இலங்கை முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையும் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கான சில முன்மொழிவுகளும்.

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையும் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கான சில முன்மொழிவுகளும்

இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர். பொதுவாக முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் என்ற எண்ணம்தான் முஸ்லிம் சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. இருப்பினும் கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் போட்டி போடும் அளவுக்கு சகல துறைகளிலும் முன்னேற்றங் கண்டு வருகின்றனர் என்பதுதான் உண்மையாகும்.

நாம் கல்வியில் பின்தங்கியுள்ளோம். ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது மிகப் பின்தங்கி யுள்ளோம் என்ற எண்ணம் தோல்வி மனப்பாங்கை ஏற்படுத்தி வருகின்றது. எனவே, இந்த மன நிலையை நீக்கி உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் செயல் படுவது அவசியமாகும்.

பின்னடைவுக்கான காரணம்:
ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் கல்வித்துறையில் மிகப் பெரும் முன்னேற்றம் கண்டிருந்தனர். இலங்கையில் முஸ்லிம்கள் மருத்துவத் துறையில் மிகப்பெரும் முன்னேற்றத்துடன் வாழ்ந்துள்ளனர். வர்த்தகம், வானவியல் புவியியல் பற்றிய அறிவும் ஆழ்ந்த அனுபவமும் முஸ்லிம்களிடம் இருந்தது. இலங்கை 433 ஆண்டுகள் அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த ஆக்கிரமிப்புச் சக்திகளினால் முஸ்லிம்களின் வர்த்தகச் செல்வாக்கும், பொருளாதார நலன்களும்,சமுக அந்தஸ்தும் சரிந்தன. பிரித்தானிய ஆட்சிக்கலத்தில் அவர்கள் கல்விக் கூடங்கள் மூலம் கிறிஸ்தவமயமாக்கலில் ஈடுபட்டனர்.

எனவே, உயிரை விட ஈமானை உயர்வாக மதித்;த முஸ்லிம்கள் மதமாற்றத்தை நோக்காகக் கொண்ட கல்வியை முழுமையாக புறக்கணித்தனர். இதனால் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஆங்கிலம் கற்பது ஹராம் என்ற பத்வாவை வழங்கினர்.

இது அவர்களின் அறியாமை அல்ல. சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் ஈமானை பாதுகாக்க அவர்கள் எடுத்த முடிவாகும். சிங்கள, தமிழ் மக்கள் இலங்கையில் கிறிஸ்தவ மயமாக்கலுக்கு உள்ளானர். ஒரு முஸ்லிம் கூட இந்த சதி வலையில் சிக்கவில்லை என்பது அக்காலத்து அறிஞர்களின் இந்த முடிவுக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

மார்க்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நிலையில் முஸ்லிம்கள் கல்வியை புறக்கணித்ததால் உலகாயுத ரீதியில் பல பின்னடைவுகளை சந்தித்தனர். 1889 வரை முஸ்லிம்களை பிரிதி நிதித்துவப்படுத்த ஒரு முஸ்லிம் பிரதிநிதி கூட இருக்கவில்லை. முஸ்லிம்களும் தமிழர்களே எனவே, அவர்களுக் கென்று தனியான பிரிதிநிதித்துவம் தேவையில்லை என்று கூறிக் கொண்டு சேர் பொன்னம்பலம் அவர்களே தமிழ் மற்றும் முஸ்லிம்களின் பிரதிநிதியாக பதவி வகித்து வந்தார்.

