இலங்கைத் தாயின் இனிய மைந்தர்களாக…

பலநூறு ஆண்டுகளாக அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இலங்கை, 1948 இல் சுதந்திரம் பெற்றது. உலக நாடுகள் பலவும் காலனித்துவத்தின் கோரப் பிடியிலிருந்து விடுதலை பெற்ற தினத்தை சுதந்திர தினமாகக் கொண்டாடுகின்றன. இந்த அடிப்படையில் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி என்பது எமது தாய் நாட்டின் சுதந்திர தினமாகும்.

அந்நிய ஆதிக்கத்திலிருந்து நாடு விடுதலை பெற்றமை என்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சியைத் தரும் செய்தி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
பொதுவாக அரசியல் ரீதியில் அந்நியரின் நேரடியான ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுதலை பெற்று, நம்மை நாமே ஆண்டு கொள்வது மட்டுமே சுதந்திரம் என்ற வார்த்தையின் அர்த்தமாகப் பார்க்கப்படுகின்றது.
ஆனால், அது சுதந்திரத்திற்கான குறுகிய ஒரு பார்வையாக மட்டுமே இருக்க முடியும். யாரும் யாருடைய தலையீடும் இன்றி சுதந்திரமாக வாழும் சூழல் உருவாகுவதுதான் முழுமையான சுதந்திரமாகும்.
இப்படிக் கூறும்போது நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலன்களுக்கு ஏதுவான சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் தேவையற்றவை. அவரவர் விரும்பும் விதத்தில் வாழ்ந்துவிட்டுப் போகலாம் என்பது இதன் அர்த்தம் இல்லை.
எமது நாட்டுக்கென்று பாரம்பரியமும் கலாச்சாரமும், மதங்களுடன் கூடிய பண்பாடும் உள்ளது. அந்த ஒழுக்க விழுமியங்களை தனி மனித சுதந்திரத்தின் பெயரில் சிதைக்க முடியாது; சிதைக்கவும் கூடாது.
தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்து சேர்ந்து வாழ்வதை சில நாடுகள் அங்கீகரிக்கின்றன. இது சுதந்திரம் இல்லை. மனித மாண்பை சிதைத்து மிருக உணர்வுகளை ஊக்கப்படுத்தும் வழி முறையாகும். மதங்களின் உயரிய ஒழுக்க போதனைகளையும் உயர்தரமான குடும்பக் கட்டமைப்பையும் சிதைக்கக் கூடிய, நாட்டில் மனித வளப் பற்றாக்குறையை எதிர்காலத்தில் உருவாக்கி நாட்டைப் பலவீனப்படுத்தக் கூடிய அநாகரீக செயற்பாடுமாகும்.
இந்த வகையில், சுதந்திரம் என்பது வரையறுக்கப்பட வேண்டும். இதே வேளை, ஒவ்வொரு தனி மனிதனினதும் உண்iமான சுதந்திரத்திற்கான உத்தரவாதமும் அளிக்கப்பட வேண்டும். தனி மனிதனோ அல்லது சமூகமோ தான் விரும்பும் மதத்தையும் கொள்கையையும் பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உரிமை பெற்றுள்ளது. இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பௌத்தத்தைப் நேசிக்கும் ஒருவர் அதைப் பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் உரிமை பெற்றவர். இந்துத்துவத்தையோ, இஸ்லாத்தையோ, கிறிஸ்தவத்தையோ விரும்பும் சமூகம் அதனைப் பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் சுதந்திரம் பெற்றுள்ளன. இந்த சுதந்திரத்தில் ஒரு சமூகத்தால் இன்னொரு சமூகம் நசுக்கப்பட்டால் அது, ‘சுதந்திர தேசம்’ என்ற சொற்றொடருக்கு எதிரானதாகும்.
ஒவ்வொரு சமூகமும் தனது காலசாரத்தையும் மத உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் ஆடைகளைத் தெரிவு செய்யும் சுதந்திரத்தைப் பெற்றுள்ளது.
