சின்ன விடயங்களைச் சொன்னால் என்ன?
அழைப்புப்பணியில் ஈடுபடுவோர் சில்லறை விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்ளக் கூடாது. அடிப்படையையே ஆட்டங்காணச் செய்யும் எத்தனையோ ஓட்டைகள் இருக்கின்றன. அவற்றை அடைக்காமல் சில்லறை விஷயங்களில் மயிர்பிளக்கும் ஆராய்ச்சிக்காக நம் நேரத்தையும் காலத்தையும் விரயமாக்கலாமா? எனவே, அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் தாடி வைத்தல், அத்தஹியாத்தில் விரல் அசைத்தல், தக்பீர் நெஞ்சில் கட்டுதல், கத்தம் பாத்திஹா, கந்தூரி, மீலாது, மவ்லது, ராத்திபு, ஹழரா போன்ற சில்லறை விடயங்கள் பற்றி அலட்டிக் கொள்ளக் கூடாது. இல்லையென்றால் எத்தனையோ பெரிய, பெரிய விடயங்கள் பற்றி கூற முடியாது போய்விடும். எனவே, சில்லறை விடயங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பதே தஃவாவில் ஹிக்மத்தான வழிமுறையாகும் என்பது ஒரு சாராரின் வாதம்.
அழைப்புப்பணியின் படிமுறை வளர்ச்சி, சில்லறை விடயங்களில் தாஈயின் நிலைப்பாடு என்ன? இதில் தவ்ஹீத் வாதிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளமை என்பன பற்றி நாம் பல கோணங்களில் ஆராய்வோம்.
படிமுறை வளர்ச்சி
அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் தமது பிரச்சார இலக்காக எதைக் கொள்ளலாம் என்பதை உறுதியாகத் தீர்மானிக்க வேண்டும். அப்படித் தீர்மானிக்கும் போது முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்து பேசப்பட வேண்டியவைகளுக்கு அதற்குரிய இடம் அவசியம் அளிக்கப்பட்டேயாக வேண்டும்.
ஒரு இடத்தில் இணைவைக்கப்படுகின்றது அந்த இடத்தில் தொழுகையைப் பற்றியோ இன்ன பிற வணக்க வழிபாடுகள் பற்றியோ பேசுவதில் அர்த்தமில்லை.
விழி இழந்தவனுக்கு விளக்குப் பிடிக்கலாமா?
செவி இழந்தவனுக்கு கவி பாடலாமா?
கண்ணை விற்று சித்திரம் வாங்கலாமா?
கோட்டையே போனபின் கொடியேற்றம் நடத்தலாமா?
நதிகள் காய்ந்த பின் படகோட்ட முடியுமா?
நிச்சயமாக முடியாது. எனவே, எந்த இடத்தில் எதற்கு முதன்மையும் முக்கியத்துவமும் அளிக்க வேண்டும் என்பதை சரியாகத் தீர்மானித்து அந்த இடத்தில் அதற்கு முன்னுரிமை அளிப்பதே சரியான வழிமுறையாகும். பின்வரும் நபி மொழிப் பிரச்சாரத்திற்கான படிமுறை வளர்ச்சி எது என்பதைத் தெளிவுற விளக்குகின்றது.
நபி(ஸல்) அவர்கள் முஆத் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பும் போது அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்கள்:-
முஆதே! நீர் வேதம் அருளப்பெற்ற ஒரு சமூகத்தின் பக்கம் செல்கிறீர்! நீர் அவர்களுக்கு விடுக்கும் முதல் அழைப்பாக ஏகத்துவம் இருக்கட்டும். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கு அல்லாஹ் ஒரு தினத்தில் ஐவேளைத் தொழுகையைக் கடமையாக்கியுள்ளான் என்று கற்றுக் கொடுப்பீராக! அதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அல்லாஹ் அவர்கள் மீது “ஸகாத்” விதித்திருப்பதையும் அது அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்டு அவர்களில் உள்ள ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். என்றும் கற்றுக் கொடுப்பீராக.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி)
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
ஆரம்பத்தில் ஏகத்துவத்தையும் அதன்பின் தொழுகையையும் அதன்பின் ஸகாத்தையும் யூத கிரிஸ்தவர்களுக்கு எடுத்துக் கூறுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதில் இருந்து அதி முக்கியமாக ஏவ வேண்டிய ஒன்று இருக்க அதை விட்டு விட்டு அதை விட ஷரீஅத் முக்கியத்துவம் அளிக்காத ஒன்றை எடுத்துக் கூறுதல் பொருத்தமற்றது என்பதைப் புரிய முடிகின்றது.
