உழ்ஹிய்யா – ஒரு சிறு விளக்கம்┇கட்டுரை

துல் ஹஜ் மாதம் பிறை 10 அன்று பெருநாள் தொழுது முடிந்ததில் இருந்து, அய்யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள கால கட்டங்களில் ஒட்டகம், ஆடு, மாடு ஆகிய பிராணிகளை அல்லாஹ்வுக்காக அறுப்பதையே உழ்ஹிய்யா என்று கூறப்படும். பொதுவாக இதற்குச் குர்பான் என்றும் கூறப்படும். குர்பானுக்கும் உழ்ஹிய்யாவுக்குமிடையில் வித்தியாசங்கள் உள்ளன. குர்பானை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். எதை வேண்டுமானாலும் குர்பான் கொடுக்கலாம். ஆனால், உழ்ஹிய்யாவுக்கு காலம், நேரம், கொடுக்கப்படும் பிராணி அனைத்துமே வரையறை செய்யப்பட்டதாகும்.

பின்னணி:
இப்றாஹீம்(عليه السلام) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று தனது மகன் இஸ்மாயீல்(عليه السلام) அவர்களை அறுக்க முன்வந்தார். இஸ்மாயீல்(عليه السلام) அவர்களும் அல்லாஹ்வுக்காக தனது உயிரைத் தியாகம் செய்ய முன்வந்தார்கள். இஸ்மாயீல் நபிக்காக அல்லாஹ் ஒரு ஆட்டை அறுக்குமாறு கட்டளையிட்டான். இந்த மாபெரும் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இக்கடமை பேணப்பட்டு வருகின்றது.

அல்லாஹ்வின் அடையாளச் சின்னம்:
உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். இந்த அடிப்படையில் இது வலியுறுத்தப்படுகின்றது.

‘இதுவே (அல்லாஹ்வின் போதனை) யாகும். எவர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்துகின்றாரோ, நிச்சயமாக அது உள்ளங்களின் பயபக்தியில் உள்ளதாகும்.’ (22:32)

உழ்ஹிய்யா அல்லாஹ்வின் அடையாளச் சின்னம் என்பதால் அதை கண்ணியப் படுத்துவது உள்ளத்தின் தக்வாவுக்கான அடையாளங்களில் ஒன்றாகும்.

வாஜிபா அல்லது கட்டாய சுன்னத்தா?
உழ்ஹிய்யாவை கட்டாயக் கடமை என சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஜுன்தப் இப்னு சுஃப்யான் அல்பஜலீ(رضي الله عنه) கூறினார்: ‘நான் நபி(صلى الله عليه وسلم) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் 10 வது) நாளில் இருந்தேன். அப்போது அவர்கள், ‘(பெருநாள்) தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் அதனிடத்தில் (அதற்கு பதிலாக) வேறொன்றை (தொழுகைக்குப் பின்) அறுக்கட்டும். அறுக்காமல் இருப்பவர் (தொழுகை முடிந்தவுடன்) அறுக்கட்டும்;’ என்று கூறினார்கள். (புகாரி: 5562)

தொழுகைக்கு முன்னர் அறுத்தவருக்கு மீண்டும் அதற்குப் பகரமாக நபி(صلى الله عليه وسلم) அவர்கள் தொழுகையின் பின்னர் அறுக்குமாறு கூறியுள்ளார்கள். எனவே, இது கட்டாயமான கடமை. கடமை இல்லை என்றால் மீண்டும் அறுக்குமாறு நபி(صلى الله عليه وسلم) அவர்கள் உத்தர விட்டிருக்கமாட்டார்கள் என்பது இவர்களின் வாதமாகும்.

‘துல் ஹஜ் (முதல்) பத்தில் நுழைந்துவிட்டால் உங்களில் உழ்ஹிய்யா கொடுக்க யாரேனும் விரும்பினால் அவர் தனது நகம், முடி, என்பவற்றைக் களைய வேண்டாம்’ என நபி(صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்- 1977, அஹ்மத்- 6/289, தாரமீ- 1991, இப்னுமாஜா- 3149)

இந்த ஹதீஸ் உழ்ஹிய்யா கொடுக்கும் எண்ணம் உள்ளவர்கள் பிறை ஒன்றில் இருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை நகம், முடி போன்றவற்றைக் களையக் கூடாது என்று கூறுகின்றது. அவர் இக்காலகட்டத்தில் இல்லறத்தில் ஈடுபடுவது, மணம் பூசுவது போன்றன ஆகுமானதாகும்.

இந்த ஹதீஸில் உங்களில் ஒருவர் உழ்ஹிய்யாக் கொடுக்க விரும்பினால் என நபி(صلى الله عليه وسلم) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, உழ்ஹிய்யா என்பது கட்டாயக் கடமை அன்று. விரும்பினால் கொடுக்கக் கூடியது என்று மற்றும் சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

உழ்ஹிய்யா சார்பில் வலியுறுத்தி வந்துள்ள ஹதீஸ்களையும் இது போன்ற அறிவிப்புக்களையும் இணைத்துப் பார்க்கும் போது இது கட்டாயக் கடமை (வாஜிப்) அல்ல ஆனால், சுன்னா முஅக்கதா (வலியுறுத்தப்பட்ட சுன்னத்) என்பதை அறியலாம்.

