நபித்தோழர்கள் அன்ஸாரிகள், முஹாஜிர்கள் என இரண்டாக வகுக்கப்படுவர். முஹாஜிர் என்றால் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றவர்களைக் குறிக்கும். அன்ஸார் என்றால் உதவியாளர்கள் என்பது அர்த்தமாகும். தம்மை நோக்கி ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்காக அர்ப்பணிப்புக்களைச் செய்த மதீனாவாசிகளே அன்ஸாரிகள் என அழைக்கப்படுகின்றனர்.
ஷியாக்களும், தவ்ஹீதின் பெயரில் தமிழ் பேசும் சமூகத்திற்கு மத்தியில் நபித்தோழர்களைத் திட்டித் தீர்க்கும் வழிகெட்ட கொள்கையுடையவர்களும் இந்த அன்ஸாரி களைப் பதவி மோகம் கொண்டவர்களாக சித்தரித்து வருகின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அன்ஸாரித் தோழர்கள் “ஸகீபா பனீ ஸாஇதா” எனும் இடத்தில் ஒன்று கூடி அடுத்த தலைமை பற்றி ஆலோசனை செய்தனர். இது பற்றிப் இந்த சம்பவம் சிலரினால் இவ்வாறு சித்தரிக்கப்படுகின்றது.
“நபி(ஸல்) அவர்கள் மௌத்தாஹிவிட்டார்கள் என்பது உறுதியானவுடனேயே அன்ஸாரிகள் அனைவரும் ஸஃத் இப்னு உபாதாவுடைய வீட்டில் ஒன்று கூடினார்கள். நபியவர்கள் மௌத்தானவுடன் இல்லாதிருந்த அந்த நோய் உண்டானது. ஆனா இடம் காலி. இந்த இடத்தை அன்ஸாரிகள் பிடிக்கனும். நபிகளாரின் கதை வேறு, அண்ணன் எப்போது காலியாவான் திண்ணை எப்போது காலியாகும் எனக் காத்துக்கிட்டு இருந்த மாதிரி சித்தரித்துக் கூறி எப்பமா நபியவர்கள் மௌத்தாகுவாங்க? அந்த இடத்த நாம பிடிக்கனும்” என காத்துக் கொண்டிருந்த மாதிரி அன்ஸாரிகள் சித்தரிக்கப்படுகின்றார்கள்.
இப்படி ஒட்டுமொத்த அன்ஸாரிகள் மீதும் அவதூறுகளைச் சுமத்தும் இவர்கள் தம்மைப் பற்றிப் பீத்திக் கொள்ளும் போது தாம் பதவி ஆசை, பண ஆசைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என வெளிப்படையாகவே பேசியுள்ளனர்.
இந்த வழிகெட்ட சிந்தனையை விதைத்து வருகின்றவர்கள் அன்ஸாரிகளைப் பற்றி இப்படிப் பேசும் போது அன்ஸார்கள் பற்றி அல்லாஹ்வும் ரஸூலும் வழங்கும் ஒப்புதலைக் கவனியுங்கள்.
“மேலும், முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளில் (ஈமான் கொள்வதில்) முதலாமவர்களாக முந்திக் கொண்டோரையும், அவர்களை நல்ல முறையில் பின்பற்றி யோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். அவன் அவர்களுக்குச் சுவனச் சோலைகளைத் தயார் செய்து வைத்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண் டிருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.”
(9:100)
அன்ஸார்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டதாகவும் அவர்களை நல்ல விதத்தில் பின்பற்றுபவர்கள் வெற்றிக்குரியவர்கள் என்றும் அல்லாஹ் கூறும் போது, அவர்களை பதவி மோகம் கொண்டவர்களாக சித்தரிப்பது எந்த வகையில் நியாயமாகும்? வெற்றி பெற்ற கூட்டத்தின் கருத்தாக இருக்க முடியுமா?