இந்த சூழ்நிலையில் மார்க்கத்துடன் சேர்த்து நவீன கல்வியைக் கற்பதன் அவசியத்தை உணர்ந்த அறிஞர் சித்திலெப்பை, ஒராபி பாஷா ஆகியோர் முஸ்லிம் கல்விச் சங்கம் என்ற பெயரில் கல்வி மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்;தனர். முதல் முஸ்லிம் பிரிதிநிதியாக 1889 ஒக்டோபர் 29 ஆம் திகதியில் நியமிக்கப்பட்ட MC. அப்துர்றஹ்மான், வாப்புச்சு மரைக்கார் போன்றோர் இவர்களது விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

இதன் விளைவாக அறபு மொழி இஸ்லாமிய மார்க்கக் கல்வியுடன் மேல்நாட்டுக் கல்வியையும் போதிக்கும் நோக்கில் 1884 இல் சோனகத் தெருவில் ‘அல்மத்ரஸதுல் கைரிய்யதுல் இஸ்லாமிய்யா’ எனும் பெயரில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அதுவே பின்னர் ‘ஹமீதிய்யா ஆங்கிலப் பாடசாலை’ என மாற்றம் பெற்றது.
இவ்வாறே இதே காலப்பகுதியில் கண்டியில் முதல் முஸ்லிம் பெண்கள் பாடசாலை நிறுவப்பட்டு அறிஞர் சித்திலெப்பை அவர்களின் சகோதரியே ஆசிரியையாக கடமையாற்றினார்.

இதே சூழ்நிலையில் சில பிரதேசங்களில் கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1860 ஏப்ரல் 01 இல் சம்மாந்துறை மேற்கே வீரமுனையை அன்மித்த பகுதியில் பெரிய பள்ளிவாயலுக்குப் பக்கத்தில் மெதடிஸ் மிஷன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதல் நாள் இரண்டு மாணவர்களும் ஒருவாரத்தினுள் 12 பிள்ளைகளும் கல்வி கற்பதற்காக இணைந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.

இது முஸ்லிம்களின் கல்விப் பின்னடைவைக் காட்டுகின்றது. முதல் தமிழ் பாடசாலை 1814 இல் ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம்களால் 1884 இல் முதன் முதல் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது என்றால் முஸ்லிம்கள் தமிழ் சமூகத்துடன் ஒப்பிடும் போது 70 வருடம் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

1990 இல் அரசாங்கத்தின் உதவி பெற்ற ஆரம்பப் பாடசாலைகளின் புள்ளி விபரம் கீழ்வருமாறு அமைந்துள்ளது.

1. பௌத்தப் பாடசாலை – 142
மாணவர் தொகை – 8700
2. இந்துப் பாடசாலை – 45
மாணவர் தொகை – 6560

3. முஸ்லிம் பாடசாலைகள் – 04
மாணவர்கள் – 362

இன்றைய நிலை…:
ஆரம்பத்தில் இருந்த இந்த மந்த நிலை தற்போது இல்லை என்ற உண்மையை முதலில் நாம் உணர வேண்டும். தற்போது இலங்கையில் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கையும் இதற்கான சிறந்த எடுத்துக் காட்டாகும்.

2017 தகவலின்படி இலங்கையின் மொத்தப் பாடசாலைகளின் எண்ணிக்கை 10194 ஆகும். இதில்

1. சிங்களப் பாடசாலை – 6966
விகிதாசாரம் – 68.33

2. தமிழ் பாடசாலை – 2302
விகிதாசாரம் – 22.58

3. முஸ்லிம் பாடசாலை – 920
விகிதாசாரம் – 9.08

2012 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி முஸ்லிம்கள் 9.07¤ ஆகும். இவ்வாறு நோக்கும் போது எமது விகிதாசாரத்திற்கு ஏற்றவாறு பாடசாலைகளைப் பெற்றுள்ளோம். ஆனால் முஸ்லிம் பாடசாலைகள் அருகருகே இருப்பதால் எண்ணிக்கையில் கூடினாலும் போதிய வளங்கள் இல்லாத நிலை உள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறை, மைதானம், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் என அனைத்திலும் போதியளவு வசதிகள் இல்லாத நிலை நீடித்து வருகின்றது. இருப்பினும் எமது ஆசிரியர்களின் அயராத முயற்சியினாலும் மாணவர்களின் திறமையினாலும் எமது சமூகம் சாதித்து வருகின்றது. இதனை பல்கலைக்கழக நுழைவு பற்றிய புள்ளி விபரங்கள் ஊடாக அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு முஸ்லிம்களின் பல்கலைக்கழக நுழைவு வீதம் உயர்ந்து கொண்டே செல்கின்றது. 2013{2014 இல் முஸ்லிம்களின் நுழைவு 7.95¤ ஆலும் 2014{2015 இல் 8.07¤ ஆலும் 2015{2016 இல் 9.63¤ இனாலும் அதிகரித்துள்ளது. இதே வேளை மருத்துவத் துறையில் இந்த விகிதாசாரத்தில் நாம் இல்லையென்றாலும் முன்னேற்றம் இருப்பதை மறுப்பதற்கில்லை.

