இஸ்லாம்
விமர்சனங்களும் விளக்கங்களும் – 2
அன்பான இறைவன் தண்டிக்கலாமா?
முஸ்லிம்கள் அல்லாஹ்வை அளவற்ற அருளாளன்| நிகரற்ற அன்புடையோன் என்று போற்றுகின்றனர். ஆனால், குற்றங்களுக்கு இஸ்லாம் விதிக்கும் தண்டனைகளைப் பார்த்தால் அந்த சட்டங்களைச் சொல்பவன் அன்பாளனாக இருக்க முடியாது. அத்துடன் நரகம் பற்றி குர்ஆன், ஹதீஸ் குறிப்பிடுகின்ற செய்திகளையும் பார்த்தால் அன்புள்ள இறைவன் எப்படி இப்படியெல்லாம் தண்டிப்பவனாக இருக்க முடியும் என்ற கேள்வியே எழுகின்றது என சிலர் விமர்சனம் செய்கின்றனர்.
இந்த விமர்சனங்களைச் செய்பவர்கள் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களையும் விமர்சிக்கின்றனர். அத்துடன் மறுமையில் இறைவன் எப்படி மனிதர்களை நிரந்தரமாக நரகில் போட முடியும்? அப்படிப் போட்டால் அவன் அன்பாளனாக இருப்பானா என்ற கோணத்திலும் கேள்வி எழுப்புகின்றனர்.
திருட்டுக்கு கை வெட்டு, திருமணம் முடிக்காதவர்கள் செய்த விபச்சாரத்திற்கு 100 கசையடி, திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் மரண தண்டனை மற்றும் கொலைக்கு மரண தண்டனை என்பதெல்லாம் தூர நின்று பார்க்கும் போது கொடுமையாகத் தெரிந்தாலும் பாதிக்கப்பட்டவன் மனநிலையில் இருந்து நடுநிலையாகப் பார்த்தால் இதன் நியாயம் புரியும்!
கொலைக்கு மரண தண்டனை கொடுக்கும் போது இஸ்லாம் கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தினர் சம்மதித்தால் மன்னிப்பு வழங்குகின்றது. அவருக்கு மரண தண்டனை கொடுப்பதா? அவரை மன்னிப்பதா? அல்லது நஷ்டஈடு பெறுவதா? என்பதை குடும்பம்தான் தீர்மானிக்க வேண்டும் என்கின்றது. எனவே, இஸ்லாம் பாதிக்கப் பட்டவர்கள் மனநிலையில் நின்று பார்க்கின்றது.
அடுத்து, குற்றத்துக்கு வழங்கப்படும் தண்டனை அந்தக் குற்றவாளியை மீண்டும் மீண்டும் தவறு செய்வதில் இருந்து தடுக்க வேண்டும். அத்தோடு இந்தத் தண்டனை புதிய குற்றவாளிகள் உருவாகாத வண்ணம் மக்களுக்கு அச்ச உணர்வை ஊட்டுவதாகவும் இருக்க வேண்டும். எனவேதான், இஸ்லாம் குற்றங்களுக்கு கடின தண்டனை விதித்துள்ளது.
சட்டத்தின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு குற்றச் செயல்களில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு மறுமைத் தண்டனைதான் தீர்வாகும். ஒரு கொலை செய்தவனுக்கும், 100 கொலை செய்தவனுக்கும் உலகில் ஒரு மரண தண்டனைதான் கொடுக்க முடியும். இவர்களுக்கு மறுமையில்தான் முழுமையான தண்டனையை வழங்க முடியும். அதற்குத்தான் மறுமையில் நரகங்கள் படைக்கப்பட்டுள்ளன.