இந்த அடிப்படையில் “அகீதா” வில் கோளாறு உள்ளவர்களிடத்தில் சுன்னத், பர்ழ் பற்றிப் பேசுதல் அர்த்தமற்றதே! தொழுகையே இல்லாதவர்களிடத்தில் தொழுகையின் உள்ளே உள்ள சர்ச்சைகள் பற்றி விலாவாரியாக விளக்குவதும் பொருத்தமற்றதே.
இவ்வாறு நாம் கூறுவதை “தொழாத ஒருவர் தொழ ஆரம்பித்த பின்னரும் அது தொடர்பான சுன்னத்துக்களை அவருக்குக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை”. என புரிந்து கொள்ளக் கூடாது. தொழாதவர்களை தொழ அழைப்பவர்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களுக்கு தொழுகின்ற முறையை உள்ளது உள்ளபடி கற்றுக் கொடுப்பது கடமையாகும்.
“அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்” என்று தொழுகைக்கு அழைத்துவிட்டு அது தொடர்பான செய்திகளை மறைப்பது அடிப்படையான தொழுகையின் மகத்துவத்தைக் குறைப்பதாகவே அமையும். அடிப்படைகளை விட்டு விட்டு மேலோட்ட மானவற்றில் கவனம் செலுத்தக் கூடாது. எனக் கூறுகின்ற நாம், அடிப்படைகளை ஏற்றுக் கொண்டவர்களிடம் மேலோட்டமானவற்றை மறைப்பதும் கூடாது என்பதைப் புரிந்து கொண்டால் சரி. (பெரிய விடயங்களைப் பேசுகின்றோம் என்று சின்னவற்றை விட்டு விடுவதும் சில்லறைகளைப் பேசி, பெரியதை விடுவதும் தவறானதே! இரண்டையும் போதிப்பதே முறையாகும். முக்கியத்து வத்திலும் முதன்மையளிப்பதிலும் வித்தியாசம் இருக்கலாம்.)
எனவே, சில்லறைப் பிரச்சினைகளைத் தவிர்த்தல் என்பது பிரச்சாரப் பணியில் எல்லாக் காலங்களுக்கும் உரிய ஒன்றாக இருக்காது. ஒருவரிடம் சொல்லத் தேவை யில்லாத ஒரு விடயம் இன்னொருவரிடம் சொல்ல வேண்டியதாயிருக்கலாம் என்பதைப் புரிய முடிகின்றது.
மறுப்பதும் செய்யாமல் இருப்பதும்
சில்லறைப் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்துதல் என்ற பிரச்சினையை நாம் இன்னுமொரு கோணத்தில் நோக்குவோம்.
தொழாத ஒருவரிடம் சுன்னத்துத் தொழுகையை ஏவவேண்டியதில்லை. அவர் தொழ ஆரம்பித்து விட்டால் அதன் பின் சுன்னத்துத் தொழுகையை வலியுறுத்திப் பேச வேண்டும். அதை அவர் செயல்படுத்தாமல் இருந்தால் குற்றமில்லை. இதற்காக அவரைக் குறைகாணவோ பெரிதாக அலட்டிக் கொள்ளவோ வேண்டியதில்லை.
இதே நபர் அந்த சுன்னத்துத் தொழுகைகளை பொடு போக்கு, அக்கறையின்மை, சோம்பல், வேலைப்பளு போன்ற காரணங்களுக்காக அல்லாமல் வெறுப்போடு விட்டுவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது இது வன்மையான கண்டனத்துக்குள்ளாக வேண்டிய நிலையை அடைகின்றது.