எதைக் கொடுக்கலாம்?:
ஆடு, மாடு, ஒட்டகம் என்பவற்றையே உழ்ஹிய்யாக் கொடுக்க வேண்டும். தெளிவான நோய், குருடு, நொண்டி போன்ற குறைபாடுகள் அற்ற நல்ல பிராணிகளையே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

எது சிறந்தது?:
பல பிராணிகளில் எது சிறந்தது என்ற கேள்வி உள்ளது. சிலர் ஒட்டகம், மாடு, ஆடு என்று வரிசைப்படுத்துகின்றனர். மற்றும் சிலர் ஆட்டுக்கு முன்னிடத்தைக் கொடுக்கின்றனர்.

இறைத்தூதர்(صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்: ‘ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.’ என அபூ ஹுரைரா(رضي الله عنه) அறிவித்தார். (புகாரி: 881)

ஜும்ஆ தினத்தில் பள்ளிக்கு முதலாவது சமுகமளித்தவருக்கு ஒட்டகம் குர்பான் கொடுத்த நன்மையும் இரண்டாவது, மாடு மூன்றாவது ஆடு குர்பானி கொடுத்த நன்மையும் கிடைப்பதாக இந்த ஹதீஸ் கூறுகின்றது. எனவே, ஒட்டகம், மாடு, ஆடு என்ற ஒழுங்களில்தான் சிறப்பு அமைந்துள்ளது என்று சில அறிஞர்கள் அபிப்பிராயப் படுகின்றனர்.

அடுத்து, ஒட்டகத்தின் பெறுமதி கூடுதலானதாகும். எனவே, அதிக தர்மம் உள்ளது என்ற வகையில் ஒட்டகம் முதல் இடத்தைப் பெறுகின்றது என்பது இவர்களது அபிப்பிராயமாகும்.

ஆடு கொடுப்பது சிறந்தது என்று கூறும் அறிஞர்கள் மற்றும் சில வாசகங்களை முன்வைக்கின்றனர்.

அனஸ் இப்னு மாலிக்(رضي الله عنه) கூறினார்: ‘இறைத்தூதர்(صلى الله عليه وسلم) அவர்கள் கொம்புகள் உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று தம் கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.’ மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. (புகாரி: 5554)

நபி(صلى الله عليه وسلم) அவர்கள் தொடராக ஆடு குர்பான் கொடுத்து வந்துள்ளார்கள். அத்துடன் இஸ்மாயீல்(عليه السلام) அவர்களுக்குப் பகரமாக அல்லாஹ் ஆட்டைத்தான் ஆக்கியான். இது பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது ‘பி(டீ)திப்ஹின் அழீம்’ என்று கூறுகின்றது.

‘இவருக்குப் பகரமாக, மகத்தான ஒரு பலிப் பிராணியை ஆக்கினோம்.’ (37:107) என்று கூறப்படுகின்றது.

மகத்தான அறுப்பு என்று குறிப்பிடப் படுகின்றது. இந்த வகையில் ஆடுதான் மகத்தான குர்பானாகும் என்று சிலர் குறிப்பிடுகின்றார்கள்.

ஏழு பேர் சேர்ந்து மாடு கொடுப்பதை விட தனியாக ஆடு கொடுப்பது சிறந்ததாகும்.

கூட்டுக் குர்பான் ஆகுமானதா?
குர்பான் கொடுப்பதில் கூட்டுச் சேர்வது தொடர்பில் கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது. ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டைக் குர்பான் கொடுக்கலாம் என்பதுதான் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் முடிவாகும். இதுவே சரியானதுமாகும்.

நபி(صلى الله عليه وسلم) அவர்களுடன் ஹுதைபிய்யா ஆண்டில் ஒட்டகத்தில் ஏழு பேரும், மாட்டில் ஏழுபேரும் இணைந்து அறுத்துப் பலியிட்டோம் என ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(رضي الله عنه) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: முஸ்லிம்- 1318-350, இப்னு மாஜா 2901, முஅத்தா 09)

நபி(صلى الله عليه وسلم) அவர்கள் காலத்தில் தமத்து அடிப்படையில் நாம் ஹஜ் செய்வோம். ஏழு பேருக்காக ஒரு மாட்டை அறுப்போம். அதில் நாம் கூட்டுச் சேர்ந்து கொள்வோம். என்று ஜாபிர்(رضي الله عنه) அவர்கள் கூறுகின்றார்கள். (நூல்: முஸ்லிம் 1318-355, அஹ்மத் 14265, அபூ தாவூத் 2807, இப்னு ஹுஸைமா 2902)

இவ்வாறு வரக் கூடிய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு ஏழு பேர் சேர்ந்து மாடு கொடுக்கலாம் என்று கூறும் போது ஹஜ்ஜில் கொடுப்பது ‘ஹதீ’ அதை ஆதாரமாகக் கொண்டு உழ்ஹிய்யாவுக்கு சட்டம் எடுக்க முடியாது என மறு தரப்பினர் மறுக்கின்றனர். எனினும், பின்வரும் அறிவிப்பு பொதுவாக அமைந்துள்ளது.

