காபிர்களுக்கு அல்லாஹ் வழியை ஏற்படுத்தமாட்டான்.

காபிர்கள் முஃமின்களை மிகைக்கத்தக்க வழியை அல்லாஹ் ஏற்படுத்த மாட்டான். இது பற்றி குர்ஆன் இப்படிக் கூறுகின்றது.

‘ (நயவஞ்சகர்களான) இவர்கள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வெற்றி கிடைத்தால், ‘நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?’ என்று கூறுவார்கள். நிராகரிப்பாளர்களுக்கு ஏதேனும் ஒரு பங்கு கிட்டிவிட்டால், (வெற்றி கொள்ள முடியுமாக இருந்தும்) ‘உங்களை நாம் வெற்றி கொள்ளாது, நம்பிக்கையாளர்களை விட்டும் உங்களை நாம் தடுத்துவிடவில்லையா?’ என்று கூறுகின்றனர். அல்லாஹ் மறுமை நாளில் உங்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான். நம்பிக்கையாளர்களுக்கு எதிராக நிராகரிப்போருக்கு அல்லாஹ் எந்த வழியையும் ஏற்படுத்தமாட்டான்.’ (4:141)

இவ்வாறு குர்ஆன் கூறும் போது இன்று முஸ்லிம்களை காபிர்கள் மிகைத்தே உள்ளனர். காரணம் என்ன?

நாம் முஸ்லிம்களாக இருக்கின்றோம். ஆனால், முஃமின்களாக இல்லை!
முஃமினுக்கும் முஸ்லிமுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய முஸ்லிம்கள் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற இஸ்லாமிய அடையாளச் சின்னங்களைக் கடைப்பிடிக்கின்றனர். இருந்தாலும் அவர்கள் அறிவு, பொருளாதாரம், இராணுவ பலம் அனைத்திலும் பின்னடைந்துள்ளனர். இதற்குக் காரணம் நாம் முஸ்லிம்களாக இருக்கின்றோம். ஆனால், முஃமின்களாக இன்னும் மாறவில்லை என்பதுதான்.

‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம்’ என கிராமப்புற அரபிகள் கூறுகின்றனர். நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. எனினும், ‘நாம் கட்டுப்பட்டோம்’ என்று கூறுங்கள் என (நபியே!) நீர் கூறுவீராக! உங்களது உள்ளங்களில் ஈமான் இன்னும் நுழையவில்லை. மேலும், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதனையும் உங்களுக்கு அவன் குறைத்துவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையவன்.’ (49:14)

உள்ளத்தில் ஈமான் உறுதியாக இடம்பிடிக்காமல் வெளிப்படையான இஸ்லாமிய கடமைகளை மட்டும் நாம் செய்து வருகின்றோம். எனவே, நாம் முஃமின் என்கின்ற அடுத்த கட்ட அந்தஸ்த்தை அடையவில்லை.

நாம் முஃமின்களாக இருந்திருந்தால் எமக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.
‘(நபியே!) உமக்கு முன்னர் பல தூதர்களை அவர்களது சமூகத்தாரிடம் நிச்சயமாக நாம் அனுப்பினோம். அவர்கள் தெளிவான சான்றுகளுடன் இவர்களிடம் வந்தனர். பின்னர் குற்றம் புரிந்தோரை நாம் தண்டித்தோம்;. நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாகிவிட்டது.’ (30:47)

நாம் முஃமின்களாக இருந்திருந்தால் உயர்வடைந்திருப்போம்.

‘நீங்கள் மனம் தளர வேண்டாம். துக்கப்படவும் வேண்டாம். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்கள்தான் மிக உயர்வானவர்கள்.’ (3:139)

நாம் முஃமின்களாக இருந்தால் இழி நிலையை அல்லாஹ் நீடிக்கச் செய்ய மாட்டான்.

‘நல்லவரிலிருந்து தீயவரை பிரித்தறியும் வரை நீங்கள் இருக்கின்ற இதே நிலையில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களை விட்டு விடுபவனாக இல்லை. மேலும், மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தருபவனாக இல்லை. எனினும், அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடுவோரைத் தெரிவு செய்கின்றான். எனவே, அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்.
நீங்கள் நம்பிக்கை கொண்டு, (அல்லாஹ்வை) அஞ்சி வாழ்ந்தால் உங்களுக்கு மகத்தான கூலியுண்டு.’ (3:179)

நாம் முஃமின்களாக இருந்தால் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் உதவி எமக்குக் கிடைத்திருக்கும்.

‘(நிராகரிப்பாளர்களே! போர் மூலம்) நீங்கள் தீர்ப்பைத் தேடினால் தீர்ப்பு உங்களிடம் நிச்சயமாக வந்துவிட்டது. (இதிலிருந்து) நீங்கள் விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நன்று. நீங்கள் மீண்டும் (போரிட) வந்தால் நாமும் வருவோம். உங்களது கூட்டம் அதிகமாக இருந்த போதும், அது உங்களுக்கு எந்தப் பயனையும் தராது. நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான்.’ (8:19)

இதெல்லாம் நடக்கவில்லை. ஏனெனில், நாம் முஸ்லிமாக இருக்கின்றோம். ஆனால், முஃமின் என்கின்ற அடுத்த கட்டத்திற்குச் செல்லவில்லை.

‘அவர்களில் அதிகமானவர்கள் முஃமின்களாக இல்லை’ என குர்ஆன் கூறுபவர்களின் நிலையில்தான் நாம் உள்ளோம்.

எனவே, குர்ஆன் கூறும் உண்மையான முஃமின்களை அறிந்து எமது அகீதா, இபாதா, அஹ்லாக், ஹுதூத் – சட்ட வரையறைகள் அனைத்தையும் நாம் பேணி வாழ வேண்டும். அல்லாஹ்வின் உதவியை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இருப்பதாகக் கூறவில்லை. மாறாக, முஃமின்களுக்கே இருப்பதாகக் கூறுகின்றான்.

ஆகவே, நாம் இதனைக் கருத்திற் கொண்டு எமது வாழ்வை உண்மையான முஃமின்களின் வாழ்க்கை நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.