இஸ்லாம் இனவாதமுமல்ல மதவாதமுமல்ல. | Article.

ஒருவர் ஒரு மொழியைப் பேசுவது மொழிவாதமாகாது! தனது மொழி அல்லாத ஏனைய மொழிகளை எதிர்ப்பதே மொழிவாதமாகவும் மொழி வெறியாவும் இருக்கும். இவ்வாறே ஒருவர் ஓரு இனத்தைச் சேரர்ந்தவராக இருப்பதிலும் பிரச்சினை இல்லை. தனது இனத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதும் பிழையில்லை. பிற இனத்தை இழிவாகப் பேசுவதும் எதிரர்ப்பதுமே இனவாதமாகும்.

இவ்வாறே ஒருவர் தனது மதத்தைப் பின்பற்றுவது தவறன்று. அது அவரவர் கொள்கையைப் பொறுத்ததாகும். ஆனால், தனது மதத்தைப் பின்பற்றும் ஒருவர், அடுத்தவர்கள் தமது மதத்தைப் பின்பற்றுவதைத் தடுப்பதும், அதற்கு முட்டுக்கட்டை போடுவதுமே மதவாதமாகும். இஸ்லாம் இந்த இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒருபோதும் அங்கீகரிக்காது!

‘மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்து, நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் மிக பயபக்தியுடையவரே, நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக கண்ணியத்திற்குரியவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.” (49:13)

முழு மனித சமூகத்தையும் அழைத்தே இங்கு பேசப்படுகின்றது. முஸ்லிம்களே! என விழித்து இங்கு அழைக்கப்படவில்லை. எனவே, முழு மனித சமூகத்திற்குமான அழைப்பாகவே இது உள்ளது.

ஒரே படைப்பாளன்:
‘மனிதர்களே! உங்களை நாம் படைத்தோம்” என்று கூறப்படுகின்றது. முழு மனித சமூகத்தையும் ஒரே இறைவன்தான் படைத்தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். அல்லாஹ்வை கடவுளாக ஏற்றுக் கொண்ட முஸ்லிமும், அவனைக் கடவுளாக ஏற்க மறுக்கும் முஸ்லிம் அல்லாத இறை மறுப்பாளர்களும் கடவுளே இல்லை எனக் கூறி வாதிடும் நாத்திகரும் அல்லாஹ் வால் படைக்கப் பட்டவர்கள் என்பதே இஸ்லாத்தின் கோட்பாடாகும்.

எனவே, முழு மனிதரர்களையும் ஒரே இறைவனின் படைப்பாகப் பார்க்கும் போது அங்கே இனவாதத்திற்கு இடம் இல்லாமல் போய்விடுகின்றது.

‘மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவி லிருந்து படைத்த உங்கள் இரட்சகனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் அதிலிருந்து அதன் துணைவியைப் படைத்து, அவையிரண்டிலிருந்தும் அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச்செய்தான். எவனைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கேட்டுக் கொள்வீர்களோ அந்த அல்லாஹ்வையும் மேலும், இரத்த உறவுகளை(த் துண்டித்து நடப்பதை)யும் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.” (4:1)

இங்கும் மனிதரர்கள் அனைவரும் ஒரே இறைவனால் ஒரு ஆண்-பெண் சோடியில் இருந்து படைக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுவது அவதானிக்கத்தக்கதாகும். இந்த வகையில் முழு மனித சமூகத்தையும் அல்லாஹ்வின் படைப்பாகப் பார்க்கும் போது பாகுபாடும், இனவாத சிந்தனைப் போக்கும் இல்லாமல் போய்விடும்.

ஒன்றே குலம்!:
ஒரு சமூகம் மற்ற சமூகத்தை தரம் தாழ்த்திப் பார்ப்பதுதான் சமூக முரண்பாடு களுக்கு அடிப்படையாக அமைகின்றது. சிலர் பிறப்பின் அடிப்படையில் ஓர் இனக்குழுவை உயர்சாதியாகவும் மற்ற இனக்குழுவைத் தாழ்ந்த சாதியாகவும் நோக்குகின்றனரர். இஸ்லாம் இதை வன்மையாக எதிரர்க்கின்றது.