“அவர்களு(டைய வருகை)க்கு முன்னரே (மதீனாவில்) இருப்பிடத்தையும், ஈமானையும் அமைத்துக் கொண்டோருக்கும் (பங்குண்டு.) அவர்கள் தம்மிடம் ஹிஜ்ரத் செய்து வந்தோரை நேசிப்பார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டவை குறித்து தமது உள்ளங்களில் எவ்வித காழ்ப்புணர்வும் கொள்ளமாட்டார்கள். மேலும், தமக்குத் தேவையிருந்த போதும் தம்மை விட (அவர்களையே) முற்படுத்துவார்கள். எவர்கள் தமது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப் படுகின்றனரோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.” (59:9)
அன்ஸாரிகள் தமக்குத் தேவை இருந்தாலும் தங்களிடம் வந்த முஹாஜிர்களையே முற்படுத்துவார்கள். அடுத்தவர்களுக்காக சிரமங்களைத் தாங்கிக் கொள்வார்கள் என அல்லாஹ் கூறுகின்றான். ஆனால், அன்ஸாரிகள், முஹாஜிர்களுக்குப் பதவி போய்விடக் கூடாது என்பதற்காகத் திட்டம் தீட்டியதாக அவதூறு கூறப்படுகின்றது. அல்லாஹ்வை மிஞ்சிப் போகும் இந்த வழிகேட்டை குர்ஆன், ஹதீஸை மதிக்கும் மக்கள் அங்கீகரிக்கக் கூடாது.
குர்ஆனுக்கு முரண்பட்டால் ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் மறுப்போம் என்று கூறுபவர்கள் “ஸகீபா பனூ ஸாஇதா” சம்பவம் குர்ஆன் அன்ஸாரிகள் பற்றி கூறியதற்கு முரணாக இருக்கின்றது. எனவே, இந்தச் சம்பவத்தை மறுக்கின்றோம் என்று கூறியிருந்தால் கூட கொள்ளையில் தெளிவாக உள்ளனர் என்றாவது கூறலாம்.
அண்ணன் எப்ப காலியாவான்! திண்ணை எப்ப காலியாகும் எனக் காத்துக்கிட்டிருந்த மாதிரி இந்த முஹாஜிர்களுக்கு அன்ஸார்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற சிந்தனையோடு செயற்பட்டார்கள் என கூறுவது அன்ஸாரிகள் பற்றிய குர்ஆனின் கூற்றுக்கு முரணாக இருக்கின்றது. குர்ஆனுக்கு முரண்பட்டால் ஹதீஸையே மறுப்போம். அண்ணனின் கூற்றை மறுக்கமாட்டோமா? என இக்கூற்றை தம்பிகள் மறுத்திருந்தால்கூட, அவர்களாவது ஒரு கொள்கையில் இருந்திருக்கின்றார்கள் என்று கூறலாம். அல்லாஹ்வுக்கு மாற்றமாக அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சொன்னாலும் மறுப்போமே தவிர, அண்ணன் சொன்னால் மறுக்கமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர் போலும்!
நபித்தோழர்களை அறிவீனர்களாகவும் பட்டம் பதவிக்கு ஆசைப்பட்டவர்களாகவும் அறிமுகப்படுத்தினால்தான் நபித்தோழர் காலத்தில் இல்லாத எந்த வழிகெட்ட கொள்கையைக் கொண்டு வந்தாலும் அதை சந்தைப்படுத்த முடியும். இந்தக் கொள்கை நபித்தோழர் காலத்தில் இருக்கவில்லையே என்ற கேள்வி எழுந்தால் “அவங்கள விடுங்க, அவங்களுக்கு தயம்மும் தெரியாது குளிப்புடைய சட்டம் தெரியாது மார்க்கத்தை மாத்தினவங்க பதவிக்காக சண்டை போட்டவங்க” என்று கூறித் தனது கொள்கையை நிலைநாட்ட முடியும். இதனால்தான் வழிகெட்ட எந்த அமைப்பாக இருந்தாலும் சரி அவர்கள் முதலில் நபித்தோழர்களைக் களங்கப்படுத்தும் வேலையைத்தான் செய்தனர்.
இதோ பதவி மோகம் கொண்டவர்களாக அவர்கள் சித்தரித்த அன்ஸாரிகள் பற்றி அண்ணல் நபி(ஸல்) என்ன கூறுகின்றார் என்று பாருங்கள்.
