ரமழானைப் பயன்படுத்துவோம்

புனித ரமழான் எம்மை வந்தடைந்துள்ளது. அல்ஹம்துலில்;லாஹ்! சென்ற ரமழான் முடிந்து ஒரு மாதம் கழிந்தது போன்று உள்ளது. இப்போது வந்துள்ள ரமழானும் மின்னல் வேகத்தில் எம்மை விட்டும் விலகிச் சென்றுவிடும்.

ரமழான் புனிதமான மாதம். அல் குர்ஆன் அருளப்பட்ட மாதம்; லைலதுல் கத்ர் எனும் 1000 மாதங்களை விடச் சிறந்த ஒரு இரவை உள்ளடக்கிய ஒரு மாதம்; தர்மம், இரவுத் தொழுகை, நோன்பு போன்ற சிறந்த அமல்களின் மாதம்; இந்த மாதத்தை உரிய முறையில் பயன்படுத்தி பாக்கியம் பெற முயல வேண்டும்.
வழமையாக நோன்பு காலத்தில் தான் முஸ்லிம்களுக்குள் மார்க்கச் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதுண்டு. அடிதடிகள், நீதிமன்றம் என காலத்தைக் கடத்தாமல் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்த நாம் உறுதியெடுக்க வேண்டும். ரமழான் முடியும் வரை சண்டை பிடிப்பதும், ரமழான் முடிந்ததும் சமாதானமாவதும் தான் எமது வேலையா என்பதை சிந்திக்க வேண்டும்.
“நீங்கள் நோன்புடன் இருக்கும் போது உங்களுடன் ஒருவர் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி என்று கூறி ஒதுங்கிவிடுங்கள்” என்ற ஹதீஸைப் புறக்கணித்து, நோன்பில் தான் அடுத்தவர்களை வம்புக்கு இழுப்பதும், சண்டை பிடிப்பதும் அதிகரிக்கின்றது. இது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
அத்துடன் பிற சமூகத்தவர்களுடன் மனக் கசப்புக்களை ஏற்படுத்தும் மாதமாகவும் இது மாறியுள்ளமை கவலைக்குரிய அம்சமாகும். முஸ்லிம் இளைஞர்களில் சிலர், வீதிகளை இரவில் விளையாட்டு மைதானமாக்குகின்றனர். இரவில் மாங்காய் பறித்தல், குரும்பை பிய்த்தல் போன்ற சேட்டைகளைச் செய்கின்றனர். ரமழான் இரவுகள் இபாதத்திற்குரியவை. அவை விளையாட்டுக்கும், களியாட்டத்திற்குமுரியவை அல்ல என்பது கண்டிப்பாக கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
அடுத்து, பிற சமூக மக்களுடன் வாழும் போது குறிப்பாக அவர்கள் மஸ்ஜித்களின் அருகில் வசிக்கும் நிலையிருந்தால் இரவுத் தொழுகைகளுக்காக வெளி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் சாலப் பொருத்தமானது. நீண்ட நேரம் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுவதால் சில போது அவர்கள் எரிச்சலடையலாம்; வெறுப்படையலாம்; பொறாமை கொள்ளலாம். இது விடயத்தில் பள்ளி நிர்வாகிகள் நிதானமாகவும், புரிந்துணர்வுடனும் செயல்பட வேண்டும்.
புனித ரமழானில் பித்ரா என்ற பெயரில் பிச்சை எடுக்கும் படலத்தை சிலர் ஆரம்பித்துவிடுகின்றனர். முஸ்லிம் பெண்கள், சிறுவர், சிறுமியர் மற்றும் குமரிப் பெண்களையும் அழைத்துக் கொண்டு வீதிகளில் அலைந்து திரிவதைப் பார்க்கும் போது கேவலமாக உள்ளது. இந்த நிலை முற்று முழுதாக தவிர்க்கப்பட வேண்டும். ஸகாத், ஸகாதுல் பித்ரா போன்றவற்றைக் கூட்டாகச் சேகரித்து திட்டமிட்டு பகிர்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஸகாத்தை தனித்தனியாகப் பத்து இருவது என பிச்சைக்காகப் பகிர்வதைத் தனவந்தர்கள் தவிர்க்க வேண்டும்.