இதையே இந்த வசனத்தின் அடுத்த பகுதி கூறுகின்றது.

‘ஒரே ஆண்-பெண்ணில் இருந்து உங்களையும் படைத்தோம்” என்று இங்கே கூறப்படுகின்றது. முழு மனித சமூகமும் ஆதம்-ஹவ்வா என்ற ஒரு சோடியில் இருந்து பிறந்தவர்கள் என இஸ்லாம் கூறுகின்றது. இந்த அடிப்படையில் அனைவரும் ஒரு தாய் தந்தையர்களின் பிள்ளைகள் எனக் குரர்ஆன் கூறுகின்றது.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற அடிப்படையில் வாழும் போது இனவாதத்திற்கு இடமில்லாமல் போய்விடும்.

ஏற்றத்தாழ்வு இல்லை:
மனித இனத்தில் வேறுபட்ட இனங்கள், குழுக்கள் இருப்பதை இஸ்லாம் மறுக்கவில்லை. ஆனால், அதை ஏற்றத்தாழ்வு கொண்டு பார்ப்பதற்கான அடிப்படையாக ஆக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் போதனையாகும்.

ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவே உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். அதை வைத்து பெருமை பேசுவதற்கோ பேதங்களை ஏற்படுத்துவதற்கோ அல்ல என குர்ஆன் கூறுகின்றது.

இனத்தின் அடிப்படையிலோ, நிறத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ மனித இனங்களைப் பிரித்துக் கூறு போடுவதை இஸ்லாம் கண்டிக்கின்றது.

‘இன்னும், வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் உங்களது நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.” (30:22)

நபி(ச) அவர்கள் வாழ்ந்த சமூகத்தில் சிவப்பு நிறத்தையுடையவர்கள் கறுப்பர்களை விட சிறப்பிக்கப்பட்டார்கள். அரபு மொழி பேசுபவர்கள் வேறு மொழி பேசுபவர்களை விடவும் சிறப்பிக்கப்பட்டார்கள்.

அரேபியர்கள் அரேபியர் அல்லாதவர்களை விடவும் சிறப்புப் பெற்றவர்கள் அல்லர். அவ்வாறே அரபு அல்லாதவர்கள் அரேபியர்களை விடவும் சிறப்புப் பெற்றவர்களும் அல்லர். கறுப்பரை விட சிவப்பருக்கு சிறப்புமில்லை, சிவப்பரை விட கறுப்பர் சிறந்தவரும் அல்லர். அவரவர் பண்பாட்டின் மூலமே சிறப்புப் பெறுவர் என இறைத்தூதர் முஹம்மத்(ச) அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.

இந்த அடிப்படையில் சிங்கள மொழி பேசுபவர்கள் தமிழ் மொழி பேசுபவர்களை விடச் சிறந்தவரும் அல்லர், தமிழ் மொழி பேசுபவர்கள் சிங்கள மொழி பேசுபவரை விடவும் சிறந்தவருமல்லர். நல்ல பண்பாடுகளை உடையவரே சிறந்தவராவார் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டால் அங்கே இனவாதத்திற்கோ மொழிவாதத்திற்கோ இடமில்லாது போய்விடும் என்பது வெளிப்படையானதாகும்.

