இஸ்லாமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் | World Environment Day (June 05)

ஜூன் மாதம் 05 ஆம் திகதி World Environment Day – சர்வதேச சுற்றுச் சூழல் பாதுகாப்பு- தினமாகும். மனித வாழ்வு இயந்திரமயமான பின்னர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது தினம் தினம் கேள்விக் குறியாகிக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயந்திரங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றினூடாக எமது சுற்றுப் புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. நாம் வாழும் எமது பூமியின் இயற்கைத் தன்மையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு பக்குவமாக வழங்குவது எமது தார்மீகப் பொறுப்பாகும்.

இன்றைய அரசுகள் சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு பற்றி அதிகம் பேசினாலும், பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்தாலும், ஒவ்வொரு குடிமகனும் மாறாத பட்சத்தில் இது வெற்றியளிக்காது. அத்துடன் சில சர்வதேச கம்பனிகள், பண முதலைகளின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் பல்வேறுபட்ட திட்டங்கள் சுற்றுப் புறச் சூழலையும் புவியின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை அறிந்திருந்தாலும், கீழைத்தேய அரசியல் தலைமைகள் பணத்தை வாங்கிக் கொண்டு அவற்றுக்கு அனுமதியளிக்கின்றனர். அரசியல் தலைமைகளுக்கு பணம் பரிமாறப்பட்ட பின்னர், முறையான கழிவகற்றும் வழிமுறை இல்லாமல் கம்பனிகள் கழிவுகளை ஆற்று நீரிலும் குளங்களிலும் கலக்கும் வண்ணம் வெளியேற்றி எமது பூமித் தாயை மாசுபடுத்தி வருகின்றனர்.

மீத்தேன் போன்ற திட்டங்கள் சில பண முதலைகளைக் கோடி கோடியாக சம்பாதிக்க வழி வகுத்தாலும் நிலத்தடி நீரை அழித்து நாம் வாழும் பூமிக்கு அடியில் நெருப்பை உண்டாக்கி எமது வளங்களையெல்லாம் அழித்து வருகின்றன. எனவே, அரசுகளின் நடவடிக்கைகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.

அடுத்து, பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைத் தமது குப்பைத் தொட்டிகளாகப் பயன்படுத்தி வருகின்றன. அத்துடன் தமது தாய்நாட்டின் சுற்றுப் புறச் சூழல் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது, தமது நீர் வளம் குன்றிக் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக ஏழை நாடுகளில் தமது உற்பத்திச்சாலைகளை அமைத்து அங்குள்ள குறிப்பிட்ட சில வீதமானவர்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கி ஏழை நாட்டை சுரண்டி வருகின்றனர். இதற்கு ஊழல் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புக்களும் உள்ளன. எனவே, சூழல் பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டால் சுயநலவாதிகளால் எமது சூழல் சீர்குலைக்கப்பட்டு எமது எதிர்கால சந்ததிகள் பலத்த சவால்களைச் சந்திக்க நேரிடும்.

மரம் நடுதல்:
​சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதற்கு காடுகள் அழிக்கப்படுவது மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகும். வாழும் இடங்களை அதிகரிப்பதற்காக ஓரளவு காடுகள் அழிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது. அதே வேளை அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுவது ஆபத்தானதாகும். அத்துடன் விலங்குகளின் வாழ்வில் அது குழப்பத்தை ஏற்படுத்தும். இன்று விலங்குகள் மனித வசிப்பிடங்களுக்குள் நுழைந்து எமக்கு ஆபத்துக்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

காடுகள் அழிக்கப்படுவதைத் தவிர்ப்பதுடன் மரங்களை நடுவது காலத்தின் கட்டாயமாகும். ஐம்பது வருடங்கள் வாழும் ஒரு மரம் சுமார் 2700 கி. பிராண வாயுவை (ஒட்சிசனை) எமக்கு உற்பத்தி செய்து தருகின்றது. சராசரியாக ஒரு காகம் தனது வாழ்நாளில் பல்லாயிரம் மரங்களை நடுகின்றது. நாம் எமது இருப்புக்காக எமது சுவாசத்திற்காக எமது நிலத்தையும், வழிமண்டலத்தையும் பாதுகாக்க பசுமையடையச் செய்ய எத்தனை மரங்களை நாட்டியுள்ளோம்? இஸ்லாம் மரம் நடுவதை ஒரு இபாதத்தாக, வணக்க வழிபாடாகப் போதிக்கின்றது.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும். என அனஸ் இப்னு மாலிக் (ர) அறிவித்தார். (புகாரி: 2320)

​இந்த நபிமொழி மரம் நடுவதை மட்டுமன்றி நாம் வாழும் சுற்றுப் புறச் சூழலில் பறவை போன்ற உயிரினங்களின் இருப்பை உறுதிப்படுத்துவதும் வணக்கமாகப் போதிக்கப்படுகின்றது.

அடுத்து, நொடியில் உலகம் அழியும் என்றிருந்தாலும் ஒரு ஈத்த மரக் கன்று என் கரத்தில் இருந்தால் நான் அதை நாட்டிவிடுவேன் என முஹம்மத் (ச) அவர்கள் கூறி மரம் நடுவதை ஊக்கப்படுத்தினார்கள்.