2013{2014 இல் மருத்துவத்துறையில் எமது பல்கலைக்கழக அனுமதி 6.4¤ ஆலும், 2014{2015 இல் 7.3¤ இலும் உள்ளது. போதிய வளம் இல்லாத நிலையிலும் எமது மாணவர்கள் ஏனைய சமூகங்களுடன் போட்டி போடும் அளவுக்கு முன்னேறி யுள்ளனர் என்பதைத்தான் இது எடுத்துக்காட்டுகிறது. பல்கலைக்கழகத்தில் காணப்படும் சகல துறைகளிலும் எமது மாணவர்கள் ஈடுபாடு காட்டுவதில்லை. மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டி சகல துறைகளிலும் அவர்கள் கற்பதற்கு ஊக்கமளிக்கப் பட்டால் எமது விகிதாசாரத்தையும் மிஞ்சும் அளவுக்கு பல்கலைக்கழக அனுமதியைப் பெற முடியும்.

நாம் இதுவரை கூறிய தகவல்கள் முஸ்லிம்கள் கல்வித்துறையில் முன்னேறி வருவதையே எடுத்துக் காட்டுகின்றது எனலாம். பின்னடைவு உள்ளது என்பதைக் கைவிட்டு கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றோம். எம்மால் முன்னேற முடியும் என்ற திடமான நம்பிக்கையுடன் முன்னேற்றப் பாதையில் திடமாக தடம்பதிக்க நாம் சபதம் எடுத்தாக வேண்டும்.

முன்னேற்றத்திற்கான முன்மொழிவுகள்:
முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடிய சில அம்சங்களைக் கண்டு களைய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
1. வீணான விமர்சனங்கள்:
விமர்சனம் என்பது செதுக்கி செப்பனிடும் பணியாகும். ஆனால், நாம் நமக்குள் செய்து கொண்டிருப்பது சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் வீணான விமர்சனமாகும். முஸ்லிம் சமூகம் வீணான விமர்சனத்தால் தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றது. ஒரு முஸ்லிம் தலைவனோ பொது மகனோ ஒரு தவறு செய்து விட்டால் எதிர்க் கட்சி, ஜமாஅத், அமைப்பு, ஊர் என ஏதோ ஒரு தரப்பினரால் சமூக வலைத்தளங்களில் நாறடிக்கப்படுகின்றார்கள். இதனால் கேவலப்படுவது குறித்த நபர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமூகமும்தான் என்பதை சிந்திக்கத் தவறிவிடுகின்றோம்.

இவ்வாறே முஸ்லிம் பாடசாலைகள் பற்றி நாமே விமர்சித்து விமர்சித்து எமது பாடசாலைகள் பற்றிய கீழ்த்தரமான எண்ணங்களை ஏற்படுத்தி வைத்துள்ளோம். எந்தவொரு ஊருக்காவது சென்று, உங்கள் பாடசாலை எப்படி? என்று கேட்டாலும் கல்வி மோசம், பண்பாடு மோசம், ஒழுக்கம் மோசம் என்று பட்டியலிட்டுச் சொல்லும் மனநிலைதான் நிலவுகின்றது.

