அசத்தியவாதிகளை அடையாளம் காட்டும் சூனிய பத்வா

சூனியம் என்றொரு கலை உள்ளது. அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. சூனியத்தைக் கற்பது, கற்பிப்பது, செய்வது, செய்விப்பது அனைத்துமே குப்ரை ஏற்படுத்தும் கொடிய குற்றங்களாகும். அல்லாஹ்வின் நாட்டமின்றி சூனியத்தினால் யாரும் யாருக்கும் எவ்விதத் தீங்கையும் ஏற்படுத்திவிட முடியாது என்பது அஹ்லுஸ் சுன்னாவின் அகீதாவாகும்.

நாங்கள்தான் சத்தியத்தின் ஏகபோக உரிமையாளர்கள் என கூறித் திரியும் ஒரு கும்பல், ‘சூனியத்தினால் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும்’ என நம்புபவர்கள் முஷ்ரிக்குகளாவர். அவர்களுக்குப் பின்னால் தொழக் கூடாது. நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யபட்டதை நம்புபவர்கள் முஷ்ரிக்குகள். சூனியத்தில் நுணுக்கமான ‘ஷிர்க்குகள் இருக்கின்றன. இதை நாங்கள்தான் புதிதாகக் கண்டுபிடித்துக் கூறுகின்றோம். நாங்கள் சொன்ன விளக்கம் சென்றடையாதவர்கள் சூனியத்தை நம்பினால் முஷ்ரிக் இல்லை. சென்றடைந்தவர்கள் நம்பினால் முஷ்ரிக் என்றெல்லாம் உளறி வருகின்றனர்.
அசத்தியவாதிகளை அடையாளம் காட்டும் பத்வா
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத ஒரு விடயம் இப்போது உருவாகி இருந்தால் அதை ஆய்வு செய்து புதிய பத்வா கொடுக்கலாம். ஆனால் ‘சூனியம்’ என்ற சொல் நபியவர்களுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நபியவர்கள் காலத்திலும் இது பயன்படுத்தப்பட்டது. இதில் இவர்கள் புதிதாக ஆய்வு செய்து நுணுக்கமான ஷிர்க் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்களாம்.

உமர் அலி, PJ விவாதம்:
இலங்கையைச் சேர்ந்த உமர் அலி ஹஸரத் அவர்கள் பைஅத் செய்யாதவன் காபிர் என்று தீர்ப்புக் கூறி வருகின்றார். தான்தான் சத்தியவாதி என்றும் வாதிட்டு வருகின்றார். இவருக்கும் சகோதரர் PJ அவர்களுக்கும் இடையில் புத்தளத்தில் தொண்ணூறுகளில் ஒரு விவாதம் நடந்து. அந்த விவாதம் இரண்டு நாட்கள் நடப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு முதல் நாள் காலையிலேயே இடை நடுவில் முபாஹலா செய்வது என்ற முடிவுடன் முடிவுற்றது. அதில் முக்கியமான இரண்டு கேள்விகளைக் கேட்டு உமர் அலியை PJ மடக்கினார். அந்தக் கேள்விகள் ‘பூமாராங்’ (வீசியவர்களையே நோக்கி வரும்) மாதிரி அவர்களையே நோக்கித் திரும்பியுள்ளது.

முதலாவது கேள்வி:
எனது உம்மத்தில் ஒரு கூட்டம் சத்தியத்தில் நிலையாக இருந்து கொண்டே இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பைஅத் செய்யாதவன் காபிர் என்ற கொள்கைதான் சத்தியக் கொள்கை என்றால் இந்த சத்தியக் கொள்கையை சென்ற நூற்றாண்டில் சொன்னது யார்? அதற்கு முந்திய நூற்றாண்டில் சொன்னது யார்? ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் சொன்னது யார்? என்று அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துச் சென்றார். உமர் அலி ஹஸரத் அவர்களால் பதில் கூற முடியாமல் போனது.