“யார் எனது வழி முறையைப் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரில்லை.”
அறிவிப்பவர் : அனஸ் (ரழி)
நூல் : முஸ்லிம்
என்ற நபி மொழியை அவதானிக்கும் ஒரு “தாயீ” (அழைப்பாளன்) நிச்சயமாக ஒரு சுன்னத்தை ஒரு தனி நபர் அல்லது ஒரு சமூகம் வெறுப்போடு விடும் போது சுன்னத்துத் தானே? இதற்கேன் அலட்டிக் கொள்வான்? என்று இருக்க மாட்டான்.
இதிலிருந்து சாதாரணமாக ஒரு சுன்னத்தை விடுதல் வேறு, வெறுப்போடு அதை விடுவது வேறு என்பதைப் புரிய முடிகின்றது.
அதே நபர், அந்த சுன்னத்தான தொழுகையைக் கிண்டல் பண்ணுகிறார். குறைத்து மதிப்பிடுகிறார், இழிவாகப் பேசுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு “தாயீ” (அழைப்பாளன்) கிண்டல் பண்ணப்படுவது சுன்னத்தைத் தானே? பர்ழை அல்லவே? இதைப் போய் பெரிது படுத்த வேண்டுமா? சுன்னத் கிண்டல் செய்யப்படுவதற்கு அது செயல்படுத்தப்படுவது தானே காரணம்? சுன்னத்தைச் செய்பவர்கள் அதை செய்யாமல் விட்டால் பிரச்சினையே இருக்காதே? என்றெல்லாம் கற்பனையாவது பண்ணிப் பார்க்கலாமா?
“அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசிக்கின்றீர்கள்…, நீங்கள் விசுவாசம் கொண்டதற்குப் பின்னர் நிச்சயமாக (அதனை) நிராகரித்தே விட்டீர்கள்.” (9:65,66)
என்ற மறை வசனத்தை அறிந்த ஒரு “தாயீ” சுன்னத் கிண்டல் செய்யப்படுவதை ஒரு சுன்னத் எவ்விதக் காரணமும் இல்லாமல் விடப்படுவதோடு சமப்படுத்தி நோக்கலாமா? கூடாது, கூடவே கூடாது.
எனவே, ஒரு சுன்னத் செயல்படுத்தப்படாமல் இருப்பது வேறு அது கிண்டலோடு அவமரியாதையோடு விடப்படுவது வேறு, இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதே நபர், சுன்னத் தொழுகை என்ற ஒன்று இல்லை என்று மறுத்துப் பேசுகின்றார். பர்ழையே பலர் தொழாமல் இருக்கின்றனர். இவர் சுன்னத்துத் தொழுகையைத் தானே மறுக்கிறார். இதைப் பெரிது படுத்தக் கூடாது. பர்ழைத் தொழுகிறாரே அது போதாதா? என ஒரு “தாயீ” கூற முடியுமா? முடியாது. எனவே செயல்படுத்தாமல் இருப்பது வேறு, மறுப்பது வேறு, மறுக்கப்படும் போது எதிர்ப்பது கடமை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதே நபர் சுன்னத்துத் தொழுபவர்களை இல்லாத ஒன்றைச் செய்வதாகக் கூறி கண்டிக்கின்றார், அடிக்கின்றார், இதைச் செய்யக் கூடாது என்று மல்லுக்கு நிற்கிறார்.
சுன்னத்தை தானே விடச் சொல்லுகிறார். விட்டால் போச்சுது. இதற்காகப்போய் அடி வாங்கிக் கொண்டு இருக்க வேண்டுமா? என்று ஒரு தாயீ கூற முடியுமா? நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு சுன்னத் ஒரு சிலரால் விடப்படுமென்றால் சும்மா இருக்கலாம். (ஒரு கூட்டம் ஒட்டு மொத்தமாக ஒரு சுன்னத்தை விடுமென்றால் அதை எதிர்க்கும் கட்டாயம் ஏற்படும்) ஆனால் அதே கூட்டம் சுன்னாவை எதிர்க்கும் என்றால் அதை செயல்படுத்திக் காட்டுவதும், பிரச்சாரம் பண்ணுவதும் கட்டாயம் என்கின்ற அளவுக்கு உயர்ந்து விடும்.
