தடுக்கும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது ஆபத்தான வாதமாகும்.
பருவ வயதை அடைந்த பெண் திருமணம் செய்விக்கப்படலாம் என்றுதான் இஸ்லாம் கூறுகின்றதேயல்லாமல் கட்டாயம் இளவயதில் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறவில்லை.
இன்று நாட்டில் பெண்கள் பல பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். கணவனை இழந்த அல்லது விவாகரத்தான ஒரு பெண் தனது 14-16 வயது இளம் பிள்ளையை வீட்டில் வைத்துக் கொண்டு பாதுகாக்க முடியாது என்ற நிலையை அடைகின்றாள். இப்போது அவளை திருமணம் முடிக்க ஒருவர் முன்வருகின்றார். இந்தத் தாய் அப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைப்பதுதான் பாதுகாப்பானதாகும். சட்டம் வயதெல்லையைக் கட்டாயப்படுத்தினால் அந்தத் தாயினதும் பிள்ளையினதும் நிலைதான் என்ன?
தாயை இழந்த பல பெண் பிள்ளைகள் பாட்டியின் (உம்மும்மாவின்) பராமரிப்பில் வளர்கின்றனர். இப்பிள்ளை பருவ வயதை அடைந்ததும் கலியாணத்தைக் கட்டி வைத்து தனது பொறுப்பிலிருந்து விடுபட இந்தப் பாட்டி விரும்புகிறாள். அல்லது அந்தப் பாட்டி வயதானவளாக இருந்தால் பாதுகாப்பு மற்றும் செலவினங்கள் உட்பட இன்னோரன்ன நியாயங்களை கருத்திற் கொண்டு, திருமணம் செய்து வைக்க நினைக்கும் பட்சத்தில் சட்டம் வயதெல்லையைக் கூட்டினால் இவள் என்ன செய்வாள்?
சில பெண் பிள்ளைகள் மிக இள வயதில் பாலியல் நாட்டம் மிகைத்தவர்களாக இருக்கலாம். அவர்களது பேச்சு, நடவடிக்கைகள் மூலமாக இதை உணரும் பெற்றோர் அவள் தவறிவிடுவதற்கு முன்னர் அல்லது அவளை சிலர் தவறான வழியில் பயன்படுத்துவதற்கு முன்னர் முறையாக மணமுடித்துக் கொடுக்க விரும்புகின்றனர். சட்டம் வந்து வயதெல்லையை நீட்டினால் இத்தகைய நிலையில் இருக்கும் பெற்றோரின் நிலை என்ன?
சில இளம் பிள்ளைகள் சிறு வயதிலேயே காதல் வயப்படுகின்றனர். அதில் சற்று எல்லை மீறியும் சென்றுவிடுகின்றனர். சில வேளை பாய்ந்து போய்விடுவார்கள் என்ற அச்சம் நிலவுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் சட்டத்தில் இடமிருந்தால் அவர்களை முறையாக இல்லறத்தில் இணைத்து விடலாம். இல்லையென்றால் அவர்கள் இஸ்லாமிய சட்டத்திற்குப் புறம்பான தொடர்பாடலைத் தொடர அனுமதிக்கும் நிலை நீடிக்கும். இந்த நேரத்தில் சட்டம் இடங்கொடுத்திருந்தால் திருமணத்தின் மூலம் மானத்தையும், மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். அத்துடன் தேவையற்ற கோபதாபங்கள், சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதியும் ஒற்றுமையும் உறுதிப்படும்.
தனக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்வை வைத்துக் கொண்டு திருமண வயதெல்லையை நீடிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துபவர்கள் இந்த நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான, குடும்பங்களுக்குக் கூறப்போகும் தீர்வு என்ன என்று சிந்திக்க வேண்டும்.
இஸ்லாமிய தனியார் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும் என்பதை ஒரு போராட்டமாகவும் பொதுப் பிரச்சினையாகவும் அடுத்தவர் முன்னிலைக்கு எடுத்துச் செல்வது எமக்கிருக்கும் தனியார் சட்ட உரிமையில் அடுத்தவர் கை வைப்பதற்கும் இஸ்லாத்தைப் பற்றிய தவறான விமர்சனங்களை முன்வைப்பதற்கும் எமது உள் விவகாரங்களில் தேவையில்லாமல் மூன்றாம் நபர் வந்து மூக்கை நுழைப்பதற்குமே வழிவகுக்கும்.
எனவே, இது போன்ற விடயங்கள் நமக்குள்ளேயே நியாயமாகக் கலந்துரையாடப்பட்டு குர்ஆன் சுன்னாவுக்கு முரணான முடிவுகள் இருந்தால் அவற்றை இனங் கண்டு நீக்குவதுடன் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சமூக நலன் என்ற கண்ணோட்டத்துடன் பிரச்சினைகள் அணுகப்பட வேண்டும்.
மார்க்கத்தை அறியாதவர்கள் மார்க்க முடிவுகளை மாற்றும் விதமான செயற்பாடுகளில் இறங்கக் கூடாது. மார்க்க ரீதியான விடயங்களை குர்ஆன், சுன்னா நிழலில் அறிஞர்கள் ஒளிவு மறைவின்றி முடிவு செய்வார்கள். பொது விவகாரங்களில் அது பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து கற்றறிந்தவர்கள் வழிகாட்டலாம். மார்க்க முடிவுகளை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
மேலும், தனியார் சட்டம் என்பது அல்லாஹ் இந்நாட்டில் நமக்குத் தந்த மாபெரும் அருளாகும். நாமே அதை அழித்தொழித்துவிடும் நடவடிக்கைகளில் இறங்கிவிடக் கூடாது என்பதில் நாம் ஒவ்வொருவரும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் உயிர், உடைமை, நிம்மதி, சுதந்திரம், மார்க்கம்…. என்று எண்ணற்ற விடயங்களில் எல்லையில்லாத் துன்பங்களை அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை வரும். ஆகவே, சுயநலமில்லா உள்ளங்களாக மாறி நாம் அனைவரும் இது விடயத்தில் கூடுதல் கரிசனை கொண்டு செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
வடகிழக்கு இணைப்பு என்ற சூடான அரசியல் விவகாரம் களத்தில் பேசப்படும் சூழ்நிலையில் ஹிஜாப், தலாக், ஜீவனாம்சம், பெண்களின் திருமண வயதெல்லை… என்கின்ற உள்வீட்டுக் குத்து, வெட்டுக்கள் உருவாக்கப்பட்டுள்ளமைக்குப் பின்னால் இஸ்லாமிய விரோத சக்திகளின் சூழ்ச்சிகள் உள்ளனவோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்து உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்கச் செய்து ஈருலக வெற்றியையும் தந்தருள்வானாக!..