இந்த இடத்தில் ரமழான் காலத்தில் முஸ்லிம் பாடசலைகளுக்கு வழங்கப்பட்டுவரும் விடுமுறையை இரத்துச் செய்யும் கலந்துரையாடல் குறித்தும் சிறிது குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
நபி(ஸல்) அவர்கள் மீது பத்ர் யுத்தம் ரமழானில் தான் திணிக்கப்பட்டது. அவர்கள் போராடி மாபெரும் வெற்றியை இந்த ரமழானில் தான் பெற்றார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டதும் இந்த ரமழானில் தான். நபி(ஸல்) அவர்கள் போர்களையே எதிர்கொண்டிருக்கும் போது நாம் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியதில்லைதான். என்றாலும் எமது முன்னோர்கள் இப்படி ஒரு உரிமையை எமக்குப் பெற்றுத் தந்துள்ளனர். ரமழானில் விடுமுறை இல்லையென்றால் விடுமுறை கேட்க வேண்டியதில்லை. எனினும் இருக்கின்ற விடுமுறையை இரத்துச் செய்வதற்கு முயற்சி செய்வது அவசியமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுகின்றது. அப்படியே ஒரு முயற்சி செய்யப்படுவதென்றால் அது குறிப்பிடப்பட்ட ஒரு சிலரின் முடிவாக அல்லாது சமூக, சமயத் தலைவர்கள் அனைவரினதும் ஆலோசனைகளைப் பெற்று நமக்குள் தீர்க்கமான முடிவு வந்த பின்னர் அரசுக்கு எடுத்துச் சென்றிருக்கலாம். அதை விட்டு விட்டு சிலர் நல்ல பிள்ளையென பெயர் எடுப்பதற்காக முன்மொழிந்து அதன் பின் எமக்குள் சர்ச்சைப்படுவது அநாகரிகமான செயலாகும்.
அடுத்து, முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை அதிகம்; இது முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடையென்றும் வாதிக்கப்படுகின்றது. முஸ்லிம், தமிழ், சிங்கள பாடசாலைகள் அனைத்துக்கும் சம அளவிலான விடுமுறையே வழங்கப்படுகின்றது. தமிழ், சிங்களப் புத்தாண்டிற்காக வழங்கப்படும் விடுமுறையில் ஒரு வாரம் முஸ்லிம் பாடசாலைக்கு குறைவாக வழங்கப்படுகிறது. அத்துடன் உயர்தரப் பரீட்சைக்காக ஆகஸ்டில் சிங்கள-தமிழ் பாடசாலைக்கு வழங்கப்படும் விடுமுறை ரமழான் காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட 208 நாட்கள் நடந்தே தீரும். எனவே, முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை அதிகம் என்பது தவறான கருத்தாகும்.
அடுத்து இந்த நோன்புகால விடுமுறை சில போது வளர்ந்து வரும் முஸ்லிம் சமூகத்திடம் ஒருவித சோம்பல் தன்மையை ஏற்படுத்துகின்றது என்பது உண்மையே. அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் ரமழானிலும் ஓய்வின்றி உழைக்க வேண்டும். இது ஒருவகையில் சிந்திக்கப்பட வேண்டிய அம்சமாகும்.
நோன்பு கால விடுமுறையை இரத்துச் செய்வதன் மூலம் கல்வியின் வளர்ச்சி ஏற்படும் என்பது சந்தேகமானதேயாகும்.
நோன்பின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டாலும் ஆகஸ்டில் அடுத்த விடுமுறை ஈடு செய்யப்பட்டுவிடும். அதனால் அதிக வளர்ச்சிக்கு இடமில்லை.
சரியோ! தவறோ! நோன்பு கால பகல் நேரங்களில் அதிகமாக உறங்கும் பழக்கம் அதிகமானவர்களிடம் இருக்கின்றது. இரவில் இரவுத் தொழுகையில் ஈடுபடுதல், இரவு மூன்று மூன்றரை மணிக்கு எழுந்து சமையல் செய்தல், நான்கு நாலரை மணிக்கு உணவு உண்ணல் போன்றவற்றால் தூக்கம் ஏற்படுவதும் இயல்பானதே! முஸ்லிம் படசாலைகளில் முஸ்லிம் ஆசிரிய, ஆசிரியைகள் தான் அதிகம் உள்ளனர். இவர்களின் இந்த தூக்க நிலையும், பிள்ளைகளின் சோர்வும் சேர்ந்து விட்டால் வீழ்ச்சிதான் ஏற்படும். பாடங்கள் ஒழுங்காக நடக்காது. பிள்ளைகளும் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள்.
சில போது மாணவ மாணவிகள் மாலை நேர வகுப்புக்களுக்குச் செல்கின்றனர். இது சாத்தியம் என்றால் பாடசாலையில் படிப்பதில் என்ன சாத்தியக் குறைபாடு இருக்கிறது என்று ஒரு கேள்வியும் எழும்.
இந்தக் கேள்வி நியாயமானது. என்றாலும், அதற்கும் பாடசலைக்குமிடையில் பலத்த வேறுபாடு உள்ளது. பாடசாலை நீண்ட நேரத்தைக் கொண்டது. டியுசன் வகுப்புக்கள் ஓரிரு மணித்தியாலங்களைக் கொண்டவை.