“முஃமின்களைத் தவிர வேறு எவரும் அன்ஸாரிகளை நேசிக்கமாட்டார்கள். நயவஞ்சகர்களைத் தவிர வேறு எவறும் அவர்களை வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கின்றான். யார் அவர்களை வெறுக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கின்றான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: பராஉ(ரழி)
ஆதாரம்: புஹாரி: 3783
அன்ஸாரிகள் மீது வெறுப்பை வெளிப்படுத்துபவர்களின் மார்க்க நிலை என்ன? என்பதை நபியவர்கள் தெளிவாகக் கூறிவிட்டார்கள். அல்லாஹ்வினால் வெறுக்கப்படக் கூடிய இத்தகையவர்களை குர்ஆன், ஸுன்னா பேசும் தமிழ் சமூகம் நேசிப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
“இறை நம்பிக்கையாளர்களின் அடையாளம் அன்ஸாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்ஸார்களை வெறுப்பதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரழி)
ஆதாரம்: புஹாரி- 3784
இந்த நயவஞ்சக அடையாளத்துக் குரியவர்கள்தான் இன்று உலகிலேயே சத்திய மார்க்கத்தில் உள்ள ஒரே கூட்டம் என்று சொன்னால் அதை நம்பவும் சிலர் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
அல்லாஹ்வும் ரஸூலும் போற்றும் அன்ஸாரிகளைப் பதவி மோகம் கொண்டவர்கள் என்று சித்தரித்துவிட்டு அது பற்றி விமர்சனங்கள் வந்த போது, தான் பாவித்த தவறான வாசகத்தை வாபஸ் வாங்காமல் அதை இன்றும் உறுதிப்படுத்தும் வண்ணம் இந்தத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தவறான கொள்கையை விதைத்து விருபவர் பின்வரும் செய்திகளை எடுத்துக்காட்டி தனது தவறான கொள்கையை நிலைநாட்ட முற்படுகின்றார்.
“இறைத்தூதர்(ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களிடமிருந்து அலீ இப்னு அபீ தாலிப்(ரழி) (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள்,”அபுல் ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?” என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்” என்று கூறினார்கள். உடனே அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரழி), அலீ(ரழி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு அவர்களிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு, (பிறான்) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆகிவிடப்போகிறீர்கள். இறைத்தூதர்(ரழி) அவர்கள் விரைவில் இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக்களையை) அடையாளம் கண்டு கொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள்…. இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?” என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்” என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரழி), “நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
புகாரி 1447
இந்தச் செய்தியைக் கூறித் தமது கருத்தை நியாயப்படுத்தி இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அப்பாஸ், அலி(ரழி) ஆகியோரின் பெயர்களைச் சொல்லாமல் இப்படியெல்லாம் இருந்துள்ளனர். ஒருவர் மௌத்தாகும் முன்னர் அவரது சொத்து யாருக்கு என அறிய விரும்பினால் அவர்களை சொத்தின் மீது ஆசையுள்ளவர்கள் என்று நாம் சொல்ல மாட்டோமா? என்ற தோரணையில் கேள்வி எழுப்பி அலி(ரழி) அவர்களும் பதவி மீது ஒரு கண் வைத்திருந்ததாகக் கூற முனைகின்றனர்.
ஒருவரது மரணத்திற்குப் பின் அடுத்த தலைவர் யார்? என அறிய விரும்புவது பதவி மோகமா? ஒரு வேளை அலி(ரழி) அவர்கள் என்னை அடுத்த கலீபாவாக நியமியுங்கள் என்ற கேட்டிருந்தால் கூட அலி(ரழி) அவர்களின் தகுதியையும், ஈமானையும், அவர்களைப் பற்றி நபியவர்கள் கூறியுள்ள நல்ல செய்திகளையும் அடிப்படையாக வைத்துத்தான் அதை நோக்க வேண்டுமே தவிர எம்மோடு ஒப்பிட்டு நோக்கக் கூடாது.
