டிசம்பர் 26 மறக்க முடியாத தினம்! இலட்சக்கணக்கான உயிர்களைக் குடித்துக் கோடிக்கணக்கான சொத்துகளைக் காவு கொண்ட தினம்! பூவுக்குள் பூகம்பம் போன்று நீருக்குள் இவ்வளவு ஆக்ரோஷமா? தண்ணீருக்கு இப்படியொரு சக்தியா? எனத் திறந்த விழிகளை மூடாமல் மக்களை அதிர வைத்த தினம்! ஆறு வருடங்கள் உருண்டோடி விட்டாலும் டிசம்பர் வரும் போது கடலோரப் பிரதேச மக்களைச் சுனாமி அச்சம் தொற்றிக்கொள்கின்றது.
குறிப்பாக இந்த ஆண்டு பெய்த தொடர் மழை, கடலில் ஏற்பட்டதாகக் கூறப்படும் மாற்றங்கள் சுனாமி அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன. சுனாமி வருமோ இல்லையோ இந்த இயற்கை ஏன் தொடர்ந்தும் அச்சமூட்டுகின்றது என்பது விடை காண வேண்டிய வினாவாகும்.
இயற்கை அழிவுகள் அதிகரிப்பதும், பூகம்பங்கள் அதிகரிப்பதும் மறுமை நாளின் அடையாளங்கள் என்பது ஹதீஸ் மூலம் அறியப்படும் செய்தியாகும்.
அண்மைக் காலமாக வானம் திறந்து விடப்பட்டது போன்று மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகின்றது. பல நாடுகள் 2010 இல் வரலாறு காணாத வெள்ளத்தைச் சந்தித்துள்ளன. இலங்கையும் இதற்கு விதி விலக்கில்லை. தொடர் மழை, மண் சரிவு, பயிர்ச் சேதம், கால்நடைகள் அழிவு என அழிவுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன. இந்த அழிவுகளுக்கும், நமது செயற்பாடுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருக்கின்றது.
பௌதீக ரீதியில் நோக்கும் போது வெள்ள ஆபத்துகள் அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. வடிகாலமைப்பு இன்மை, நீரோட்டப் பகுதிகளையும் மக்கள் ஆக்கிரமித்துள்ளமை, விவசாய நிலங்களுக்கான வாய்க்கால் முறைகளில் உள்ள குறைபாடுகள் என நாமாகத் தேடிக் கொண்ட காரணங்கள் பல உள்ளன.
ஆன்மீக ரீதியில் முஸ்லிம்களாகிய நாம் சிந்திக்க வேண்டிய அம்சங்களும் உள்ளன.
‘நிச்சயமாக, இக்கிராமங்களில் உள்ளவர்கள் நம்பிக்கை கொண்டு, (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் அவர்களுக்கு வானம் மற்றும் பூமியில் இருந்து பாக்கியங்களைத் திறந்து விடுவோம். எனினும், அவர்கள் பொய்ப்பித்தனர். எனவே, அவர்கள் சம்பாதித்துக்கொண்டிருந்தவற்றின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.’ (7:96)
மேற்படி வசனத்தில் இறை போதனைகளை ஒரு சமூகம் மறந்து நடக்கும் போது அவர்களுக்கு எல்லாவற்றின் வாசல்களையும் திறந்து விடுவோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஈமான் கொண்ட சமூகத்துக்கு வானம்-பூமியின் பறக்கத் மட்டும் திறக்கப்படும். போதனைகளைப் புறக்கணித்த சமூகத்துக்கு அனைத்து வாயில்களும் திறக்கப்படும் என்று கூறப்படுகின்றது. அவர்களுக்குப் பொருளாதார வாசலும் திறக்கப்படும். அதில் அழிவுகளும், முஸீபத்துகளும் சேர்ந்தே திறக்கப்படும் என அல்குர்ஆன் கூறுவது சிந்திக்க வேண்டிய அம்சம்!