பாடசாலையில் ஒரு மாணவன் விரும்பிய, விரும்பாத அனைத்துப் பாடங்களையும் படிக்கின்றான். டியுசன் வகுப்புகளில் தனக்கு விருப்பமான பாடத்தை விருப்பமான ஆசிரியரிடம் தானே தேர்ந்தெடுத்துப் படிக்கின்றான். சோர்வு, உற்சாகத்தை ஏற்படுத்துவதில் இரண்டுக்குமிடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன.
அடுத்து ரமழான் மாலை வேளைகளில் மார்க்கக் கல்வியைக் கற்பதற்கான ஏற்பாடுகள் விஷேடமாக மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் மாணவ, மாணவியருக்கு இப்தார் ஏற்பாடுகள், சான்றிதழ்கள், பரிசில்கள் என்பனவும் வழங்கப்படுகின்றன. காலையில் பாடசாலை நடந்தால் இது போன்ற மார்க்கப் பணிகள் பாதிக்கப்படும். அத்துடன் வளரும் சமூகத்திடம் இரவுத் தொழுகை போன்றவை இதனால் விடுபட்டுப் போவதற்கும் சாத்தியமுள்ளது.
முஸ்லிம் ஆசிரிய, ஆசிரியைகள் அனேகமாக ரமழான் மாத விடுமுறையைப் பயன்படுத்தி உம்றாவிற்குச் செல்கின்றனர். இவ்வாறு கூறும் போது அவர்கள் வேறு விடுமுறையில் செல்லலாம் தானே என்று கேட்கலாம்.
வேறு விடுமுறையில் செல்லலாம். ஆனால், ரமழானில் உம்றா செய்வது ஹஜ்ஜிற்குச் சமனானதாகும். இந்த நல்ல வாய்ப்பை நாமே வலிந்து ஏன் இழக்க வேண்டும் என்பது சிந்திக்க வேண்டியதாகும்.
அடுத்து பாடசாலை விடுமுறைகள் அனைத்தும் மாணவர்கள் நலன் நாடி சமூகங்களின் விஷேட தினங்களை முன்னிட்டே அமைக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தான் பாடசாலைத் தவணைகளும் அமைந்துள்ளன.
தமிழ்-சிங்களப் பெருநாளை முன்னிட்டு நீண்ட விடுமுறை ஏப்ரலிலும், கிறிஸ்மஸ் புது வருடப் பிறப்பை முன்னிட்டு டிசம்பரில் நீண்ட விடுமுறையும் வழங்கப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தின் சமயம் சார்ந்த அடிப்படையில் ரமழான் விடுமுறை வழங்கப்படுகின்றது. இவ்வாறு நோக்கும் போது எமது முன்னோர்கள் கடந்த கால சிங்கள அரசியல் தலைவர்களிடமிருந்து நியாயமான ஒரு உரிமையைத் தான் எமக்குப் பெற்றுத் தந்துள்ளனர் என்றே சிந்திக்க வேண்டியிருக்கிறது
அடுத்து, எல்லாவற்றுக்கும் மேலாக இந்த முடிவில் இறங்கியிருப்பவர்கள் முஸ்லிம் சமூகம் தொடர்பான அக்கறையில்லாதவர்களாக மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் இவர்களுக்குப் பங்கிருந்தது. எனவே, சமூக அக்கறையற்றவர்களாக அவர்கள் இனங்காணப்பட்டிருப்பது ஒரு முக்கிய பிரச்சினையாகும்.
அடுத்தது யுத்த சூழ்நிலையில் கூட தொப்பி அணிந்து முஸ்லிம்கள் அறிமுக அட்டையைப் பெற்றுள்ளனர். இதில் எந்தத் தடையும் இருக்கவில்லை. தற்போது அமைதிச் சூழ்நிலையில் தொப்பி அணிந்த படங்கள் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் மறுக்கப்படுகிறது.
தற்போது ரமழான் விடுமுறையை இரத்துச் செய்யும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. இதே வேளை பல்கலைக்கழக மாணவியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி குறித்தும் பலத்த ஜயம்; முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்தக் தொடரான நிகழ்ச்சிகள் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளங்களை அழிக்கும் முயற்சியோ? என்ற ஐயமும் அதில் ஒரு அங்கமாக ரமழான் விடுமுறை குறித்த முன்னேற்பாடுகள் இருக்குமோ! என்ற சந்தேகமும் இருக்கின்றது. ரமழான் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டு விட்டால் முஸ்லிம் பெண்களுக்கான இத்தா விடுமுறையிலும் சிக்கல்கள் ஏற்படுமோ என்ற பயம் சிலரிடம் காணப்படுகின்றது. இந்த பின்னணியில்தான் ரமழான் விடுமுறையும் பலராலும் பார்க்கப் படுகிறது. இந்த சந்தேகங்கள் அகலாதவரையில் இந்த முயற்சி முழுமையான வெற்றியைத் தருவது அசாத்தியமானதே!.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *