ஒருவர் செய்த பாவத்திற்கு மற்றவர் தண்டிக்கப்படமாட்டார் என்பதே புதிய, பழைய ஏற்பாட்டின் போதனையாகும். இந்த போதனையின் அடிப்படையில் கிறிஸ்தவ உலகு நம்பும் பிறவிப் பாவம் என்பதே தப்பானது. மனித இனத்தின் பிறவிப் பாவத்தைப் போக்க இயேசு சிலுவையில் உயிரை அர்ப்பணித்தார் என்பது அதைவிடத் தப்பானதாகும்.
இயேசு உயிரை அர்ப்பணித்தாரா?
உலகில் பலரும் பலவற்றிற்கு உயிரை அர்ப்பணிக்கின்றனர். பிள்ளையைக் காப்பதற்காக தாய் உயிரை அர்ப்பணிக் கின்றாள். மக்களைக் காப்பதற்காக இராணுவம் உயிரை அர்ப்பணிக்கின்றது. சில தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் சிலர் தமது கொள்கைக்காகவும், தமது இன மக்களின் விடுதலைக்காகவும் உயிரை அர்ப்பணிக் கின்றனர். தாம் வெடித்துச் சிதறப் போகின்றோம் என்பதை நன்றாக அறிந்து கொண்டே வெடிகுண்டை அணிந்து கொண்டு சிரித்த முகத்துடன் செல்கின்றனர்.
இயேசு உலக மக்களின் பாவத்தை பரிசுத்தப்படுத்துவதற்காகவே படைக்கப் பட்டதாக நம்பப்படுகின்றது. இந்த மகத்தான பணியை இயேசு மனத்திருப்தியுடன் ஏற்றுக் கொண்டார் என்று பைபிள் சொல்கின்றதா? பைபிள் சொல்லும் தகவலைப் பார்க்கும் போது இயேசு மீதான மரியாதையும் கண்ணியமும் குறைகின்றது என்றே கூற வேண்டும்.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது பின்வருமாறு கத்திக் கதறியதாக பைபிள் கூறுகின்றது.
‘ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.’
(மத்தேயு 27:46)
என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று இயேசு கத்தியிருந்தால் இந்த சிலுவை மரணத்தை இயேசு மனம் விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம். இந்த சிலுவை மரணம் ஏன் என்பதைக் கூட இயேசு அறிந்திருக்கவில்லை என்றுதானே அர்த்தம்! இயேசு இதற்காகவே படைக்கப்பட்டிருந்தால் கடவுள் தன்னைக் கைவிட்டதாகக் கத்தியிருப்பாரா? இப்படி கத்திய நிலையில்தான் இயேசு மரணித்ததாக பைபிள் கூறுகின்றது.
‘இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.’ (மத்தேயு 27:50)
இந்த செய்தியின் படி இயேசு சிலுவை மரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் தன்னை அர்ப்பணிக்கவும் இல்லை. கடவுள் தன்னைக் கைவிட்டுவிட்டதாகவே அவர் கருதியிருக்கின்றார். ஒரு செயலைச் செய்யும் போது செய்பவர் தூய எண்ணத்துடன் விரும்பிச் செய்ய வேண்டும். அப்போதுதான் அது கடவுளினால் அங்கீகரிக்கப்படும். இயேசு தன்னை விரும்பி அர்ப்பணிக்கவில்லை எனும் போது, சிலுவையில் அறையப்பட்டது இயேசு என்றால் கூட அது அர்ப்பணிப்பாக அங்கீகரிக்கப்படமாட்டாது. இதை நம்புவதன் மூலம் எப்படி மனித குலம் ஈடேற்றம் அடைய முடியும்? முறையாகச் சிந்தித்தால் மனிதனிடம் பிறவிப் பாவம் என்ற ஒன்று இல்லை. அதைப் போக்க ஒருவர் சிலுவையில் உயிரை விட வேண்டிய தேவையும் இல்லை என்பதை அறியலாம்.
இயேசு சிலுவையில் அறையப் படுவதற்காக கைது செய்யப்பட முன்னர் இப்படிக் கூறியதாக பைபிள் கூறுகின்றது.
‘ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.’
‘பூமியிலே நான் உம்மை மகிமைப் படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.’
(யோவான் 17:3-4)
கடவுள் ஒருவன், இயேசு இறைத்தூதர் என்பதைக் கூறுவதே நித்திய ஜீவனுக்கான வழி என இங்கே கூறப்படுகின்றது. இதையே இஸ்லாம் ‘லாயிலாஹ இல்லல்லாஹு – ஈஸா ரஸூலுல்லாஹ்’
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற் குரியவன் எவனும் இல்லை. ஈஸா (இயேசு) இறைத்தூதர் என்பதுதான் இயேசுவின் போதனையின் அடிப்படை என்று கூறுகின்றது.