தொடர்ந்தும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் விமர்சிக்கப்பட்டு வந்தால் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் வராது. ஏசும் சமூகத்திற்கு எதுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் அவர்களுக்கு எழும். அதனால் நிறைகளை விட்டு விட்டு குறைகளை மட்டும் தேடும் குறைமதி குணம் நீங்க வேண்டும். சேவைகளைப் பாராட்டி குறைகளை உரிய முறையில் எடுத்துக் காட்டி அவற்றைக் கழைய வழி செய்ய வேண்டும்.

2. அரசியல் தலையீடு:
முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக அமைவது அரசியல் தலையீடாகும். அரசியல்வாதிகள் பாடசாலை விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற கருத்தில் இதை நான் கூறவில்லை. அவர்கள் பாடசாலை முன்னேற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு கட்சி சார்ந்த ஒருவர் பாடசாலை தொடர்பாக ஒரு நல்ல பணியைச் செய்ய முற்படும் போது அடுத்த கட்சி சார்பானவர்கள் அரசியல் காரணங்களுக்காக அதை எதிர்க்கவோ, தடுக்கவோ கூடாது. ஆனால், முஸ்லிம் பாடசாலைகள் தோறும் கட்சி காரணங்களுக்காக நல்ல திட்டங்களையும் எதிர்க்கின்ற இந்த சீர்கெட்ட நிலைதான் பரவலாக இருக்கின்றது. ஒரு கட்சி சார்பானவர் செய்யும் நல்ல பணிக்கு அடுத்த கட்சியினர் எதிர்ப்புத் தெரிவிப்பதைத்தான் அரசியலாக இங்கு பார்க்கப்படுகின்றது.
‘அரசியல் தலைவர்கள் மாறும் போதெல்லாம் பாடசாலை அபிவிருத்தி சபையின் நிர்வாகிகளும் மாற வேண்டும்| அந்த நிர்வாகிகள் மாறிய பின்னர் அதிபரை மாற்ற ஒரு குழுவும் அவரைக் காக்க ஒரு குழுவும் காசைக் கரியாக்க வேண்டும்| இவ்வாறே சில ஆசிரியர்களைத் துரத்த வேண்டும்: அந்த ஆசிரியரைக் கொண்டு வர வேண்டும்’ என்று சிலர் செயற்பட்டுக் கொண்டிருப்பர். முன்னேற்றப் பாதைக்கான எந்த முன்னேற்பாடும் நடக்காது. புதிய குழு வந்த பின்னர் அவர்களும் மீண்டும் அதிபரை மாற்ற வேண்டும், ஆசிரியர்களைத் துரத்த வேண்டும் என்று தலைவலி தீர தலையனை மாற்றும் பணியில் மூழ்கிவிடுகின்றனர்.

அரசியல் காரணங்களுக்காக பாடசாலைக்கு நடக்க இருக்கும் நல்ல பணியை எதிர்ப்பவர்கள் எக்கட்சி சார்ந்தவர்களாக இருந்தாலும் ஊர் மக்கள் ஒன்று பட்டு அந்தக் கட்சியை புறக்கணிக்கும் நிலை வந்தால்தான் இந்தக் குணத்தை அழிக்கலாம்.

இவ்வாறு அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் வண்ணம் செயற்பட்டுச் செல்கின்றனர். இந்தத் தலையீடுகள் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடுகின்றது.

3. முரண்படும் போக்கு:
ஏற்கனவே கூறியது போல் பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள், ஆசிரியர்கள், அதிபர்களுடன் முரண்படும் நோக்கில் சிலர் செயற்படுகின்றனர். பாடசாலை அபிவிருத்தியை விட தன்னை அல்லது தனது கட்சியை நிலைநிறுத்துவது, தான் சார்ந்த அரசியலை வளர்ப்பது என்ற கோணத்தில் பாடசாலை அபிவிருத்திகளை செயற்படுத்துவதும் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைகின்றது.