இறையச்சமே உயர்வு!:
இறையச்சமுடையோரே அல்லாஹ் விடத்தில் சங்கைக்குரியவராவார் என மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகின்றது. இறையச்சத்தின் அடிப்படையில் அவரவரது நம்பிக்கை நடத்தையின் அடிப்படையிலேயே ஒருவர் கண்ணியத்தைப் பெறுவார். அக்கண்ணியம் கூட குற்றவியல் சட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தாது. அல்லாஹ்விடத்தில் இறையச்சம் உள்ளவர்கள் சங்கையுடையவராக இருப்பார். ஆனால், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் அங்கே சங்கை கவனிக்கப்பட மாட்டாது. சட்டம்தான் கவனிக்கப்படும். எனது மகள் பாத்திமா திருடினாலும் அவளது கரத்தை வெட்டுவேன் என்பது நபி(ச) அவர்களின் பகிரங்க பிரகடனமாகும். எனவே, இனங்களுக்கிடையே பாகுபாடு காட்டுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

மதவாதமில்லை:
இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கை நெறியாகும். இஸ்லாம் என்பது உண்மையான மார்க்கம் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். முழு மனித சமூகத்திற்குமான வழிகாட்டலாகவே இஸ்லாம், இஸ்லாமிய மார்க்கத்தை அறிமுகம் செய்கின்றது. இஸ்லாம் மார்க்க விவகாரங்களில் விட்டுக் கொடுப்பை ஏற்கவில்லை.

‘அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக (அங்கீ கரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். ” (3:19)

‘யார் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக ஏற்க விரும்புகின்றானோ அது அவனிடமிருந்து அங்கீகரிக்கப்படமாட்டாது. அவன் மறுமையில் நஷ்டவாளர்களில் உள்ளவனாவான்.” (3:85)

இதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். எனவே, ஒரு முஸ்லிம் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில்தான் வாழ வேண்டும். அது அல்லாஹ்வால் அவனுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டல். அதில் மாற்றங் களையோ திருத்தங்களையோ செய்ய அவனுக்கு அனுமதி இல்லை.

ஆனாலும், இதைப் பின்பற்றும் படியாரும் யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது. நிர்ப்பந்திக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும்.

‘இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டி லிருந்து நேர்வழி மிகத் தெளிவாகி விட்டது. எவர் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) ‘தாகூத்”தை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டவராவார். மேலும் அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிந்த வனுமாவான். ” (2:256)

மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்தப் போதனை மதவாதத்தை மறுக்கின்றது! தனது மதத்தை அடுத்தவர் மீது திணிப்பதே மதவாதமாகும். அதை இஸ்லாம் ஏற்கவில்லை.

எனது மதத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று சொன்னாலோ, உங்களுடைய மதத்தை நான் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் சொன்னாலோ அங்கே மதவாதமும் மத முறுகல்களும் எற்படும். எனவே. ஒரு முஸ்லிம் தனது மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றும் அதேவேளை, அடுத்தவர் அவரது மதத்தைப் பின்பற்றுவதை தடுக்கவோ, இடைஞ்சல் செய்யவோ முற்படமாட்டான்.

‘உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.” (109:6)

‘அல்லாஹ்வின் விடயத்தில் எம்முடன் தர்க்கம் செய்கின்றீர்களா? ‘அவனே எங்களின் இரட்சகனும், உங்களது இரட்சகனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு! உங்கள் செயல்கள் உங்களுக்கு! நாங்கள் அவனுக்கே (எங்கள் செயல்களை) கலப்பற்றதாக செய்பவர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (2:139)

இங்கே எனது மார்க்கம் எனக்கு உங்கள் மார்க்கம் உங்களுக்கு என்றும், எமது செயற்பாடுகள் எமக்கு உங்கள் செயற்பாடுகள் உங்களுக்குரியது என்றும் கூறப்படுகின்றது. இந்தப் போக்கு மதவாதப் போக்கை அழிக்கும் வழிமுறையாகும்.

உதாரணமாக, மாட்டிறைச்சி உண்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே வேளை, சிலர் பன்றியை சாப்பிட்டு வருகின்றனர். நான் பன்றியை உண்பதைத் தவிர்க்கலாம். அது எனது மத நிலைப்பாடு. எனது மார்க்கம் பன்றி உண்பதைத் தடுத்துள்ளது. அதை நீயும் உண்ணக் கூடாது என மாற்று மதத்தவர்களை நான் கட்டாயப்படுத்தவும் கூடாது. எமது மதத்தில் மாட்டிறைச்சி உண்ணக் கூடாது, அதனால் நீ இறைச்சி உண்ணக் கூடாது என மற்றவர்கள் முஸ்லிமைத் தடுக்கவும் கூடாது.