உலக அழிவு ஏற்பட்டு, மீண்டும் மக்கள் உயிர் கொடுத்து எழுப்பப்பட்ட பின்னர் அல்லாஹ் குற்றவாளிகள் மீது அன்பு காட்டமாட்டான். உலகில் அவனது அன்பையும், அருளையும் குற்றவாளிகள் அனுபவிக்கலாம். மறுமையில் நல்லவர்கள் மட்டுமே அவனது அன்பைப் பெறுவார்கள். எனவே, அங்கே அவன் குற்றவாளிகளுக்கு அன்பு காட்டுபவனாக இருக்கப் போவதில்லை என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
அடுத்து, நரகம் மட்டும் இல்லை| சுவர்க்கமும் உள்ளது. சுவனத்தின் அருள்களையும் நரகத்தின் தண்டனைகளையும் வைத்துப் பார்த்தால் அல்லாஹ்வின் அன்பு மிகைத்தது என்பதைப் புரியலாம்.
அடுத்து இஸ்லாம் அல்லாஹ்வை வெறும் அன்பானவன் என்று மட்டும் கூறவில்லை. அவனை ‘ஸதீதுல் இகாப்’ கடுமையாகத் தண்டிப்பவன் என்றும்தான் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘(அவன்) பாவத்தை மன்னிப்பவனும், மன்னிப்புக் கோரலை ஏற்றுக் கொள்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், அருளுக்குரிய வனுமாவான். அவனையன்றி (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. அவனிடமே மீளுதல் உள்ளது.’ (40:3)
இங்கே மன்னிப்பவனாக மட்டுமே அல்லாஹ் அறிமுகப்படுத்தப்படாமல் தண்டிப்ப வனாகவும் அறிமுகப்படுத்தப்படுகின்றான். அல்குர்ஆனில் பல இடங்களில் ‘ஸதீதுல் இகாப்’ கடுமையாகத் தண்டிப்பவன் என அவன் அறிமுகப்படுத்தப் படுகின்றான். (பார்க்க: 2:165, 196, 211, 3:4,11, 5:2, 98, 8:13, 25, 48, 52, 40:22, 59:4, 7)
அல்லாஹ் தண்டித்தால் அவனைப் போல யாரும் தண்டிக்க முடியாது எனும் அளவுக்கு அது கடுமையாக இருக்கும். அன்பு காட்டுவதிலும் அவன் நிகரற்றவன்| தண்டிப்பதிலும் அவன் நிகரற்றவன் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
‘அந்நாளில் அவன் வேதனை செய்வது போன்று வேறு எவரும் வேதனை செய்ய முடியாது.’
‘பாவிகளை அவன் கட்டுவது போன்று வேறு எவரும் கட்ட முடியாது.’ (89:25-26)
அடுத்து, இவர்களது வேதங்களிலும் நரகம் பற்றிய வர்ணனைகள் பயங்கரமாகத்தான் இருக்கின்றன. இந்து, பௌத்த மதங்களில் நரகம் பற்றிய தெளிவான சிந்தனை இல்லை என்றாலும் முழுமையாக இல்லை என்றும் கூற முடியாது.
இந்து வேதங்களிலும் நரகம் பற்றிய செய்திகள் உள்ளன. தம்புள்ளை நகர் போன்ற விகாரைகளில் உள்ள ஓவியங்கள் நரகத்தின் சாட்சிகளைச் சித்தரிக்கின்றன. அவையும் கடுமையாகவே உள்ளன. இந்த விமர்சனங்களைச் செய்யக் கூடிய கிறிஸ்தவ வேதங்களில் சொல்லப்பட்டுள்ள தண்டனைகள் இஸ்லாம் கூறும் சட்டங்கள் போன்றும் மற்றும் பல சட்டங்கள் இஸ்லாமிய சட்டங்களை விடவும் கடுமையாக உள்ளன. இந்த நிலையில் இஸ்லாமிய சட்டங்களைத் தந்த இறைவன் அன்பற்றவன் என்றால் இந்த சட்டங்களைத் தந்தவன் யார்? என்று யூத-கிறிஸ்தவ மக்கள் சிந்திப்பது சிறந்ததாகும்.
ஒரு மாடு, ஒருவரை முட்டிக் கொன்றுவிட்டது என்றால் அந்த மாட்டை என்ன செய்ய வேண்டும் என பைபிள் கூறுகின்றது.
