சாதிகள் இல்லையடி பாப்பா என பாடினான் ஒரு புலவன். ஓன்றே குலம் ஒருவனே தேவன் என்பதும் ஆன்றோர் வாக்காகும். இருப்பினும் சாதி வேறுபாடு ஒழிந்ததாக இல்லை. உலக வரலாற்றில் இரத்தக் கறை படிந்த பக்கங்கள் பலவற்றில் சாதி, இன, மொழி, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு முக்கிய இடம் உண்டு. மனிதன் மனிதனை அடிமைப்படுத்தக் கண்டுபிடித்த ஒன்றுதான் உயர் சாதி, தாழ் சாதி வேறுபாடு. இதை மதத்தின் பெயரிலேயே மனித மனங்களில் பதித்தனர் மத புரோகிதர்கள்.
மனிதனைப் பிறப்பின் அடிப் படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எனப் பிரிப்பதை எதிர்த்து அதை ஒழித்த ஒரேயொரு மார்க்கம் இஸ்லாம்தான். சாதி வேறுபாடுகள் மக்கள் மத்தியில் போதிக்கப்பட்டதால் ஏராளமான சாதிக் கலவரங்களும், படுகொலைகளும் அன்றாடம் நடந்தேறி வருகின்றன. சாதி வெறியின் உச்சகட்டமாக கீழ் சாதி மக்கள் எனத் தாழ்த்தப்பட்ட மக்கள் செருப்புப் போடுவது, மேலங்கி போடுவது, பொதுக் குளங்களில் குளிப்பது…. என்று பல உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டனர். மனித இனம் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு கீழ்சாதிகள் மீது மலசலம் கழிக்கப்பட்டு, அவர்களின் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாம், முழு மனித சமூகமும் ஒரு ஆண்-பெண்ணிலிருந்து பிறந்தவர்கள் என்று கூறி மனிதப் படைப்பின் அடிப்படை – மூலம் ஒன்றே என்று சாதி வேறுபாட்டுக்கு சம்மட்டி அடி கொடுக்கின்றது.
‘மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்த உங்கள் இரட்சகனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் அதிலிருந்து அதன் துணைவியைப் படைத்து, அவையிரண்டிலிருந்தும் அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச்செய்தான். எவனைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கேட்டுக் கொள்வீர்களோ அந்த அல்லாஹ்வையும் மேலும், இரத்த உறவுகளை(த் துண்டித்து நடப்பதை)யும் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.’ (4:1)
முஸ்லிம், முஸ்லிம் அல்லாத அனைவரையும் விழித்தே இந்த வசனம் பேசுகின்றது.
மனித இனத்தில் குலங்களும் கோத்திரங் களும் இருப்பதை இஸ்லாம் மறுக்கவில்லை. ஆனால், சாதி குலங்களின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் மறுக்கின்றது.
‘மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்து, நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் மிகப் பயபக்தியுடையவரே, நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக கண்ணியத்திற் குரியவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்ளூ நுட்பமானவன்.’ (49:13)
இஸ்லாம் சாதி வேறுபாட்டை வெறும் கோட்பாட்டு ரீதியில் மட்டுமன்றி நடைமுறை ரீதியிலும் ஒழித்துக் கட்டியது. முஸ்லிம்கள் ஒரு தலைமையைப் பின்பற்றி அணியணியாக நின்று ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை நடாத்த வேண்டும். அப்படித் தொழும் போது பள்ளிக்கு முதலில் வருபவர் முதல் வரிசையில் நிற்பார். ஆண்டியானாலும் அரசனானாலும் அவர்களுக்கென தனி இடம் பள்ளிகளில் ஒதுக்கப்படமாட்டாது. தோளோடு தோள் சேர, காலோடு கால் சேர நின்று தொழ வேண்டும். சாதி வேறுபாடு இல்லாமல் இன, நிற, மொழி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்று போல் சமமாக நிற்பார்கள்.
முஸ்லிம்களின் புனிதத் தளத்தில் கஃபாவே முதலிடமானது. இங்கே முஸ்லிம்களாக இருக்கும் எவரும் உள்ளே செல்வார். அங்கு ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இருக்காது. இவ்வாறு நடைமுறை ரீதியில் சாதி வேறுபாடு ஒழிக்கப்பட்டது.