ஒரு ஊர் மக்கள் ஈமான் கொண்டு இறையச்சத்துடன் நடந்தால் வானம்-பூமியின் பரக்கத்துகளை அவர்களுக்காக அல்லாஹ் திறந்து விடுவதாகக் கூறுகின்றான்.
‘அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதை அவர்கள் மறந்து விட்ட போது, சகலவற்றின் வாயில்களையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டோம். தமக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருந்த போது திடீரென அவர்களை நாம் பிடித்தோம். அப்போது அவர்கள் (அனைத்து நலன்களிலிருந்தும்) நிராசையடைந்து விட்டனர்.’ (6:44)
ஃபிர்அவ்னிடம் மூஸா நபி பிரசாரத்திற்கு அனுப்பப்பட்ட போது அவன் சத்தியத்தை நிராகரித்து மூஸா, ஹாரூன் ஆகிய நபிமார்களுக்கும், அவர்களது சமூகத்துக்கும் கொடுமைகள் புரிந்தான். எனவே அல்லாஹ் பல வகைகளிலும் அவர்களைச் சோதித்தான் என அல்குர்ஆன் கூறுகின்றது.
‘அவர்கள் (மூஸாவிடம்) எம்மை வசப்படுத்துவதற்காக நீர் எந்தவோர் அத்தாட்சியை எம்மிடம் கொண்டு வந்தாலும் நாம் உம்மை நம்பிக்கைகொள்பவர்களாக இல்லை என்று கூறினர். வெள்ளப் பெருக்கு, வெட்டுக் கிளி, பேன், தவளைகள், இரத்தம் என்பனவற்றைத் தெளிவான அத்தாட்சிகளாக அவர்கள் மீது நாம் அனுப்பினோம். பின்னரும் அவர்கள் பெருமையடித்துக் குற்றம் புரியும் கூட்டத்தினராக இருந்தனர். அவர்களுக்கு வேதனை ஏற்படும் போதெல்லாம், ”மூஸாவே! உமது இரட்சகன் உம்மிடம் எடுத்துக் கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் எமக்காக நீர் பிரார்த்திப்பீராக! நீர் எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கி விட்டால் நிச்சயமாக உம்மை நாம் நம்பிக்கைகொள்வோம். இன்னும் இஸ்ராஈலின் சந்ததியினரையும் உம்முடன் அனுப்பி விடுவோம்!” என்று கூறினர். அவர்கள் அடைந்துகொள்ளும் ஒரு தவணை வரை, அவர்களை விட்டும் வேதனையை நாம் நீக்கும் போதெல்லாம், அவர்கள் வாக்குறுதியை முறித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் எமது அத்தாட்சிகளைப் பொய்ப்பித்து, அவற்றை அலட்சியம் செய்பவர்களாக இருந்ததினால், நாம் அவர்களைப் பழிவாங்கிக் கடலில் அவர்களை மூழ்கடித்தோம்.’ (7:132-136)
ஃபிர்அவ்னின் சமூகம் தொடரான மழை, விவசாயத்தை அழிக்கும் வெட்டுப் பூச்சிகள், கால்நடைகளையும், தானியங்களையும் தின்றழிக்கும் ஒரு வகையான பூச்சிகள், பெருக்கெடுத்த தவளைகள், இரத்தமாக மாறிய தண்ணீர் எனப் பல அழிவுகள் மூலம் சோதிக்கப்பட்டனர். அவர்கள் திருந்தாத போது நீரில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர்.
எனவே தொடர் மழை, விவசாய அழிவுகள், கால்நடை அழிவுகள் ஏற்படும் போது நாம் நமது செயற்பாடுகள் குறித்தும் ஆன்மீக ரீதியில் சிந்திக்க வேண்டியுள்ளது.