ஒரு பௌத்தர் காவி உடையைத் தெரிவு செய்யவும், கிறிஸ்தவர் சிலுவையை அணியவும், இந்து பூநூல் அணியவும், பொட்டிட்டுக் கொள்ளவும் முஸ்லிம் தனது மதத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஆடை அணியவும் சுதந்திரம் பெற்றவனாவான். இதில் இன்னொரு சமூகம் தலையிட்டு நீ இந்த ஆடையை அணிவதை நாம் அனுமதிக்க முடியாது என்று கூற முடியாது. அப்படிக் கூறப்பட்டால் அங்கு சுதந்திரம் அடிமைப்படுத்தப்படுகிறது; சிறை பிடிக்கப்படுகின்றது என்பதே அர்த்தமாகும்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் மத கலாசார சுதந்திரம் பெரும் அளவில் பேணப்பட்டே வருகின்றது. சில நாடுகள் தம்மை மதச் சார்பற்ற நாடு என அரசியல் சாசனத்தில் அறிவித்துவிட்டு பெரும்பான்மை மதத்தவர் சிறுபான்மை மதத்தவரை நசுக்கி வரும் வேளையில், இலங்கையில் மத சுதந்திரம் பெருமளவில் பேணப்பட்டே வருகின்றது எனலாம்.
இலங்கை, பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாகும். இந்த வகையில் பௌத்தத்தை பேணிப் பாதுகாப்பது என்பது இலங்கை அரசின் தலையாய கடமை என யாப்புச் சொல்கிறது. இதை யாரும் குறை கூற முடியாது. இப்படிக் கூறப்பட்டாலும் சகல மதத்திற்கும் இந்நாட்டில் சமத்துவம் வழங்கப்பட்டு வருகின்றமை இந்நாட்டின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
அண்மைக் காலமாக சில இனவாத, மதவாத அமைப்புக்கள் நாட்டின் இந்த நல்ல நிலைக்குக் குந்தகம் ஏற்படுத்தி வருகின்றன. பள்ளிவாயல்கள், கோயில்கள், தேவாலயங்கள் மீது அத்து மீறி நுழைந்து அநாகரீகமாகச் செயற்பட்டு இலங்கையின் மத சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கி வருகின்றன.
பெரும்பான்மை, சமய மேலாதிக்கத்தை சிறுபான்மை சமூகங்கள் மீது திணிக்கும் விதத்தில் செயற்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் ஐக்கியத்தையும் சமூகங்களுக் கிடையிலான நல்லெண்ணத்தையும் சிதைக்கும் விதத்தில் விஷக் கருத்துக்களை விதைத்து வருகின்றன.
சமூகங்களுக்கிடையே சந்தேக உணர்வுகளையும் வெறுப்புணர்வுகளையும் விதைத்து வருகின்றன. சிறுபான்மை சமூகங்களின் பொருளாதார, கலாசார நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பெரும்பான்மை சமூகத்தைத் தூண்டி வருகின்றன. இந்த இனவாதக் குழுக்களின் நடவடிக்கை நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ நன்மையை ஏற்படுத்தப் போவதில்லை. நாட்டின் மீதும், நாட்டின் பிரதான மதமாகிய பௌத்த மதத்தின் மீதும் அபகீர்த்தியையே சர்வதேசத்துக்கு மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன.
அமைதியையும் அன்பையும் போதிக்கும் பௌத்த மதத்திற்கும் உண்மையான பௌத்த போதனைக்கும் இவை இழுக்கையே ஏற்படுத்தி வருகின்றது.
பௌத்தத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள சிங்கள மக்களின் பெரும்பான்மையான நல்லுள்ளங்கள் இதனை உணர்ந்து இவர்களைப் புறக்கணித்தே வருகின்றனர். இவர்களின் கீழ்த்தரமான பேச்சு முறை, ரவுடித்தனமான செயற்பாடுகள் என்பன அவர்கள் அணிந்துள்ள அந்த ஆடைக்கே களங்கமாக அமைவதாக உண்மையான பௌத்த துறவிகள் துயரம் கொள்கின்றனர்.
நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து விடுவித்து அமைதியான, அச்சமற்ற சூழலை உருவாக்கிய இந்த அரசு, இலங்கையின் ஐக்கியத்திற்கும் இன நல்லுறவுக்கும் குந்தகம் விளைவிக்கும் இக்கூட்டத்தின் குழப்பகரமான நடவடிக்கையைக் கட்டுப்படுத்தி, நாட்டிற்குப் பூரண சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று சிறுபான்மை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியிலும் நாட்டில் இனக் கலவரம் மூண்டு விடாமல் இந்த அரசு பாதுகாத்து வருவதைப் பாராட்ட வேண்டும். இத்தகைய குழப்பத்திற்கு மத்தியிலும் நாட்டில் அமைதி பேணப்பட்டு வருகின்றது. இந்த இனவாத, மதவாத செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டால் அரசின் எதிர்பார்ப்பான அதிசய பூமியாக ஜொலிக்கும். இந்த நல்ல சூழலை ஏற்படுத்தும் வல்லமையுடனேயே இலங்கை அரசு இருக்கின்றது.
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தமது தேசப்பற்றையும் அமைதியான போக்கையும் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்தள்ளனர். சிங்கள இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் நடாத்தி இந்த நாட்டின் இறைமைக்கு சவால் விட்டுள்ளனர். தமிழ் இளைஞர்களும் விடுதலையின் பெயரில் ஆயுதம் ஏந்தி இந்த நாட்டின் இறைமைக்கு சவால் விட்டுள்ளனர். இந்த நாட்டின் இறைமைக்கு சவால் விடாத சமூகமாக முஸ்லிம் சமூகம் இருக்கின்றது.
சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பல கலவரங்கள் நடந்தன. இதே வேளை புலிகளின் தாக்குதல்கள் கொழும்பு வரை விஸ்தரிக்கப்பட்டிருந்தன. முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இனவாதம் செயற்பட்ட போதும் கூட முஸ்லிம்கள் புலிகளுடன் கைகோர்த்து நாட்டுக்கு எதிராக செயற்பட தீர்மாணிக்கவில்லை. இக்கால கட்டத்தில் இடம்பெற்ற பல தாக்குதல்களுக்கு சிங்கள மக்கள் துணை போயிருந்தனர். ஆனால், முஸ்லிம்கள் துணை போகவில்லை.
அண்மைக்கால நிகழ்வுகள் பல முஸ்லிம்களின் பொருளாதார, சமய நலன்களுக்கு எதிரானவை; அவர்களது சுயமரியாதையையும் தன்மான உணர்வையும் நசுக்கக் கூடியவை. முஸ்லிம்களை ஆத்திரமூட்டக் கூடிய பல நிகழ்வுகள் நடந்தும் கூட தொடர்ந்தும் முஸ்லிம்கள் அமைதி காத்து தமது அமைதியான, சமாதானமான வாழ்வின் மீதான நாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகைய அமைதியான சமாதான வாழ்வின் மீதான நாட்டத்தைப் பல கட்டங்களில் நிரூபித்த சமூகத்தின் மீது ஆளும் வர்க்கத்திற்கு அனுதாபம் ஏற்பட வேண்டும். சட்டம், ஒழுங்குக்கு எவ்வித பங்கத்தையும் ஏற்படுத்தாத இந்த சமூகத்தின் மீது அதிகாரவர்க்கத்திற்கு அன்பு ஏற்பட வேண்டும். இதனையே இலங்கை முஸ்லிம் சமூகம் ஆளும் வர்க்கத்திடம் சுதந்திர தினக் கோரிக்கையாக முன்வைக்கின்றது. இலங்கை எங்கள் தாய்நாடு; அதில் வாழும் நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வுடன் வாழ்வோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.