பிரச்சினைகள் ஏற்படும்போது குனூத் ஓதப்படுகின்றதே இது சரியா? தவறா?

முஸ்லிம் சமூகத்திற்குப் பிரச்சினைகள் ஏற்படும்போது எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதப்படுகின்றதே இது சரியா? தவறா?
பதில்:
பிரச்சினைகள், சோதனைகளின் போது ஐவேளைத் தொழுகையிலும் ஓதப்படும் குனூத்துக்கு “குனூதுன்னவாஸில்” என்று கூறப்படும். இது மார்க்கத்தில் அங்கீகரிக்கப் பட்ட சுன்னாவாகவே உள்ளது.

நபி(ச) அவர்கள் மக்காவில் வாழ்ந்த பலவீனமான முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக இந்த அடிப்படையில் துஆ ஓதியிருப்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.
“நபி(ச) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் “ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா” கூறிய பின்னர் குனூத் ஓதினார்கள். அதில்,
யாஅல்லாஹ்! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக, யாஅல்லாஹ்! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்றுவாயாக, யாஅல்லாஹ்! ஸலமா இப்னு ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக, யாஅல்லாஹ்! நம்பிக்கையாளர்களில் உள்ள பலவீனர்களைக் காப்பாற்றுவாயாக, முழர் குலத்தார் மீது உனது பிடியை இறுக்குவாயாக! யூசுப் நபி காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.” (புஹாரி: 6393)
இந்த ஹதீஸை இணைவைப்பாளருக்கு எதிரான பிரார்த்தனை என்ற தலைப்பிலேயே இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் இடம்பெறச் செய்துள்ளார்கள்.
மேலே குறிப்பிட்ட ஹதீஸ் மூலம் பின்வரும் முடிவுகளை நாம் எடுக்கலாம்.
1. தேவையான சந்தர்ப்பங்களில் இவ்வாறு குனூத் ஓதலாம்.
2. அந்த துஆவில் தனிப்பட்டவர்களுக்காகவும் பொதுவாக முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்திக்கலாம்.
3. முஸ்லிம்களின் எதிரிகளுக்கு எதிராகப் பிரார்த்திக்கலாம்.
4. அந்தப் பிரார்த்தனையை சத்தமாகச் செய்யலாம்.

என்பன போன்ற பல அம்சங்களைப் புரிந்து கொள்ளலாம். இது தொடர்பாக விரிவாக நோக்குவோம்.
இந்த நடைமுறை நபி(ச) அவர்களுடைய வாழ்க்கையோடே முடிந்து விட்டதா என்று கேட்டால் இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூஹுரைரா(வ) அவர்கள்,
“ழுஹர், இஷா, சுபஹ் தொழுகைகளில் கடைசி ரக்அத்துக்களில் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறிய பிறகு,
முஃமின்களுக்கு சாதகமாகப் பிரார்த்திப் பதுடன் இறை மறுப்பாளர்களை சபிப்பார்கள்.”
(புஹாரி: 797, முஸ்லிம்: 1576, அஹ்மத்: 7454, 7464)

நபி(ச) அவர்கள் குனூத் ஓதிய ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளரே அது தொடராகப் பின்பற்றத்தக்க ஒரு வழிமுறைதான் என்பதை உறுதிப்படுத்துகின்றார்.
எனவே, “குனூதுன் நவாஸில்” தொடர்பில் பின்வரும் முடிவுகளை நாம் எடுக்கலாம்.

1. குனூதுன் நவாஸில் ஓதுவது மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
இமாம் இப்னு தைமிய்யா குனூத் பற்றிப் பேசும் போது பின்வருமாறு கூறுகின்றார்கள்.
மூன்றாவது கூற்று நபி(ச) அவர்கள் ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்படும் போது குனூத் ஓதினார்கள். அந்தப் பாதிப்பு நீங்கியதன் பின் ஓதுவதை விட்டுவிட்டார்கள் என்பதாகும். ஹதீஸ் துறை சார்ந்த பிக்ஹுடைய அறிஞர்கள் இந்தக் கருத்தைத்தான் சரிகாண்கின்றார்கள். குலபாஉர் ராஷிதூன்கள் மூலமாகவும் இது நடைமுறையில் வந்துள்ளது. கிறிஸ்தவர்கள் போரிட்ட போது உமர்(வ) அவர்கள் அவர்களுக்கு எதிராகக் குனூத் ஓதியுள்ளார்கள்.
(மஜ்மூஉல் பதாவா, அல் அக்வால் பில் குனூத் 23/108)