4. அதிபர், ஆசிரியர் முரண்பாடு:
பாடசாலை நிர்வாகத்தில் அதிபருக்கு ஒத்துழைப்பது ஆசிரியர்களின் கடமையாகும். அதிபர் நிர்வாக விடயங்களில் சற்று கண்டிப்பாக இருந்தால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்காமையூடாக அவருக்கு களங்கத்தை ஏற்படுத்த சில ஆசிரியர்கள் முற்படுகின்றனர். சில நேரம் பாடசாலை ஆசிரியர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு முன்னால் கூட ஒரு ஆசிரியர் மற்றுமொரு ஆசிரியரை விமர்சிக்கும் போக்கு முஸ்லிம் பாடசாலைகளில் நிலவி வருகின்றது. இந்த முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும். சில பிரச்சினைகள் வெளியில் வரவே கூடாது. அது அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டும்.

5. பழைய, புதிய ஆசிரியர்களுக்கு இடையேயான இடைவெளி:
பாடசாலையில் பழைய ஆசிரியர்களும் இருப்பர், புதிதாக நியமனம் பெற்று வரும் ஆசிரியர்களும் இருப்பர். புதிதாக நியமனம் பெற்றவர்களிடம் பாடசாலைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். பழையவர்களிடம் எதுவும் இங்கு செய்ய முடியாது என்ற நினைப்பு அல்லது சோர்வு இருக்கும். புதியவர்கள் ஏதாவது செய்ய முற்படும் போது பழையவர்கள் முட்டுக்கட்டை போடும் நிலை பெரும்பாலும் முஸ்லிம் பாடசாலைகளிலே நிலவி வருகின்றது.

‘புதிசா கொஞ்சம் வந்திருக்குதுகள்| பெரிய ஆளாகப் பார்க்குதுகள்| விடக் கூடாது…’ என்ற எண்ணத்தில் சிலர் செயற்படுகின்றனர். புதியவர்களில் சிலரும், பழையவர்கள் ஒன்றும் செய்யவில்லை, நாம்தான் பாடசாலையை முன்னேற்றப் போகின்றோம் என்ற மனப்பாங்கில் செயற்பட முனைகின்றனர். இது தவறாகும். இந்த முரண்பாடுகள் களையப்பட்டு புதியவர்களுக்குப் பழையவர்கள் இடம் விட வேண்டும். புதியவர்கள் பழையவர்களின் அனுபவ அறிவையும் வழிகாட்டலையும் பெற்று செயற்பட முன் வர வேண்டும்.

முஸ்லிம் பாடசாலைகளில் சில ஆசிரியர்கள் ஒரே பாடசாலையில் பதவி பெற்று அதே பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையும் உள்ளது. பத்து வருடங்களுக்கு மேல் ஒருவர் ஒரே பாடசாலையில் பணி செய்தால் இடமாற்றத்திற்கு உள்ளாக வேண்டும். இடமாற்றங்கள் கிடைக்கும் போது அரசியல் வாதிகளைப் பிடித்து மீண்டும் அதே பாடசாலையில் கடமை புரியும் நிலை முஸ்லிம் பாடசாலைகளில் நிலவுகின்றது. ஒரே இடத்தில் தொடர்ந்து பணி செய்யும் போது சோர்வு மனப்பான்மை ஏற்படுவதுடன் இது போன்ற பிரச்சினைகள் எழுவது இயல்பு. எனவே, ஒரே பாடசாலையில்தான் கற்பிப்பேன் என்ற மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். புதிய வரவுகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

6. பெண் ஆசிரியைகளின் அதிகரிப்பு:
இன்று ஒட்டுமொத்த இலங்கையிலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் பாடசாலைகளில் இது அதிகமாகவே உள்ளது. ஒரு பாடசாலையில் 50 ஆசிரியர்கள் பணி செய்தால், அதில் 35-40 ஆசிரியர்கள் பெண்களாக உள்ளனர். பெண் ஆசிரியர்கள் பணி செய்யும் போது அவர்களது பிரசவ விடுமுறைகள் தவிர்க்க முடியாததாகும். அதே வேளை, மாணவர்களைக் கட்டுப்படுத்துவதும் அவர்களுக்கு சிரமமாகும். இதனால் கல்வி, ஒழுக்கம் இரண்டிலும் வீழ்ச்சி ஏற்படுகின்றது. முஸ்லிம் சமூகத்தில் ஆண்கள் ஆசிரியர் சேவையில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டிய கடப்பாடு உள்ளது.