“எனக்குப் பின் என் சுன்னத்துக்களில் மக்கள் மரணிக்கச் செய்தவைகளுக்கு உயிர் கொடுக்கும். உத்தமர்களான அனாதரவானவர்களுக்கு சுபசோபனம் உண்டாவதாக.” (திர்மிதி 2765) என்ற நபி மொழி எதைக் கூறுகின்றது என்று சிந்தித்துப் பாருங்கள்.
முடிவாக ஒரு சுன்னத் அது மிகச் சிறிய விசயமாக இருந்தாலும் செயல்படுத்தப்படாமல் இருப்பது வேறு, கேலிக்கும், கிண்டலுக்கும், மறுப்புக்கும், எதிர்ப்புக்கும் உள்ளாக்கப்படுவது வேறு. முன்னைய நிலையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். பின்னைய நிலையில் பொங்கி எழ வேண்டும்.
ஏவுதலும் எடுத்து நடத்தலும்
இதே பிரச்சினையை நாம் இன்னுமொரு கோணத்தில் நோக்க வேண்டிய தேவை உள்ளது.
சிலர் அடிப்படைகளே இல்லாமல் இருக்கலாம். அவர்களிடம் போய் கிளைப்பிரிவுகள் பற்றிப் பேச வேண்டிய தில்லையென்பது நியாயம் தான். மது அருந்திக் கொண்டிருக்கும் ஒருவரிடம் “இருந்து கொண்டு, பிஸ்மி கூறி அருந்துங்கள்” என்று கூற முடியாதல்லவா? எனவே, இது போன்றவர்களிடம் இது போன்ற சந்தர்ப்பங்களில் சுன்னத்துக்கள் பற்றி ஏவ வேண்டியதில்லை என்பதை ஏற்கலாம்.
இதற்காக இது போன்றவர்கள் முன்னிலையில் என்றாலும் இது போன்ற சந்தர்ப்பங்களில் என்றாலும் கூட அடிப்படைகளை அறிந்து ஏற்று, அதைப் பிறருக்கு எடுத்துக் கூறும் நாம் சுன்னத்துக்களை அவர்களுக்காக தவிர்க்க முடியாதல்லவா?
ஏவுதல் என்பது வேறு, நாம் எடுத்து நடத்தல் என்பது வேறு, சில விசயங்கள் கால சூழலை வைத்து நோக்கும் போது நாம் எடுத்துக் கூறும் அளவிற்குத் தேவையோ, முக்கியத்துவமோ அற்றதாக இருக்கலாம். ஆனால், அண்ணலாரின் நடைமுறைகள் எப்போதும், எக்காலத்திலும் நாம் எடுத்து நடக்கும் அளவிற்கு உயர்வுடையதாகும்.
மதுபானம் அருந்துபவனிடம் “உட்கார்ந்து பிஸ்மி கூறி குடி” எனக் கூற முடியாது. என்றாலும் நீரை அருந்தும் நாம் இதைக் கடைப்பிடிக்கலாம் அல்லவா?
ஹராமான களியாட்டங்களில் பங்கு கொள்கின்ற ஒருவரிடம் அதைத் தடுப்பதற்கு முன்னர் கந்தூரி போன்றவற்றில் கலந்து கொள்ளாதீர்கள் என்று பிரச்சாரம் பண்ணுவதுதான் பொருத்தமற்றது என்கின்றனர். அப்படியாயின் ஹராமான களியாட்டங்களில் பங்கு கொள்ளாதவர்களாகிய அவர்களாவது இவை போன்ற வற்றில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டுமல்லவா?
எனவே, சுன்னத்தான விடயங்களை ஏவுவதற்கு காலத்தையும் நேரத்தையும் சூழலையும் அதற்கேற்ற மக்களையும் தேடுகின்ற நாம், இந்த வாய்ப்புக்கள் வரும்வரை அதை எடுத்துச் செயல்படுத்துவதையும் தள்ளி வைக்க முடியாது.