2. இந்த குனூத் ஐவேளைத் தொழுகையிலும் கடைசி ருகூவிற்குப் பின்னர் ஓதப்படும்.
இஃதிதாலில் ஏன் துஆ ஓதப்படும் என்பது பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறும் போது,
“சுஜூதில் கேட்கப்படும் துஆ விரைவாக அங்கீகரிக்கப்படும் என்றிருக்கும் போது இஃதிதாலில் குனூத் ஓதப்பட வேண்டும் என்று ஏன் ஆக்கப்பட்டுள்ளதென்றால் துஆவில் இமாமுடன் மஃமூம்களும் ஆமீன் கூறுவதன் மூலமாகவது பங்கேற்க வேண்டும் என்பதற்காகத்தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகின்றது. அத்துடன் குனூதுன் நவாஸில் சத்தமாக ஓதப்பட வேண்டும் என்பதில் ஏகோபித்த முடிவில் உள்ளனர்.”
(பார்க்க: பத்ஹுல் பாரி 2/491)
3. சுன்னத்தான தொழுகைகளிலும் ஜும்ஆத் தொழுகைகளிலும் இந்தக் குனூத்தை ஓதுவதில் சர்ச்சை உள்ளது.
ஷேஹ் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்) அவர்கள் ஜும்ஆவில் குனூத் ஓதலாம் என்று கூறுகின்றார்.
ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்), இப்னுல் முன்திர்(ரஹ்) போன்றோர் ஜும்ஆவில் குனூத் ஓதப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லாததால் ஜும்ஆவில் குனூத் ஓதப்பட மாட்டாது என்று கூறுகின்றனர்.
அறிஞர் இப்னு அப்தில்பர் (ரஹ்) அவர்கள் “நபி(ச) அவர்கள் ஜும்ஆவில் குனூத் ஓதியதாக ஒரு ஸஹாபி மூலமாகக் கூட செய்தி வரவில்லை என்கின்றார்.”
(அல் இஸ்தித்கார் 2ஃ282)

4. இந்த குனூத் சிறியதாக இருக்க வேண்டும். மணிக்கணக்கில் இருக்கக் கூடாது. சிறிது ஓதுவார்கள் என ஹதீஸில் தெளிவாக வந்துள்ளதால் மஃமூம்கள் சடைவடையும் அளவுக்கு குனூத்தை நீட்டக் கூடாது.
5. காபிர்களை சபிக்கலாமா?
குனூத்தின் போது காபிர்களில் சிலரைக் குறிப்பிட்டு லஃனத் செய்யலாமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
நாம் யாரைக் குறித்து சபித்து துஆச் செய்கின்றோமோ அவர் இஸ்லாத்தைக் கூட ஏற்க வாய்;ப்புள்ளது. எனவே, இன்னாரை சபிப்பாயாக! எனப் பெயர் குறிப்பிட்டு சபிக்க முடியாது என nஷய்க் அல் உதைமீன்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். இதே போன்று ஒரு முஃமின் சபிப்பவராக இருக்கக் கூடாது என்ற அடிப்படையிலும் சில அறிஞர்கள் சபிக்கக் கூடாது என்கின்றனர்.
அத்துடன் நபி(ச) அவர்கள் குறிப்பிட்ட சிலரை சபித்து குனூத் ஓதினார்கள்.
“(நபியே!) அதிகாரத்தில் உமக்கு யாதொரு பங்கும் இல்லை. (அல்லாஹ்) அவர்களுக்கு மன்னிப்பு வழங்கலாம் அல்லது நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள் என்பதால் அவன் அவர்களைத் தண்டிக்கலாம்.”
(3:128)

என்ற வசனம் இறங்கியதும் குனூத் ஓதுவதை விட்டுவிட்டார்கள். எனவே, நபி(ச) அவர்கள் குறிப்பிட்டு சபிப்பதை விட்டுள்ளார்கள் என்பதால் குறிப்பிட்டு சபிக்கக் கூடாது என்று கூறுகின்றனர்.
இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் பெயர் குறிப்பிட்டு சபிக்க முடியும் என்கின்றார்கள். இந்தக் கருத்துடைய அறிஞர்கள் பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள்.
“நபி(ச) அவர்களது காலத்தில் ஒருவர் மது குடித்து அதற்காகத் தண்டனை வழங்கப்பட்டார். அவரை ஒருவர் சபித்தார். அப்போது நபி(ச) அவர்கள் “இவரைச் சபிக்காதீர்கள்! ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்றார் என்றே நான் அறிந்துள்ளேன்” என்று கூறுகின்றார்கள்.”
(புஹாரி:6781 – சுருக்கம்)