7. ஆண் ஆசிரியர்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் குறைவு:
முஸ்லிம் பாடசாலைகளில் குறைவான அளவுள்ள ஆண் ஆசரியர்களே உள்ளனர். அவர்களில் சிலர் நிர்வாக வேலைகளிலும் பாடசாலை தொடர்பான வெளி வேலைகளிலும் கவனம் செலுத்துவதால் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறைவாகும். சிலருக்கு இது ஒரு சாட்டாகவே மாறியுள்ளது.

அத்துடன் இளம் ஆண் ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஓரளவு உற்சாகமாகச் செயற் பட்டாலும் வயது சென்ற பலர் கற்பித்தலில் போதிய ஈடுபாடு அற்றவர்களாக உள்ளனர். தேங்கி நிற்கும் நீர் கெட்டுப் போகும், ஓடும் நீர் சுத்தமாக இருக்கும். தொடர்ந்து கற்காத ஆசிரியர்களால் திறமையாக கற்றுக் கொடுக்க முடியாது. ஆசிரியரானவர் முதலில் தான் கற்று பின்னர் அதை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். தன்னை வளர்த்துக் கொள்ளாத ஆசிரியர்களால் பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரிய பங்களிப்பைச் செய்து விட முடியாது.

8. கடமையுணர்வு:
எமது ஆசிரியர் மற்றும் அதிபர்கள் இன்னும் அதிக கடமையுணர்வுடன் செயற்பட வேண்டியுள்ளது. நேரத்திற்குப் பணி செய்தல், பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் முடிப்பதற்கு முனைப்புக் காட்டுதல், மாணவர்களின் தராதரம் அறிந்து அவர்களுக்கு கற்றுக் கொடுத்தல், விசேடமான கவனத்திற் கொள்ள வேண்டிய மாணவர்கள் விடயத்தில் அதிக அக்கறை செலுத்துதல்… என பல விடயங்களில் மாற்று சமூக ஆசிரியர்களிடம் நாம் சில முன்மாதிரிகளைப் பெற வேண்டியுள்ளது.

9. பகுதி நேர வகுப்புக்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்:
சில ஆசிரியர்கள் பாடசாலை வகுப்பறையை விட பகுதி நேர வகுப்புக்களில்தான் அதிக கவனம் செலுத்துகின்றனர். சிலர் பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றனர். பகுதி நேர வகுப்புகளுக்காக பணம் எடுப்பதை நான் குறை காணவில்லை. ஆனால், பாட நேரத்தை விட பகுதி நேர வகுப்புகளில் ஆசிரியர்கள் அதிக அக்கறை செலுத்துவது தவறானதாகும். ஒரு சில ஆசிரியர்கள் பாடசாலையில் கற்பிக்க வேண்டிய பாடங்களை பகுதி நேரத்தில் (பணம் பெற்று) கற்பிக்கும் கேவலமான காரியங்களில் ஈடுபடும் நிலையும் நிலவுகின்றது.

10. எதிர்மறை சிந்தனைப் போக்கு:
சில ஆசிரியர்களிடம் குடி கொண்டுள்ள எதிர்மறை சிந்தனைப் போக்கு முன்னேற்றங்களுக்குத் தடையாக உள்ளது. நான் ஒரு பாடசாலையில் பயான் நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டிருந்தேன். அங்குள்ள ஒரு ஆசிரியர், ‘என்ன ஹஸரத் பயானுக்கு வந்தீங்களா?’ என வினவி விட்டு, ‘தேவயில்லாத வேல மௌலவி, இவனுகள் உருப்படுறவனுகளா? இவனுகள் திருந்தப் போறானுகளா?’ என மாணவர்கள் பற்றி கொட்டித் தீர்க்க ஆரம்பித்தார். இந்த மனநிலையில் ஆசிரியர்கள் இருந்தால் மாற்றங்களை எங்கே காண்பது!

உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்கு ஏற்பாடு செய்தால் குறித்த பாட ஆசிரியரே சிலபோது அதை விரும்புவதில்லை. நான் கஷ்டப்பட்டு பாடம் நடத்த செமினார் செய்தவர் பேரெடுப்பதா? என அவர் சிந்திக்கின்றார். யார் கற்பித்தாவது மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அவர்களும் பாடசாலையும் உயர்ந்து செல்ல வேண்டும் என்ற பெருமனது அவரிடம் இல்லை. இது போன்ற மனநிலையில் மாற்றங்கள் தேவை!

11. தனித்துவம் பேணல்:
இந்த நாட்டில் எமக்குக் கிடைத்த மிகப் பெரும் பாக்கியங்களில் ஒன்றுதான் இஸ்லாமிய கலாசாரத்துடன் கற்கும் வாய்ப்பாகும். இதற்காகவே முஸ்லிம் பாடசாலைகள் துவங்கப்பட்டன. எனவே, முடிந்த வரை முஸ்லிம் பாடசாலைகள் எமது தனித்துவத்தைக் காக்கும் விதத்தில் செயற்பட வேண்டும்.

A. ஆண்-பெண் தனித்தனி வகுப்பறைகள்:
இலங்கைளில் ஒரு ஆச்சர்யமான விடயத்தை நோக்கலாம். முஸ்லிம் சமூகம் எல்லா விடயங்களிலும் ஆண்-பெண் தனித்துவங்களைப் பேணி தனித்தனியான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஆனால், இலங்கையில் ஆண்-பெண் தனித்தனிப் பாடசாலைகள் அதிகமாக மாற்று சமூகத்தினரிடம்தான் உள்ளது. அதுவும் கல்வியில் தனிப்பாடசாலைகள் உயர்ந்த நிலையிலும் உள்ளன. எனவே, முடிந்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான பாடசாலைகளை அமைக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஊரில் இரண்டு பாடசாலைகள் இருந்தால் ஒன்றை ஆண்களுக்கும் மற்றையதைப் பெண்களுக்கும் மாற்றியமைக்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வகுப்பறைகளையாவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக மாற்றுவது கல்வி மற்றும் ஒழுக்க மேம்பாட்டுக்கும் வழி வகுக்கும்.

B. ஆடை:
கலாசாரத்தைப் பெரிதும் பிரதிபலிப்பது ஆடையாகும். முஸ்லிம் பாடசாலை மாணவியர்களின் ஆடை பெரிதும் நேர்த்தியாகவே உள்ளது. ஆண் ஆசிரியர்களும் நேர்த்தியாகவே ஆடை அணிகின்றனர். சில ஆசிரியைகள் அணியும் இறுக்கமான அபாயாவும் சின்னதான தலை முக்காடும் சாரியை விட சில போது இறுக்கமான டெனீமை விட கவர்ச்சியானதாக உள்ளது. கற்பிக்கும் மாணவர்களில் பருவ வயதை அடைந்தவர்கள் இருக்கின்றனர். சக ஆசிரியர்கள் உள்ளனர். இவற்றைக் கவனத்திற் கொண்டு தமது ஆடை அமைப்பை மாற்றிக் கொள்வது அவசியமாகும். இவ்வாறே முஸ்லிம் பாடசாலைகளில் கற்பிக்கும் பிற சமூக ஆசிரியைகளுக்கும் ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் போட முடியாவிட்டாலும் உத்தரவாக இல்லாமல் வேண்டுதலாக சில ஒழுக்கங்களை முன்வைக்கலாம். எமது ஆசிரியைகளின் ஆடையமைப்பு இஸ்லாம் கூறும் விதத்தில் சரியாக இருந்தால் அவர்களும் அது பற்றி சிந்திக்க ஓர் வாய்ப்பாகவும் அமையும்.