‘நாம் நபி(صلى الله عليه وسلم) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். உழ்ஹிய்யா தினம் வந்தது. ஒட்டகத்தில் பத்துப் பேரும் மாட்டில் ஏழு பேரும் கூட்டுச் சேர்ந்தோம்’ என இப்னு அப்பாஸ்(رضي الله عنه) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: இப்னு மாஜா 1331, திர்மிதி 905, 1501)

இந்த அறிவிப்பில் ஒரு பயணத்தில் என்று பொதுவாக வந்துள்ளதால் இதை பொதுவான ஹதீஸாகவே எடுக்க வேண்டும். சிலர் இது கூட ஹஜ் காலத்தில் நடந்தது என்கின்றனர். ஹஜ்ஜில் நடந்ததை ஒரு பயணத்தில் இருந்தோம் என்று மறைவாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, ஏழு பேர் சேர்ந்து ஒரு மாடு கொடுப்பது ஆகுமானது என்பதே நெருக்கமான கருத்தாகப் படுகின்றது.

உழ்ஹிய்யா மாமிசத்தை எப்படிப் பகிர்வது?:
ஆரம்ப காலத்தில் நபியவர்கள் உழ்ஹிய்யா மாமிசம் அறுத்தவரின் வீட்டில் மூன்று தினங்களுக்கு மேலாக இருக்கக் கூடாது எனத் தடுத்தார்கள். அதாவது அறுப்பவர் தனது வீட்டில் தனக்கு மூன்று நாட்களுக்குத் தேவையான அளவு சேமித்து வைக்கலாம். மிகுதியை தர்மம் செய்து விட வேண்டும் என்பது அர்த்தமாகும். ஆனால், பின்னர் தேவையான அளவு மிச்சப்படுத்தி வைக்க அனுமதித்தார்கள். கஷ்டமான காலத்தில் மக்களுக்கு மாமிசம் சென்றடைவதற்காகவே இந்தக் கட்டளையைப் பிறப்பித்தார்கள்.

உழ்ஹிய்யா மாமிசத்தை பகிர்பவர் தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும், ஏழைகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். தனக்கு சேமித்து வைத்துக் கொள்ளவும் அனுமதி உள்ளது.

மாற்று மதத்தவர்களுக்கு வழங்கலாமா?:
உழ்ஹிய்யா மாமிசத்தைக் காபிர்களுக்கு வழங்கக் கூடாது என்று எந்தத் தடையும் வராத பட்சத்தில் இதை அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவே, நேரடியான தடைகள் இல்லை என்பதால் மாற்று மத நண்பர்களுக்கு உழ்ஹிய்யா மாமிசத்தை வழங்குவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்க்காத மாற்று மதத்தவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு குர்ஆன் கட்டளையிடுகின்றது.

‘எவர்கள் மார்க்க(விடய)த்தில் உங்களுடன் போரிடவில்லையோ அவர்களுக்கும், மேலும், உங்களை உங்களது இல்லங்களை விட்டும் வெளியேற்றவில்லையோ அவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுடன் நீங்கள் நீதியாக நடப்பதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதியாக நடப்பவர்களை நேசிக்கின்றான்.’ (60:08)

அவர்களுடன் நல்ல முறையில் நடத்தல் என்பதில் அறுத்த மாமிசத்தை அவர்கள் விரும்பும் பட்சத்தில் எதிர்பார்க்கும் நிலையில் அவர்களுக்கு வழங்குவதும் அடங்கக் கூடியதே!

குறிப்பாக அந்நியர்கள் அண்டை வீட்டாராக இருந்தால் இது இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றது. அண்டை வீட்டாரைக் கண்ணிப்படுத்துமாறு இஸ்லாம் கூறுகின்றது. அயலில் இருக்கும் மாற்று மதத்தவர்களது வீட்டைத் தாண்டிச் சென்று முஸ்லிம்களுக்கு மாமிசம் வழங்குவது அயலவரை அவமதிப்பதாக அமைந்து விடும்.

இந்த வகையில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் எதிர்க்காத மாற்று மதத்தவர்களுக்கு உழ்ஹிய்யா மாமிசத்தை வழங்குவதில் எந்தக் குற்றமும் இல்லை. குறிப்பாக நல்லெண்ணத்தை வளர்க்கும் என்றால் அப்படி வழங்குவது அவசியமாகி விடுகின்றது எனலாம்.

உழ்ஹிய்யா தொடர்பில் ஏராளமான சட்டங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தாலும் சில குறிப்புக்கள் மட்டுமே இங்கே பகிரப்பட்டுள்ளன. இந்தக் கடமையைச் செய்பவர்கள் இது தொடர்பில் அறிஞர்களை அணுகி அறிந்து கொள்வது ஏற்றமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.