‘அல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:276)
இன்றைய உலகப் பொருளாதாரம் வட்டியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள் நீங்க வேண்டும் என்றால் வட்டி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பெரும் கடன் சுமையில் உள்ளன. அந்தக் கடனுக்கான வட்டியைக் கட்டுவதற்கே பல கோடிகளை மாதாந்தம் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. அதனால் வரிக்கு மேல் வரியை விதித்து மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர்.
தொழில் நிறுவனங்கள் வட்டி கட்டுவதற்காகப் பொருட்களின் விலையைப் பன்மடங்காகப் பெருக்குகின்றன. சாதாரண மனிதனும் வட்டியின் வலையில் இருந்து மீள முடியாதுள்ளான். வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் அழிவையே சந்திக்கும் என்பது அல்லாஹ்வின் முடிவாகும்.
இந்த வசனத்தில் அல்லாஹ் வட்டியை அழிப்பான் என்று கூறுகின்றான். வட்டி கொடுத்தவனுக்கு பொருளாதாரம் வளர்ந்து கொண்டே செல்ல வேண்டும். தர்மம் செய்பவனின் பொருளாதாரம் தேய்ந்து கொண்டே செல்ல வேண்டும். ஆனால், வட்டி அழிவைத் தரும் என்று அல்லாஹ் இங்கே கூறுகின்றான்.
நாய்கள் ஒரே தடவையில் பல குட்டிகளை ஈனுகின்றன. ஆடுகள் பெரும்பாலும் அதிகபட்சமாக ஒரே தடவையில் இரு குட்டிகளைத்தான் ஈனுகின்றன. தினமும் இலட்சோப இலட்சம் ஆடுகள் உணவுக்காக அறுக்கப்படுகின்றன, கொல்லப்படுகின்றன. பொதுவாக கணக்கிட்டுப் பார்த்தால் களத்தில் ஆடுகளை விட நாய்களே அதிகம் இருக்க வேண்டும். ஆனால், உலகில் நாய்களை விட ஆடுகளே அதிகம் உள்ளன. எதை வளர்க்க வேண்டும், எதை அழிக்க வேண்டும் என்று அவன்தான் முடிவு செய்கின்றான். அவன் முடிவு செய்துவிட்டால் உலகின் நியதிகளுக்கு மாற்றமாக அது இருந்தாலும் அல்லாஹ்வின் முடிவில் மாற்றம் இருக்காது.
தொடர்ந்து வரும் வசனங்களும் வட்டியை வன்மையாகக் கண்டிக்கின்றன.
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், வட்டியில் எஞ்சியுள்ளதை விட்டு விடுங்கள்.”
‘(அவ்வாறு) நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் (வட்டியை விட்டு தௌபாச் செய்து) மீண்டு விட்டால் உங்கள் செல்வங்களின் மூலதனம் உங்களுக்குரியதாகும். (இதன் மூலம்) நீங்கள் அநியாயம் செய்யவும் மாட்டீர்கள்; அநியாயம் செய்யப்படவும் மாட்டீர்கள்.” (2:278-279)
அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போரிடும் சமூகம் அழிவைத்தானே சந்திக்கும். எனவே, வட்டி அழிவைத்தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. வட்டி ஒழிய வேண்டும் என்றால் ஸதகா, ஸகாத் என்பன ஊக்குவிக்கப்பட வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் கடன் வழங்குவது ஊக்குவிக்கப்பட வேண்டும். கடனைத் திருப்பித் தர முடியாத கஷ்ட நிலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும். இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வட்டி அழிக்கப்பட்டால் அது அனைவருக்கும் நலமாக அமையும். எனவேதான் வட்டியைத் தடை செய்வதற்கு முன்புள்ள வசனங்கள் தான தர்மங்களை ஊக்குவிக்கின்றன. வட்டியைத் தடுத்ததன் பின்னுள்ள வசனங்கள் கடன் பற்றிப் பேசுகின்றன.