இந்த அழிவுக்குப் பாவிகள் மட்டுமன்றி முஃமின்களும் மாட்டிக்கொள்ளலாம். அவர்களைப் பொறுத்த வரையில் இது இரட்சகனின் சோதனை என ஏற்று, ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!’ எனக் கூறிப் பொறுமை செய்ய வேண்டும். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
‘நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! அவர்கள் யாரெனில் தமக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் போது ”இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!” (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்று கூறுவார்கள்.’ (2:155-156)
மனிதன் செய்யும் தீமைகள் அதிகரிக்கும் போது அவன் திருந்த வேண்டும் என்பதற்காக அவன் செய்த தீமைகளுக்கு ஏற்பச் சிறிது தண்டனையை இறைவன் ஏற்படுத்துகின்றான். இது கடலிலும், கரையிலும் ஏற்படும் என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
‘மனிதர்களின் கைகள் சம்பாதித்தவற்றின் காரணமாக தரையிலும், கடலிலும் குழப்பம் தோன்றி விட்டது. அவர்கள் மீளும் பொருட்டு அவர்கள் செய்தவற்றில் சிலதை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காக (இவ்விதம் சோதிக்கின்றான்.)’ (30:41)
எனவே இயற்கை அழிவுகள் நிகழும் போது நாம் தவ்பாச் செய்து பாவ மன்னிப்புக் கேட்பதுடன் நம்மை நாம் சீர்திருத்திக்கொள்ள வேண்டும். வர்த்தகத்தில் மோசடி செய்த ஷுஐப் நபியின் சமூகம் அழிக்கப்பட்டதாகவும், தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்ட லூத் நபியின் சமூகம் அழிக்கப்பட்டதாகவும் அல்குர்ஆன் கூறுவது சிந்திக்கத் தக்கதாகும்.
இவ்வாறே குஃப்ர், ஷிர்க் அதிகமாகும் போது அல்லாஹ்வை நிந்திக்கும் விதத்தில் மக்கள் நடந்துகொள்ளும் போது இயற்கை குமுறுகிறது என அல்குர்ஆன் கூறுகின்றது.
கிறிஸ்தவர்கள் இயேசுவை இறை குமாரன் என்றும், யூதர்கள் உஸைர் நபியை அல்லாஹ்வின் குழந்தை என்றும், அறபிகள் மலக்குகளை அல்லாஹ்வின் பெண் மக்கள் என்றும் கூறினர். அல்லாஹ்வுக்குக் குழந்தை உண்டு என்ற இந்தக் குஃப்ரான வார்த்தை குறித்து அல்குர்ஆன் கண்டிக்கும் போது பின்வருமாறு பேசுகின்றது.
‘இன்னும் ”அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு பிள்ளையை எடுத்துக் கொண்டான்!” என அவர்கள் கூறுகின்றனர். நிச்சயமாக நீங்கள் பெரும் அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள். இதனால் வானங்கள் வெடித்து, பூமி பிளந்து, மலைகள் இடிந்து சிதறுண்டு விழப் பார்க்கின்றன. அர்ரஹ்மானுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிட்டதே (இதற்குக் காரணமாகும்.)’ (19:88-91)
அல்லாஹ்வுக்குக் குழந்தையுண்டு என்ற வார்த்தையைக் கேட்டு வானம் வெடித்து விடவும், பூமி பிளந்து விடவும், மலைகள் நகர்ந்து விடவும் பார்க்கின்றன என அல்குர்ஆன் கூறுவதன் மூலம், குஃப்ர் அதிகரிக்கும் போது இயற்கை அம்சங்கள் குமுறத் தொடங்குகின்றன என்பதை அறியலாம். எனவே குஃப்ருக்கு எதிரான ஈமானியப் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் பாதிப்பிலிருந்து மனித இனத்தைக் காக்க முடியும். நூஹ்(அலை), ஸாலிஹ்(அலை), ஹூத்(அலை) போன்ற நபிமார்களின் சமூகத்தினர் குஃப்ரின் காரணமாக அழிக்கப்பட்டதாக அல்குர்ஆன் கூறுகின்றது. எனவே இந்த இயற்கை அழிவுகள் மூலம் படிப்பினை பெற்று எம்மை நாம் சீர்திருத்திக்கொள்ள முனைவோமாக!