அல்குர்ஆன் விளக்கம் | இப்றாஹீம் நபியின் விவாதம்.

‘தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக (கர்வம் கொண்டு) இப்றாஹீமிடம் அவரது இரட்சகன் விடயத்தில் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? இப்றாஹீம், ‘எனது இரட்சகனே உயிர்ப்பிப்பவனும் மரணிக்கச் செய்பவனுமாவான்” என்று கூறியபோது ‘நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கச் செய்வேன்” என்றான். (அதற்கு) இப்றாஹீம் ‘அப்படியானால் நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கின்றான். ஆகவே, அதனை நீ மேற்கிலிருந்து உதிக்கச்செய் (பார்க்கலாம்) என்றார். உடனே நிராகரித்த அவன் வாயடைத்துப் போனான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்தை நேர்வழியில் செலுத்தமாட்டான்;.” (2:258)

இப்றாஹீம் நபியவர்கள் தனது காலத்தில் வாழ்ந்த அரசனுடன் நடத்திய விவாதம் குறித்து இந்த வசனம் பேசுகின்றது. நம்ரூத் எனப்படும் இவ்வரசனுக்கு அல்லாஹ் மகத்தான ஆட்சியைக் கொடுத்திருந்தான். ஆணவம் கொண்ட அவன் தன்னைத் தானே கடவுள் எனக் கூறிக் கொண்டான். இப்றாஹீம் நபியவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள். உனது இறைவன் யார்? என இப்றாஹீம் நபியிடம் அவன் கேட்டான். அல்லாஹ்வின் இரண்டு பண்புகளை அவர் கூறினார். ஆக்கவும், அழிக்கவும் ஆற்றல் பெற்றவன். படைப்புக்களை புதிதாக உருவாக்குபவனும் அவற்றை அழிப்பவனுமாகிய அல்லாஹ்வே என் இறைவன் என்று கூறினார்கள்.
நான்தான் கடவுள் என்று கூறுபவனிடம் கடவுள் ஒருவன் இருக்கின்றான், அவன் ஆக்கவும், அழிக்கவும் ஆற்றல் பெற்றவன் என இப்றாஹீம் நபி கூறிய போது ஆணவம் கொண்ட அவன், ஆக்குபவனும் அழிப்பவனும் நானே என்று வாதிட்டான். அவனது இந்த வாதம் தவறானது. என்றாலும் தொடர்ந்து அதில் வாதித்துக் கொண்டிருக்காமல் அவனால் பதில் கூற முடியாத ‘ரூபூபிய்யத்” – அல்லாஹ்வின் இறைமையுடன் தொடர்புபட்ட ஒரு அம்சத்தை இப்றாஹீம் நபி கையில் எடுத்தார்கள். ‘எனது இறைவன் சூரியனைக் கிழக்கில் இருந்து கொண்டு வருகின்றான். நீ அதை மேற்கில் இருந்து கொண்டு வா பார்க்கலாம்!” என்றார்கள். அல்லாஹ்வின் பண்புகளில் குதர்க்கம் புரிந்த இறை மறுப்பாளனால், இதில் குதர்க்கம் புரிய முடியாமல் போனது. வாயடைத்துப் போனான்.

இந்த நிகழ்ச்சி மூலம் இப்றாஹீம் நபியின் பிரச்சார அணுகுமுறை, துணிச்சல், வாதத் திறமை, வாத முறை, நம்ரூத் மன்னனின் ஆணவம் போன்ற பல அம்சங்களைப் புரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.