‘ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் மாமிசம் புசிக்கப்படலாகாது. அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்.’
‘தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டி வைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்பட வேண்டும், அதின் எஜமானும் கொலை செய்யப்பட வேண்டும்.’
(யாத்திராகமம் 21:28-29)
மாடு முட்டி ஒருவன் இறந்தால் மாட்டைக் கல்லெறிந்து கொலை செய்ய வேண்டும். வழமையாக குத்துகின்ற மாடு என்பதை அறிந்த பின்பும் அதைக் கட்டி வைக்காத மாட்டு உரிமையாளனும் கொல்லப்பட வேண்டும். இஸ்லாமிய சட்டங்களை விமர்சிப்பவர்கள் இதை என்ன செய்யப் போகின்றார்கள்?
குறி, சாஸ்திரம் பார்க்கின்றவர்கள் சொல்பவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என பைபிள் கூறுகின்றது.
‘அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறி சொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மேல் கல்லெறிவார்களாக! அவர்கள் இரத்தப்பழி அவர்கள் மேல் இருக்கக் கடவது என்று சொல் என்றார்.’ (லேவியராகமம் 20:27)
இந்த சட்டத்தைத் தந்தவனை அன்பானவன் என்று கூறலாமா? தாய்-தந்தையரை அடிப்பதும் திட்டுவதும் பாவமாகும். ஆனால், அப்படிச் செய்பவர்களுக்கு பைபிள் சொல்லும் சட்டம் தெரியுமா?
‘தன் தகப்பனையாவது, தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக் கடவன்.’ (யாத்திராகமம்: 21:15)
‘தன் தகப்பனையாவது, தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக் கடவன்.’ (யாத்திராகமம்: 21:17)
அடித்தாலும் திட்டினாலும் மரண தண்டனை என பைபிள் கூறுகின்றது. இது அன்பான தண்டனையா?
அடுத்து, இஸ்ரவேல்களும் தேவன் அல்லாத தேவர்களை வணங்கும் படி கூறுபவர்களைக் கொலை செய்து அவர்களின் சொத்துக்களை எரித்து விடும் படி பைபிள் கூறுகின்றது.
‘அந்த பட்டணத்தின் குடிகளைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றை யும் அதின் மிருக ஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி, அதில் கொள்ளையிட்டதை யெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப் பட்ட யாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக் கடவாய். அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கடவது.’
(உபாகமம் 13:15-16)
இவ்வாறு பைபிளில் கடுமையான தண்டனைகள் கூறப்பட்டுள்ளன. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களும் அவர்களின் மதங்கள் பற்றிய அறிவு இல்லாமலேயே இஸ்லாமிய சட்டங்கள் பற்றிப் பேசுகின்றனர்.
அல்லாஹ் அன்பானவன்| அதே வேளை அவன் கடுமையாகத் தண்டிப்பவன். அவனது கோபத்தை விட அன்பு மிகைத்தது. தவறு செய்தவனைத் தண்டிப்பது கூட அன்பின் வெளிப்பாடுதான். ஒருவன் இயலாத ஒருவனைக் கடுமையாகத் தாக்குகின்றான். அன்பான ஒருவர் அந்த இடத்தில் இருந்தால் பாதிக்கப்படுபவர் மீது அன்பு கொண்டவன் அந்த மனிதனைத் தடுத்து அவனைத் தண்டித்தால் அது கோபத்தின் கொடூரத்தின் வெளிப்பாடு அல்ல. பாதிக்கப்பட்டவன் மீதுள்ள அன்பின் வெளிப்பாடாகும். இறைவன் தண்டிப்பது குற்றத்தின் மீதுள்ள கோபத்தினதும் பாதிக்கப்பட்டவன் மீதுள்ள அன்பினதும் வெளிப்பாடாகும். இறைவன் தண்டிப்பது குற்றத்தின் மீதுள்ள கோபம், பாதிக்கப்பட்டவன் மீதுள்ள பாசம் ஆகிய இரண்டும் கலந்ததுதான்.