அவரவர் அவரவர் மதத்தைப் பின்பற்றும் அதே வேளை, அடுத்தவர்களின் மத நிலைப்பாட்டிற்கு இடமளித்து புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளும் போது மதவாதம் அடிபட்டுவிடும்.

‘இதற்காகவே நீர் (அவர்களை) அழைத்து, நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியாக இருப்பீராக! மேலும், அவர்களின் மனோஇச்சைகளை நீர் பின்பற்றாதீர். வேதத்திலிருந்து அல்லாஹ் இறக்கி வைத்ததை நான் நம்பிக்கை கொண்டேன். மேலும், உங்களுக்கிடையே நீதி செலுத்துமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்தான் எங்களது இரட்சகனும் உங்களது இரட்சகனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும் உங்களுக்குமிடையில் எந்தத் தர்க்கமும் இல்லை. அல்லாஹ் (மறுமையில்) எம்மை ஒன்று சேர்ப்பான். மேலும், அவனிடமே மீளுதல் உள்ளது என்று (நபியே!) நீர் கூறுவீராக!”
(42:15)

ஒரு முஸ்லிம் இஸ்லாமிய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் அதே வேளை, மாற்று மதத்தவர்களுடன் நீதத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இங்கே கூறப்படுகின்றது. அத்துடன் மாற்று மதத்தவர்கள் அவர்களது மத நிலையை முஸ்லிம்களுக்குத் திணிக்கக் கூடாது என்றும் முஸ்லிம்கள் தமது மத நிலைப்பாட்டை அடுத்தவர்கள் மீது திணிக்கக் கூடாது என்றும் இந்த வசனம் போதிக்கின்றது. இதே வேளை, மாற்று நிலைப்பாட்டில் இருப்பவர்களுடனும் நீதத்துடன் நடக்க வேண்டும் என்ற போதனை மதவாதத்தை அழிக்கக் கூடியதாகும்.

மக்காவில் வாழ்ந்த சிலை வணக்கம் புரிவோர் முஸ்லிம்களின் மதக் கடமைகளுக்கு முட்டுக்கட்டையிட்டு வந்தனர். முரட்டுத்தனமாக அவர்களைத் தாக்கியும் வந்தனர். மதீனாவில் வாழ்ந்த யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்து வந்தனர். முஹம்மது நபியைக் கொலை செய்யவும் முயன்று வந்தனர். இதனால் முஸ்லிம்கள் அவர்கள் மீது வெறுப்பில் இருந்தனர். இந்த இரு சாராரும் மத ரீதியாகவும் முஸ்லிம்களை எதிர்த்து வந்தனர். சமூக ரீதியிலும் அவர்களுக்குத் துரோகம் செய்து வந்தனர். இந்த நிலையிலும் நீதம் தவறக் கூடாது என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டது.

‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் வுக்காக நீதியை நிலைநிறுத்துபவர்களாகவும் (அதற்கு) சாட்சியாளர்களாகவும் இருங்கள். ஒரு கூட்டத்தின் மீதுள்ள வெறுப்பு, நீங்கள் நீதி செலுத்தாதிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுவே பயபக்திற்கு மிக நெருக்கமானதாகும். மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாவான்.” (5:8)

மதம், இனம் பாராமல் எதிரிகளுடனும் நீதி-நியாயத்துடன் நடந்து கொள்ளுமாறு போதிக்கும் இஸ்லாம் எந்த வகையிலும் இனவாதத்தையோ மதவாதத்தையோ அங்கீகரிக்காது என்பது நிதர்சனமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.