கடனுக்கு பெண்ணின் சாட்சியம்:
‘நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட தவணைக்கு நீங்கள் கடன் கொடுத்தால் அதனை எழுதிக் கொள்ளுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதமாக எழுதட்டும். எழுதுபவர் அல்லாஹ் தனக்குக் கற்றுக் கொடுத்தவாறு எழுத மறுக்க வேண்டாம். எனவே, அவர் எழுதட்டும். எவர் மீது கடன் பொறுப்பு இருக்கிறதோ அவர் வாசகங்களைக் கூறட்டும். மேலும் அதில் எதையும் குறைத்துவிடாது தனது இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். கடன் பொறுப்புள்ளவர், விபர மற்றவராகவோ அல்லது பலவீனராகவோ அல்லது வாசகத்தைக் கூற இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நீதமாக வாசகத்தைக் கூறவும். மேலும், உங்கள் ஆண்களில் இருந்து இரு சாட்சியாளர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் இல்லையென்றால் சாட்சிகளில் நீங்கள் பொருந்திக் கொள்ளக் கூடியவர்களிலிருந்து ஆண் ஒருவரையும், பெண்கள் இருவரையும் (சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில், அவ்விருவரில் ஒருத்தி தவறிவிட்டால் அவர்களில் ஒருத்தி மற்றவளுக்கு நினைவூட்டுவாள். சாட்சியாளர்கள் (சாட்சிக்காக) அழைக்கப்பட்டால் மறுக்க வேண்டாம்….” (2:282)
கடன் வழங்கும் போது இரண்டு ஆண்களை சாட்சியாக வைக்குமாறும் இல்லாத போது ஒரு ஆணையும் இரண்டு பெண்களையும் சாட்சியாக ஆக்கும்படியும் இந்த வசனம் கூறுகின்றது. இந்த சட்டத்தை வைத்து இஸ்லாம் பெண்களை மதிக்கவில்லை, அவமதித்துள்ளது என்று சிலர் விமர்சிக்கின்றனர்.
இந்த வசனம் பெண்களின் நிலை குறித்துப் பேசுவதற்காக அருளப்பட்ட வசனம் அன்று. கடன் கொடுக்கல் வாங்கல் பற்றிப் பேசும் குர்ஆனில் உள்ள மிகப்பெரும் வசனமே இதுதான். இதனை ‘ஆயதுத்தைன்” கடன் பற்றிய வசனம் என்று கூறுவார்கள்.
இஸ்லாம் பல விடயங்களில் ஆண்களையும் பெண்களையும் சமப்படுத்திப் பேசுகின்றது.
‘நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் அவர்களில் சிலர் மற்றும் சிலருக்கு உதவியாளர்களாவர். அவர்கள் நன்மையை ஏவுகின்றனர். தீமையை விட்டும் தடுக்கின்றனர். தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்து, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றனர். அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.”
‘நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுவனச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சுவனச் சோலைகளில் தூய்மையான வாழ்விடங்களையும் (அல்லாஹ் வாக்களித்துள்ளான். இவையனைத்தையும் விட) அல்லாஹ்விடமிருந்துள்ள பொருத்தமே மிகப் பெரியதாகும். இதுவே மகத்தான வெற்றியுமாகும்.” (9:71,72)
‘இதை நீங்கள் செவியேற்ற போது நம்பிக்கையாளர்களான ஆண்களும், பெண்களும் தங்களைக் குறித்து நல்லதை எண்ணி, ‘இது தெளிவான அவதூறே” என்று கூறியிருக்கக் கூடாதா?” (24:12)