இவ்வாறே நிற வேறுபாடும் மக்கள் மத்தியில் எற்றத்தாழ்வை ஏற்படுத்தி வருகின்றது. இஸ்லாம் இதையும் ஒழித்துவிட்டது. நபி(ச) அவர்கள் மக்கா வெற்றியின் பின்னர் கஃபா எனும் புனிதத் தளத்திற்குள் நுழையும் போது தனது வலமும் இடமுமாக அழைத்துச் சென்றார்கள். அவ்விருவரும் நீக்ரோ கருப்பர்கள்! அடிமையாகவும், அடிமைப் பெண்ணின் புதல்வர்களாகவும் இருந்தவர்கள். ஒருவர் பிலால்(வ) மற்றவர் உஸாமா(வ). நபி(ச) அவர்கள் வெள்ளையரை விட கறுப்பரோ, கறுப்பரை விட வெள்ளையரோ சிறந்தவர் அல்லர் என்று கூறி வெள்ளை, கறுப்பு நிற வேறுபாட்டை ஒழித்தார்கள்.
இவ்வாறே மொழி வேறுபாடுகள் மூலமாக கலவரங்களும் போர்களும் மூண்டுள்ளன. இஸ்லாம் மொழியை ஒரு ஊடகமாக மட்டுமே பார்க்கின்றது. அறபிகள் மொழிப் பெருமை பேசுபவர்களாக இருந்தார்கள். அறபு அல்லாத மொழி பேசுபவர்களை அவர்கள் கேவலமாகக் கருதி வந்தனர்.
நபி(ச) அவர்கள், ‘அறபு மொழி பேசுபவர்கள் அறபு அல்லாத மொழி பேசுபவரை விட எந்த விதத்திலும் சிறந்தவரல்லர். அவ்வாறே, அறபு அல்லாத மொழி பேசுபவர் அறபு மொழி பேசுபவரை விட எந்த விதத்திலும் சிறந்தவர் அல்லர். இறையச்சத்தின் மூலமே மனிதன் உயர்வைப் பெறுவான்’ எனப் பிரகடனப்படுத்தினார்கள்.
‘இன்னும், வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் உங்களது நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’ (30:22)
மனிதர்கள் பல நிறத்தையும் தோற்றத்தையுமுடையவர்களாக இருப்பதும் மொழிகள் வேறுபட்டிருப்பதும் ஒரு அத்தாட்சி என இந்த வசனம் கூறுகின்றது. இந்த அடிப்படையில் இஸ்லாம் மொழி வேறுபாட்டையும் நிற வேறுபாட்டையும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஏனைய சிந்தனைவாதிகள் சிலர் இன, மொழி வேறுபாடுகளைக் கண்டித்திருந்தாலும் அந்தக் கொள்கையின் அடிப்படையில் வாழும் மக்களை உருவாக்குவதில் தோல்வியடைந் துள்ளனர். ஆனால், இஸ்லாம் சாதி வெறியையும், வேறுபாட்டையும் ஒழிப்பதில் வெற்றி காண்கின்றது. இதனால்தான் பெரியார் போன்ற பேரறிஞர்கள் இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே மாமருந்து என்று கூறினர்.
உலகில் சாதி, நிற வேறுபாட்டிற்கு எதிராக சிலர் குரல் கொடுத்திருப்பார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதி வேறுபாட்டை எதிர்த்திருப்பார்கள். கறுப்பர்கள் சிலர் வெள்ளை-கறுப்பு வேறுபாட்டை எதிர்த்திருப்பார்கள். ஆனால், முஹம்மது நபியவர்கள் ‘குறைஷிக் குலம்’ என்ற உயர் குலத்தில் பிறந்து சாதி வேறுபாட்டை எதிர்த்தார்கள். வெள்ளையராக இருந்து கொண்டு வெள்ளை-கறுப்பு வேறுபாடு வேண்டாம் என்றார்கள். அறபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அவர்கள் அறபி-அஜ்னபி பாகுபாடு கூடாது என்றார்கள்.
ஆணாக இருந்த அவர் பெண்ணுரிமைக் காகப் போராடினார். ஆஸ்திகராகவும், மத போதகராகவும் இருந்த அவர் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடினார். ஆன்மீகவாதியான அவர் ஆன்மீகத்தின் பெயரில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்தார். இப்படியான ஒரு புரட்சியாளரை விட வேறு யாரையும் வரலாறு சந்தித்திராது. சாதி வேறுபாடுகளுக்கு சமாதி கட்டி சமத்துவ சகோதரத்து சமூகத்துடன் சங்கமிக்க இஸ்லாம் உ(ள்ள)ங்களை அழைக்கின்றது!