C. கலை நிகழ்ச்சிகள்:
பாடசாலை கலை நிகழ்ச்சிகளையும் முடிந்த வரை இஸ்லாமிய வரையறைக்குள் வைத்துக் கொள்ள முயல வேண்டும். சுற்றுலாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளின் போது இது விடயத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கூடிய கவனம் எடுத்தல் நல்லதாகும்.

D. ஆசிரியர் தின நிகழ்ச்சிகள்:
ஒக்டோபர் 06 ஆம் திகதி ஆசிரியர் தினமாகும். ஆசிரியர்கள் மீதான மதிப்பையும் மரியாதையையும் அதிகரிக்க வேண்டிய இத்தின நிகழ்வுகளில் சிலர் தமது ஆளுமையையும் மரியாதையையும் இழக்கும் விதத்தில் செயற்படுகின்றனர். இந்த ஆசிரியர் தின நிகழ்வுகள் சில, விவாகரத்துக்களையும் விமர்சனங்களையும் கூட ஏற்படுத்தி விடுகின்றது. இவற்றை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் முறையாக ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.

E. பிற சமூக நிகழ்வுகள்:
கற்கும் மாணவர்கள் அடுத்த சமூகங்களின் கலாசாரத்தையும் பழக்க வழங்கங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கான சில ஏற்பாடுகள் கலைத்திட்டத்தில் உள்ளது. இது விடயத்தில் சுற்றுநிரூபத்தில் இல்லாத அளவுக்கு நாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது விடயத்தில் தூர நோக்குடனும் தனித்துவ சிந்தனையுடனும் செயற்பட வேண்டியுள்ளது.

F. தொழுகையும் அரபு மொழியும்:
முஸ்லிம் பாடசாலைகளில் ழுஹர் தொழுகையை மாணவர்கள் தொழுவதற்கு ஏற்ற விதத்தில் நேரசூசியை அமைக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. இதில் கவனம் செலுத்தலாம். இதே போன்று மொழிப் பாடத்தில் அறபு மொழியை மாணவர்களுக்குத் தேர்வு செய்ய வைப்பதுடன் அதற்கான முயற்சியில் இறங்கலாம்.

இவ்வாறு எமது தனித்துவத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்களிலும் போதிய அக்கறையுடனும் செயற்பட வேண்டியுள்ளது.

இவ்வாறு பாடசாலையுடன் சம்பந்தப்பட்டவர் கள் தமது குறை நிறைகளை அறிந்து செயற்பட்டால் ஊர் மக்கள் பள்ளி நிர்வாகங்கள், இஸ்லாமிய அமைப்புக்கள், தனவந்தர்கள் அனைவரும் முஸ்லிம்களின் கல்வி விடயங்களில் கவனம் செலுத்தினால் ஏனைய சமூகங்களைக் கல்வி விடயத்தில் முந்திச் செல்லலாம். அதற்கான ஆற்றலுடன்தான் முஸ்லிம் மாணவர்கள் உள்ளனர்.

முஸ்லிம் பாடசாலைகள் பற்றிய விமர்சனங்களால் முஸ்லிம் பாடசாலைகள் மோசம், எனவே, இஸ்லாமிய ஆடையமைப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை மாற்றுப் பாடசாலைகளிலாவது கற்போம் என்ற மனோ நிலைக்கு சிலர் வந்துள்ளனர். இதனால் ஏற்படும் மார்க்க ரீதியான வீழ்ச்சிக்கு சமூகம் பதில் சொல்லியாக வேண்டியுள்ளது.

எனவே, முஸ்லிம் சமூகம் ‘முஸ்லிம் பாடசாலை’ எனும் எமது கண்ணைக் காத்து வளர்த்தெடுக்க முழு மனதுடன் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.