‘நிச்சயமாக முஸ்லிமான ஆண்களும், முஸ்லிமான பெண்களும், நம்பிக்கையாளர்களான ஆண்களும், நம்பிக்கையாளர்களான பெண்களும், அடிபணிந்து வழிபடும் ஆண்களும், அடிபணிந்து வழிபடும் பெண்களும், உண்மையாளர்களான ஆண்களும், உண்மையாளர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறுமையாளர் களான பெண்களும், உள்ளச்சமுடைய ஆண்களும், உள்ளச்சமுடைய பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், தர்மம் செய்யும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் நோன்பு நோற்கும் பெண்களும், தமது கற்புகளைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், காத்துக் கொள்ளும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைவு கூரும் ஆண்களும், நினைவு கூரும் பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்செய்து வைத்துள்ளான்.” (33:35)
‘நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மை யாக) வணங்கப்படத் தகுதியானவன் வேறெவரும் இல்லை என்பதை நீர் அறிந்து கொள்வீராக! இன்னும், உமது பாவத்திற்காகவும், நம்பிக்கையாளர்களான ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் பாவ மன்னிப்புக் கோருவீராக! மேலும், உங்களது செயற் பாட்டையும் உங்களது தங்குமிடத்தையும் அல்லாஹ் நன்கறிவான்.” (47:19)
‘உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்கு அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், அவன் தனது அருளை உம்மீது பூரணப்படுத்துவதற்காகவும், நேரான பாதையில் உம்மைச் செலுத்துவதற்காகவும், பெரும் உதவியை அல்லாஹ் உமக்குச் செய்வதற்காகவும் (இவ்வெற்றியை வழங்கினான்.)” (48:3)
‘நம்பிக்கையாளர்களான ஆண்களையும் பெண்களையும் நீர் காணும் நாளில், அவர்களது ஒளி அவர்களுக்கு முன்னாலும், அவர்களின் வலப் புறமாகவும் விரைந்து கொண்டிருக்கும். இன்றைய நாளின் உங்களுக்கான நன்மாராயம் சுவனச் சோலை களாகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.” (57:12)
ஆன்மீகத்திலும் குற்றவியல் சட்டங் களிலும் பெண்ணையும் ஆணையும் இஸ்லாம் சமமாகப் பார்க்கின்றது. தாய்மை என்று வந்து விட்டால் பெண்ணை ஆணை விட உயர்த்திப் பார்க்கின்றது.
சாட்சியத்தில் இஸ்லாம் ஒரு ஆணின் சாட்சியத்திற்கு இரு பெண்களின் சாட்சியத்தை சமமாக்குவது ஏன் என்ற கேள்வி எழுவது நியாயமானதே!
பல பெண்கள் ஆண்களை விட அதிக நினைவாற்றல் உள்ளவர்களாக உள்ளனர். சில விடயங்களில் ஆண்களையே மிகைக்கும் திறமை உள்ளவர்களாகவும் அவர்கள் உள்ளனர். இதனை நபி(ச) அவர்களே சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். இருப்பினும் ஆணும் பெண்ணும் உருவ அமைப்பில் மட்டுமன்றி குணங்கள், சிந்தனைப் போக்கு, உளப்பாங்கிலும் மாறுபட்டுள்ளனர்.
பெண்களின் சிந்தனையை விட அவர்களது பாசம், ரோசம், கோபம்; போன்ற உணர்வுகள் வலுவானது. குடும்ப சாட்சியம் சொல்லக் கூடிய அளவுக்குப் பெண்களுக்குஅறிவு, நினைவுத் திறன் இருந்தாலும் பாசம், கோபம் போன்ற உணர்வுகள் உள்ளதை உள்ளபடி சொல்ல முடியாமல் தடுக்கலாம். தனக்கு வேண்டிய ஒருவர் பணம் கொடுத்ததைப் பற்றிக் கூறும் போது கட்டுக் கட்டாகப் பணம் கொடுத்ததை என் கண்களால் கண்டேன் என்று மிகைப்படுத்திக் கூறலாம். பெண்ணின் இயல்பு இதற்குக் காரணமாக இருக்கலாம்.
பெண்கள் நல்லவர்கள் என்றாலும் சில விடயங்களில் நீதிக்குத் தேவையான நடத்தைகள் அவர்களிடமிருந்து வெளிவருவதில்லை. இந்தப் போக்கினால்தான் ‘மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொற்குடம்” போன்ற பழமொழிகள் உருவாகின. தனது மகளுக்காக நீதி பேசுபவள், மருமகள் என்றதும் மாறிவிடுவதைக் காணலாம்.