அடுத்து, ‘நீ செய்யும்படி எனக்கு நியமித்த காரியங்களை செய்து முடித்துவிட்டேன் என இயேசு கூறுகின்றார். சிலுவையில் உயிரை அர்ப்பணிப்பதற் காகத்தான் அவர் படைக்கப்பட்டார் என்பது உண்மையாக இருந்திருந்தால் இயேசு இப்படிக் கூறியிருப்பாரா? தனது பணி முடிந்துவிட்டது என இயேசு இங்கே கூறுகின்றார். அப்படியென்றால் சிலுவையில் உயிரை அர்ப்பணிப்பது என்பது அவரது பணியல்ல. இஸ்லாம் கூறுவது போல் அவரது பணி முடிந்ததும் அவர் வானத்திற்கு உயர்த்தப்பட்டார். அவர் போன்று உரு மாற்றப்பட்ட ஒருவர்தான் சிலுவையில் அறையப்பட்டார். யூதர்களின் சதியில் இருந்து இயேசு அற்புதமாக காப்பாற்றப்பட்டார் என்பதுதான் இயேசுவுக்கு உண்மையான கண்ணியத்தைக் கொடுக்கக் கூடிய கொள்கையாக இருக்கும் என்பதைச் சிந்தித்தால் புரிந்து கொள்ளலாம்.
இயேசு சிலுவை மரணத்திற்கு முன்னர் இந்தப் பாத்திரத்திலிருந்து தன்னை விடுவிக்கு மாறு பிரார்த்தித்ததாக பைபிள் கூறுகின்றது.
‘சற்று அப்புறம் போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின ;படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.’
(மத்தேயு 26:39)
இதே செய்தியை மாற்கு இப்படிக் கூறுகின்றார்.
‘அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங் கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,’
‘சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மை விட்டு நீங்கிப் போகக் கூடுமானால் அது நீங்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டு:’
‘அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிலிருந்து எடுத்துப் போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.’
(மாற்கு 14: 34-36)
இதே செய்தி (லூக்கா 22:41-44) இலும் கூறப்பட்டுள்ளது.
இயேசு சிலுவையில் உயிரை அர்ப்பணிப்பதற்காகவே படைக்கப்பட்டிருந்தால் இப்படி பிரார்த்தித்திருப்பாரா? இயேசுவின் இந்தப் பிரார்த்தனையைப் பார்த்தால் அவர் சிலுவை மரணத்தை விரும்பவில்லை என்பது தௌ;ளத் தெளிவாக விளங்கவில்லையா?
இயேசு இப்படிப் பிரார்த்தித்திருந்தால் இறை விசுவாசியான, இறைத்தூதரான அவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டிருக்கும். அவர் பாதுகாக்கப்பட்டிருப்பார் என்பதே இஸ்லாமிய நம்பிக்கையாகும்.
இந்த அடிப்படையில்தான் இயேசு கொல்லப்படவும் இல்லை, சிலுவையில் அறையப்படவும் இல்லை. அவருக்கு வேறு ஒருவர் ஒப்பாக்கப்பட்டார். இயேசு வானத்திற்கு உயர்த்தப்பட்டார் என இஸ்லாம் உறுதியாகக் கூறுகின்றது. இயேசு மீண்டும் பூமிக்கு வருவார். நீதியான ஓர் ஆட்சியை நடாத்துவார். பின்னர் இயற்கை மரணத்தை அடைவார் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இது இயேசுவை கண்ணியப்படுத்துமா?
இயேசு கத்திக் கதறி தன்னைப் பாதுகாக்குமாறு பிரார்த்தித்தார். அவர் பாதுகாக்கப்படவில்லை. குற்றவாளிபோல் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையில் வைத்துக் கேவலப்படுத்தப்பட்டார். என் தேவனே! என் தேவனே! என்னைக் கைவிட்டீர் என்று கத்திக் கதறிய நிலையில் அவர் உயிரை விட்டார் என பைபிள் கூறுவது போல் நம்புவது இயேசுவை கண்ணியப்படுத்துமா? இதில் எது இயேசுவை உண்மையாக மதிப்பதாக, உண்மைப்படுத்துவதாக அமையும் என்று நிதானமாக சிந்தித்து முடிவு செய்ய வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையாகும்.