அடுத்து, சுற்றுப் புறச் சூழல் மாசுபடுவதற்கு ஆலைக் கழிவுகள், மனிதக் கழிவுகள், வாகன மற்றும் குளிரூட்டிப் பெட்டிகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் முக்கிய காரணிகளாகத் திகழ்கின்றன. இந்தக் கழிவுகள் நீரில் கலந்தால் மீன்கள் உட்பட நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் நீர் அருந்தப்படுவதன் மூலம் அவ்வுயிரினங்கள் மூலமாக எமக்கே சிறிய, பெரிய ஆபத்துக்கள் வந்து சேர்கின்றன. அதே போன்று நிலத்தில் கலப்பதனால் அதிலிருந்து வளரும் உணவு வகைகள் மூலம் இந்தக் கழிவுகளின் தாக்கம் எமது உடலில் சேர்ந்து எமது ஆரோக்கியத்திற்கும் உயிருக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றன. ஆகவே, இதற்கு முறையான கழிவகற்றல் திட்டங்கள் தேவை!

அடுத்து, சூழல் மாசடைவதை அதிகரிக்கக் கூடிய வீணான பல செயற்பாடுகளை நாம் தவிர்க்கலாம். வாகனப் புகை, சிகரட் புகையை விட ஆபத்தானது. அவை ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் புவி வெப்பமடைகின்றது. அதன் மூலம் உலகின் பனிப் பாறைகள் உருகுகின்றன. இதன் மூலம் கடல் மட்டம் உயர்ந்து கடல் அரிப்பு ஏற்படுகின்றது. இப்படி பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.

இலங்கையின் எந்த பஸ் நிலையத்தைப் பார்த்தாலும் அங்குள்ள அனைத்து பஸ்களும் ஸ்டாட் செய்யப்பட்டு உறுமிக் கொண்டே இருக்கும். இதனால் சூழல் வெகுவாக மாசடைகின்றது. தேவையற்ற இரைச்சலை ஏற்படுத்துகின்றனது. எரிபொருள் எந்தப் பயனும் இன்றி வீணாகின்றது. நாம் இப்போது போகப் போகின்றோம் என்ற தோரணையில் பயணிகளை ஏமாற்றுவதற்காக இவர்கள் இப்படிச் செய்கின்றனர். இவற்றை சட்டம் போட்டு அரசு தடுக்கலாம். பயணம் ஆரம்பிக்கும் போது ஸ்டாட் பண்ணினால் போதுமானது என அறிவுறுத்தப்படலாம்.

நீர் நிலைகள்:
​சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பில் நீர் நிலைகளைப் பாதுகாப்பது பிரதானமானதாகும். நாம் எமது சில செயற்றிட்டங்களால் எமது சுய இலாபத்திற்காகவும் சோம்பேறித்தனத்திற்காகவும் நிலத்தடி நீரை அழித்துக் கொண்டிருக்கின்றோம். எம்மை அண்டியிருந்த குளங்கள், குட்டைகள், ஆறுகள், ஓடைகள், கிணறுகள் எல்லாம் கைவிடப்பட்டுவிட்டன.

​இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், நீர் வளத்தைப் பாதுகாப்பதும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் அவசியமாகும். எத்தனையோ நாடுகள் குடிப்பதற்கு உரிய நீர் இல்லாமல் வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றன.

​’பாதையோரங்களிலும் நிழல் தரும் இடங்களிலும் மலசலம் கழித்து மக்களின் சாபத்தைப் பெறுவதையிட்டும் நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

இந்த ஹதீஸ் சுற்றுப் புறச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

​’ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ர) அவர்கள் அறிவித்தார்கள்.’
(புகாரி: 239)

இந்த நபிமொழியில் நிலையான நீரில் சிறுநீர் கழிப்பதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள். இவ்வாறே நீர் நிலைகளுக்கு அருகில் மலசலம் கழிப்பதையும் நீர் நிலைகளை அசுத்தப்படுத்துவதையும் நபி(ச) அவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள்.

​அத்துடன் தண்ணீரை மிக மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கின்றது. ஓடுகின்ற நீரில் வுழூச் செய்தாலும் ஒரு உறுப்பை மூன்று முறைக்கு அதிகமாகக் கழுவுவதை வீண்விரையம் என்று கூறியுள்ளார்கள். இஸ்லாம் கூறும் அளவுக்கு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று எந்த மதமும் கூறியிருக்க முடியாது!

இன்று நாம் எமது வீடு, தரைகள் மற்றும் பாதைகள் என பல இடங்களை சீமேந்துக் கற்களைப் பதித்து மழை நீர் வீணாகக் கடலில் கலக்கும் நிலையை உருவாக்கியுள்ளோம். இதனால் நிலத்தடி நீர் இல்லாமல் போகின்றது. நபி(ச) அவர்களது காலத்தில் பள்ளிவாசல்கள் கூட வெறும் தரையாகவே இருந்தது. பாதை போன்ற விடயங்களைத் தவிர்க்க முடியாவிட்டாலும் சீமேந்துக் கற்களால் பூமியை அழகுபடுத்துவதை விட புற்களால் அழகு படுத்தலாம். அத்துடன் நிலத்தடி நீரை காக்கக்கூடிய மழைநீர் சேகரிப்புத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

​இஸ்லாத்தைப் பொருத்தவரை தாம் இருக்கும் சூழலை சுத்தமாக வைத்திருப்பது மார்க்கக் கடமையாகும். இதனை உணர்வுபூர்வமாக உணர்ந்து எமது சுற்றுப்புறச் சூழலின் இயற்கையைப் பேணி அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளும் இந்த பூமியின் ஜீவராசிகளும் நிம்மதியாக வாழக் கூடிய இடமாக அதைக் கையளிப்பது எமது தலையாய கடமையாகும். இதில் அரசுகளும் குடிமக்களும் அதி கூடிய கவனத்துடனும் தூர நோக்கத்துடனும் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.