இப்போது இதே ஹதீஸின் அளவு கோளில் PJ கேட்ட அதே கேள்வியை இந்த பத்வாவை வெளியிட்ட பித்அத்வாதிகளை நோக்கிக் கேட்டுப் பாருங்கள்.
ஒரு கூட்டம் சத்தியத்தில் நிலைத்திருக்கும் என்பது ஹதீஸ். உங்களை நீங்கள் சத்தியவாதிகள் என்று கூறுகின்றீர்கள். இதேவேளை சூனியத்தை நம்புபவன் முஷ்ரிக் என பித்னாவைக் கிழப்பியுள்ளீர்கள். நீங்கள் சொல்வது உண்மை என்றால் சென்ற நூற்றாண்டில் இப்படிச் சொன்னது யார்? பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்படிச் சொன்னது யார் என்று கூறுங்கள்?
அவர்களால் கூற முடியாது. காரணம் அவர்கள் புதிதாக கண்டுபிடித்துக் கூறுவதாக அவர்களே சொல்லி விட்டார்கள்.
அவர்களால் காட்ட முடியாது எனும்போது சத்தியத்தில் ஒரு கூட்டம் மறுமைவரை நிலைத்திருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்களே அந்தக் கூட்டம் இந்தக் கூட்டம் அல்ல என்பது உறுதியாகின்றது. இந்த பத்வா மூலம் நாம் சத்தியவாதிகள் அல்ல அசத்தியவாதிகள் என்பதை அவர்களே அடையாளம் காட்டிக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
இரண்டாவது கேள்வி:
சகோதரர் PJ இரண்டாவதாகக் கேட்ட கேள்வி ‘பைஅத் செய்யாதவன் மரணித்தால் ஜாஹிலிய்யத்தில் மரணிப்பதாக ஹதீஸைக் கூறுகின்றீர்கள். இந்த ஹதீஸை அறிவித்த ஸஹாபி யாருக்கு பைஅத் செய்திருந்தார். இதை அறிவிக்கும் தாபிஈ, தபஉத் தாபிஈ யாருக்கு பைஅத் செய்திருக்கிறார்கள். இதை அறிவிக்கும் ஹதீஸ் நூலாசிரியர் யாருக்கு பைஅத் செய்திருந்தார். அவர் பைஅத் செய்திருக்கவில்லையென்றால் அவர் முஸ்லிம் அல்ல. முஸ்லிம் அல்லாதவர் அறிவிக்கும் ஹதீஸை ஏற்க முடியாது. எனவே, உங்களது நோக்கப்படி முஸ்லிமான ஒருவர் அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு வாருங்கள் என்ற தொனியில் கேள்விகளை அடுக்கினார். இந்தக் கேள்விதான் ‘முபாஹலா’ ‘அழிவுச் சத்தியத்தை’ நோக்கி விவாதத்தைத் திசை திருப்பியது.

இப்போது இதே கேள்வி இவர்கள் பக்கம் திரும்பியுள்ளது
இமாம் புஹாரி, முஸ்லிம், அஹ்மத் போன்ற பலரும் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை அறிவிக்கிறார்கள். எனவே உங்களது பார்வையில் இவர்கள் முஷ்ரிக்குகளாவர். முஷ்ரிக் அறிவிக்கும் ஹதீஸை ஏற்க முடியாது. எனவே, நீங்கள் புஹாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிதாபுகளை ஆதாரமாகக் காட்ட முடியாது.

போலி சமாளிப்பு:
இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்காகத்தான் நமது பிரச்சாரம் யார் யாருக்கெல்லாம் எட்டியதோ அவர்கள் சூனியத்தை நம்பினால்தான் முஷ்ரிக்குகளாவார்கள். அது எட்டாத புஹாரி இமாம் போன்றவர்கள் முஷ்ரிக் ஆகமாட்டார்கள். அதே போல மக்கா, மதீனா இமாம்களுக்கு எமது பிரச்சாரம் எட்டவில்லை. அவர்கள் சூனியத்தை நம்பினால் முஷ்ரிக்குகளாக மாட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் தொழ முடியும். ஆனால், எமது தஃவா எட்டியவர்கள் நம்பினால் முஷ்ரிக்குகளாகி விடுவர் என்று கூறுகின்றனர். இவர்களது பயான்களைக் கேட்காத வரைக்கும் காபிராகும் வாய்ப்புக் குறைவு. கேட்டால் காபிராகும் வாய்ப்புக் கூடுதலாக உள்ளது என்று கூறுகின்றனர். இவர்களது உரைகளைக் கேட்பது நல்லதா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

