அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-3)

பிளவைத் தடுக்க பிரச்சாரத்தைத் தவிர்க்கலாமா?
அல்லாஹ்வின் கட்டளைப்படி மூஸா(அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கையில் ஹாரூன் (அலை) அவர்களிடம் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் சென்றதன் பின்னர் சாமிரி என்பவனின் தவறான செயலால் இஸ்ரவேலர்கள் காளைக் கன்று ஒன்றை வணங்க ஆரம்பிக்கின்றார்கள். காளைக் கன்றின் மூலம் இஸ்ரவேலர்கள் சோதிக்கப்பட்டது பற்றி மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான். கோபத்தோடு வந்த மூஸா(அலை) அவர்கள் “ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் என்னை நீர் பின்பற்றி நடக்க உம்மைத் தடைசெய்தது எது? நீர் என்னுடைய கட்டளைக்கு மாறு செய்ய முற்பட்டீரா?” (20: 92,94)

என்று கண்டித்துக்கூறி அவரின் தாடியையும், தலைமுடியையும் பிடித்து இழுத்தார். இவ்வேளையில், ஹாரூன் (அலை) “என் தாய் மகனே! என் தலையையும் தாடியையும் பிடித்திழுக்காதீர். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கிடையில் நீர் பிரிவினை உண்டு பண்ணி விட்டீர். நீர் என்னுடைய வார்த்தைகளைக் கவனிக்கவில்லை என்று நீர் என்னைக் கடுகடுப்பீர் என்று நிச்சயமாக நான் பயந்தேன்” (20:94) என்று பதிலளித்தார்கள்.
ஹாரூன்(அலை) அவர்களின் பதிலை அவதானிக்கும் போது சமூகத்தில் பிளவு ஏற்படும் என்றிருந்தால் “ஷிர்க்” எனும் கொடிய குற்றத்தைக்கூட கண்டுகொள்ளாமல் இருக்க முடியும் என்பதை உணரமுடிகின்றதல்லவா? ஒரு நபியே தன் முன்னாலேயே காளைக் கன்று வணங்கப்படுவதை பிரிவினை வந்துவிடக்கூடாது என்பதற்காக தடுக்காமல் இருந்துள்ளார் என்றால் நாம் இது விடயத்தில் எவ்வளவு நிதானப்போக்கைக் கைக்கொள்ள வேண்டும்? நாம் ஹாரூன்(அலை) அவர்களை விட மேலானவர்களா? அல்லது எம் சமூகத்தவர்கள் செய்யும் தவறுகள் இஸ்ரவேலர்களின் குறிப்பிட்ட இத்தவறை விடத்தான் கொடியதா? எனவே, சமூக நலன் கருதி சத்தியத்தை மறைக்க முடியும் என்பதைப் புரிய முடிகின்றது. இது விடயத்தில் நாம் மிகவும் “ஹிக்மத்”தாக நடந்து கொள்ள வேண்டும் என மாற்றுக் கருத்துடைய சகோதரர்கள் விவாதிக்கின்றனர்.
மேற்படி வாதத்தைப் பல காரணங்களால் எம்மால் ஜீரணிக்க முடியாதுள்ளது. சத்தியப் பிரச்சாரம் செய்வோரைக் குழப்பவாதிகள் என சீல் குத்தி குட்டையைக் குழப்பிவருவோரும் “தஃவத்” பணிபுரி வதாகக் கூறிக்கொண்டு நன்மையை மட்டும் ஏவினால் போதும், தீமையைத் தடுக்கத்தேவையில்லை என்போரும் மேற்கூறிய வாதத்தைத் தமக்குரிய பலமான ஆதாரமாகக் கருதுவதால் இதுபற்றி சற்று விரிவாகவே நாம் அலச வேண்டியுள்ளது.
(1) ஹாரூன்(அலை) அவர்கள் பிரிவினை ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் காளைக் கன்றை மக்கள் வணங்குவதை அறிந்த பின்னரும் கண்டும் காணாதது போல் இருந்துவிடவில்லை. அவர்கள் மக்களை இத்தீங்கிலிருந்து தடுக்கவே செய்தார்கள். இதனை அல்குர்ஆன் தெளிவாகவே கூறுகின்றது.
“இதற்கு முன்னதாகவே ஹாரூன்(அலை) அவர்களை நோக்கி என்னுடைய ஜனங்களே! இச்சிலையை வணங்கி நீங்கள் வழி தப்பி விட்டீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் அருளாளனாகும். என்னைப் பின்பற்றுங்கள். என்னுடைய கட்டளைக்கு வழிப்படுங்கள் என்று கூறினார்.” (20:90)
சிலை வணக்கத்தைத் தடுக்கும் அவர்களது இந்தப் பிரச்சாரம் எந்தளவுக்கு முற்றிப்போனதென்றால் சிலை வணங்கிகள் ஹாரூன்(அலை) அவர்களைக் கொலை செய்யக்கூட முற்பட்டனர். இதன்பிறகும் பிரச்சாரம் செய்வதென்றால் போராட்டத்தைச் சந்தித்தே அதைச் செய்ய வேண்டும் என்ற நிலை வந்தபோதே தம் பிரச்சாரத்தை (மனவிருப்பமில்லாமல்) நிறுத்திக் கொண்டார்கள். இதனைப் பின்வரும் வசனத்தின் மூலம் உணரலாம்.
