ஈஸா நபி மரணித்துவிட்டார்களா? | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 17

‘முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவர் மரணித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் வந்தவழியில் புறமுதுகிட்டுச் சென்று விடுவீர்களா? எவன், தான் வந்த வழியே புறமுதுகிட்டுச் சென்று விடுகின்றானோ, அவன் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் விரைவில் கூலி வழங்குவான். ‘ (3:144)

உஹதுப் போரின் போது முஹம்மது நபி கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்ட போது நபித்தோழர்களில் சிலர் நிலை தடுமாற்றம் அடைந் தார்கள். இதைக் குறித்தே இந்த வசனம் அருளப்பட்டது.

முஹம்மத் நபி(ச) ஒரு இறைத்தூதர்தான். அவருக்கும் மரணம் உண்டு என்று இந்த வசனம் சொல்கின்றது. இவருக்கு முன்னர் வாழ்ந்த இறைத்தூதர்களும் மரணித்தேயுள்ளார்கள் என்றும் கூறப்படுகின்றது.

ஈஸா நபி முஹம்மத் நபிக்கு முன்னர் வந்த இறைத்தூதராவார்கள். முஹம்மத் நபிக்கு முன்னர் வந்த இறைத்தூதர்கள் மரணித்துவிட்டார்கள் என்றால் ஈஸா நபியும் மரணித்துவிட்டாரா என்ற சந்தேகம் எழலாம்.

முஹம்மத் நபிக்கு முன்னர் வந்த தூதர்கள் இறந்துவிட்டார்கள் என்ற வசனம் இறங்கும் போது முஹம்மத் நபி மரணித்திருக்கவில்லை. ஆனால், அவரும் தூதர்தான்| அவருக்கும் மரணம் உண்டு என்று இந்த வசனம் கூறுகின்றது. இந்த விளக்கத்துடன் பின்வரும் வசனத்தைப் பாருங்கள்.

‘மர்யமின் மகன் மஸீஹ்’ ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் பல தூதர்கள் சென்றுவிட்டனர்.’ (5:75)

இந்த வசனம் ஈஸா இறைத்தூதர்தான். அவருக்கு முன்னர் வந்த இறைத்தூதர்கள் மரணித்து விட்டார்கள் என்று கூறப்படுகின்றது. அதாவது ஈஸாவுக்கு முந்திய இறைத்தூதர்கள் மரணித்து விட்டார்கள் என்றால், ஈஸா நபி இன்னும் மரணிக்க வில்லை. ஆனால் மரணமே இல்லாதவர் இல்லை. அவரும் மரணிக்கக் கூடியவர்தான் என்ற செய்தியைத்தான் கூறுகின்றது.

எனவே, இந்த வசனத்தை (3:144) வைத்து ஈஸா நபி மரணித்துவிட்டார் என வாதிக்க முடியாது. இந்த இரு வசனங்களும் ஹிழ்ர் நபி மரணித்து விட்டார்கள் என்ற செய்தியையும் உணர்த்துகின்றது. ஹிழ்ர் நபி ஹயாத்து நபி அப்பா என்று சிலரால் அழைக்கப்படுகின்றனர். அவர் இன்னும் மரணிக்கவில்லை என்று சிலர் நம்புகின்றனர். இது தவறானது என்பதை இந்த இரண்டு வசனங்கள் மூலமும் அறிய முடியும்.

அச்சமும் இணை வைத்தலும்:

‘அல்லாஹ் எவ்வித ஆதாரத்தையும் இறக்காததை, நிராகரித்தோர் அவனுக்கு இணையாக்கியதனால் அவர்களது உள்ளங்களில் நாம் பீதியை ஏற்படுத்துவோம். அவர்களது ஒதுங்குமிடம் நரகமாகும். அநியாயக் காரர்களின் தங்குமிடம் மகா கெட்டது. ‘ (3:151)

