“பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அதன் மூலம் மன்னிப்பும் கேட்டு)க் கொண்டார். அதனால் அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான்.” (அல்குர்ஆன் 2:37)
மேற்படி வசனம் தவறு செய்த ஆதம் நபி அல்லாஹ்விடமே சில வார்த்தைகளைக் கற்று அதன் மூலம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னித்தான் என்று கூறுகின்றது. ஆதம் நபி கற்றுக் கொண்ட வார்த்தைகள் என்ன என்பதை அல்குர்ஆன் மற்றுமொரு இடத்தில் இப்படிக் கூறுகின்றது.
“அவ்விருவரும் “எங்கள் இரட்சகனே! நாங்கள் எங்களுக்கே அநியாயம் செய்து கொண்டோம். நீ எங்களை மன்னித்து, எமக்கு அருள்புரியவில்iயாயின் நிச்சயமாக நாம் நஷ்டவாளர்களில் உள்ளவராவோம்” என்று அவ்விருவரும் (பிரார்த்தித்துக்) கூறினர்.” (அல்குர்ஆன் 7:23)
ஆதம்(ர), ஹவ்வா(ர) ஆகிய இருவரும் இந்த வார்த்தைகள் மூலம்தான் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டதாக குர்ஆனின் இந்த வசனம் உறுதியாகக் கூறுகின்றது. இதற்கு மாற்றமாக ஆதம் (ர) அவர்கள் முஹம்மது நபியவர்களின் பொருட்டால் பாவமன்னிப்புக் கேட்டதால்தான் மன்னிக்கப்பட்டார்கள் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. இது தவறாகும். ஏனெனில் இது தொடர்பில் அறிவிக்கப்படும் அத்தனை அறிவிப்புக்களும் இட்டுக்கட்டப்பட்டவையாகும்.
ஒரு வேளை அந்த அறிவிப்புக்கள் ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் வந்திருந்தால் குர்ஆனில் கூறப்பட்ட வார்த்தை மூலமும் இந்த ஹதீஸில் வந்துள்ள வார்த்தை மூலமும் நபி ஆதம் பிரார்த்தித்தார் என்று இரண்டையும் இணைத்து முடிவு செய்யலாம். ஆனால், ஆதம்(ர) அவர்கள் நபியின் பொருட்டால் பிரார்த்தித்தார்கள் என்று கூறக் கூடிய அனைத்துச் செய்திகளும் இட்டுக்கட்டப் பட்டவையாகும்.
நபி(ச) அவர்கள் பொருட்டால் ஆதம் நபி பிரார்த்தித்தார் என்ற கருத்தைத் தரும் செய்தியை “அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம்” என்பவர் அறிவிக்கின்றார். இவரை அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) இப்னுல் மதீனீ (ரஹ்) மற்றும் பலரும் விமர்சித்துள்ளனர். (திர்மிதி: 632)
அடுத்து ஒரு நபரின் பொருட்டால் பிரார்த்தித்தல் என்ற வழிமுறையை இஸ்லாம் எமக்குக் கற்றுத்தரவில்லை. அத்துடன் ஆதம்(ர) அவர்கள் நபி பொருட்டால் பிரார்த் தித்திருந்தால் அதுவே பின்வந்தவர்களுக்கு ஒரு வழிமுறையாக மாறியிருக்கும்.
நூஹ் நபி தவறு செய்த போது பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்.
“அ(தற்க)வர், “எனது இரட்சகனே! எனக்கு எதில் அறிவில்லையோ அது குறித்து உன்னிடம் கேட்பதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன். நீ என்னை மன்னித்து, எனக்கு அருளும் செய்யாவிட்டால் நான் நஷ்டவாளர்களில் ஆகிவிடுவேன்” என(ப் பிரார்த்தித்து)க் கூறினார்.” (அல்குர்ஆன் 11:47)
இந்தப் பிரார்த்தனையில் ஆதம் நபி பிரார்த்தித்ததாக குர்ஆன் கூறும் வாசகங்களின் தாக்கம் இருக்கின்றது. இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் கூறும் பொருட்டால் கேட்டல் என்ற வழிமுறை குர்ஆனில் எங்குமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யூனுஸ் நபி தவறு செய்துவிட்டு பின்வருமாறு பிரார்த்தித்ததாக அல்குர்ஆன் கூறுகின்றது.
“(யூனுஸ் ஆகிய) மீனுடையவரையும் (நபியே! நீர் எண்ணிப்பார்ப்பீராக!) “அவர் கோபத்துடன் சென்ற போது நாம் அவரை நெருக்கடிக்குள்ளாக்க மாட்டோம்” என அவர் எண்ணிக்கொண்டார். எனவே, அவர் இருள்களில் இருந்து கொண்டு ” (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் உன்னையன்றி வேறு யாருமில்லை. நீயே தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஆகிவிட்டேன்” என (பிரார்த்தித்து) அழைத்தார்.” (அல்குர்ஆன் 21:87)
இது போன்ற துஆக்களில் பொருட்டால் கேட்டல் எனும் வழிமுறை காணப்படவில்லை. எனவே, ஆதம்(ர) அவர்கள் குர்ஆனில் கூறப்பட்டது போன்று பிரார்த்தித்தார்கள். அவர்கள் நபியின் பொருட்டால் பிரார்த்திக்க வில்லை என்பதே உண்மையானதும் உறுதியானதுமாகும்…