“.. .. .. என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னைப் பலவீனப்படுத்தி என்னைக் கொலை செய்துவிடவும் முற்பட்டனர். (ஆதலால் நான் ஒன்றும் செய்ய முடியாமலாகிவிட்டது. ஆகவே, என்னை அவமானப்படுத்தி) என்னுடைய விரோதிகள் சிரிக்குமாறு செய்துவிடாதீர். இந்த அக்கிரமக்கார மக்களுடன் என்னைச் சேர்த்து விடாதீர் என்று கூறினார். (7:150)
எனவே, எதிர்த்தரப்பாரின் ஹாரூன்(அலை) பிரிவினைக்குப் பயந்து தீமையைத் தடுக்காமல் இருந்தார்கள் என்ற வாதம் தவறானதாகும். கொலை விழும் என்றளவுக்கு நிலைமை முற்றிப் போனதன் பின்னர்தான் அவர் தமது பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டார் என்றே அருள் மறை கூறுகின்றது.
காளை மாட்டுச் சிலை வணங்கப்படும் போது ஹாரூன் தடுக்காமல் இருந்து விட்டார் என்று எண்ணித்தான் மூஸா(அலை) அவர்கள் ஹாரூன்(அலை) அவர்களுடன் கடுமையாக நடந்து கொள்கின்றார்கள். (இதுவே தவறைக் கண்டும் காணாதது போல் இருக்க முடியாது என்பதை உணர்த்துகின்றது)
இதற்கு பதில் கூறும் போது தான் ஹாரூன்(அலை) தடுத்த விபரத்தைக் கூறி இந்த அக்கிரமக்கார மக்களுடன் என்னையும் சேர்த்து விடாதீர் என்றும் கூறினார். இதன் அர்த்தம் மூஸா(அலை) அவர்கள் ஹாரூனும் காளை மாட்டை வணங்கினார் எனக் கருதுவதால் அவர் அப்படிக் கூறினார் என்பதல்ல. தவறு நடக்கும் போது அதைக் கண்டும் காணாதது போல் இருந்தார் என மூஸா நபி கருதினால் ஹாரூன்(அலை) அவர்களும் அந்த அக்கிரமக் காரர்களில் ஒருவர் என்றாகி விடும். நான் தடுத்தேன். எனவே, நான் அவர்களில் ஒருவன் அல்ல என்றே ஹாரூன்(அலை) கூறுகின்றார். (இதுவும் தவறைத் தடுக்காமல் இருக்க முடியாது என்பதையே உணர்த்துகின்றது) ஹாரூன் பிளவைத் தவிர்க்க தவறைத் தடுக்காது இருந்தார் எனக் கூறும் சகோதரர்கள் குர்ஆனுக்கு மாற்றமாகப் பொய் கூறுவதுடன் ஹாரூன் நபியையும் அந்த அக்கிரமக் காரர்களில் ஒருவராக குற்றம் சாட்டுகின்றனர் என்பதை உணர வேண்டும்.
(2) அடுத்து ஹாரூன்(அலை) அவர்கள் தமது பிரச்சாரத்தை இந்த அளவோடு நிறுத்திக் கொண்டதற்குக் கூட நியாயமான வேறொரு காரணம் இருந்தது. ஹாரூன்(அலை) அவர்கள் விடுத்த அழைப்புக்கு அம்மக்கள்,
“மூஸா நம்மிடம் திரும்ப வரும்வரையில் இதன் ஆராதனையை நாங்கள் விடமாட்டோம் என்று கூறிவிட்டார்கள்” (20:91) என்று பதிலளித்தார்கள் என அருள் மறை கூறுகின்றது.
மூஸா(அலை) அவர்கள் வந்து “கூடாது” என்று கூறிவிட்டால் விட்டு விடுவோம் என அவர்கள் கூறுகின்றார்கள். இந்நிலையில் பெரிய போராட்டம் செய்து தவறைத் தடுக்கும் அவசியம் இருப்பதாக அவர்கள் கருதியிருக்க மாட்டார்கள். மூஸா(அலை) அவர்கள் வந்தால் பிரச்சினையை சுமூகமாகவே தீர்த்து விடலாம் என்றே அவர்கள் இம்மக்களின் மேற்படி பதிலைக் கேட்டதும் எண்ணியிருப்பார்கள்.