ஏவுவதற்குத் தேவையற்ற சந்தர்ப்பம் என்றாலும் கூட நாம் எடுத்து நடக்க வேண்டும். ஏவும் சூழ் நிலை இல்லை என்பதற்காக எடுத்து நடக்காமல் இருப்பது மடமையாகும்.
மது அருந்தும் ஒருவர் சீர் திருந்திய பின்னர் நீர் அருந்தும் ஒழுங்கைக் கற்றுக் கொடுக்க காத்துக் கொண்டிருக்கும் ஒரு “தாயீ” அவன் திருந்தியதன் பின்னர் நாமும் நீர் அருந்தும் ஒழுங்கை கடைப்பிடிக்கலாம் அது வரை இந்த ஒழுங்கு பற்றி அலட்டிக் கொளளத் தேவையில்லை எனக் கருத்துக் கூறினால் அது எப்படி முட்டாள் தனமானது என முத்திரை குத்தப்படுமோ அதே போன்றுதான் சுன்னத்துக்களை எடுத்துக் கூறும் சூழ்நிலை வரட்டும் என்று சுன்னத்துக்களை செயல்படுத்தாமல் இருக்கும் தஃவா அணுகுமுறையுமாகும். அலைகள் ஓயட்டும், ஆழ்கடலில் குளிக்கலாம் என்று காத்திருப்ப வனுக்கும். கடல் வற்றிய பின் கருவாடு உண்ணக் காத்திருக்கும் கொக்கிற்கும் இந்த தஃவா அணுமுறைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒட்டு மொத்தமாக கூறுவதென்றால் ஏவுவது வேறு, எடுத்து நடப்பது வேறு. ஏவும் நிலையில்லை என்பதற்காக எடுத்து நடக்காமல் இருக்க முடியாது. என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.
பிரச்சினையை இனம் காணல்
இதே பிரச்சினையை நாம் இன்னுமொரு கோணத்தில் நோக்குவோம்.
பிரச்சினை எது? அதைப் பெரிதுபடுத்துவோர் யார்? என்பதை பொது மக்களும், ஏன் தாயீகளும் கூட உணராமல் இருக்கின்றனர். பிரச்சினை எது என்பதையும் அதைப் பெரிதுபடுத்துவோர் யார் என்பதையும் இனம் காண வேண்டும். அவர்களிடம் தான் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள், என்ற போதனையைச் செய்ய வேண்டும்.
தற்போது பெரும்பாலும் சரியான சுன்னாக்களே சில்லறைப் பிரச்சினை என்று கூறப்படுவதைக் காண முடியும்.
சுன்னாக்கள் பிரச்சினை என்றோ, சில்லறை என்றோ கீழ்ப்படுத்தப்படுவது, ஒதுக்கப்படுவது நிச்சயம் ஒரு முஸ்லிமால் சகிக்க முடியாததாகும். சின்ன விஷயமாக இருந்தாலும் நபி செய்தால் அது நபி வழி என்று உயர்வாகவே நோக்கப்பட வேண்டும். நபி வழி எப்போதும் தீர்வாக இருக்குமேயொழிய பிரச்சினையாக இருக்காது. எனவே, சுன்னத்திற்கு மாற்றமான வழி முறைகள் தான் சில்லறை என்றும் , பிரச்சினைகள் என்றும் சுட்டிக் காட்டப்பட வேண்டும்.
அடுத்து பெரிது படுத்துதல் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சுன்னத்தை பர்ழ் எனக் கூறுவது பெரிது படுத்தலாகும். அல்லது சுன்னத் ஒன்றைச் செய்யாதவருடன் சர்ச்சைக்குச் செல்வது, சண்டையிடுவது வேண்டுமானால் அதைப் பெரிது படுத்து வதாகும்.
ஒரு முஃமின் சுன்னாவை ஒருவர் செயல்படுத்த வில்லை என்பதற்காக அவருடனும் சர்ச்சை செய்து அதைப் பெரிதுபடுத்தவும் மாட்டான். ஒரு சுன்னத்தை சில்லறைப் பிரச்சினை என்று கூறி இழிவுபடுத்தவும் மாட்டான். சுன்னத்தை சுன்னத் என்றே கூறுவான்.