போர்க்களங்களில் உறுதி அவசியமாகும். படையில் உள்ளவர்களின் உள்ளத்தில் அச்சம் ஏற்பட்டால் படையை முன்னோக்கி நகர்த்த முடியாது. போர்க்களத்தில் காபிர்களின் உள்ளத்தில் ‘அர்ருஃப்’ எனும் அச்சத்தையும் கலக்கத்தையும் போட்டதாக அல்லாஹ் கூறுகின்றான். அதற்கு அல்லாஹ்வே ஒரு காரணத்தையும் சொல்கின்றான். அவர்கள் இணைவைக்கும் காரணத்தால் அவர்களின் உள்ளத்தில் அச்சத்தைப் போடுவதாக அல்லாஹ் கூறுகின்றான்.

எனவே, இணைவைத்தல் என்பது உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்தும். தவ்ஹீதில் உறுதியாக இருப்பது, மனோபலத்தையும் உறுதியையும் தரும். முஸ்லிம் சமூகமும் இணைவைத்தலை விட்டால்தான் உள உறுதி ஏற்படும் என்ற உண்மையை இந்த வசனத்தின் மூலம் உணரலாம்.

மன்னிக்கப்பட்ட நபித்தோழர்கள்:

‘அல்லாஹ்வின் உதவியினால் (உஹதுப் போரில்) நீங்கள் அவர்களை வெட்டி வீழ்த்திய போது அவன் தன்னுடைய வாக்கை உங்களுக்கு நிச்சயமாக உண்மைப்படுத்தினான். நீங்கள் விரும்புவதை அவன் உங்களுக்குக் காண்பித்த பின்னரும் நீங்கள் (நபி நிறுத்தி வைத்திருந்த இடத்திலிருந்து இறங்கி) மாறுசெய்து, இவ்விடயத்தில் தர்க்கித்ததால் தளர்ந்து போனீர்கள். உங்களில் இவ்வுலகத்தை விரும்பு வோரும் இருக்கின்றனர். மேலும், உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கின்றனர். பின்னர் உங்களைச் சோதிப்பதற்காக அவர்களை விட்டும் அவன் உங்களைத் திருப்பிவிட்டான். நிச்சயமாக அவன் உங்களை மன்னித்துவிட்டான். அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது அருள்பாலிப்பவனாவான்.’
(3:152)

உஹதுக் களத்தில் நபித்தோழர்களால் சில தவறுகள் நடந்தன. போர் துவங்குவதற்கு முன்னரே முனாபிக்குகளின் நிலை குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

நபியவர்களால் ஒரு குன்றின் மீது நிறுத்தப் பட்டிருந்த வில் வீரர்களில் சிலர் நபியவர்களதும் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட தலைவரினதும் கட்டளையை சந்தர்ப்ப சூழ்நிலையைத் தவறாகப் புரிந்து மீறினர். கனீமத் பொருட்களைத் திரட்டுவதில் ஆர்வம் காட்டினர். நபியவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தியின் பின்னர் சிலர் போர்க் களத்தை விட்டும் விரண்டோடினர். இவ்வாறு பல தவறுகள் நிகழ்ந்தன.

இவ்வாறு பல தவறுகள் நிகழ்ந்தாலும் ‘வலகத் அபா அன்கும்’ – ‘நிச்சயமாக அல்லாஹ் உங்களை மன்னித்துவிட்டான்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே, நபித்தோழர்கள் தவறு செய்திருந்தாலும் அது மன்னிக்கப்பட்டுவிட்டது. இப்போது படிப்பினைக்காக இந்த வரலாறுகளை நாம் பேசலாம். இருந்தாலும் இதை வைத்து நபித்தோழர்களை விமர்சனம் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சின்னக் கவலையை நீக்க போலியான பெரும் கவலை:

‘இத்தூதர் உங்களுக்குப் பின்னால் (நின்று) உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் வெருண்டோடிச் சென்றதை (எண்ணிப் பாருங்கள்). உங்களுக்கு (வெற்றி) தவறியதற்காகவும், (இழப்பு) ஏற்பட்டதற் காகவும் நீங்கள் கவலை கொள்ளாதிருக்க துன்பத்துக்கு மேல் துன்பத்தை உங்களுக்கு அவன் பிரதிபலனாகத் தந்தான். நீங்கள் செய்பவை பற்றி அல்லாஹ் நன்கறிந்தவன்.’ (3:153)
உஹதில் ஆரம்பத்தில் வெற்றி பெற்ற முஸ்லிம்கள் பின்னர் இழப்புக்களை சந்தித்தனர். பல உயிர்களை இழந்தனர். இதனால் வேதனைப்பட்டனர். இழப்புக்களுக்கு தமது தவறுகள்தான் காரணம் என்பது அவர்களது உள்ளத்தைக் காயப்படுத்தியது. இதனால் கவலையில் சோர்ந்து போனார்கள். அவர்களின் கவலையைப் போக்க மிகப்பெரும் போலியான ஒரு கவலையை ஏற்படுத்திதாக அல்லாஹ் கூறுகின்றான்.

தோல்விக் கவலையில் இருந்தவர்களுக்கு மத்தியில் நபியவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற போலியான பெரிய கவலை ஏற்படுத்தப்பட்டது. அவர்களது சின்னக் கவலைகள் எல்லாம் இதனால் மறைந்து போயின. நபியவர்கள் மரணித்துவிட்டார்கள் என்ற பெரும் கவலை மட்டுமே அவர்களது உள்ளத்தை ஆட்கொண்டிருந்தது.

அதன் பின்னர் நபியவர்கள் மரணிக்கவில்லை என்பதை நபித்தோழர்கள் அறிந்த போது மிகப் பெரும் மகிழ்ச்சியை அவர்கள் அடைந்தார்கள். அவ்வளவு இழப்புக்களுக்கு மத்தியிலும் அவர்கள் மகிழ்வடைந்தார்கள்| உத்வேகம் அடைந்தார்கள்.

இழப்புக்களைச் சந்தித்த அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த ‘கவுன்ஸலிங்’ – ஆற்றுப்படுத்தும் வழிமுறை இதுவாகும். இன்றும் உளவியலாளர்களால் இந்த வழிமுறைதான் கையாளப்படுகின்றது. குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இது சிறந்த சான்றாக உள்ளது.

பெரும் பெரும் ஆய்வாளர்களால் ஆய்வு செய்து இன்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த வழிமுறையை எழுத, வாசிக்கத் தெரியாக முஹம்மத் எனும் தனி மனிதனால் சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர் சொல்ல முடியாது. உள்ளங்களை அறிந்த இறைவனிட மிருந்துதான் இந்த வேதம் வந்திருக்க வேண்டும் என்பதை சிந்திப்பவர்கள் இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

மன்னிக்கப்பட்ட உஸ்மான்(வ):

‘இரு அணியினரும் (போருக்காக) நேருக்கு நேர் சந்தித்த அந்நாளில் உங்களில் நிச்சயமாக எவர்கள் புறமுதுகிட்டுச் சென்றார்களோ, அவர்கள் செய்த (தவறுகள்) சிலவற்றின் காரணமாக ஷைத்தானே அவர்களை நிலைகுலையச் செய்தான். எனினும், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், சகிப்புத் தன்மை உடையவன். ‘ (3:155)

போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுவது பெரும் பாவமாகும். உஹதில் சிலர் இந்தத் தவறைச் செய்தார்கள். அவர்களை மன்னித்துவிட்டதாக இந்த வசனம் கூறுகின்றது.

இந்தக் கூட்டத்தில் உஸ்மான்(வ) அவர்களும் ஒருவராவார்கள். உஸ்மான்(வ) அவர்கள் மீது குறை கூறியவர்கள் இதையும் ஒரு காரணமாகக் குறிப்பிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அல்லாஹ் மன்னித்த பின்னர் குறை காண யாருக்கும் அனுமதியோ, அதிகாரமோ இல்லை என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

தொடரும்…..
இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.