ஹாரூன்(அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களின் வருகை வரையிலும் (தன்னாலான மட்டும் பிரச்சாரம் புரிந்துவிட்டு) சற்று ஓய்ந்திருந்தார்கள். நாம் யார் வருகையை எதிர்பார்த்து எமது பிரச்சாரத்தை முடங்கச் செய்வது? அன்றைய “அத்தகைய” சூழ்நிலையோடு எமது இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பேச முடியுமா?
(3) அடுத்ததாக ஹாரூன்(அலை) அவர்கள் தெரிவித்த அச்சம்கூட அல்லாஹ்வால் கண்டிக்கப்படுவேன் என்ற எண்ணத்தில் எழுந்ததல்ல. மூஸா(அலை) அவர்களால் கண்டிக்கப்படுவேன் என்ற அச்சமே அவர்களிடம் மேலோங்கிக் காணப்பட்டது. “இஸ்ராயீலின் சந்ததிகளுக் கிடையில் நீர் பிரிவினையை உண்டு பண்ணிவிட்டீர் என்று நீர் என்னைக் கடுகடுப்பீர் “என்று நான் பயந்தேன்.” (20:94) என்ற அவர்களது வார்த்தை இதனை நன்றாக உணர்த்துகின்றது. ஏன் அவர்கள் இவ்விதம் எண்ணினார்கள் என்றால் 12 கோத்திரங்களாகப் பிளவு பட்டிருந்த பனூ இஸ்ரவேலர்களை பெரும் சிரமப்பட்டு ஒன்று சேர்த்து மூஸா(அலை) அவர்கள் சிறிது கால தலைமைத்துவத்தை ஹாரூன்(அலை) அவர்களிடம் ஒப்படைத்து விட்டுச் செல்கிறார்கள். அந்தக் கொஞ்சக் காலத்துக்குள் பிரிவு ஏற்பட்டால் தனது தகுதியற்ற தலைமையால்தான் பிரிவு ஏற்பட்டது என்பது போலாகிவிடுமென்பதே அவர் அச்சம். அவர் சிரமப்பட்டு ஒன்று படுத்திய கூட்டத்தை இவர் உடைத்து விட்டது போல் ஆகிவிடக்கூடாது என்று ஹாரூன்(அலை) அவர்கள் பயந்தார்கள்.
ஹாரூன்(அலை) அவர்கள் பிரிவு ஏற்பட்டால் அல்லாஹ்வின் கண்டனத்தைப் பெற நேரிடும் என்றோ அல்லது இதனால் தான் தண்டிக்கப்படுவேன் என்றோ எண்ணவில்லை. அப்படி எண்ணியிருந்தால் அதனை ஆதாரமாகக் கொள்ளலாம். அதல்லாமல் மூஸா(அலை) அவர்களுக்கு ஹாரூன்(அலை) அவர்கள் அஞ்சியதை நாம் எப்படி ஆதாரமாகக் கொண்டு செயல்படமுடியும்?
(4) அடுத்து ஒரு உண்மையை நாம் நிதானமாக சிந்திக்க வேண்டும். சத்தியத்தை எடுத்துச் சொல்லும்போது அதனை ஒரு கூட்டம் ஏற்று இன்னொரு கூட்டம் எதிர்ப்பதால் ஏற்படும் பிரிவு தவிர்க்க முடியாதது. தண்டனையைப் பெற்றுத் தராதது. (இப்படி நாம் கூறுவது சத்தியத்தை எளிய நடையில் தெளிவுபடுத்தாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்றாற்போல் நடந்து கொள்ளலாம் என்ற கருத்திலல்ல) ஏனெனில் சத்தியவான், அசத்தியவான் என்ற பிரிவு தொன்று தொட்டு உள்ளதுதான். இது மனிதனால் ஏற்பட்ட பிரிவு அல்ல. நேர்வழி, வழிகேடு- நன்மை, தீமை என்ற பிரிவுகளை யார் ஏற்படுத்தினானோ, அவனே நல்லவர், தீயவர் என்ற பிரிவையும் ஏற்படுத்தியுள்ளான். இதற்கு அல்குர்ஆனில் “ஹிஸ்புல்லாஹ்” (அல்லாஹ்வின் கூட்டம்) (5:56, 58:22) “ஹிஸ்புஸ் ஷைத்தான்” (ஷைத்தானின் கூட்டம்) (58:19) என்ற பதங்கள் பிரயோகிக்கப் பட்டிருப்பதைத் தக்க சான்றாகக் கொள்ளலாம்.