இதனை மனதில் ஆழப்பதிய வைத்துக் கொண்டு சில்லறைப் பிரச்சினைகள் எவை? அவற்றைப் பெரிது படுத்துதல் என்றால் என்ன? என்பவற்றையும் சற்று நோக்குவோம்.
எது பிரச்சினை?
எம்மைப் பொறுத்த வரையில் ஒரு நபிவழி பிரச்சினையாக இருக்காது, அது சில்லறை என ஒதுக்கப்படவும் கூடாது. ஆனால், இன்று பெரும்பாலும் சரியான சுன்னாக்கள் தான் சில்லறைப் பிரச்சினைகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தக்பீர் நெஞ்சில் கட்டுவது சிலரால் சில்லறைப் பிரச்சினையாக (சிலரைப் பொருத்தவரை கையை உடைப் போம் எனக் கோஷமிடுமளவுக்கு அது பெரிய ரொம்ப ரொம்பப் பெரிய பிரச்சினை) நோக்கப்படுகின்றது.
குர்ஆன், சுன்னாவின் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை தக்பீரை நெஞ்சின் மீது கட்டுவது சுன்னத்தாகவும், அதை, தொப்புளுக்குக் கீழும் நெஞ்சுக்கும் தொப்புளுக்குமிடையிலும் கட்டுவது தான் பிரச்சினையாகவும் சுன்னாவுக்கு மாற்றமாகவும் இருக்கும்.
யார் பெரிது படுத்துபவர்கள்?
சுன்னத்துக்கள் சில்லறைகளாக, பிரச்சினையாக கருதப்படுவது போலவே நபி வழி நடப்போரே இன்று குழப்ப வாதிகளாக சில்லறைப் பிரச்சினைகளைப் பெரிது படுத்துபவர்களாக சமூகத்தால் நோக்கப்படுகின்றனர்.
குழப்பத்தை விரும்பாத, சில்லறைகளை பெரிது படுத்த விரும்பாத மாற்றுக் கருத்துடையோரின் கருத்துப்படி நெஞ்சில் தக்பீர் கட்டுவது சில்லறைப் பிரச்சினையாகும்.
ஒருவர் பள்ளியில் நெஞ்சில் தக்பீர் கட்டித் தொழுகிறார் என வைத்துக் கொள்வோம். இது சில்லறைப் பிரச்சினைதானே இதைப் பெரிதுபடுத்தக் கூடாது தானே (அவர் கருத்துப்படி வேறு இடத்தில் தக்பீர் கட்டுவது சுன்னத் என்றே வைத்துக் கொள்வோம்) ஒரு சுன்னத்தை நிலைநாட்டி ஒற்றுமை என்ற பர்ழை உடைக்கலாமா? எனவே சில்லறைப் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்த விரும்பாதவர்கள் இது பற்றி அலட்டிக் கொள்ளாமல் தங்கள் பாட்டில்போய்க் கொண்டிருக்க வேண்டியதுதானே.?
அதை விட்டு விட்டு ஒற்றுமை விரும்பிகள் சில்லறைப் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்த விரும்பா தவர்கள் தக்பீர் நெஞ்சில் கட்டியவரை ஏசி, அடித்து பள்ளியில் இருந்து இழுத்து வெளியேபோட்டு விட்டு குழப்பவாதி, பிரச்சினைவாதி என சீல் குத்துவது எங்ஙனம் நியாயமாகும்?
தக்பீர் கட்டியவர் குழப்பவாதியா? அதைப் பலவந்தமாகத் தடுக்க முற்படுபவர்கள் குழப்பவாதிகளா? இவ்விரு சாராரில் யார் சில்லறைப் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்துவோர் என்பதை சமுதாயம் சிந்திக்க வேண்டும். அவர்களைப் பார்த்துத் தான் சில்லறைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள் என்று பிரச்சாரமும் புரிய வேண்டும்.