பித்அத்வாதிகளிடம் கேட்ட கேள்விகள்:
சகோதரர் பீ.ஜே. அவர்கள் பித்அத்துக்களுக்கு எதிராகப் பல காலமாகக் குரல் கொடுத்து வருகின்றார். அவர் பித்அத்வாதிகளை நோக்கி பல கேள்விகளைத் தொடுத்து வருகின்றார்.

கூட்டு துஆ நல்லது என்று சொன்னால் மவ்லூது நல்லது என்று சொன்னால் இவ்வளவு நல்ல செயலை நபியவர்கள் எமக்கு சொல்லித் தராமல் போய்விட்டார்கள் என்று நபியையே குறை சொல்வதாக ஆகாதா?
மார்க்கத்தை அல்லாஹ் பூரணப்படுத்தி விட்டதாகச் சொல்கின்றான். மவ்லூது நல்ல செயல் என்று சொன்னால் மார்க்கத்தை அல்லாஹ் பூரணப்படுத்தவில்லை. நாம்தான் கூட்டு துஆ, கத்தம், கந்தூரி என புதிது புதிதாக உருவாக்கி மார்க்கத்தைப் பூரணப்படுத்தி வருகின்றோம் என்று சொல்வதாகாதா?
கத்தம், கந்தூரி போன்ற நல்ல செயல்கள் அல்லாஹ்வுக்கும், ரஸுலுக்கும் தெரியாமல் போய்விட்டது என்று சொல்வதாகாதா? என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்து வந்தார்.
இப்போது இதே கேள்விகள் அவர்கள் பக்கம் திரும்பியுள்ளது
சூனியம் என்பது அன்றுதொட்டு இன்றுவரை இருந்து வருகின்றது. அல்லாஹ் நாடினால் சூனியத்தால் பாதிப்பு வரும் என்று நம்புவது ஷிர்க் என்றிருந்தால் அதை நபியவர்கள் அறிவித்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் அறிவிக்கவில்லையாம். நுணுக்கமான ஷிர்க்காம். இவர்கள்தான் இதைக் கண்டுபிடித்துச் சொல்கின்றார்களாம்.