எனவே, இந்தப் பிரிவு அல்லாஹ்வாலேயே ஏற்படுத்தப்பட்டது என்பதை நாம் அறியலாம். சத்தியம், எடுத்துச் சொல்லப்படும்போது ஒரு கூட்டம் ஏற்று, மற்றொரு கூட்டம் மறுப்பதால் ஏற்படும் பிரிவு தவிர்க்க முடியாதது இயற்கையானது. அதற்காக பிரச்சாரகன் தண்டிக்கப்பட மாட்டான். அப்படித் தண்டிக்கப்படுவ தென்றால் எல்லா நபிமார்களும் தண்டனைக்குரியவர்கள் என்றாகிவிடும் (அல்லாஹ் இப்படி எண்ணுவதிலிருந்து எம்மைக் காப்பானாக!) ஏனெனில் நபிமார்கள் செய்த பிரச்சாரத்தால் ஏற்பட்ட பிரிவுகள் யுத்தங்களாகக் கூட வெடித்ததுண்டு.
அடுத்ததாக இந்த வாதத்தை எடுத்து வைக்கும் எமது நண்பர்களும் கூட இன்றைய இஸ்லாமிய உம்மத் பல கூறாகப் பிரிந்திருப்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஏற்பட்டுள்ள இந்தப் பிரிவுகளுக்குக்கூட மார்க்கம் தெளிவாக எடுத்து வைக்கப்படாமையே அடிப்படைக் காரணமாகும். உண்மையைச் சொன்னால் பிரிவு, பிரச்சினை ஏற்படும் என அஞ்சி ஊமையாய்ப் போனவர்கள் அனைவரும் அணிதிரண்டு உண்மையை உரக்கச் சொல்லியிருந்தால் பல பிரிவுகளைத் தவிர்த்திருக்கலாம். சத்தியத்தை எடுத்துச் சொல்வதே ஒற்றுமைக்கு வழிவகுக்கும். சத்திய அழைப்புத்தான் ஒற்றுமைக்கான அழைப்பாகும் என்பதை அனைவரும் உணர்ந்து சத்தியத்தை மறைப்பதே பிரிவினைக்கு வழி வகுக்கும் என்பதைப் புரிந்து செயல்பட்டால் எத்தனையோ மார்க்கப்பிரச்சினைகளுக்கு இலகுவாகத் தீர்வு கண்டிருக்கலாமல்லவா?
இறுதியாக முக்கியமானதொரு விடயத்தை நமது சகோதரர்களின் மேலான கவனத்திற்கு விட விரும்புகின்றேன்.
(5) அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே நபிமார்கள் மூலம் நிகழ்ந்த பல தவறுகளை எடுத்துக்கூறுவதைக் காணலாம். ஆதம்(அலை) தடுக்கப்பட்ட கனியைப் புசித்துவிட்டு “தவ்பாச்” செய்ததையும், யூனுஸ்(அலை) அவர்கள் மீனின் வயிற்றில் இருக்கும்போது தான் செய்த தவறுக்காக “தவ்பாச்” செய்ததையும் இதற்குச் சிறந்த உதாரணங்களாகக் கூறலாம்.
மேற்கூறிய சம்பவங்களைப் போன்றே தற்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சம்பவத்தின் பின்னரும் மூஸா(அலை) அவர்கள் தனக்காகவும் ஹாரூன்(அலை) அவர்களுக்காகவும் பாவமன்னிப்புச் செய்தார்கள் என்ற விபரத்தைப் பின்வரும் வசனம் மூலம் அறிய முடிகின்றது.
“என் இறைவனே! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில் நீயே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளன் என்று (பிரார்த்தித்துக் கூறினார்)” (7:151)
நடந்துவிட்ட ஒரு தவறுக்காக அதைச் செய்தவர்களே “தவ்பாச்” செய்ததன் பின்னர் அதனை ஆதாரமாகக் கொண்டு எடுத்து வைக்கப்படும் வாதங்கள் எவ்வளவுதான் ஆழமானதாக, சமூக நலனுக்கு நல்லதாக எமக்குப் புலப்பட்டாலும் அவைகள் அர்த்தமற்றவைகளே!
நூஹ்(அலை) அவர்கள் தன் மகனுக்காகப் பிரார்த்தித்தார்களே என்று ஒரு முஸ்லிம் தனது காபிரான மகனுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்க முடியுமா? அல்லது யூனுஸ் நபிபோல் செயல்படத்தான் முடியுமா? ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைளை மீறியதைப்போல் நாமும் மீற முடியுமா? மேற்கூறப்பட்ட சம்பவங்கள் விடயத்தில் எப்போக்கை நாம் கைக் கொள்வோமோ அதே போக்கைத்தான் மன்னிப்புக் கேட்கப்பட்ட ஹாரூன்(அலை) அவர்களின் மேற்படி சம்பவத்திலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உணரும்போது தாம் தவறாக விளங்கியுள்ள ஹிக்மத்துக்குத் துணையாக மேற்படி சம்பவத்தை இழுத்துக் கொண்டு வருவது தவறானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகின்றது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.