இதே போன்று பெண் அச்சுறுத்தப்பட்டால் அடங்கிப் போகும் இயல்புகள் உள்ளவள். சாட்சியாளர்கள் அச்சுறுத்தப்படும் போது சாட்சிகள் மாறிவிடலாம். இதனால் யாரோ ஒருவர் பாதிக்கப்படலாம். எனவே, இஸ்லாம் இதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது.
அடுத்து, பொதுவாகவே யார் எதனுடன் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக உள்ளனரோ அவர்கள் அது விடயத்தில் அதிக ஞாபக சக்தியும் நுணுக்கமான பார்வையும் உடையவர்களாக இருப்பர். பெண்கள் அதிகமாக வீட்டுடன் தொடர்புடையவர்களாவர். ஆண்கள் சமூகத்துடன் தொடர்புடையவர்களாவர். சில பெண்கள் விதிவிலக்காக இருக்கலாம். விதிவிலக்குகளை வைத்து சட்டங்கள் இயற்றப் படுவதில்லை.
கடன் கொடுக்கல்-வாங்கல் என்பது சமூகமயமானதாகும். எனவே, பெண்களுக்கு இதனுடன் சம்பந்தமோ அல்லது நுணுக்கமான பார்வையோ குறைவாகும். இந்த வகையிலும் இஸ்லாம் வேறுபடுத்திப் பார்க்கின்றது எனலாம்.
அடுத்து, பெண் வெட்கப்படும் இயல்புள்ள வளாவாள். தனியாக பல ஆண்களுக்கு முன்னால் வந்து சாட்சியங்கள் சொல்வதில் பல சங்கடங் களைச் சந்திக்கலாம். சாட்சிக்கு கூட இன்னு மொரு பெண் இருப்பது அவளுக்குக் கூடுதல் தெம்பை வழங்கலாம்.
அடுத்து, பெண்களுக்கு மட்டுமே ஒரு அசௌகரியம் உள்ளது. அதுதான் அவள் சந்திக்கும் மாதத்தீட்டுப் பிரச்சினை. சம்பவம் நடக்கும் போதோ அல்லது சாட்சியமளிக்கும் போதோ ஒரு பெண் இந்த நிலையில் இருந்தால் அவளது பேச்சில் தடுமாற்றங்கள் ஏற்படலாம். எல்லாப் பெண்களுக்கும் இப்படி இல்லை. என்றாலும் சில பெண்கள் இந்த சந்தர்ப்பத்தில் மனக்கிளர்ச்சி, கோபம், எரிச்சல், வெறுப்பு… போன்ற பல உணர்வுகளுக்கு உள்ளாகின்றனர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
அடுத்து, சாட்சியத்திற்கு நேர்மை, நாணயம் முக்கியமானதாகும். பெண்களைப் பொருத்தவரையில் திடீரென எடுத்த எடுப்பிலேயே வித்தியாசமாகவும் நினையாப்புறமாக பொய் சொல்வதில் திறமைமிக்கவர்கள்.
முகபாவனையிலோ, பேசும் முறையிலோ எந்த வித்தியாசமும், தடுமாற்றமும் இல்லாமல் பொய்யை உருவாக்கி அதை அடுத்தவர் நம்பும் விதத்தில் சொல்லும் திறமை பெண்களிடம் உள்ளது. ஆண்களை விட அதிக கற்பனை வளமும் அவர்களிடம் உள்ளது. இந்த வகையிலும் அவர்கள் சாட்சியத்திற்குத் தேவையான தகுதியில் சற்றுக் குறைத்து மதிப்பிடப்படுகின்றனர்.
மனிதனைப் படைத்தவன் அல்லாஹ். மனித இயல்புகளையும், உணர்வுகளையும் தெளிவாகத் தெரிந்தவனும் அவனே! பெண்ணின் இயல்புக்கு ஏற்றதாக இந்த சட்டம் அமைந்துள்ளது. இது பெண்ணை இழிவு படுத்துவதாக அமையாது என்பதைக் கவனத்திற் கொள்வது அவசியமாகும்.