அப்படியென்றால், மார்க்கம் இன்னும் பூரணமாகவில்லை. நாம்தான் கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கத்தைப் பூரணப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். சூனியத்தில் ஷிர்க் இருக்கும் விடயம் நபியவர்களுக்குக் கூடத் தெரியாமல் போய்விட்டது. மார்க்கத்தை நபியவர்கள் தெளிவாக, பூரணமாக மக்களுக்குப் போதிக்கவில்லை. நாம்தான் மார்க்கத்தின் முக்கியமான ஒரு அடிப்படையைக் கண்டுபிடித்திருக்கின்றோம். இது நபிக்குக்கூட தெரியாமல் போய்விட்டது. எங்கள் தலைவர் கண்டுபிடித்தார். நபி(ஸல்) அவர்கள் சத்தியத்தைத் தெளிவாகப் போட்டு உடைக்கவில்லை. நாம்தான் போட்டு உடைக்கின்றோம் என்று கூறப்போகின்றீர்களா?
இவர்கள் தமது இந்த பத்வா மூலம் தெள்ளத் தெளிவாக நாம் வழிகேடர்கள் என்பதை இனங்காட்டியுள்ளனர். எனவே, இந்த வழிகேடர்கள் விடயத்தில் விழிப்போடு இருப்பது அவசியமாகும். பொதுமக்கள் இவர்கள் வழிகேடர்கள் என்பதை உணர்ந்து இவர்களை விட்டும் விலகி நடக்க வேண்டும்.
சூனியத்தை நம்புபவர்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தை சூனியக்காரனுக்கு கொடுக்கின்றார்கள். அதனால் இணைவைக்கின்றார்கள் என்று தவறாகப் பிரசாரம் செய்கின்றனர். சூனியக்காரனுக்கு எந்த ஆற்றலும் இல்லை. அல்லாஹ் நாடினால்தான் சூனியம் பாதிப்பை உண்டுபண்ணும் என்று நம்பும்போது அங்கே அல்லாஹ் மீதுதான் நம்பிக்கை வைக்கப்படுகின்றது. சூனியத்தின் மீதல்ல. தஜ்ஜால் வந்து பல அற்புதங்களைச் செய்வான். இறந்த ஒருவரை உயிர்ப்பிப்பான் என்றெல்லாம் ஹதீஸ்கள் கூறுகின்றன. இதை நம்புபவர்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தை தஜ்ஜாலுக்குக் கொடுத்துவிட்டனர் என்று கூற முடியுமா? அப்படியென்றால் தஜ்ஜால் குறித்த ஹதீஸ்களை நம்புபவர்களும் முஷ்ரிக் என்று கூற வேண்டும். ஆனால் தஜ்ஜால் பற்றிய ஹதீஸை மறுக்கும் அபுல் அஃலா மவ்தூதி அவர்களுக்கு மறுப்பெழுதியவர்கள் அல்லவா இவர்கள். இவர்கள் எப்படி அந்த ஹதீஸை மறுப்பார்கள்? எனவே, சூனியத்தை நம்புபவர்கள் சூனியக்காரனை அல்லாஹ்வாக ஆக்குகின்றனர் என்பது பொய் வாதம். இதுதான் அதனது அர்த்தம் என்றால் நபியவர்கள் அதனைச் சுட்டிக்காட்டி இருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறாத ஒரு கொள்கையைக் கூறுவதன் மூலமாக இவர்கள் கொள்கை ரீதியான பித்அத்வாதிகள் என்பதை நிரூபித்து வருகின்றனர்.
இவர்கள் கொள்கை ரீதியான பித்அத்வாதியாக இருக்கும் அதே நேரம் ஏனைய பித்அத்வாதிகளை விட மோசமானவர்கள். அவர்கள் எம்மை முஸ்லிம்களாக அங்கீகரிக்கின்றனர். இவர்கள் எம்மை முஷ்ரிக்குகள் என்கின்றனர். அவர்கள் எமக்குப் பின்னால் தொழுவார்கள். இவர்கள் எமக்குப் பின்னால் தொழமாட்டார்கள்.
ஒரு மஸ்ஜிதில் ஒரு இமாம் தொழத் தயாராகின்றார். இவர்களில் ஒருவர் சூனியம் பற்றி என்ன சொல்றீங்க! என்று கேட்டாராம். ஏன் என்று கேட்டதற்கு சூனியம் இருக்கிறது என்று சொன்னால் உங்களுக்குப் பின்னால் தொழ முடியாது. இல்லையென்றால் தொழலாம் என்றாராம். மற்றும் சில இடங்களில் நாம் ஆய்வில் இருக்கின்றோம் என்று கூறும் இமாம்களுக்குப் பின்னால் தொழுது வருகின்றனராம்.
இவர்கள் கோழி இறைச்சி வாங்கப் போனாலும் நீங்கள் சூனியத்தை நம்புகின்றீர்களா? ஏனென்றால் நீங்கள் சூனியத்தை நம்பினால் நீங்கள் அறுப்பதை நாம் சாப்பிட முடியாது என்று கேட்பார்களா?
திருமணத்தின் போது எதிர்த் தரப்பினரிடம் நீங்கள் சூனியத்தை நம்புகின்றீர்களா? அப்படி நம்பினால் உங்களை நான் மணமுடிக்க முடியாது. ஏனெனில் முஷ்ரிக்கை மணமுடிக்க முடியாது என்று கேட்பார்கள் போலும்! கேட்கட்டும்… கேட்கட்டும்…. சூனியம் பிடித்து அலைகிறார்கள் என்று மக்கள் பேசிக் கொள்வார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.