இந்த ஹதீஸின் அடிப்படையில் அல்லாஹ்வையும் ரஸூலையும் நிந்தனை செய்பவர்களை சபிக்கலாம் என்று ஆதாரம் எடுக்கின்றனர்.
“நபி(ச) ஒரு மாதம் சிலரைச் சபித்து துஆ ஓதினார்கள். குர்ஆன் வசனம் அருளப்பட்ட பின்னர் விட்டுவிட்டார்கள் என்ற ஹதீஸைப் பொறுத்த வரையில் நபி(ச) அவர்கள் யாரை சபித்தார்களோ அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.”
(திர்மிதி: 3005, அஹ்மத்: 5674)
எனவே, இதனை ஆதாரமாகக் கொண்டு தீர்க்கமாக முடிவு செய்ய முடியாதுள்ளது.
இமாம்களான மாலிக், அஹ்மத், இப்னு ஹிப்பான், இப்னு பத்தால், இப்னு குதாமா, இப்னு தைமிய்யா, இப்னுல் கையூம், நவவி, இப்னு ஹஸ்ம், ஸன்ஆனி (ரஹ்) போன்ற அறிஞர்கள் சபித்து ஓதலாம் என்ற கருத்தில் உள்ளார்கள்.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கடுமையாக எதிர்ப்பவர்களைப் பொறுத்த வரையில் தேவைப்பட்டால் அவர்களை சபித்தும் ஓதலாம். அவர்களது வெளிப்படையான தன்;மையை வைத்து இந்த முடிவைச் செய்யலாம்.
அல்லது நபி(ச) அவர்கள் யா அல்லாஹ்! தவ்ஸ் கூட்டத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என்று பிரார்த்தித்தது போல் உமர் அல்லது அபூஜஹ்ல் இருவரில் ஒருவர் மூலம் இஸ்லாத்திற்கு உதவி செய்வாயாக! என்று பிரார்த்தித்தது போல் அவர்களின் ஹிதாயத்திற்காகவும் பிரார்த்திக்கலாம்.
6. சப்தமிட்டு ஓதப்படும்:
ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஹதீஸ், மற்றும் இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்களது கூற்று என்பன இந்தக் குனூத்தை இமாம் சப்தமிட்டு ஓதுவார் என்பதை உறுதி செய்கின்றன.
இமாம் நவவி(ரஹ்) அவர்கள் குனூத்தை சப்தமிட்டு ஓதுவது முஸ்தஹப் (விரும்பத்தக்கது) என்று கூறுகின்றார்கள்.
(அல்மஜ்மூஃ 3/482)

7. கைகளை உயர்த்தி ஓதலாம்:
“நபி(ச) அவர்கள் காபிர்களுக்கு எதிராகப் பிரார்த்திக்கும் போது,
தமது இரு கைகளையும் உயர்த்தி அவர்களுக்கு எதிராகப் பிராத்தித்தார்கள்.”
(அஹ்மத்: 12402, 12429)

அறிஞர் சுஐப் அல் அர்னாஊத் இதை சரியான அறிவிப்பாளர் மூலம் வந்த செய்தி என்று கூறுகின்றார்கள்.
இமாம் குனூதுன் நவாஸிலில் ஓதும் போது பின்னால் இருப்பவர்கள் ஆமீன் கூறுவது ஆகுமானது என்பதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொள்கின்றனர்.
“நபி(ச) அவர்கள் சபித்து துஆ ஓதிய போது, பின்னால் இருப்பவர்கள் ஆமீன் கூறுவார்கள்.”
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (வ),
ஆதாரம்: அபூதாவூத் – 1445, 1433, அஹ்மத்-2746, பைஹகி – 1955, 1002, இப்னு குஸைமா – 618, ஹாகிம் – 820)
அறிஞர் சுஐப் அல் அர்னாஊத் இதை ஸஹீஹானது என்றும், அல்பானி மற்றும் அல் அஃழமி ஆகியோர் ஹஸனான அறிவிப்பு என்றும் கூறுகின்றனர். இந்தக் குனூத்தின் போது பின்வரும் விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
1. பிரச்சினையின் போது ஓத வேண்டும்.
2. பிரச்சினை முடிந்த பின்னர் விட்டு விட வேண்டும்.
3. என்ன பிரச்சினையோ அதைக் குறிப்பிட்டு ஓத வேண்டும். குறித்த ஒரு துஆவைத்தான் ஓத வேண்டும் என்பதில்லை.
4. சிலர் அல்லாஹும்மஹ்தினி என்ற குனூத்தில் ஓத நபி(ச) அவர்கள் கற்றுக் கொடுத்த, பொதுவாக எமது நாட்டில் சுபஹில் ஓதப்படுகின்ற குனூத்தையே ஓதுகின்றனர். இது தவறானதாகும்.
5. துஆவின் முடிவில் கைகளை முகத்தில் தடவக் கூடாது.
6. குனூதுன் நவாஸில் ஓதுவதற்கு முன்னர் ஹம்து ஸலவாத்து என்பது இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
7. இமாம் குனூதுன் நவாஸில் ஓதினால் பின்னால் இருப்பவர்கள் ஓத வேண்டும். விட்டு விட்டால் பின்னால் இருப்பவர்களும் விட்டு விட வேண்டும். இதில் முரண்பாடு கொள்ளத் தேவையில்லை.
இதுவரை நாம் குறிப்பிட்ட ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது இது ஆகுமான குனூத். எம்மில் சிலருக்கு இதில் உடன்பாடு இல்லையென்றால் எவ்வித ஆதாரமும் இல்லாத பித்அத்தை எதிர்ப்பது போல் எதிர்க்காது அமைதி காப்பது நல்லதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.