இது அலி(ரழி) அவர்களுக்கு உரியது மட்டும் அல்ல. நபித்தோழர்கள் (ஸஹாபாக்கள்) பற்றிய வரலாற்றைப் படிக்கும் போது அவர்கள் பற்றி அல்லாஹ் கூறிய அடிப்படைகளையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
“தங்களது இரட்சகனின் (சங்கையான) முகத்தை நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைப்போர்களுடன் (நபியே!) நீர் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்வின் அலங்காரத்தை நீர் விரும்பி, அவர்களை விட்டும் உம்மிரு கண்களையும் திருப்பி விடாதீர். எம்மை நினைவுகூர்வதை விட்டும் எவனது உள்ளத்தை நாம் மறக்கடிக்கச் செய்து, அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றி விட்டானோ அவனை நீர் பின்பற்றாதீர். மேலும், அவனது காரியம் வரம்பு மீறியதாகவே உள்ளது.” (18:28)
“அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். இன்னும் தீங்கு பரவிக் காணப்படும் ஒரு நாளைப் பயப்படுவார்கள்.
இன்னும் அவர்கள், விரும்பும் உணவை (அல்லாஹ்வுக்காக) ஏழைக்கும், அநாதைக்கும், கைதிக்கும் வழங்குவார்கள்.
அல்லாஹ்வின் (சங்கைக்குரிய) முகத் திற்காகவே நாம் உங்களுக்கு உணவளிக் கின்றோம். நாம் உங்களிடம் எந்தக் கூலி யையோ, நன்றியையோ எதிர்பார்க்கவில்லை (என்றும்)”
(76:7-9)
அவர்கள் அல்லாஹ்வுக்காக என்று செயற்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இந்தப் பதவி மூலம் நல்லது செய்து அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற விரும்பியுள்ளனர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக, அவர்கள் பதவி வெறியில் செயற்பட்டனர் என்று கூறுவது அவதூறாகும். அத்துடன் அலீ(ரழி) அவர்கள் கலீபாவாக முஸ்லிம் உம்மத்தால் தெரிவு செய்யப்பட்ட பின் அந்தப் பதவியை வைத்து அவர் சுகபோக வாழ்ககையை வாழ்ந்திருந்தால் கூட உலக இலாபத்திற்காக பதவி மோகம் கொண்டவர் என்று கூறலாம். ஆனால், பதவிக்கு வந்த பின்னர் முன்னரை விட அவர்கள் அதிகம் தியாகம் செய்து சிரமங்களைத் தாங்கி மக்களை வழிநடாத்தினார் என்றால் அவர்கள் பதவி மூலம் கூட அல்லாஹ்வின் திருப்தியைப் பெற முனைந்துள்ளனர் என்றுதானே புரிந்து கொள்ள வேண்டும்.
உள்ளம் நிறைய வஞ்சகத்தை வைத்துக் கொண்டு நல்லவர்களது வரலாற்றைப் பார்த்தால் கூட வக்கிரமமான முடிவுகள்தான் வரும். மக்கள் மனதில் நபித்தோழர்கள் பற்றி வஞ்சக எண்ணங்களை ஏற்றிவிட்டு அவர்களின் வரலாற்றைத் தனது வஞ்சக வக்கிர புத்திக்கு ஏற்ப வில்லங்கமாக வியாக்கியானப் படுத்துகின்றனர்.
தற்போது இக்கருத்தை முன்வைப்போம். ஏற்கனவே குர்ஆன், ஸுன்னாவை தூய முறையில் எடுத்துச் சொல்லியதாலும், தனது கருத்தை இலகுவாகப் புரிய வைக்கும் ஆற்றலை பெற்றிருப்பதாலும், அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கையாலும் இவரது வஞ்சகம் கலந்த வரலாற்றுத் துரோகத்தை மக்கள் புரிந்து கொள்ளாமல் ஏற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அன்ஸாரிகள் நபி(ஸல்) அவர்கள் மரணத்தின் பின் ஒன்று கூடி என்ன செய்தார்கள்? இது குறித்த உண்மை வரலாறு என்ன? உண்மையில் அவர்கள் எப்படா நமக்குப் பதவி வரும்? எனக் காத்துக் கொண்டிருந்தவர்களா என்பதை அடுத்த இதழில் நோக்குவோம். இன்ஷா அல்லாஹ்!